Wednesday, 6 June 2018

மலையன் குளத்து இசக்கியம்மன்

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ளது மலையன்குளம்.  இங்கு வீற்றிருக்கும் இசக்கியம்மை தன்னை நம்பி வந்தோர்க்கு தாயாக நின்று நிலையான வாழ்வு கொடுத்து அருள்பாலிக்கிறாள். நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் மூன்று கி.மீ. தூரம் சென்றால் குமாரபுரம் சந்திப்பு. அங்கிருந்து வடக்கன்குளம் செல்லும் சாலையில் ஒரு கி.மீ தூரத்தில் இருக்கிறது மாட நாடார் குடியிருப்பு. இந்தக் கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் மாடன் நாடார். ஊர் தலைவரான இவருக்கு உடன் பிறந்த தங்கை மாடத்தி. இளம் வயதிலேயே மணமுடித்துக் கொடுத்து கணவனை இழந்த மாடத்தி, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாள். அவளுக்கு வருமானத்துக்கு வயலும், ஒரு விளையும், ஒரு வீடும் கொடுத்து அரவணைத்து வந்தார் அண்ணன் மாடன் நாடார்.

மாலைப் பொழுதில், மைத்துனர் மாணிக்க நாடாரும், நண்பர் மற்றும் உறவினர்கள் என நாலைந்து பேரோடு மாடன் நாடார் வேட்டைக்குச் செல்வது வழக்கம். வேட்டை பிரியர்களான மாடன் நாடார் தரப்பினர் ஒருநாள் செவ்வாய்க்கிழமை வேட்டைக்குச் செல்கிறார்கள். அன்று எதுவும் கிடைக்கவில்லை. முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் எதிர்புறம் மகேந்திரகிரி மலையின் தென்பகுதி அடிவாரத்தில் வேட்டையில் ஈடுபட்டபோது ஒரு கள்ளிச்செடி அருகே இருபத்தியோரு வெள்ளை எலிகள் மேய்ந்து கொண்டிருக்க, அதைப்பார்த்த அவர்கள் அதனருகே சென்றனர். அப்போது அந்த எலிகள் அங்கிருந்து அவைக்குள்(பொந்து) சென்று விட்டது. உடனே மாணிக்க நாடாரும், உடன் வந்த மூன்று பேரும் அந்த பகுதியை தோண்ட உள்ளே கருத்த துணியால் கட்டி மூடப்பட்ட பெரிய பானை தென்பட்டது. உடன் வந்தவர்கள் புதையல் கிடைத்து விட்டது. சீக்கிரம் எடுங்க என்று கூறியபடி பானையை எடுத்து திறந்தனர்.

கீச் என்ற ஒரு சத்தம் மட்டும் வந்தது. உள்ளே பார்த்தபோது வெற்றுப் பானையாக இருந்தது. உடனே, அதை அங்கேயே போட்டு உடைத்தனர். வேட்டையில் எதுவும் கிடைக்காமல் வீடுபோய் சேர்ந்தனர். அந்தநேரம் முதல் வேட்டையில் ஈடுபட்டவர் யாவரும் நோய் வாய்ப்பட்டனர். வாரம் ஒன்றாகியும் பல வகையில் வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. உடனே ஊர் பிரமுகர்களும் மாடன் நாடார் உறவினர்களும் வள்ளியூர் சென்று குறிகேட்கின்றனர். அப்போது வேட்டைக்குப் போனவர்கள் முப்பந்தல் இசக்கி கோட்டைக்குள் சென்றனர். அங்கு மந்திரித்து செப்பு பானைக்குள் அடைக்கப்பட்டிருந்த இருபத்தியொரு பந்தி தேவதைகளை திறந்து விட்டனர். அவைகள் இசக்கியிடம் அண்டிட, ‘‘இசக்கி கோபம் கொண்டு உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளாள். இசக்கிக்கு மண் உருவம் இட்டு நிலையம் கொடுத்து, சுடலைமாடன் முதலான இருபத்தியொரு பந்தி தெய்வங்களுக்கு பீடம் அமைத்து பூஜித்து வாருங்கள்.

வந்த வினை மாறி போகும். வரும் வினை விலகி போகும்’’ என்று குறி சொல்பவள் கூறினாள். அதன் பேரில் மாடன் நாடார் குடியிருப்பில் சுடலை மாடசுவாமி, இசக்கியம்மன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட இருபத்தியொரு தெய்வங்களுக்கு பீடம் அமைத்து கோயில் எழுப்பி கொடை விழா நடத்தினர். மாடன்நாடார், மாணிக்கநாடார் உள்ளிட்ட யாவருக்கும் பிணி விலகியது. கொடை விழா நடந்தது. மாணிக்க நாடார் முண்டன் சுவாமிக்கு ஆடினார். சுடலை மாடனுக்கு ஆடிய மாடன் நாடார், தங்கை மாடத்தியை அழைத்து ‘‘இசக்கிக்கு அடுத்த கொடைக்கு பரண் போட்டு வெள்ளாட்டங்கிடா பலி கொடு. நீ நினைச்சதை நடத்தி தருவா’’ என்று கூறினார். கொடைவிழா முடிந்த மறு வாரமே கருங்கிடா குட்டி ஒன்று வாங்கி கொடுத்து, இசக்கி பேர சொல்லி நல்லா வளர்த்து வா’’ என்று மாடன் நாடார் கூறினார். அந்த குட்டியை நல்லபடி வளர்த்து வந்தாள். பத்து மாதம் கடந்த நிலையில் கிடா நன்கு வளர்ந்து வந்தது. இந்த நிலையில்…

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள மலையன்குளம் ஊரில் செம்மறி ஆடு, வெள்ளாடு என முன்னூறுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார் பெரியாங்கோனார். அவரது தம்பி சின்னாங்கோனார். அவர்களோடு சேர்ந்து இருநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார், கழக்குடி கோனார். மழையின்றி கடும் வறட்சி நிலவிய காலம். குடிக்க தண்ணீரின்றியும், மேய்ச்சலுக்கு வழியின்றியும் கால்நடைகள் வாடின. இதனால் ஆடுகளை பத்திக்கொண்டு மேய்ச்சல் நிலம் தேடி தென்திசை பார்த்து செல்லலாம் என்றெண்ணிய பெரியாங்கோனார் தம்பியிடமும், கழக்குடி கோனாரிடமும் கூறுகிறார். அவர்களும் அதை ஆமோதிக்க மறுநாள் காலை ஆடுகளை பத்திக்கொண்டு மூன்று பேரும் தென்திசை நோக்கி புறப்பட்டனர். காவல் கிணறு விலக்கு தாண்டி குமாரபுரம் வருகையில் வயல்வெளிகள் பசுமையாய் காட்சி அளித்தன. இந்த ஊரில் கிடை போடலாம் என்று நினைத்த பெரியாங்கோனார் அந்த வழியாக வந்த மாணிக்கநாடாரிடம் கேட்க, அவர் ‘‘வாங்க அரை மைல் தூரத்திலதான் எங்க ஊரு, மாடன் நாடார் குடியிருப்பு.

எங்க மச்சான் தான் ஊரு தலைவர்’’ என்று கூறி, பெரியாங்கோனாரை, அழைத்துச் சென்று மாடன் நாடாரிடம் அறிமுகப்படுத்துகிறார். ‘‘என் நிலத்தில ஆடுகிடை மறிங்க. நிலத்துக்கு உரமாச்சு, செமட்டு கூலி மிச்சமாச்சு. மூனு மாசத்துக்கு கிடை மறிக்கணும். உங்களுக்கு தேவையான அரிசி, சாமான்களை நான் தாரேன். ஆனா, கோனாரே எக்காரணம் கொண்டும் மூனு மாசம் முடியாம போவ கூடாது’’ என்று ஓலை எழுதிக்கொண்டனர். ஆடு கிடை மறிக்கப்பட்டது. மறுநாள் காலை ஆட்டுக்கிடைக்கு தனது ஆட்டுடன் வந்த மாடன்நாடார் தங்கை மாடத்தி, என் ஆட்டை, மேய்ச்சலுக்கு போகும்போது உங்க ஆடுகளோடு சேர்த்து பத்திட்டு போங்க, சாயங்காலம் வந்து நான் வீட்டுக்கு பத்திட்டு போறேன் என்று கூற, அவர்களும் சரி என்று ஏற்றுக்கொண்டனர். பதினைந்து நாட்களாக காலையில் ஆட்டு மந்தையில் கொண்டு விடும் தனது ஆட்டுகிடாவை மாலையில் வந்து பத்திக்கொண்டு செல்வாள் மாடத்தி.

பதினாராவது நாள் இரவு பெரியாங்கோனார் அவரது ஊரான மலையன்குளத்தில் நல்ல மழைபெய்து வெள்ளம் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுவதுபோல கனவு கண்டார். உடனே திடுக்கிட்டு எழுந்து, சின்னாங்கோனார் மற்றும் கழக்குடி கோனாரிடம் கனவு கண்டதை கூறி, ‘‘நாம் உடனே ஊரப்பாத்து போவோம்’’ என்று கூறினார். அப்போது அவரது தம்பி, ‘‘அண்ணன் நாடார் தங்கச்சி, நேத்திக்கு சாயந்திரம் கிடாவ பத்திட்டு போக வரல, கிடா நம்ம ஆட்டோட தான் நிக்குது. பொழுது விடிஞ்சதும் அவ கிட்ட பத்தி கொடுத்திட்டு போவோம்’’ என்றார். ‘‘ஏலே, என்ன பேசுக நீ, நாம ஊருக்கு போறது அவங்களுக்கு தெரியப்படாது, ஏன்னா, மூனு மாசம் கிடை மறிக்கதா பேசி முடிவெடுத்துக்கிட்டு, திடீரென போக நாடார் விடுவாரா, அது நல்லதும் இல்ல, அதனால சொல்லாம, கொள்ளாம ராவோடு ராவா புறப்படுவோம்’’ என்று கூறி ஆடுகளை பத்திக்கொண்டு ஊரை நோக்கி புறப்பட்டனர்.

பணகுடி தாண்டி வருகையில் கழக்குடி கோனார் கூறினார் ‘‘அண்ணே, கிடா, கழுத்து மணியும், மேலிருக்க முடியும் காட்டிக் கொடுத்திருமே வளர்ப்பு ஆடுன்னு’’ என்று கூற, ‘‘மசுர செரச்சி கீழே போடு, மணிய கழுத்தி தூர போடு’’ என்று பெரியாங்கோனார் கூறுகிறார். அதன்படி செய்து விட்டு பயணத்தை தொடர்ந்தனர். பொழுது புலர்ந்தது. கிடாவை ஓட்டிக்கொண்டு செல்ல மாடத்தி ஆட்டு மந்தைக்கு வருகிறாள். அங்கே ஆட்டு மந்தை இல்லை. பதட்டத்துடன் அண்ணனிடம் வருகிறாள். ‘‘அண்ணே, கோனாங்கமாறு என் ஆட்டு கிடாவ கொண்டு போயிட்டாங்கண்ணே,’’ என்று கூற, ‘‘என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ தெரியாது ஆட்டுக் கிடாவோடுதான் வீட்டுக்கு வரணும். இல்லன்னா, கிடாவுக்கு பதிலா, இசக்கிக்கு உன்ன பலி கொடுத்து போடுவேன்’’ என்று கோபத்தில் வார்த்தைகளை உதிர்த்தார், மாடன்நாடார்.

ஆட்டுக் கால் தடம் பார்த்து அழுதபடி, ஓடியும், நடந்துமாக வேக, வேகமாக வருகிறாள். அந்தி கருக்கல் ஆச்சு, கலந்தபனை ஊரதிலே கோனார்கள் ஆடுகளை மறித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் முகம் மலர்ந்தாள் மாடத்தி. ஆடு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு பெரியாங்கோனாரிடத்தில் கேட்க, ‘‘உன் ஆடு எங்க ஆடுகளோடு வரலைய தாயி, வேணுமுன்னா சத்தம் கொடுத்து பாரு, உன் குரல் பிடிபட்டு வந்தா, பத்திட்டு போ’’ என்றார்.அழைத்தாள், கத்தினாள், ஆடு வரவில்லை. தென் திசை திரும்பி நின்று இசக்கியை வேண்டுகிறாள். அந்தநேரம் அவர்கள் ஆடுகளை பத்திக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர். தனித்து நின்ற மாடத்தி, இசக்கியைப் பார்த்து ‘‘உனக்கு நேர்ந்து விட்டு உசுரா வளர்த்து வந்தேன். ஆட்டோடு போகலண்ணா அண்ணன் முகத்தில முழிக்க முடியாது. அவன் கையால பலியாகும் முன்னே நானே என் உசுர மாய்ச்சுக்கிறேன். உன் கரும்ப எடுத்துக்கிட்டு போறவங்கள நீ சும்மா விடாத, இசக்கியம்மா நீ இருப்பது உண்மையானால் நீயே கேளு’’ என்றபடி தனது நாக்கை பிடுங்கி உயிரை மாய்த்தாள் மாடத்தி. ஆடுகளுடன் மறுநாள் பொழுது விடிய பெரியாங்கோனார் மற்றும் சின்னாங்கோனார், அவர்களுடன் சேர்ந்த கழக்குடிகோனார் ஆகியோர் மலையன்குளத்துக்கு வந்து சேர்ந்தனர்.

மறுவாரம் குலதெய்வம் ஓடைக்கரை சுடலைமாடசுவாமி கோயிலுக்கு கொடை விழா கொடுக்க ஏற்பாடுகளை செய்தார். பெரியாங்கோனார் தம்பி சின்னாங்கோனாரிடமும், உறவினர் கழக்குடி கோனாரிடமும் கொடைவிழாவிற்கு தேவையான பூஜை சாமான்கள் மற்றும் துள்ளுமறி, பரண் ஆடு என எல்லாவற்றையும் வாங்கி வருமாறு கூறிவிட்டு, பத்தமடையில் தனது தங்கை மகனுக்கு மணமுடித்து கொடுத்திருந்த மகள் சுடலியை அழைத்து வர சென்றார்.
அப்போது அவரது தங்கை, ‘‘அண்ணேன் உன் மகள், ஏழு மாத சூலியாக இருக்கிறா, வளை காப்பு நடத்தி நம்ம வீட்டுல வை, என் மருமகளுக்கு தலைப்பிரசவத்தை நான் பார்த்துக்கிறேன்’’ என்று கூற, தலைப்பிரசவம் தாய் வீட்டுல தான் பார்க்கணும் அடுத்த வாரம் சுடலை கோயில்ல கொடை வச்சுருக்கேன். அதனால நாளைக்கு வளைகாப்பு வச்சு என் பிள்ளைய கூட்டிட்டு போறேன்.

உன் சொந்தத்துல உள்ளவங்களுக்கு சொல்லிடு. விருந்துக்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்களை தம்பி சாயந்திரம் கொண்டு வந்து இறக்கிருவான் என்று கூறிவிட்டு வீட்டுக்குச் செல்கிறார். மறுநாள் காலை உறவினர்களுடன் தங்கை வீட்டுக்கு சென்று மகளுக்கு வளைகாப்பு நடத்துகிறார். மகளை அழைத்துச்செல்ல முற்படும்போது, அண்ணேன் நான் பொல்லாத கனவு கண்டேன். என் மருமகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என தடுத்த தங்கையின் வார்த்தைகளை மீறிவில்லுவண்டி கட்டி மகள் சுடலியை திங்கள் கிழமை அழைத்து வந்தார். மூன்றுநாள் கடந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஓடைக்கரை சுடலைமாடசுவாமி கோயிலில் கொடை விழா நடக்கிறது. வீட்டில் மகளையும், துணைக்கு தனது சின்னாத்தாவையும் வைத்துவிட்டு பெரியாங்கோனார், மனைவி, தங்கையர்கள் உள்பட உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு செல்கின்றார்.

பூஜை நேரத்தில் பரண் ஆடு பலி கொடுக்க, கிடாவை எங்கே என்று கேட்க, சின்னாங்கோனார் சொல்கிறார் ‘‘எண்ணேன், சொள்ளமுத்து மச்சான், இன்னும் கிடா கொண்டு வரலையே’’ என்று கூற, ‘‘சரி, சரி  உடனே நம்ம ஆட்டோடு நிக்கிற மாடன் நாடார் தங்கச்சி மாடத்தியோட கிடாவ பிடிச்சிட்டு வா’’ என்று சத்தம் போடுகிறார். மாடத்தியின் கிடாவை கொண்டு வந்து பரண்மேல் ஏற்றுகிறார்கள். மல்லாந்து படுக்க வைத்து அதன் வாயை பொத்தி அலங்காரத்தேவர் ஆட்டுக்கிடாவை நெஞ்சுகீற முற்படும்போது கிடா அம்மே… அம்மே… என்று மூன்று முறை கத்தியது. மறுகணமே ஒரு பனை உயரத்திற்கு மேலே சென்று கீழே விழுந்தார் அலங்காரத்தேவர். அவர் தனது தெய்வத்தை கையெடுத்து வணங்கி, ஆட்டை பலி கொடுத்தார்.

ஆட்டுகிடா சத்தம் போட்டதும், மாட நாடார் குடியிருப்பில் இருந்து ஆங்காரம் கொண்டு தாயான இசக்கியம்மை, வாராளே மலையன்குளம் நோக்கி, பெரியாங்கோனார் வீட்டிற்கு அவரது ரூபத்தில் சென்று சுடலி, சுடலி என்று அழைக்க, தனது தந்தை கோயில் சாமான் எடுக்க வந்திருப்பாரோ என்று எண்ணி சுடலி கதவை திறந்தாள். வீட்டிற்குள் வந்த இசக்கி, சத்தமே இல்லாமல் சூலியான சுடலியை பலி வாங்கிவிட்டு சென்று விட்டாள். கொடை முடிந்து வீட்டுக்கு வந்த பெரியாங்கோனார் மற்றும் உறவினர்கள் சுடலியின் உடலைக்கண்டு கதறி அழுதனர். மறுநாள் சுடலியின் உடலை தகனம் செய்ய வேண்டும். சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். கர்ப்பிணி பெண் இறந்து போனால் வயிற்றுப்பாரத்தோடு தகனம் செய்யக்கூடாது என்பதால் வயிற்றை கீறி குழந்தையை வெளியே எடுக்க சுடுகாட்டிற்கு சுடலைமுத்து பண்டுவனை அழைத்து வருகின்றனர்.

அவன் வந்து மந்திரித்த மையை நெற்றியில் வைத்துக்கொண்டு இறந்து போன சுடலியின் வயிற்றை கீறி உயிரற்று இருந்த அவளது குழந்தையை எடுக்கிறார். பின்னர் தாய், சேய் இருவரது உடல்களும் தகனம் செய்யப்படுகிறது. அது முடிந்த பின் பண்டுவன், சுடுகாடு பகுதியிலிருந்த கிணற்றில் இறங்கி, கை, கால்களை அலம்புகிறான். அப்போது தண்ணீர் பட்டு அவனது நெற்றியில் இருந்த மை அழிகிறது. உடனே கிணற்றிலிருந்து வெகுண்டெழுந்த இசக்கி, பண்டுவனை கொல்ல முற்படுகிறாள். அப்போது, ஆத்தா இசக்கி, என்னை எப்படியும் பழி எடுத்திருவ, எனக்கு, உன் இடத்தில் நிலையம் வேண்டும். என்று கேட்க, என் கோட்டையில் இடமில்லை, என் பார்வையில் இருக்க இடம் தருகிறேன் என்று கூறியவாறு பண்டுவனை இசக்கி வதம் செய்தாள்.

இச்சம்பவம் நடந்த மறுநாளில் இருந்து ஊரில் உள்ளோர்க்கு வாந்தி, வயிற்றுப்போக்கு என பிணி உருவானது. பெரியாங்கோனார் ஆடுகளில் கிடாக்கள் சில ஒவ்வொன்றாக மடிந்தது. இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன என்று அறிய நெல்லை நகருக்கு சென்று வள்ளி என்ற குறி சொல்லும் பெண்ணிடம் விபரம் கேட்டனர். அவள் மாட நாடார் குடியிருப்பு ஊரிலிருந்து மாடத்தியின் கிடாவை அபகரித்து கொண்டு வந்து சுடலைக்கு பலி கொடுத்ததாலும், மாடத்தியின் சாபத்தாலும் இசக்கி கொண்ட கோபம்தான் காரணம் என்று விளக்கம் கூறினாள். என்ன செய்வதென்று கேட்க, ஊரம்மன் கோயிலான நல்லமுத்தம்மன் கோயில் முன்பு சிறு சொளவில் ஐந்து வாழைப்பழமும், தேங்காய் மற்றும் வெற்றிலை பாக்குடன் எலுமிச்சை கனி வைத்து அதை கொண்டு சென்று வரும் வெள்ளிக்கிழமை பூஜை முடிந்து கோயில் நடை அடைத்த பின் வைத்து விட்டு வந்துவிடுங்கள்.

மறுநாள் காலை அந்த சிறு சொளவு எங்கு வந்து இருக்கிறதோ  அந்த இடத்தில் இசக்கியம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுங்கள் என்றுரைத்தாள். அதன்படி சிறுசொளவு நல்லமுத்தம்மன் கோயில் முன்பு வைக்கப்பட்டது. அந்த சொளவு மறுநாள் காலை மலையன்குளம் ஊருக்கு மேற்கே குளத்தின் கரையில்  ஆலமரத்து மூட்டில் இருந்தது. அந்த இடத்தில் இசக்கியம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. மாட நாடார்குடியிருப்பில் இருந்து பிடிமண்ணும், முப்பந்தலில் இருந்து ஆவாஹனம் செய்யப்பட்ட மஞ்சளும் கொண்டு வந்து மண் உருவம் செய்து நிலையம் இட்டு இசக்கியம்மனை பூஜித்து வந்தனர். மதித்து வணங்குபவர்க்கு தாயாகவும், அவமதிப்பவர்க்கு நீலியாகவும் மாறிவிடுவாள் இசக்கி. மலையன்குளத்து இசக்கி, மழலை வரம் வேண்டி மனமுருகி வழிபடும் பக்தர்களுக்கு வரமளித்து காத்தருள்கிறாள்.

மலையன்குளத்து இசக்கியம்மன் கோயிலில் சுடலைமாடன், முண்டன், சிவனணைந்த பெருமாள், பாதாளகண்டி, பேச்சி உள்ளிட்ட இருபத்தியோரு தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன. கோயில் கட்டிய பெரியாங்கோனாருக்கு அம்மனின் எதிரில் மண் பீடம் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை இரண்டு நாள் கொடைவிழா நடைபெறுகிறது. இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் மூன்றடைப்பு என்ற இடத்திலிருந்து கிழக்கே தோட்டாக்குடியை அடுத்த மலையன்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது...

சு.இளம் கலைமாறன்

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment