மகாபாரத யுத்தம் முடிந்து விட்டது. பீஷ்மர் ,அர்ஜுனனின் அம்புக்கு இரையாகி மரணப்படுக்கையில் கிடக்கிறார்.
ராஜ்ய பதவியில் அமர்ந்து கொண்டிருந்த யுதிஷ்டருக்கு மனதில் அமைதி இல்லை.
நடந்து முடிந்திருந்த யுத்தத்தில் தமது உற்றார் உறவினர்களை, நண்பர்களை, நாட்டு மக்களை என அனைவரையும் இழந்து விட்டு பதவியில் அமர்ந்திருக்கிறோமே என்ற மன உறுத்தலால், அவர் அமைதி இல்லாமல் இருந்தார்.
உடனடியாக கிருஷ்ணரை தேடிச் சென்றார். 'பரமாத்மா, என்னால் அமைதியாக இருக்க முடியவில்லையே. எனக்கு மன அமைதி கிடைக்க, நீதான் ஒரு வழியைக் கூற வேண்டும். உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியே இல்லையே கண்ணா....எனக்கு மன அமைதியைத் தர ஒரு வழியைக் கூறு' என, கதறினார். .
அதைக் கேட்ட கிருஷ்ணன், ' யுதிஷ்டிரா, நீ படும் அவஸ்தையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு என்னால் விடை தர முடியாது. ஆகவே நினைத்த நேரத்தில் தன் உடலைத் துறந்து விட்டு மேலுலகம் செல்லக் கூடிய சக்தி பெற்றவரான பீஷ்மரிடம் சென்று அவரிடம் ஏதாவது உபாயம் உள்ளதா என்று கேட்போம்’ என யுதிஷ்டரை அழைத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட யுதிஷ்டரும் கண்ணனுடன் மரணப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரிடம் சென்றார். கிருஷ்ணருடன் கிளம்பியவர்களில் வியாச முனிவரும் இருந்தார். அவர்கள் அனைவரும் ஒரு சேர தன்னிடம் வந்ததும், அவர்கள் வந்தக் காரணத்தை கேட்ட பீஷ்மர், ‘என்ன சந்தேகம், கேள்' என, யுதிஷ்டரிடம் கேட்டார்.
யுதிஷ்டரும் ' தாத்தா, நடந்தது நடந்து முடிந்து விட்டது.ஆனாலும் நான் மன அமைதி இன்றி தவிக்கிறேன். நான் எனக்கு மன அமைதி கிடைக்க வழி தேடி வந்துள்ளேன். ஆகவே எனக்குள்ள சில சந்தேகங்களை நீங்கள் விளக்க வேண்டும். தெய்வங்களிலேயே உயர்வான தெய்வம் எது?
எந்த தெய்வத்தை வேண்டுவதின் மூலம் வாழ்வில் மன அமைதி கிடைத்து மனிதர் மகிழ்ச்சியோடு இருக்க முடியும்? பிறப்பு எனும் இந்த பிறவிக் கடலை விட்டு விலக நான் யாரை வணங்கித் துதிக்க வேண்டும்? ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் சென்றடையும் முடிவான இடம்தான் எது என்பது தெரிந்தால் நானும் அதை செய்ய விரும்புகிறேன். இவையே என் சந்தேகங்கள். தயவு செய்து இவற்றை நீங்கள் விளக்க முடியுமா? ' என்று கேட்டார்.
இதற்கு பீஷ்மர் கூறியதாவது:
இந்த பிரபஞ்சத்தில் மகா விஷ்ணுவே கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக விளங்குகிறார். அவருக்கு ஆயிரம் நாமகரணங்கள் உண்டு . அந்த நாமத்தை எவன் உச்சரித்து அவரை வணங்குவானோ அவனுக்கே மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். ஆத்மாவில் ஏற்படும் துக்கங்கள் அனைத்தும் விலகி ஓடும்.
இந்த உலகத்தை முற்றிலும் அறிந்தவர் முதலும் முடிவுமாக உள்ள அவரே. அவரே அனைத்து துக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருடைய நாமத்தை எவன் ஒருவன் தொடர்ந்து நிலையான மனதுடன் பூஜிப்பானோ அவன் அனைத்து விசனங்களில் இருந்தும் விடுபடுவான்.
இந்த உலகுக்கு ஒளி கொடுக்கும் சூரியனைப் போல அவரை பூஜிப்பவர்களின் மனதிற்கும் இதயத்திற்கும் அமைதி எனும் ஒளியைக் கொடுப்பார். புனிதம் என்றாலே விஷ்ணு என்று அர்த்தம் தரும் வகையில் உள்ள புனிதமானக் கடவுள் அவர். ஆகவே முதன்மைக் கடவுளான விஷ்ணுவை ஆயிரம் நாமங்களைக் கொண்டு பூஜிப்பதின் மூலமே மன பயத்தில் இருந்தும் இதய பயத்தில் இருந்தும் விடுதலைக் கிடைக்கும்'
இவ்வாறு பீஷ்மர் கூறினார்.
இதன் பின், பீஷ்மர் ,விஷ்ணு சஹாஸ்ரனாமாவளியில் வரும் ஆயிரம் நாமாக்களையும் மற்றும் அவற்றின் அர்த்தங்களையும், அவற்றின் பலன்களையும்போதித்தார். அப்படி பீஷ்மர் உபதேசித்த விஷ்ணு சஹாஸ்ரனாமத்தையே, மகாபாரதத்தை படைத்த வேத வியாசர் எழுத்து வடிவில் தந்தார் என்பது நம்பிக்கை.
ஹிந்துக்கள் சிறப்பாக பாராயணம் செய்யும் துதிகளில் முக்கியமானது, விஷ்ணு சஹஸ்ரநாமம்.
மஹா விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. சஹஸ்ர என்றால் ஆயிரம்,ஆயிரம் நாமங்களைக் கொண்டதால், சஹஸ்ரநாமம் என்றாயிற்று.
கடவுளர்கள் அனைவருக்கும், சகஸ்ர நாமம் உள்ளது. இதில், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், கணேச சகஸ்ரநாமம், லட்சுமி சகஸ்ரநாமம், நரசிம்ஹ சகஸ்ரநாமம் மற்றும் சுதர்சன சகஸ்ரநாமம் போன்றவை பிரசித்த பெற்றவை.
எனினும், சஹஸ்ரநாமம் என்றாலே யாருக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் தான் மனதில் எழும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment