Sunday, 3 June 2018

சுந்தரபாண்டி சாஸ்தா வரலாறு

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் பூர்ணகலை, புஷ்கலை துணையின்றி, சாஸ்தா வீற்றிருக்கிறார். இவர் சுந்தரபாண்டி சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனின் வம்சா வழியினர் மானாமதுரையிலிருந்து, நெல்லை சீமைக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் வரும் போது, அவர்களது குல தெய்வமான அய்யனாரின் விக்ரஹத்தையும் உடன் எடுத்து வந்தனர். அவர்கள் தற்போதைய செய்துங்கநல்லூரில் குடியேறினர். அவர்கள் இப்பகுதியில் விவசாயம் செய்தனர். கால்நடைகள் வளர்த்து வந்தனர். அவர்களது தேவைக்காக, அய்யனாரை வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு குளத்தை வெட்டினர். அந்த குளத்திற்கு அய்யனார் குளம் என்று பெயர் வைத்தனர். மூன்று தலைமுறைக்கு அப்பால் அங்கு வாழ்ந்த மக்கள் மீண்டும் இடம் பெயர்ந்துள்ளனர். அதன் பின்னர் அய்யனார் கோயில் இருந்த இடம் காடாக மாறி இருந்தது. அப்பகுதியில் இருக்கும் குன்றுக்கு மறுபுறம் சிவந்திப்பட்டி என்னும் ஊர் உள்ளது.

இந்த ஊரில் குடியிருந்த மக்கள் அதிக அளவில் மாடுகளை வளர்த்து வந்தனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி ஆவுடையம்மாள் தினமும் காலை, மாலை வேளைகளில் குவளையில் பால் எடுத்துக் கொண்டு பக்கத்து ஊர்களான வெட்டியபந்தி, செய்துங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு வியாபாரத்துக்கு செல்வார். சிவந்திபட்டியில் இருந்து அய்யனார் குளத்தின் கரை வழியாக உள்ள ஒத்தையடிப் பாதையில் சென்று வருவார். குளத்தின் மறுகரையில் பால் கொண்டு வரும்போது, மரத்தின் வேர் ஒன்று ஆவுடையம்மாள் காலை இடறியது. இதனால் பால் அந்த வேர் பகுதியில் கொட்டியது. பால் முழுவதும் வீணானதால் அவர் வீட்டுக்கு திரும்பிச் சென்றார். மறுநாளும் அதே இடத்தில் பால் கொட்டியது. இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்க, ‘‘ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் பால் கொட்டுகிறதே, ஏதாவது தெய்வ குற்றமாக இருக்குமோ’ என்று குழப்பத்தில் இருந்த ஆவுடையம்மாள், தனது கணவர் கோவிந்தனிடம் இதுபற்றிக் கூற அவர்‘‘திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு நேர்ந்து பணத்தை முடிச்சு வை. நல்லதே நடக்கும்.’’ என்று கூறினார்.

பின்னர் இருவரும் தூங்கச்சென்றனர். அன்றிரவு அவரது கனவில் ஒரு அழகான இளைஞர் தோன்றி, “பால் கொட்டிய இடத்தில் நான் பல ஆண்டுகளாக இருக்கிறேன். இயற்கை சீற்றத்தில் என் விக்ரஹம் பூமியில் புதையுண்டு போனது. நான்தான், மரத்தின் விழுதாகக் கிடந்து உனது மனைவியின் காலை இடறி உள்ளேன். பால் கொட்டிய இடத்தில் நீ, நாளை வந்து பார்த்தால் நான் லிங்கமாக காட்சியளிப்பேன். என்னை அங்கு பிரதிஷ்டை செய்து வணங்கி வா. உனக்கு பிணியின்றி சுகமான வாழ்வை அருள்வேன். என்னைத் தேடி வரும் யாவருக்கும் துணையாய் நின்று காப்பேன்” என்று கூறினார். திடுக்கிட்டு விழித்தான் கோவிந்தன், தான் கண்ட கனவு குறித்து தனது உறவினர்களிடம் கூறினார். ஊரில் உள்ள பெரியவர்கள் ஒன்று கூடி பால் கொட்டப்பட்ட பகுதிக்கு ஆவுடையம்மாள், கோவிந்தன் ஆகியோருடன் வந்தனர். அங்கே ஒரு லிங்கம், முக்கால் பகுதி, மண்ணில் புதைந்தும், கால் பகுதி மட்டும் வெளியே தெரிந்தது. அதைக் கண்டவர்கள் லிங்கத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடலாயினர்.

தான் கண்ட கனவில் வந்தவர் யானை மீது அமர்ந்திருந்தார் என்று கூறியதால், வந்தவர் சாட்சாத் சாஸ்தாதான் என்று முடிவு செய்தனர். யானை மீது வந்தால், சாஸ்தா என்றும், அவரே குதிரை மீது அமர்ந்து வந்தால் அய்யனார் என்றும், புலி மீது அமர்ந்து வந்தால் ஐயப்பன் என்றும் நம்பப்படுகிறது. சாஸ்தா அழகான ரூபத்துடன் காட்சி கொடுத்ததால் சுந்தர வடிவான சாஸ்தா என்று அழைத்து வந்தனர். சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். சுந்தர வடிவான சாஸ்தா, மருவி சுந்தரவடி சாஸ்தாவானது, அது சுந்தராண்டி சாஸ்தாவாக சுருங்கிற்று, பின்னர் வந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், சுந்தர பாண்டி சாஸ்தா என்று பெயர் கொடுத்து வரலாற்றை எழுத, அதுவே நிலைத்து விட்டது என்கின்றனர். மேலும் சுந்தரபாண்டியன் என்ற மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட சாஸ்தா என்பதால் சுந்தரபாண்டிய சாஸ்தா என்றழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தென் மாவட்ட கிராமங்களில் பூஜை செய்பவர்களாக பெருங்கோயில்களில் அந்தணர்களும், அம்பாள் கோயில்களில் சைவ பிள்ளைமார்களும், சாஸ்தா கோயில்களில் வேளாளர்களும், மாடன் கோயில்களில் கம்பரும், அம்மன் கோயில்களில் பண்டாரம் சமுதாயத்தினரும் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் இந்த சுந்தரபாண்டி சாஸ்தா கோயிலில் வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்து வந்தனர். சாஸ்தாவின் அருளால் இவர்கள் அருள்வாக்கும் கூறினர். இதனால் இங்கு பக்தர்கள் கூட்டமும் அதிகரித்தது. பிணிகளை நீக்கி, நல்ல சுகத்தினை நல்கி அருள்கிறார், சுந்தரபாண்டி சாஸ்தா. இக்கோயிலில் தற்போதுள்ள சங்கிலி பூதத்தார் சிலை, உருட்டிய விழிகளுடன் இரண்டு கைகளையும் கீழே தொங்கவிட்டதுபோல் இருக்கிறார். முன்பு மிகப் பிரமாண்டாக உருட்டிய கண்கள், முறுக்கிய மீசை மற்றும் ஆக்ரோஷமாய் கையை தூக்கியபடி இருந்தார். இவரது பார்வை குரும்பூர், அழகப்பபுரம் வரை தாக்கியது. இவரது பார்வையை எதிர்த்து இடைப்பட்ட யாரும் வீடு, உள்ளிட்ட கட்டிடம் கட்ட முடியவில்லை.

அப்படி கட்டினால் தீப்பற்றி எரிந்து விடுமாம். இதற்கு காரணம் யார் என்று ஆராய்ந்த போது சங்கிலி பூதத்தார் என தெரிய வந்தது. சங்கிலி பூதத்தாரின் ஆக்ரோஷத்தை குறைக்க திட்டமிட்ட ஒருசாரார் இரவு வேளையில் செய்துங்கநல்லூர் வந்து பூதத்தார் கைகளை உடைந்து எறிந்து விட்டனர். இதனால் அவரது ஆக்ரோஷம் குறைந்தது. உடனே சங்கிலி பூதத்தாரின் கைகளை உடைத்தவர்களின் குடும்பத்தில் பலருக்கும் நோய் ஏற்பட்டது. உடனே அவர்கள் குடும்பத்தினர் சங்கிலி பூதத்தாரையும், சுந்தரபாண்டி சாஸ்தாவையும் வேண்டி, செய்த தவறுக்கு அவர்கள் வருந்தினர். பின்னர் பல லட்சம் செலவு செய்து புதிதாக சிலையை உருவாக்கி கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். அதன் பின்னர் அவர்கள் பிணி நீங்கி நல்வாழ்வு வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

கோயிலுக்கு முன்புறம் பேச்சியம்மன் சந்நதி வடக்கு நோக்கி உள்ளது. இசக்கியம்மன், சுடலைமாட சுவாமி, சுடலை மாடத்தி, பிரம்மராட்சசி, முண்டன், வன்னியராயன் மற்றும் பரிவார தேவதைகள் இங்கு உள்ளனர். இந்தக் கோயில் அய்யனார்குளம்பட்டி கரையில் செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு திசையில் அமைந்துள்ளது. பங்குனி உத்திரம் அன்று இங்கு கொடை விழா மிக விமர்சையாக நடக்கும். சாஸ்தாவுக்கு மட்டும் சைவ படையல், மற்ற பரிவார தெய்வங்களுக்கு அசைவ படையல் படைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் தமிழ் மாத கடைசி சனிக்கிழமைகளில் சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது...

🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩

  🔔 *ஓம் நமசிவாய போற்றி* 🔔

📡🔹📡🔹📡🔹📡🔹📡🔹
  
      என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
             *வாட்சப் குழுமம்*

🎖 _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🎖
     🏡 *இறைத்தொண்டு!* 🏡

      👇🏼குழுவில் இணைய👇🏼
         📲+91 9486053609
🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻🍃

No comments:

Post a Comment