பள்ளிக்கரணை
சித்தர்கள் வழிபடும் ஆலயம். மணியோசைக்குப் பதிலாக மந்திர ஓசை மட்டுமே ஒலிக்கும் கோயில். சித்தர்கள் உருவாக்கிய மந்திரப்பாவை அம்மன் சந்நதி கொண்ட ஒரே ஆலயம். தியான மண்டபமும் அணையாத தீபமும் கொண்ட திருக்கோயில். அடியார்களையே அர்ச்சகராகக் கொண்ட ஆலயம். பெண் அர்ச்சகர்கள் கொண்ட கோயில். சமயப் பணியோடு கல்வி, மருத்துவம் போன்ற சமுதாயப் பணியையும் செய்யும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது சென்னை பள்ளிக்கரணை அன்னை ஆதிபராசக்தி ஆலயம். அதர்மங்கள் தலை தூக்கி, ஆன்மிகத்திற்குக் குறைவு ஏற்படும்போது அதனைச் சரிசெய்ய சித்தர் பெருமக்கள் தங்களின் பேராற்றல் வாயிலாக நற்செயல் புரிவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் மக்களின் தீமைகளை ஒழித்து, நன்மைகள் ஓங்கி, சித்தர்களின் எண்ணத்தில் தோன்றிய ஆலயமாகத் திகழ்வது, பள்ளிக்கரணை ஆதிபராசக்தி ஆலயம் ஆகும்.
சென்னையின் தென் எல்லைப் பகுதியான பள்ளிக்கரணையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு, இங்கு மந்திர ஓசை மட்டுமே ஒலிக்க அனுமதி உண்டு. சித்தர்கள் வாசம் செய்யும் இடமாக இது விளங்குவதே இதற்குக் காரணம். சித்தர்களின் தவத்திற்கு இடையூறு வரக்கூடாது என்பதால், மணி, ஓசை, மேள தாளங்கள் என எதற்குமே அனுமதியில்லை என்பது, இந்த ஆலயத்தில் மட்டும் காணப்படும் சிறப்பம்சம். வடக்கு நோக்கிய வாயிலில் நுழைந்ததும் முதலில் காட்சி தருபவர், வினை தீர்த்த விநாயகர். அவரை வலம் வந்து, தெற்கு நோக்கி நடந்தால், கிழக்கு நோக்கிய மகாமண்டபம் அமைந்துள்ளது. ஆலய மூலவரான அன்னை ஆதிபராசக்தி கிழக்கு முகமாக எழிலான தோற்றத்தில், இருவேறு உருவங்களில் காட்சி தருகின்றார். கருவறையில் இரண்டு அம்மன்கள். பெரிய அம்மன் பொருள் நிலைக்கும். சிறிய அம்மன் அருள் நிலைக்கும் ஆதரவானவர்கள்.
இருவருமே எழிலான வடிவில் அமைந்துள்ளது சிறப்பு. கருவறையின் வெளியே வலம் வரும் போது, முதலில் தாயுமானவர் தென்கிழக்கு நோக்கியும், வள்ளலார் தென்மேற்கு திசை நோக்கியும், பட்டினத்தார் வடமேற்கு திசை நோக்கியும், பாம்பாட்டி சித்தர் வடகிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாத சந்நதியாக அமைந்துள்ளது. மந்திரப்பாவை சந்நதியாகும். இச்சந்நதி வடக்கு முகமாய் ஆதிபராசக்தி கருவறையின் தென்கிழக்கே அமைந்துள்ளது. சித்தர்கள் தங்களுக்கு எந்த வடிவிலும் இன்னல்கள் வராது காத்துக் கொள்ள உதவும் அவதாரமே, மந்திரப்பாவை ஆகும். இதன் வரலாறு சுவையானது. சித்தர்கள் தங்களின் நல்ல நோக்கங்களுக்காக, தீய சக்திகள் இடையூறு செய்வதைத் தடுத்து வெற்றி கொள்வதற்காக, அகத்தியரின் சீடரான தேரையரை அணுகினர்.
சித்தர்களுடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அகத்திலும், புறத்திலும், மாந்திரீக வகையில் பாதுகாப்புப் பெறவும், அஞ்ஞானத்தை அழித்துப் பூர்வ ஜென்ம வினைகளால் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கும் வகையிலும், மந்திர அதிர்வுகள் கொண்ட யந்திர வடிவம் அமைத்து, அதற்கான பீஜ மந்திரங்களை ஒலித்து, தங்களின் மனோபலத்தால் பேரெழில் கொண்ட பாவையை உருவாக்கினர். அவளே மந்திரப்பாவை என அழைக்கப்படுகிறாள். மந்திரப்பாவை, பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து, நான்கு கரங்களுடன் எழிலான தோற்றத்தில் காட்சி தருகின்றாள். இரண்டு கரங்கள் அபய, வரத கரங்களாகவும், மூன்றாவது கரம் ஞான வாளைத் தாங்கியும், நான்காவது கரம் கேடயத்தைக் கொண்டும் காட்சியளிக்கின்றன. பூர்வ ஜென்ம வினை தீர, தீவினை அகல, தியானம் செய்ய, யோகம் பயில, தடைகள் அகல, எதிரிகள் அகன்றிட எனப் பல்வேறு வரங்களை அருளும் தெய்வமாக மந்திரப்பாவை விளங்குகிறாள்.
சித்தர்கள் மட்டுமே பாதுகாத்து வந்த மந்திரப்பாவை, இன்று அன்னை ஆதிபராசக்தியின் அருளால் முதன்முறையாகப் பள்ளிக்கரணை பூமியில் எழுந்தருளியுள்ளது குறிப்பிடத்தக்கது. மந்திரப் பாவையின் எதிரில் பதினெட்டு சித்தர்களின் சிற்பம் தவக் கோலத்தில் அமர்ந்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது. ஆலயத்தின் மேற்புறத்தில் முதல் மாடியில் அமைதியான தியான மண்டபமும், மந்திரப்பாவை அம்மன் சந்நதி மகாமண்டபத்தில், அருட்பெருஞ்ஜோதி அகண்டமும் அமைந்துள்ளன. தியானம், யோகம் செய்ய விரும்புவோருக்கு ஏற்ற இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, ஆடிப் பூரம், நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, தைப் பூசம் ஆகிய சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன. அதேபோல, ஒவ்வொரு பௌர்ணமியிலும், சிறப்புப் பூஜையும் அன்னதானமும் நடைபெறும்.
சக்திமாலை விரதம், சுமங்கலிப் பிரார்த்தனை, மந்திரப்பாவை மங்கல வேள்வி, ஔஷத ஹோமம், ஜஸ்வர்ய ஹோமம் எனப் பல்வேறு வேள்விகளும் பிரார்த்தனைகளும் இங்கு நடைபெறுகின்றன. இவ்வருடம் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் மார்ச் 30 வரை மகாலட்சுமி சிறப்பு மண்டல வழிபாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதன் மூலம் பதினாறு செல்வங்களையும் பெறலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வழங்கப்படும் பஞ்சமூலிகை கற்பம் மற்றும் மந்திரப் பாவை தீர்த்தம் ஆகியவை நோய் தீர்க்கும் அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆலயத் தோற்ற காலத்திற்கு முன்பிருந்தே அருள்வாக்கும், எளிய பரிகார முறைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாலயம் ஆன்மிகப் பணியுடன் நின்று விடாமல், இலவச மருத்துவ முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், ஆதரவற்ற சிறுவர் இல்லங்களுக்கு உதவி, ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி என சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். இந்த ஆலயம் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். சைதாப்பேட்டை வேளச்சேரி தாம்பரம் வழித்தடத்தில் பள்ளிக்கரணை அமைந்துள்ளது. பேருந்து மூலம் வர விரும்புவோர் பள்ளிக்கரணை தாமரைக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கிழக்கு நோக்கி சுமார் 1 கி.மீ. சென்றால் ஆலயத்தை அடையலாம்...
No comments:
Post a Comment