மேரு மலையை கூர்ம அவதாரமெடுத்து தாங்கிய பகவான், வாமன அவதாரத்தில் ஏன் ஒரு ஏழையைப் போல சென்று பலிச் சக்ரவர்த்தியிடம் யாசகம் கேட்டார்’’ என்று பரீட்சித் கேட்டான்.
‘‘மகாபலியால்தான் கேட்டதையெல்லாம் கொடுக்க முடியும். அப்போதுதான் கொடுத்ததெல்லாம் எம்பெருமானுடைய சொரூபம் என்று அவனுக்கும் புரியும். இவையெல்லாம் ஏன் தெரியுமா பரீட்சித்? அவன் பரம பாகவதனான பிரகலாதனுடைய பேரனாக இருப்பதால்தான். பெருமாள்... அவன் பரம்பரைக்கே கடன்பட்டவர்போல மீண்டும் மீண்டும் வருகிறார். பலிச் சக்ரவர்த்தி அசுர குலத்தவன்தான். ஆனால், ஹரியின்பக்தன். பிரகலாதனின் மடியில் வளர்ந்தவன். தர்மம் தெரிந்தவன். சுக்ராச்சார்யாரிடம் வித்தை பயின்றவன். ஆனாலும் என்ன... எப்போதும்போல தேவலோகத்தை கைப்பற்ற வேண்டும். அடக்கி வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவனுள்ளத்தில் இருந்தது.
தேவர்களும் ஒரு விதத்தில் அசுரர்களுக்கு சகாயம்தான் செய்கிறார்கள். அவர்களால் அழிக்க முடியவில்லையெனில், எம்பெருமானிடம் முறையிடுகின்றனர். தேவர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் அசுரர்களுக்கு பெருமாள் கையினால் வதம் என்கிற பெயரில் மோட்சமே கிட்டி விடுகிறது. இப்பொழுதும் பலிச் சக்ரவர்த்தி இந்திரனிடம் மிக மோசமாக தோற்றுப் போனான். கிட்டத்தட்ட உயிர் ஊசலாடும் நிலையில் சுக்ராச்சார்யார் காப்பாற்றினார். பலிச் சக்ரவர்த்தி சுக்ராச்சார்யாரின் சீடனானான். அவர் அருகே அழைத்தார்.‘‘இங்கு வா. இந்திரனைத்தானே நீ அழிக்க வேண்டும். நான் சொல்வதை செய். விஸ்வஜித் எனும் யாகத்தை செய். பிறகு உன் வலிமை என்னவென்று உனக்கு தெரியும்’’ என்றார்.
பலிச் சக்ரவர்த்தி வேள்வியைத் தொடங்கினான். வேள்வித் தீயினின்று பொன் தேர் வந்தது. சிம்மக் கொடியோடு, எண்ணற்ற வலிமையான அம்புகளும் வந்தன. அவற்றை பெற்று தேவலோகத் தலைநகரான அமராவதியை அடைந்தான். நான்கு பக்கங்களும் சூழ்ந்து கொண்டு தாக்கினான். தேவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். குல குருவான பிரகஸ்பதியின் காலை பற்றினர்.குரு கண்களை மூடினார். இவர்களை யார் அனுப்பியது என்று யோசித்தார். சுக்ராச்சார்யார்தான் என்று புரிந்த பிறகு, ‘‘பலியை உங்களால் வெல்ல முடியாது. மகாவிஷ்ணுவான அவரைத் தவிர வேறு எவராலும் அவனை அடக்க இயலாது. தேவர்களே... வேறொரு சிறியதிலிருந்து பெரிய அவதாரம் நடைபெற உள்ளது. உங்கள் தகப்பனாரான கஸ்யபரையும், தாயாரான அதிதியையும் நமஸ்கரித்து விட்டு வேறெங்கேனும் சில காலம் மறைந்து வாழுங்கள்’’ என்றார்.
தம் மக்களான தேவர்கள் இப்படி அவஸ்தைப் படுகிறார்களே என்று கஸ்யபரும், அதிதியும் கவலைப்பட்டனர். கஸ்யபர் தவத்தில் இறங்கினார். அதிதி நோன்பு நோற்றாள். எந்தச் சக்தி பலிச் சக்ரவர்த்தியை அடக்குமோ அதை வணங்குகிறேன் என்று திருமாலை நோக்கி இருவரும் தவமிருந்தனர். தவத்தின் பயனாக திருமால் காட்சியளித்தார்.தாயே என்று அழைத்தார். அவள் சிலிர்த்தாள். உங்களுக்கு மகனாக அவதரிப்பேன் என்று உறுதி கொடுத்தார். சங்கு சக்கர கதாதரனாக கார்முகில் மேனியோடும், தலையில் கிரீடமும் தரித்தவன் ஆச்சரியமாக அதிதிக்குள் ஜோதி சொரூபமாக கலந்தார். பிறகொரு நாளில் மாயக் காட்சிபோல வாமனராக எதிரே தோன்றினார். அதிதி மகனே என உச்சி முகர்ந்தாள். கஸ்யபர் அவருக்கு பூணூலை அணிவித்து வேதத்தை ஓதி வைத்தார்.
வாமனர் அவதரித்ததன் நோக்கம் கருதி பலிச் சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்திற்கு விரைந்தார். அந்த பாலகனைக் கண்டவர்கள் இப்படியொரு அழகான குழந்தையை பார்த்ததே இல்லையே என்று வியந்தனர். அக்னியைக் காட்டிலும் வாமனரின் முகத்தில் ஞானச் சூரியன் தெறித்து ஒளி வீசினான். பலிச் சக்ரவர்த்தி ஆஹா... என்று அழைத்து பாதம் கழுவி தகுந்த உபசாரங்களை செய்தான்.‘‘அந்தணச் சிறுவனே உன் வரவால் எம் முன்னோர் கடைத்தேறினார்கள். என்ன வேண்டுமோ கேள் தருகிறேன்’’ என்றான்.‘‘பிரகலாதனின் பேரனே. நீ கொடுப்பாய்என்றுதானே வந்துள்ளேன். உங்கள் பரம்பரையின் மேலான குணத்தை நான் நன்கு அறிவேன். சரி, என் காலால் மூன்றடி மண் யாசிக்கும் பொருட்டுதான் வந்துள்ளேன். அதை மட்டும் தா. பண்டிதன் என்பவன் தேவைக்கு அதிகமாக எதையும் யாசித்தல் கூடாது. எனவே இது மட்டும் போதும்’’ என வாமனர் நின்றார்.
‘‘நிற்பதற்கும், படுத்துறங்கவும் மட்டுமே நிறைய நிலம் வேண்டுமே. நீங்கள் போயும் போயும் மூன்றடி மண்ணை, அதுவும் இவ்வளவு செல்வத்திற்கும் அதிபதியான என்னிடம் மூன்றடி மட்டும் கேட்கிறீர்களே. இது நியாயமா’’ என்று கேலியாக சிரித்தான்.‘‘மூன்றடியால் திருப்தியடையாதவன் வேறெதிலும் திருப்தியுற மாட்டான். இந்த பூமண்டலம் முழுவதும் கிடைத்தாலும் நிம்மதியடைய மாட்டான். ஆசையை வளர்த்தால் பிறவி வளரும். அழித்தால் முக்தி நெருங்கும்’’ என்று வாமனர் கூர் தீட்டிய கேள்விகளால் பலியை துளைத்தார்.சுக்ராச்சார்யார் சட்டென்று வந்தது யாரென தெரிந்து கொண்டார். ‘ஐயோ... பலி மோசம் போய்விடுவானே. அசுர குலத்தை யார்காப்பாற்றுவார்’ என்று பரபரப்பானார்.
‘‘சரி... உனக்கு வேண்டியது மூன்றடி மண்தானே’’ என நீர் நிரம்பிய பஞ்சபாத்திரத்தை கையிலெடுத்து தாரை வார்ப்பதுபோல பலி நின்றான்.
சுக்ராச்சார்யார் சட்டென்று தனியே பலியை அழைத்துப் போனார். இவனை யாரென்று நினைத்தாய். தேவர்களின் பொருட்டு அதிதியின் வயிற்றில் பிறந்து வளர்ந்த வாமனன். இவன் தோற்றம் சிறிது. ஆற்றல் பெரிது. உன் குலமே அழிந்துவிடும்’’ என்றார்.‘‘ஐயனே என்னை மன்னியுங்கள். மூன்றடி நிலம் தருவதாக வாக்கு கொடுத்து விட்டேன். பிரகலாதனின் பேரன் வாக்கு தவறினான் என உலகம்நாளை பேசும்’’ என மீண்டும் வாமனரிடம் வந்தான். சுக்ராச்சார்யார் தாரை வார்த்துத் தரும் நீரின் வாய்ப் பகுதியில் வண்டாக மாறினார். வாமனர் தர்ப்பைக் குச்சியால் வண்டில் ஒரு கண்ணைக் குத்த மீண்டும் வண்டு பறந்து சென்று சுக்ராச்சார்யாராக மாறியது.
பலிச் சக்ரவர்த்தி குனிந்து வாமனரின் அந்த முத்து போன்ற நகங்களுள்ள பாதங்களை கண்டான். மென்மையாகப் பற்றினான். மெல்ல மேலே பார்க்க வாமனரின் திருமேனி நெடுநெடுவென வளரத் தொடங்கியது. வானம் தாண்டியது. மேலேழ் லோகம் பரவியது. திசையெங்கும் அடைத்து நின்றது. ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே அவரின் திருமேனியாக உள்ளது பார்த்து தன்னை மறந்தான். ஓரடியில் பூமியை அளந்தார். இரண்டாவது அடியில் பிரம்ம லோக பரியந்தம், சகல லோகத்தையும் அளந்து அதையும் தாண்டி நின்றது. பிரம்ம லோகத்தில் பெருமாளின் திருவடியை கண்ட பிரம்மா ஆஹா என வியந்து அந்த பாதத்தின் நகக் கணுக்களில் தான் பூஜைக்காக வைத்திருந்த தீர்த்தத்தை அபிஷேகமாக செய்தார். அந்த தீர்த்தம்தான் கங்கை எனும் பெயரோடு பெருகினாள். திருவிக்ரமனாக நெடிதுயர்ந்த கோலத்தில் நின்றவன் மூன்றாவது அடிக்கு இடமில்லாமல், இப்போது பலிச் சக்ரவர்த்தியே இரண்டடிக்கே இடமில்லை. மூன்றாவது அடிக்கு இடம் சொல்’’ என்றார்.
‘‘எம்பெருமானே. நான் பிரகலாதனின் பேரன். பொய்யன் ஆகமாட்டேன். இதோ என் சிரசில் வையுங்கள்’’ என்றார்.‘‘திருவிக்ரமன் திகைத்தான். உன்னை யாரும் வெல்ல முடியாது பலிச் சக்ரவர்த்தி. பூலோகத்திற்கு கீழேயுள்ள உலகத்தில் எப்போதும் நீ நீடூடி வாழ்வாய். அதலம் எனும் பாதாளம் தாண்டி, சுதலம் எனும் உலகம் உன்னுடையது. நான், நீ வேண்டும்போது தரிசனமளிப்பேன். இவ்வுலகில் பூக்களாக நீ மலர்ந்து எல்லோரையும் கவர்வாய். என்னை அதனால் மக்கள் அர்ச்சித்து கடைத்தேறட்டும். பூமிக்கு கீழ் இருக்கும் அனைத்தும் உன் சொத்து. உன் ஆட்சி’’ என பலிச் சக்ரவர்த்தியின் தலையில் கால்வைத்தார். அவன் கீழேழு லோகங்களுக்கு அரசனானான். பலியின் இருதயத்தில் ஹரி பிரகாசித்தான்’’ என சுகப்பிரம்ம ரிஷி சொல்லி முடித்தார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment