Wednesday, 6 June 2018

வெள்ளம் காத்த கருப்பண்ணசுவாமி

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தா. பேட்டை வடமலைப்பட்டி கிராமத்தின் ஏரிக்கரையில் உடைப்புவாய் கருப்பண்ணசுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திலிருந்து வணிகர்கள் ஆறு பேர், திருச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் வியாபாரம் செய்வதற்காக வருகிறார்கள்.  வியாபார பொருட்களை ஒரு புறமும், தங்களுக்குத் தேவையான உணவு, உடைகள் உள்ளிட்ட பொருட்களை மற்றொரு புறமும் மூட்டைகளாகக் கட்டி அதனை  பொதி மாட்டின் மீது இருபுறமும் தொங்கும்படி ஏற்றி வருகின்றனர். சேலம் எல்லையை கடந்து வருகையில் ஆலமர நிழலை கண்டனர். அந்த நிழலில்  இளைப்பாறியவர்கள் காலை உணவை உண்டனர். பின்னர், பயணத்தை தொடர்ந்தனர். அப்போது ஒரு மாட்டின் பொதிக்கான பாரம் இருபுறமும் சம எடையில்  இல்லாததால் நடந்து செல்ல பொதிமாடு சிரமம் அடைந்தது.

வணிகர் ஒருவர் பாரத்தை சமன் செய்ய ஆலமரத்தின் கீழேயிருந்த நடுகல் ஒன்றை எடுத்து உணவு பொருட்களை வைத்திருந்த பக்கம் வைத்து கட்டினர். பாரம்  சமன் ஆனது. அவர்களின் பயணம் தொடர்ந்தது.அந்தக் கல்லை அப்பகுதி மக்கள் கருப்பண்ணசாமியாக வழிபட்டு வந்திருந்தனர். சில தினங்களுக்கு முன்பு பெய்த  மழையில் கல்லில் அணிவிக்கப்பட்டிருந்த பூமாலை, சந்தனம் உள்ளிட்ட அடையாளங்கள் எதுவுமின்றி வெறும் கல்லாக அது காணப்பட்டது. இதையறியாத  வணிகர் பொதி மாட்டின் பாரத்தை சமன் செய்ய எடுத்து வந்து விட்டனர். பல ஊர்களைக் கடந்து வடமலைப்பட்டி ஊர் எல்லைக்கு வந்தனர். ஊரில் வியாபாரம்  பார்க்கும் முன்பு, உணவு உண்டு செல்வோம். நடந்து வந்த களைப்பும் தீரட்டும் என்று எண்ணிய வணிகர்கள்.

அப்பகுதியில் இளைப்பாற இடம் தேடினர். ஏரிக்கரை அருகே அடர்ந்து வளர்ந்த மரங்களின் நிழலும், அருகே பசுமையான வயல்வௌிகளும், கடல் போல் நீர்  நிரம்பியிருந்த ஏரியும் அவர்களை கவர்ந்தது. அவ்விடத்தில் அமர்ந்து உணவு உண்டனர். சற்று நேரம் ஓய்வெடுத்தவர்கள் புறப்படும் போது, தாங்கள் கொண்டு  வந்த அந்த நடுகல்லை, அவ்விடம் போட்டு சென்றனர். மாதங்கள் சில கடந்த நிலையில் ஒரு நாள் கடும் மழையின் காரணமாக திடீரென ஏரியின் கரையில்  உடைப்பு ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அறுவடைக்கு விளைந்திருந்த  விளைப்பொருட்களை அடித்துச் சென்றது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லையே  தவிர, வடமலைப்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர் மக்களுக்கு பொருள் நஷ்டம் ஏற்பட்டது. மூன்று ஊர் மக்களும் கூடி கரையை அடைத்தனர். அடுத்த  விளைச்சலுக்கும் ஏரிக்கரை உடைந்து சேதம் ஏற்பட்டது. காரணம் தெரியாமல் தவித்த ஊர் பெரியோர்கள், அம்மன் கோயில் பூசாரியை வரவழைத்து உடுக்கை  அடித்து குறி கேட்டனர்.

அவரும் அருள்வாக்கு கூறினார். ‘‘சேலத்திலிருந்து பொதிமாட்டுடன் வந்த கருப்பண்ணன் நான். தான் வந்ததை இந்த ஊரார்கள் அறிய வேண்டும் என்று  இருந்தேன். உயிர்களுக்கு சேதம் வராமல் காத்து நின்றேன். மூன்று ஊர்களுக்கு வந்த சோதனைகளை பலமுறை காத்து நின்றும் என்னை நீங்கள் ஏறெடுத்து  பார்க்கவில்லை. செல்லாண்டி அம்மனுக்கு பிள்ளை நான். எனக்கு பூஜை செய்து வழிபட்டு வாருங்கள். அவ்வாறு செய்தால் ஏரியின் கரை உடையாமல் மடையை  அடைத்து மூன்று ஊர் மக்களையும் காத்து வருவேன். நள்ளிரவு வேட்டைக்குச் செல்வேன். தீ பந்தம் கட்டி பாிவாரங்களோடு வேட்டைக்கு செல்லும் போது  யாரும் எதிர்ப்பட வேண்டாம். நான் வேட்டைக்கு செல்வதை நீங்கள் அறிய மூன்று வெடி சத்தத்தை நீங்கள் கேட்கலாம்’’ என்று கூறினார். அதற்கு பதிலளித்த  ஊர்பெரியவர்கள் அப்படியே செய்றோம் சாமி என்றனர்.

உடனே உடைப்பட்ட ஏரியின் வாய்ப்பகுதி அடைப்பட்டு வெள்ளம் காக்கப்பட்டது. அதன் காரணமாக உடைப்புவாய் காத்த கருப்பண்ண சுவாமி என்று மக்கள்  அவரை அழைத்தனர். அதன்படி அந்த நடுகல்லை எடுத்து சிறு மேடை அமைத்து பூஜை செய்து வழிபடத் தொடங்கினர். அன்றிலிருந்து பிள்ளாத்துரை,  என்.கருப்பம்பட்டி, வடமலைப்பட்டி ஆகிய மூன்று கிராம ஊர் மக்களுக்கும் உடைப்புவாய் கருப்பண்ண சுவாமி காவல் தெய்வமாக விளங்குகிறார். பில்லி சூனியம்,  ஏவல், மாந்த்ரீகம் செய்பவர்கள் மூன்று கிராமத்திற்குள்ளும் வந்து வேண்டாத செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு சொல்ல முடியாத துயரங்களை  உடைப்புவாய் கருப்பண்ண சுவாமி ஏற்படுத்துவார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், வரன் பார்த்தல், மாடு வாங்குதல் உள்ளிட்ட எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் ஏரிக்கரையில் அமர்ந்துள்ள உடைப்புவாய்  கருப்பண்ண சுவாமியிடம் உத்தரவுகேட்ட பின்பே இப்பகுதி மக்கள் செய்கின்றனர். இந்த ஊர்களில் பேய், பிசாசு தொல்லைகள் இல்லை. பட்டவன் நிகழ்ச்சி மூலம்  இறந்து போனவர்களை கருப்பண்ணசாமி கோயிலில் தெய்வத்திடம் சேர்க்கின்றனர் கிராம மக்கள். மூன்று கிராமங்களில் இருந்து ஒருவர் இறந்து போனால் அவர்  இறந்து ஒரு வருடம் கடந்த பின், அவர் இறந்த இடம், அது வீடாக இருந்தாலும் சரி, காடு கரை என எந்த இடமாக இருந்தாலும் அங்கிருந்து அவரது வாரிசு  ஒருவர் ஒரு கைப்பிடி மண் எடுத்து தேங்காய், பழம், நூல் முதலானவைகள் வைத்து பூஜித்து மேள, தாளத்துடன் தாம்பூலத்தட்டில் வைத்து உடைப்புவாய்  கருப்பண்ணசாமி கோயிலுக்கு கொண்டு வந்து அங்குள்ள குதிரை பொம்மையின் காலில் கட்டி விடுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இறந்தவர் குலதெய்வத்திடம் சேர்ந்து விட்டதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். சமீபத்தில் கூட திருச்சி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி இறந்தவருக்கு பட்டவன் நிகழ்ச்சி நடந்தபோது அவரது வாரிசு, மருத்துவமனை முன்பிருந்து மண் எடுத்து சென்று நிகழ்ச்சி நடத்தினார்.
தீபாவளி, பொங்கல் திருநாளில் இறந்தவர்களின் வாரிசுகள் வந்து புத்தாடை எடுத்து வந்து குதிரை முன் வைத்து தீபமேற்றி வழிபடுகின்றனர். இதனால்  இறந்துபோன தனது உறவினரின் ஆத்மா திருப்திபடுத்தியதாக எண்ணுகின்றனர். ஆலயத்தில் உடைப்புவாய் கருப்பண்ணசாமி ஓர் குடையின் கீழ் நடுகல்லாய்  காட்சி அளிக்கிறார். இந்தக்கோயில் திருச்சி மாவட்டம் தா.பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட வடமலைப்பட்டி கிராமத்தில் ஏரிக்கரையில் அமைந்துள்ளது...

🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩

  🔔 *ஓம் நமசிவாய போற்றி* 🔔

📡🔹📡🔹📡🔹📡🔹📡🔹
  
      என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
             *வாட்சப் குழுமம்*

🎖 _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🎖
     🏡 *இறைத்தொண்டு!* 🏡

      👇🏼குழுவில் இனைய👇🏼
         📲+91 9486053609
🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻🍃

No comments:

Post a Comment