Sunday, 3 June 2018

தரும ராஜா சுவாமி வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது பெரும்பனை. இவ்வூரில் அமைந்துள்ளது தருமராஜா கோயில். இது பஞ்ச பாண்டவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியிலிருந்து கருப்பையா நாடார் குடும்பம் பிழைப்பு தேடி பெரும்பனை ஊருக்கு வந்துள்ளனர். பெரும்பனை முன்னொரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்ததால் இந்த ஊர் பெரும்பண்ணை என்றே அழைக்கப்பட்டதாகவும் அது மருவி பெரும்பனை என்று அழைக்கப்படலாயிற்று என்றும் கூறுகின்றனர். ஈத்தாமொழி கருப்பையாவின் குல தெய்வம் பொன்னார மாடனும், சாஸ்தாவும் ஆகும். கருப்பையா நாடார் தனது குடும்பத்துடன் ஊருவிட்டு வரும்போது அவரது குலதெய்வமும் அவர்களுடன் வந்துவிட்டது. இதையடுத்து தனது குலதெய்வங்களுக்கு பிடிமண் கொண்டு வந்து பெரும்பனையில் கோயில் அமைத்துள்ளார்.

ஊரிலிருந்து வரும்போது தருமர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களுடன் திரௌபதியும் சேர்ந்திருக்க கூடிய வரைபடம் ஒன்றினை கொண்டு வந்து வீட்டுச் சுவரில் மாட்டி வைத்துள்ளார். வயது முதிர்ந்த நிலையில் ஒருநாள் பகலில் கருப்பையா நாடார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது கனவில் தோன்றிய தருமர், என்னை நம்பிய உனக்கும் உன்னைச் சார்ந்தவர்களுக்கும் அருள்பாலிக்க விரும்புகிறேன். ஆகவே, எனக்கு கோயில் கட்டி பூஜை செய் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்படி கருப்பையா நாடார், தனது மகன் பண்டார நாடார் மூலம் 1927ம் ஆண்டு அவர்களது சாஸ்தாங்கோயிலிலேயே தருமருக்கு கோயில் கட்டினார்.அக் கோயில் தருமராஜா கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நடுவில் மூர்த்தி சாமி உள்ளார்.

இவர் பொன்னார மாடன் சாஸ்தாவாக கருதப்படுகிறார். பஞ்ச பாண்டவரோடு திரௌபதி வீற்றிருக்கிற படம் தெற்கு பகுதியில் வடக்கு திசை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கி பெருமாள்சாமி, ராமசாமி, பரமசிவம் போன்ற தெய்வங்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி, குந்திதேவி, பெருமாள், ராமசாமி, ஜானகி, பரமசிவம், சுடலைமாடன், இசக்கியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக்கோயிலில் தினசரி பூஜைகள் இல்லை. வாரத்தில் வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மாலை நேரத்தில் பூஜைகள் நடைபெறுகிறது.

வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களில் வரும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஆண்டு தோறும் ஆவணி மாதம் 3வது வெள்ளிக்கிழமைகளில் கொடை விழா நடைபெறுகிறது. வியாழக்கிழமை இரவு குடியழைப்புடன் தொடங்கும் கொடைவிழா, ஞாயிறு மாலை சாப்பாடு எடுப்பு என்ற
நிகழ்ச்சியுடன் நிறைவுபெறுகிறது. இக்கோயிலைச் சார்ந்தவர்கள் பழங்காலத்திலேயே தூத்துக்குடி, பண்டாரபுரம், அச்சம்பாடு, ரெட்டங்கிணறு, நன்னிகுளம், பேய்குளம் போன்ற ஊர்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். கொடை விழாவின்போது இங்கு வந்து வரி கொடுத்து விழாவில் பங்கேற்கின்றனர். பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையை பெற்றுக் கொண்டாலும் அதை வரியாக கருதவில்லை.
ஆண்டு தோறும் சைவ கொடைவிழா நடத்தும் இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடா வெட்டி கொடை நடத்துகின்றனர். தருமருக்கு கருத்த கிடா, பீமனுக்கு அடிவயிற்றில் சிவப்பும் மேல் பகுதியில் வெள்ளை நிறமும் கொண்ட புள்ளப்போர் ஆடும், அர்ச்சுனனுக்கு அடி வயிற்றில் வெள்ளை நிறமும் மேல் பகுதியில் சிவப்பு நிறமும் கொண்ட ஆடு, நகுலனுக்கு சிவப்பில் வௌ்ளை புள்ளி போட்ட ஆடு, சகாதேவனுக்கு சிவப்பு நிறத்தில் வெள்ளை புள்ளி போட்ட ஆடு, குந்தி தேவிக்கு செம்மறி ஆட்டுக்கிடா என பாண்டவர்களுக்கு பலி கொடுத்து வழிபாடு நடத்துகின்றனர். இவ்வாறு நிறம் பார்த்து ஆட்டுக்குட்டியை வாங்கி வளர்த்து பலி கொடுக்கத்தான் மூன்று ஆண்டுகள் எடுக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை பலியிடப்படும் ஆடுகளை சமைத்து அடுத்தவேளை பூஜையின்போது சாமிக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். பண்டார நாடார் சாமி ஆடி வந்தார். அவருக்கு பின்னர் அவரது மகன் ராமர் சாமி ஆடுகிறார். கொடை விழாவின்போது சாமி ஆடும் அவர் பீமனுக்கு ஆடும்போது கையில் கதாயுதமும், அர்ச்சுனனுக்கு ஆடும்போது வில்லும், நகுலனுக்கு ஆடும்போது தண்டாயுதமும் கொண்டு சாமி ஆடுவார். இக்கோயிலில் கொடைவிழாவின்போது மேளம் பயன்படுத்துவதில்லை, அதற்கு பதிலாக வில்லிசை மட்டுமே பாடப்படுகிறது. முதலில் சாஸ்தா பிறப்பும், அடுத்து பாண்டவர்கள் கதையும் பாடப்படுகிறது. பின்னர் சுடலைமாடன் கதையை பாடிய பின்னர் கோயில் அமைந்த கதையையும் கதைப்பாடலாக பாடுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை கொடை விழா நிறைவாக வாழி பாடுதல் நடக்கிறது. அப்போது கொடை விழா நடத்தியவர்கள், வரி கொடுத்தவர்கள், நன்கொடை அளித்தவர்கள் மற்றும் ஊரிலுள்ள சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நோயின்றி செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று வாழ்த்தி பாடுகின்றனர்.
சாஸ்தாவுக்கும், ராமருக்கும் சைவ படையல் படைக்கப்படுகிறது. மூன்று நாள் கொடைவிழாவில் சனிக்கிழமை காலை ராமருக்கும், ஜானகி அம்மனுக்கும் திருமண வைபோக பூஜை நடத்தப்படுகிறது. அது முடிந்த பின் கருப்பட்டியும், வாழைப் பழமும் சேர்த்து பக்தர்களை நோக்கி வீசுகின்றனர். அதை பக்தர்கள் ஆவலோடு ஓடிச்சென்று வாங்கிக் கொள்கின்றனர்.

இதில் பிரசாதம் கிடைக்காதவர்களுக்கு கடைசியில் அவர்களை தேடிக்கொண்டு கொடுக்கின்றனர். அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இதை தருமச் சாப்பாடு என்கின்றனர். இக்கோயிலில் எல்லா தெய்வ சந்நதியிலும் திருநீறு கொடுத்தாலும், திரௌபதி, குந்தி தேவி சந்நதிகளில் குங்குமமும், ராமர் சந்நதியில் திருமண்ணும் வழங்கப்படுகிறது. சுடலைமாடன் சந்நதியில் திருநீறு பூசும் பக்தர்கள், ராமர்சந்நதியில் திருநாமம் இட்டுக் கொள்கின்றனர். சாதி, மதவேறு பாடின்றி அனைவரும் இக்கோயில் விழாவில் பங்கேற்கின்றனர். இக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து சாத்தான்குளம் செல்லும் வழியில் இட்டமொழியிலிருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தருமராஜா கோயில் என்றும் பஞ்ச பாண்டவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது...

🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩

  🔔 *ஓம் நமசிவாய போற்றி* 🔔

📡🔹📡🔹📡🔹📡🔹📡🔹
  
      என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
             *வாட்சப் குழுமம்*

🎖 _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🎖
     🏡 *இறைத்தொண்டு!* 🏡

      👇🏼குழுவில் இணைய👇🏼
         📲+91 9486053609
🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻🍃

No comments:

Post a Comment