அஷ்ட காளியரில் ஐந்தாமவள் அழகு நாச்சியார். பொதிகை மலையில் வந்தமர்ந்த அஷ்ட காளியர்கள் ஒவ்வொருவரும் பொதிகை மலை அடிவாரமான நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் குடியமர்ந்து பின்னர் மற்ற பகுதிகளுக்கு தம்முடைய திரு விளையாடல் காரணமாகவும், வழிபடும் பக்தர்கள் இடப்பெயர்ச்சி காரணமாகவும், பிடிமண் மூலம் அங்கங்கே கோயில் கொண்டனர். பாபநாசம் மலையிலிருந்து இறங்கிய அழகு நாச்சியார், தானும் தனது சகோதரிகள் போல பக்தர்களால் வழிபட வேண்டும். தனக்கும் கோயில் எழுப்பப்பட வேண்டும் என்று எண்ணினாள். நெல்லை மாவட்டத்திலுள்ளது சிந்தாமணி கிராமம். அங்கு விவசாயம் செய்துவந்த குப்பாண்டி, தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியில் ஐப்பசி மாதம் வளர்பிறையில் ஏர் கட்டினார். தென்பகுதியில் ஏர் வரும்போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக்கண்ட குப்பாண்டி பாம்பு ஏதாச்சும் கொழுவில் மாட்டி இறந்து விட்டதோ என்று எண்ணி வருந்தினார்.
அந்தநேரம் கஞ்சிக்கலயம் கொண்டு வந்த அவரது மனைவி பொன்னுத்தாயி, வயலில் கலப்பை முன்பு நின்று பூமி நோக்கி, தனது கணவன் இருகரம் கூப்பி வணங்கி நிற்பதை கண்டாள். ‘‘என்ன படைச்ச சிவனே, அய்யா, நான் தெரிஞ்சும் தெரியாம குத்தம் குறை செஞ்சிருந்தா என்ன மன்னிச்சிடப்பா’’ என்று வேண்டிக்கொண்டு நாலா புறமும் பார்த்தவாறு தன்னையே ஒரு சுற்று சுற்றிக்கொண்டார் குப்பாண்டி. வடக்கு திசையில் வயல் வரப்பில் பொன்னுத்தாயி நிற்பதைக் கண்டு, ‘‘நீ எப்பம் வந்த?’’ என்று கேட்க, ‘‘நீங்க நிலம் பார்த்து சாமி கும்பிடும்போதே வந்திட்டேன்’’ என்றாள் அவள். தலையிலிருந்து கலயத்தை இறக்கிவைத்தாள். கஞ்சி குடித்து முடித்தார் குப்பாண்டி. பொன்னுத்தாயி, ‘‘கலப்பைகட்டுமுன்னே சாமி கும்பிடுவீக, இது என்ன புதுப்பழக்கம், மூணு உழவு உழுத பிறகு சாமி கும்பிடுதீக?’’ என்று கேட்டாள். ‘‘அது ஒண்ணுமில்ல, கலப்பை கொழுவில, பாம்பு ஏதோ மாட்டி செத்திருக்கும் போலுக்கு, கொழுவில ரத்தக்கறை படிஞ்சிருக்கு.
அதான் நல்ல காரியம் செய்யுற சமயம் இப்படி ஆகுதே. அதுவும் நல்ல பாம்பா இருந்திறப்பிடாதேன்னுதான் சாமிய கும்பிட்டேன்,’’ என்றார் குப்பாண்டி. உடனே பொன்னுத்தாயி, பதட்டத்துடன், ‘‘முதல்ல கலப்பையைத் தள்ளி வச்சிட்டு, நீள கம்பு எடுத்து தட்டி, தட்டிப்பாருங்க, ஏன்னா, துண்டுப்பட்ட பாம்புக்குதான் வீரியம் அதிகம் இருக்கும். கடிச்சி, கிடிச்சி போடாமங்க... ஊரு கண்ணு வேற நமக்கு இருக்கு, அதான் இப்படி யெல்லாம் நடக்குதுபோல’’ என்றாள். குப்பாண்டி தென்னந்தோப்பில் இருந்து நீள கம்பு ஒன்றை கொண்டு வந்து ரத்தம் படிந்திருந்த இடத்தைத் தட்டினார். அங்கே ஒரு கல் தட்டுப்பட்டது. உடனே அதை எடுக்க முயற்சித்தார். முடியவில்லை. பொன்னுத்தாயி அருகே வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்த நபர்களை அழைத்தாள்.
வந்தவர்களோடு சேர்ந்து குப்பாண்டி அந்தக் கல்லை எடுத்து சுற்றியிருந்த மண்ணை அப்புறப்படுத்தினர். அது அழகான ஒரு பெண் அமர்ந்த நிலையில் இருந்த சிலை. ஒரு கை யோக முத்திரையுடன் இருந்ததால் அது அம்மன் சிலை என்று முடிவு செய்தனர். அம்மன் சிலையின் வலது தோளில் வெட்டுக்காயம் இருந்தது. அந்த காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. வாய்க்கால் தண்ணீரால் சிலையை சுத்தம் செய்து தோட்டத்திற்கு கொண்டுவந்து மரநிழலில் வைத்தனர். ஆனாலும், ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. குப்பாண்டி மனம் உருகி வேண்டினார். அப்போது ஒரு அசரீரி கேட்டது: ‘‘எனக்கு இந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள். எனது பெயர் அழகு நாச்சியார். என்னை வடதிசையை நோக்கி வைத்து பூஜை செய்.’’ உடனே அம்மன் சிலையை அங்கிருந்த புளியமரத்தின் அடியில் வடக்கு நோக்கி வைத்தனர். ஊர் பிரமுகர் ஒருவரின் வாழை தோட்டத்திலிருந்து பழங்கள் கொண்டு வந்து அம்மனுக்கு படைத்தார்கள். அனைவரும் கைகூப்பி வணங்கினர். பூஜை முடிந்த உடனேயே வடிந்துகொண்டிருந்த ரத்தம் நின்றது. மனமகிழ்ந்த விவசாயிகள், தொடர்ந்து வயல் நடவு மற்றும் விதைப்பு நேரங்களிலும், அறுவடை நாட்களிலும் பூஜை செய்து வழிபட்டனர். ஒருநாள் அன்பர்களின் கனவில் தோன்றிய அம்மன், ‘‘நான் மழையில் நனைந்து வெயிலில் காய்கிறேன். அதோடு தனித்தனியாக வந்து பூஜை செய்து என்னை வணங்கி செல்லும் நீங்கள், ஒருசேர குழுமி பூஜித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்,’’ என்று கூறினாள். அதன் பின்னர் ஊரார் ஒன்றுகூடி அம்மனுக்கு கோயில் எழுப்ப முடிவு செய்தனர். கோயிலை நிர்மாணிக்க கொடைவிழா நடத்தப்பட்டது. கோயிலில் அழகு நாச்சியம்மனுக்கு அருகில் முப்பிடாதி அம்மன், பேச்சியம்மன், புது அம்மன் ஆகிய தெய்வங்கள் தனிச் சந்நதிகள் கொண்டுள்ளனர். அழகு நாச்சியம்மன் எதிரில் உள்ள பலிபீடத்தை மகிஷாசுரன் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.
மேலும் பைரவர், மருதடிக்கருப்பன், வீரபத்திரர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். அழகு நாச்சி அம்மனுக்கு சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க் கிழமை கொடைவிழா நடைபெறுகிறது. காரணம் அது வயல் அறுவடை முடிந்து, மழை, குளிர், பனி இல்லாத கோடை காலம். அழகு நாச்சியம்மன் குற்றால மலையில் இருந்து வந்ததால் கொடைவிழாவின்போது அபிஷேகம் செய்வதற்காக அருவி நீரை எடுத்து வருகிறார்கள். அம்மனுக்கு சாமியாடும் நபர்கள் மற்றும் விரதம் இருக்கும் விழாக்குழு அன்பர்கள் புனித நீர் எடுக்க செல்வார்கள். அம்மனுக்கு கலப்பைக் கொழு பட்டு காயம் உண்டானதை நினைவுகூறும் விதமாக, கொடைவிழா நடைபெறும்போது அம்மனுக்கு அலங்காரம் செய்கையில் அம்மன் சிலையின் தோள் பகுதியிலிருந்து ரத்தம் கொட்டுவது போன்று குங்குமம் மற்றும் செம்மலர்களால் அலங்காரம் செய்கிறார்கள். அழகுநாச்சியம்மன் கோயில், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள சிந்தாமணி கிராமத்தில் அமைந்துள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment