Wednesday, 6 June 2018

இடுக்கத்தொண்டு சுடலைமாடசாமி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து சுரண்டை செல்லும் வழியில் உள்ளது கிளங்காடு. இந்த ஊரில் பேரும், புகழோடும் வாழ்ந்து வந்தார். சூரிய நாராயண அய்யர். மலையாள தேசத்திற்கு வில்லுவண்டி கட்டிச்சென்று, ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இரண்டு, மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து வியாபாரம் செய்து வரும் அவர் வியாபாரத்தில் தனக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை பெருமாள் ஆலயத்திற்கு அளித்து வந்தார்.
எல்லா வசதி வாய்ப்புகளையும் தந்த, எம்பெருமாள் திருக்குறுங்குடி அழகிய நம்பி, எனக்கு ஒரு வாரிசை தரவில்லையே என்று அவ்வப்போது வருத்தப்பட்டுக் கொள்வார்.
கேரளாவிற்கு வண்டி போகும் போதெல்லாம் மாட்டுவண்டி ஓட்டும் வண்டிகாரன் முத்தையன், செங்கோட்டையில் சாலையோரம் மரத்தடியில் நிலையம் கொண்டுள்ள மாடனை வணங்கிசெல்வான். அதை கிண்டல் செய்வார் சூரியநாராயண அய்யர். ‘‘ஒரு கல்லை கண்ல காண கூடாத, உடனே எங்க சாமின்னு போய் விழுந்து கிடந்து கும்பிடுற, இதனாலே சமயம் பாதி போயிடுது’’ என கூறுவார்.
அவனும் இப்ப போயிடலாம் சாமி என்று பதிலுரைப்பான். இப்படி நாட்கள் கடந்தது. ஒரு வெள்ளிக்கிழமை நண்பகல் நேரம் மாடனை வணங்கும் போது, அய்யர் கேலி செய்ய, முத்தையன், சுவாமியிடம் தனது எஜமானை மன்னிக்குமாறு வேண்டுகிறான். அன்று இரவு முத்தையன் கனவில் தோன்றிய மாடன், கோயில் இல்லாததால் தானே, என்னை அய்யர் கல் என்றார். அவரே எனக்கு கோயில் கட்டுவார். நீ அச்சம் கொள்ள வேண்டாம். என்று கூறினார்.
மாதங்கள் சில கடந்த நிலையில் ஒரு நாள் அய்யர் ஜவுளி வியாபாரம் செய்து வரும் இடத்திற்கு 10 வயது பாலகன் வந்தான். ‘‘ஐயா, நான் உங்களுக்கு உதவட்டுமா’’ என்று கேட்க, ‘‘யாரப்பா நீ, இந்த வயதில் உன்னால் எப்படி எனக்கு உதவமுடியும்’’ என்று அய்யர் கேட்டார். ‘‘நீங்கள் சிறிது ஓய்வெடுங்கள் நான் விற்று காண்பிக்கிறேன்.’’ என்று கூறிய அந்த சிறுவன் அய்யர் தூங்கி விழிக்கும் போது, துணிகள் அனைத்தும் விற்றதாக கூறி, அதற்குரிய தொகை இந்தா இருக்கு என்று பணமுடிப்பை கொடுத்தான். வியப்பில் ஆழ்ந்த அய்யர், அவனை ஆரத்தழுவி நீ என்னோடு வா என்று வீட்டிற்கு அழைத்து வந்தார்.
தனது கணவர் வீட்டிற்கு ஒரு சிறுவனுடன் வருவதைக்கண்ட அய்யரின் மனைவி கோமதி அம்மாள், ‘‘ஏன்னா, யாரு இந்த பையன்’’ என்று கேட்க, சூரிய நாராயண அய்யர் நடந்த சம்பவங்களை கூறுகிறார்.  இரவு தூங்கிக்கொண்டிருக்கும் கோமதி அம்மாள், ‘‘ஏன்னா, நமக்கு பிள்ளை இல்ல, வயசும் ஏறிண்டே போகுது, நல்ல அழகா இருக்கிறானே இந்த பையன், இவனை நாம பிள்ளையா வளர்ப்போம்க’’ என்றார். அய்யர் தனது மனைவியின் கேள்விக்கு விழிகள் அசைய, கோமதியின் கைகளை இறுக பற்றிக்கொண்டு ‘‘ம்... உன் விருப்பமே, எனது விருப்பம்’’ என்றார்.
மறுநாள் காலையில் அய்யர், சிறுவனிடம் ‘‘உனது பெயர் என்ன, கூறப்பா, எப்படி நான் உன்னை அழைப்பது’’ என்று கேட்கிறார். அருகிலிருந்த வண்டிக்காரன் சொல்லு தம்பி, என்று கூறுகிறார். கோமதி அம்மாளும் அருகே நின்றிருக்க, சிறுவன், வாய் திறந்தான், அய்யரை பார்த்து, வண்டிக்காரர் எப்படி உங்களை அழைப்பார்?..
அது… என்று அய்யர் தொடங்கும் போது, வண்டிக்காரர் முந்தினார். ‘‘சாமின்னு சொல்லுவேன் தம்பி.’’
உடனே பதிலுரைத்தான் சிறுவன். என் பெயரு சுவாமி என்று, செக்கச்சிகப்பாய், செந்தூர செவ்விதழ் அசைய முத்துப்பற்கள் தெரிய பேசிய அச்சிறுவனை ஆரத்தழுவி முத்தமிட்டு என் மகனே வா சுவாமி என்று அழைத்தார் சூரிய நாராயண அய்யர்.
சிறுவனை செல்ல பிள்ளையாக வளர்த்து வந்தனர். ஒரு வெள்ளிக்கிழமை நண்பகல் நேரம், வீட்டில் பின்புறம் விளையாடிக்கொண்டிருக்கும் மகனை சாப்பிட அழைக்க வந்தாள் கோமதியம்மாள். அப்போது அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய செய்தது. வேப்பமரம் நிழலில் பாலகனாக இருந்த சுடலைமாடன் வெள்ளாட்டங்கிடா துள்ளுமறி ஒன்றை தனது மடியில் கிடத்தி அதன் நெஞ்சை கீறி உதிரம் குடித்துக் கொண்டிருந்தார்.
வீட்டிற்குள் விரைந்து வந்த கோமதி அம்மாள் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு கதவருகே நின்று அழுதுபுலம்பினாள் பகவானே என்ன இது... அந்த நேரம் வீட்டிற்குள் வந்தார் சூரிய நாராயண அய்யர். கோமதி பையன் சாப்பிட்டானா, என்று கேட்க, அழுத நிலையிலிருந்த கோமதி, கண்ணீரை துடைத்துக் கொண்டு, பையனா அவன், போய் பாருங்கள் பின்னாடி, உங்கள் அருமை புத்திரன் செய்யும் வேலையை என்று சொன்னதும். அய்யர் பின்னாடி சென்று பார்க்கிறார். அங்கே சிறுவனாக இருந்த சுடலைமாடன் அதே வேலையை செய்து கொண்டிருக்கிறார்.
அந்த கோலத்தை கண்டு வீட்டிற்குள் வந்த அய்யர், பிள்ளை என்று நம்பி பிசாசை அழைத்து வந்துவிட்டேனே, கோமதி என்று தன் மனைவியின் கைகளை பற்றிக்கொண்டு கதறினார்.
உடனே, வண்டிக்காரனை அழைத்த அய்யர், மலையாளத்து மந்திரவாதியை கையோடு கூட்டிவா, என்ற பதட்டத்துடன் கூறினார்.
மறுநாள் மாலை வந்த மலையாள மந்திரவாதி, மைபோட்டு பார்க்கிறார். வந்திருப்பது சுடலைமாடன் என்பது தெரிகிறது. அய்யரிடம் கூறி, ஆலோசனை கேட்டு பின்னர் மாடனை மந்திரசக்தியால் தனது சிமிழுக்குள் அடைக்கிறார். மயானக்கரையோரம் மந்திரவாதி நடந்து வரும்போது சிமிழிலிருந்து வெளிப்பட்ட மாடன், மந்திரவாதியை வதம் செய்கிறார்.
அன்றிரவு அய்யரின் கனவில் தோன்றிய சுடலைமாடன், அப்பா, நலமா இருக்கிறீர்களா, என்று கேட்க, அஞ்சிய, அய்யர் என்னை ஏன் சோதிக்கிறாய் என்று கேட்க, சுடலைமாடன் பதிலுரைத்தார். எனக்கு கோயில் கட்டி 21 பீடம் அமைத்து 61 பந்தி வைத்து உரிய பலியும் கொடுத்து கொடை நடத்த வேண்டும். என்றார். அதற்கு அய்யர், என் இடத்தில் உனக்கு கோயில் கட்டுறேன், கொடைக்கு தேவையான பொருட்களையும், காசு, பணம் என எதை கேட்டாலும் கொடுத்துரேன். ஆனால் பூஜை, காரியங்கள் மற்றும் கோயிலை நிர்வகிக்க நீதான் அதற்கு தகுந்த ஆள பார்த்துக்கனும் என்றார்.
சரி, உன் பிள்ளை நான் தான், ஒரு தகப்பன் பிள்ளைக்கு செய்ய வேண்டியதை செய்து வா, ஒரு மகன் பெற்றவர்களை பார்ப்பதை போல் தள்ளியிருந்தாலும் தக்க நேரத்தில் துணையாக வருவேன். என் தாயிடம் சொல்லுங்கள். அச்சமும், கவலையும் வேண்டாம். உங்களை சோதிக்கவே அவ்வாறு அன்று செய்தேன். என்று கூறி மறைந்தார்.
சுடலைமாடனுக்கு கொடுத்த வாக்குப்படி, அய்யர் தனது சொந்த நிலத்தில் கோயில் எழுப்பினார்.
கிளங்காடு அருகே அனந்தபுரத்தில் கனையாபிள்ளை அவரது தம்பி அப்பா பிள்ளை இருவரும் சிவனடியார்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் கனவில் தோன்றிய சுடலைமாடன், நான் மாயாண்டி சுடலை, அய்யர் இடத்தில் கோயில் கொண்டுள்ளேன். அங்கு எனக்கு பூஜை, வழிபாடுகள் செய்து வர நீங்கள் வரவேண்டும். உங்கள் குடும்பத்திற்கும், வம்ச வழியினருக்கும், நான் வேண்டியதை கொடுத்து காத்து நிற்பேன் என்று கூற, அடுத்த நாள் எழுந்த அண்ணன் தம்பி இருவரும் கிளங்காட்டிற்கு வந்தனர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் கோயில் அமைக்கும் முயற்சியில் அய்யர் தனது சகாக்களுடன் நின்று கொண்டிருந்தார். அய்யரிடம் தான் கனவு கண்டதையும், மாடனுக்கு பணிவிடை செய்ய தயாராக இருப்பதையும் எடுத்துரைத்தனர். அய்யர், அவர்களை வரவழைத்து கௌரவித்து, பொறுப்புகளை ஒப்படைத்தார்.
அன்றைய தினம் அய்யர் வீட்டிற்கு வந்த சுப்பையாபட்டர். அய்யரே உங்களுக்கு வேற வேலை இல்லையா, காத்து, கருப்பு, பேய் , பிசாசு, மாடன், மாடத்தின்னு எல்லாத்துக்கும் கோயில கட்டிட்டு இருக்கிறேளே. கொஞ்சமாவது விபரம் இருக்கா, கனவில் சொன்னாங்களாம் இவங்க கோயில் கட்டுறாங்களாம். இனிமே கனவில் வந்து எனக்கு பன்றி கொண்டு வந்து பலி கொடுன்னு கேட்கும். அதையும் செய்வீங்களா என்று கிண்டலத்துக்கொண்டு தனது கையில் இருந்த துண்டு வஸ்திரத்தை ஒரு உதறு உதறி, தனது தோளில் போட்டுக்கொண்டு ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தபடி சுப்பையா பட்டர், அய்யர் வீட்டிலிருந்து வெளியேறினார்.
அய்யர் தான் கோயில் அமைத்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தார். மாடா, வாடா, என்னை விட வயசில சின்னவனெல்லாம் கேலி பண்றான். நான் என்ன செய்ய, உன் இம்சையால நாக்கு பிடிங்கிட்டு நாண்டுக்கவா, சொல்லு என்ன வாய, மூடிட்டு இருக்க, கல்லுன்னு சொன்னதற்கு கோப பட்டியே, இப்போ நிஜமாகவே கல்லாயிட்டியா என்று கேட்க, அசரீரி கேட்டது, அப்பா, கவலை கொள்ள வேண்டாம். எனக்கு கொடையை நடத்துங்க, எந்த சுப்பையாபட்டர், உங்களை கேலி செய்தானோ, அவரே உங்களை மதித்து வந்து உதவி கேட்பார். பொறுத்திருங்கள் என்று கூறியது.
அய்யர், தன் நிலை வருந்தி, வீட்டிற்கு வந்தார். வராக்கடன் தொகை வந்ததாக வண்டிக்காரன் வந்து ஒரு பணமுடிப்பை கொண்டு வந்து கொடுத்தார். சந்தோஷம் கொண்டு மனைவி கோமதியம்மாளை அழைத்து பேசிக்கொண்டிருக்கும் போது வண்டிக்காரன் வந்து வழக்கம் போல் விற்ற காசை கொடுத்தான். இப்பதான் நீ வருகிறியா, ஆமாங்க சாமி, அப்போ முன்னாடி வந்தது. என்று யோசிக்கும் போது, சுடலைமாடன் அசிரீரியாக பேசினார். அப்பா, வண்டிக்காரனுக்கு வந்தவுடன, அவலும், பானமும் கொடுக்கிறீங்க, உங்க மகன் வந்தேனே, எனக்கு ஜலமாவது கொடுத்தேளா என்று கேட்டதோடு அந்த அசிரீரி நின்றது. சூரிய நாராயண அய்யருக்கு புரிந்தது. வந்து போனது சுடலைமாடன் தான் என்று.

சூரிய நாராயண அய்யர், மாடனுக்கு கொடுத்த வாக்கின்படி 21 பீடம் அமைத்து கோயில் உருவாக்கப்பட்டது. கொடை விழா நடத்த நாள்குறித்து கால் நாட்டி, விழாவிற்கான பொருளுதவி அனைத்தையும் வழங்கினார். விழாவினை அண்ணன் தம்பிகளான கனையாபிள்ளை, அப்பாபிள்ளை ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
அய்யரின் அழைப்பை ஏற்று சுப்பையா பட்டர் விழாவினை காண புறப்படுகிறார். அவரது மனைவி, நானும் கோயிலுக்கு வாரேன் என்று சொல்கிறார். அப்போதும் சுப்பையா பட்டர், ‘‘ஏய், மண்டு, நோக்கு அறிவு ஏதாச்சும் இருக்காடி, அது பேய் கோயில்டி, என்று கூற, சூரிய நாராயண அய்யராத்து மாமி வாராங்க, நான் வரகூடாதா’’ என்று பதிலுரைத்த அவரது மனைவி நல்லமங்க ஆச்சியை, ‘‘சரி வந்து தொலை’’ என்று கோபத்தோடு குரல் கொடுத்த பின் உடன் அழைத்து செல்கிறார் சுப்பையாபட்டர்.
கோயிலில் பழங்கள், தேங்காய் என பல்வேறு வகையான பொருட்களால் படையல் போட்டு, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. முன்னதாக  சூரிய நாராயண அய்யரை வரவழைத்து அவரது கையால் சுவாமி பீடங்கள் முன்னால் வேட்டி, துண்டு உள்ளிட்ட வஸ்திரங்கள் வெற்றிலை பாக்குடன் வைக்கப்படுகிறது. சிவனைந்த பெருமாளுக்கு முதல் பூஜை நடக்கிறது. சுடலைமாடனுக்கு பூஜை நடக்கும் போது கோமரத்தாடிகளாக கன்னயைாபிள்ளையும், அப்பா பிள்ளையும் சுவாமி ஆடுகின்றனர். சுவாமியின் கதையையும், கோயில் அமைந்ததையும் மகுட கலைஞர்கள் ராகமாக பாடுகின்றனர். கோயிலில் கூடியிருந்த பெண்கள் குலவையிட்டு அவ்வப்போது, சுவாமியின் ஆரவாரத்திற்கும், கோமரத்தாடிகளின் ஆதாளி சத்தத்திற்கும் சந்தம் சேர்த்தனர். அப்போது கோயிலின் வெளியே நின்று விழாவினை பார்த்துக்கொண்டிருந்த நல்லமங்கை ஆச்சி, மாடன் அருள் வந்து ஆடினார். சுப்பையா பட்டர் பிடித்து பார்த்தார். நல்ல மங்கை தொடர்ந்து ஆடினாள். நாக்கை துருத்தி, தலைமுடியை விரித்து ஆங்கார ரூபத்தோடு ஆடிய நல்லமங்காளை பார்த்து சுப்பையா பட்டர் கண்ணீர் விட்டு அழுதார். சூரிய நாராயண அய்யரிடம் சென்று கதறினார். ‘‘ஓய், நீரு அழைத்ததால் தான் வந்தேன். சூத்திரன் கோயில் வேண்டாமென்று கூறியும் மீறி வந்தாள். நான் இப்போது அவமானத்துக்குள்ளாகி விட்டேன்.’’ என்றார். சூரிய நாராயண அய்யர், சாமி சிலை முன்பு வந்து நின்றார், நல்லமங்கையை நிறுத்திவிட்டு, சாமியிடம் பேசினார். ‘‘மாடா, சத்தியத்திற்கு கட்டுப்பட்டவன் நீ, இவளை விட்டு விலகு’’ என்றார். மறு வினாடி, நல்லமங்கை மயங்கிய நிலையில் விழுந்தாள். தண்ணீர் தெளித்து எழுப்பப்பட்ட பின் என்ன நடந்தது என்று சுற்றி நிற்பவர்களை பார்த்து கேட்டார். சூரிய நாராயண அய்யர் கூறினார், ஓய், சுப்பையா மாடன்கிட்ட மன்னிப்பு கேளும் என்றார். அவர், பேய் கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றேரா, வேதம் படித்தவா பேசுறதா இது என்று சினம் கொண்டு,
உடனே, மனைவியை சுப்பையா பட்டர், வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நாட்கள் சென்றது,
மாடன் கோயிலில் இரண்டாவது கொடை விழா  நடத்த கோமரத்தாடிகளும், அவரது உறவினர்களும் முடிவு செய்து தங்களால் இயன்ற பொருளுதவி வசூலித்து விழா நடத்த திட்டமிட்டனர். விழா தொடங்கியது. இந்நிலையில் மாடன் கோயில் கொடைவிழா வந்தால் மனைவி மீது சுடலை வந்திறங்கி ஆட வைத்து விடுவானே என்றெண்ணிய சுப்பையாபட்டர், கேரள மந்திரவாதியை வரவழைத்து நல்லமங்கை மீது இனி சுடலை வரக்கூடாது என்று சிறப்பு பூஜைகள் செய்தார். அந்த பூஜையின் போது அவர் உச்சிதலைமுடியை பிடுங்கி எடுப்பது, பாதங்களில் நெருப்பால் சுடுவது போன்ற கொடுஞ் செயல்களை மந்திரவாதி செய்ய, அதை பொறுத்துக்கொள்ளாத நல்லமங்கை கதறினாள். ‘‘மாடனே, சுடலைமாடனே, நீ உண்மையான தெய்வமாக இருந்தால் என்னை காப்பாற்று. நீ, என் மேல் வராது விலகி நின்றாலும். அதை என் கணவரிடத்தில் எப்படி புரியவைப்பது. நான் வாழ்ந்தது போதும். ஆண்டாளை கண்ணன் தன்னகத்தே கொண்டது போல் என்னை ஆட்கொள். என் கணவருக்கு பாடம் புகட்ட என் மேல் வந்துவிட்டாய். இனி நான் அவரோடு வாழ்வது கற்பு நெறிக்கு ஆகாது. என்னை ஆட்கொள். இல்லையேல் என் உயிரை நானே மாய்த்துக்கொள்வேன்.’’ என்று கதறினாள்.
கொடை விழா, வெள்ளிக்கிழமை மதிய வேளை பூஜை நேரம். சுப்பையா பட்டர் தனது மனைவியின் கை, கால்களை சங்கிலியால் பிணைத்து வீட்டு தூணில் கட்டிப்போட்டு விட்டு, அவர் கோயில் வெளியே வந்து நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார். கோமரத்தாடி ஆடத்தொடங்கியதும். மிட்டில் கட்டு போடப்பட்டிருந்த நல்லமங்கை, சங்கிலி கட்டுதனை அவிழ்த்து எறிந்து விட்டு கோயிலை நோக்கி ஆதாளி போட்டு வந்தாள். சுடலைமாடன் பீடம் முன் சிறிது நேரம் ஆடியவள் அய்யனிடம் ஐக்கியமானாள்.
கோயிலில் நல்லமங்கை ஆச்சிக்கும் நிலையம் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் வாயில் சிறிய அளவில் இருக்கும். சிறிய வாயிலை இடுக்குத் தொண்டு என்று வழக்குச் சொல்லில் கூறுவதுண்டு, அதனால் இவ்வாலய சாமிக்கு இடுக்குத்தொண்டன் சுடலைமாடன் என்று பெயர். இன்னலை தீர்த்து இன்பங்கள் அளிக்கிறான். இடுக்குத்தொண்டன் சுடலைமாடன்.

இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கொடைவிழா நடைபெறும். வியாழக்கிழமை குடியழைப்பு நிகழ்ச்சியும், வெள்ளியுடையார் சாஸ்தா கோயிலில் சிறப்பு பூஜையும் நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை கணபதி பூஜையுடன் கொடைவிழா தொடங்குகிறது. இந்த கோயிலில் சுவாமி மையானம் செல்லும் நிகழ்ச்சி உண்டு. இக்கோயிலில் சிவணைந்த பெருமாள், பிணமாலை சூடும்பெருமான்,  தளவாய்மாட சாமி, வனத்திரச்சி அம்மன், சுடலைமாடன் உள்ளிட்ட தெய்வங்களும், உடன் 21 தெய்வங்களும் இவ்விடம் நிலையம் கொண்டுள்ளனர்...

🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩

  🔔 *ஓம் நமசிவாய போற்றி* 🔔

📡🔹📡🔹📡🔹📡🔹📡🔹
  
      என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
             *வாட்சப் குழுமம்*

🎖 _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🎖
     🏡 *இறைத்தொண்டு!* 🏡

      👇🏼குழுவில் இனைய👇🏼
         📲+91 9486053609
🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻🍃

No comments:

Post a Comment