Tuesday, 22 May 2018

அரன்

சு. ஆடுதுறை

பெரம்பலூர் அருகே உள்ளது ஆடுதுறை அபராதரட்சகர் திருத்தலம். நீவா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் சு.ஆடுதுறை என்று அழைக்கப்படுகிறது. இனாம் கிராமமாக இந்தக் கோயிலுக்கு இந்த ஊர் வழங்கப்பட்டதால், சுரோத்ரியம் (இனாம்) ஆடுதுறை எனவும், சுவேதகேது முனிவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி பாவம் நீங்கப்பெற்றதால் சுவேதகேது ஆடுதுறை எனவும், சுக்ரீவன் ஆடுதுறை எனவும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இவற்றின் சுருக்கமாக சு.ஆடுதுறை எனவும் அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள். தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால், சப்த ரிஷிகளான அகத்தியர், வசிஷ்டர், பரத்வாஜர், பராசரர், கவுதமர், காஸ்யபர், கெளசிகர் போன்ற முனிவர்கள் ரிஷி பதம் இழந்தனர். அந்தப் பாவம் தீர சப்தரிஷிகளும், நீவா நதியின் கரையில் ஏழு இடங்களில் சிவனை நினைத்து வழிபட்டனர். அந்த சப்த ஸ்தலங்களில் நான்காவதாக நடுவில் அமைந்துள்ள இடம்தான்ச சு.ஆடுதுறை.

ஒருமுறை சுவேதகேது முனிவர், இறைவன் அருள் வேண்டி  தவம் புரிந்தார். அப்போது அவர் உச்சரித்த, அபாயம் அகற்றும் ‘சிவாய நம’ என்னும் மந்திரம் உச்சரிப்பில் தடுமாறியது. அவரது மனம் தவத்தை மேற்கொள்ள ஒன்றுபடாமல் குரங்குபோல் பல நிகழ்வுகளை எண்ணிக் கொண்டிருந்தது. இந்த நிலை பற்றி சுவேதகேது முனிவர், தனது தந்தையான உத்தாலகரிடம் சென்று விளக்கம் கேட்டார். அவர் தனது தத்துவ உபதேசத்தில், ‘மகனே! உனது தீர்த்த யாத்திரையின்போது தாகத்தால் தவித்த உன்னை, திலோத்தமை மோகத்தால் மயக்கி தன் மாயா வனத்திற்கு கொண்டு சென்றாள். அந்தப் பகுதியில் யாத்திரை மேற்கொண்டிருந்த முனிபுங்கவர்கள் பிருகு, மரீசி, அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் ஆகியோர் பிரதோஷ காலம் வரவே அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டனர்.

அந்த பூஜை வேளையில் நீ திலோத்தமையுடன் காதல் லீலை புரிந்து பேரின்பத்தை மறந்து சிற்றின்பத்தில் லயித்து இருந்தாய். இந்தக் குற்றத்தை செய்ததால் நீ இப்போது மனக்குழப்பத்தில் உள்ளாய். அந்த பாவம் அகல, நீவா நதியில் நீராடி சிவபெருமானிடம் நீ பாவமன்னிப்பு கோரினால் உன் பாவம் தொலையும்’ என்று கூறினார். அதனைக்கேட்ட சுவேதகேது பெரிதும் மனம் வருந்தினார். தனது இந்த நிலைக்கு காரணமான திலோத்தமை மேல் தீராத சினம் கொண்டார். தனது மனம் குரங்குபோல் அலைந்து திரிந்ததற்கு காரணமான திலோத்தமையை குரங்காக பிறக்க சபித்தார். பின்னர் தந்தை சொல்படி யாத்திரை சென்று நீவா நதியில் நீராடி சு.ஆடுதுறை ஈசனிடம் வேண்டி வணங்கி நின்றார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவருக்கு மன்னிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியால் இறைவன் திருநாமம் அபராதரட்சகர் என்றானது.

அன்று முதல் இறைவன் குற்றம் நீக்கும் குணக்குன்றாக சு.ஆடுதுறையில் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள இறைவன் அபராதரட்சகர், குற்றம் பொறுத்தவர், குற்றம் பொறுத்தருளிய நாயனார் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவி ஏலவார் குழலி அம்மை, எழில்வார் குழலி அம்மை, சுகந்த குந்தளாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். வடவெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் கிழக்கு முகமாய் கம்பீரமாக நிற்கிறது. இந்த பகுதியிலேயே மிகப் பெரிய கோபுரத்தை கொண்ட ஆலயம் இதுவாகும். நீவா நதியில் நீராடி கணபதியை கைதொழ ஏதுவாக ராஜகோபுரத்திற்கு வெளியே வட கிழக்கு மூலையில் கோடி விநாயகர் கோயில் உள்ளது. இதில் விநாயகர் விமான பிரதிஷ்டையுடன் கோயில் சுவரிலேயே எழுந்தருளியிருப்பது ஒரு சிறப்பாகும்.

சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள இந்த ஆலயம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கக்கூடும் என்பதை கல்வெட்டுக்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. கோயிலின் முன்புறம் உள்ள ராஜகோபுரம் விஜயநகர மன்னன் மல்லிகார்ச்சுனராயர் என்பவரால் கி.பி.1450ல் கட்டப்பட்டதாகும். ஏழு அடுக்கு கொண்ட இந்த கோபுரத்தில் உள்ள சுதை வேலைப்பாடுகளும், சிற்ப வேலைப்பாடுகளும் காண்போர் மனதை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. ராஜகோபுரத்தை தாண்டிச் சென்றதும் வலப்புறத்தில் அலங்கார மண்டபமும், இடப்புறத்தில் ஊஞ்சல் மண்டபமும் உள்ளன. அதற்கு அடுத்து கல்யாண மண்டபம் உள்ளது. உள்மண்டப வாசலின் இருபுறமும் கணபதியும், முருகனும் வீற்றுள்ளனர். கோயிலுக்குள் இரு பிராகாரங்களும், ஒரு வெளி வீதியும் உள்ளன. முதல் பிராகாரத்து மண்டபத்தில் அருவ லிங்க வடிவில் மூலவர் உள்ளார். உள்மண்டப வட கிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன.

சுற்றில் அம்பாளின் சப்த வடிவங்கள், வலஞ்சுழி விநாயகர், தண்டபாணி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, விசாலாட்சி, விஸ்வநாதர், பெருமாள், கஜலட்சுமி, சரஸ்வதி போன்றோரின் சந்நதிகள் உள்ளன. அம்மன் சந்நதி தனியே தெற்கு நோக்கி முன்மண்டபத்தில் அமைந்துள்ளது. சூரியன் இத்திருக்கோயிலில் பீடாதாரமாக எழுந்தருளியிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். சூரிய கிரகணங்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 11, 12, 13ம் தேதிகளில் மூலவர் மேல்பட்டு இறைவனை பூஜிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மிகப்பெரிய கோயிலான இதில் சூரிய கிரணம் மூலவர் மேல்படும் வகையில் கட்டப்பட்டு உள்ளது ஒரு சாதனையே ஆகும். பாவம் செய்த திலோத்தமை, சுவேதகேது இட்ட சாபத்தை நாரதர் மூலம் அறிந்தாள். தனக்கு ஏற்பட்ட சாபம் தீர வழி யாது? என்று பிரகஸ்பதியிடம் வினவினாள். தேவகுரு, சுவேதகேதுவையே சந்தித்து சாபம் நீங்க வழி கேட்குமாறு அறிவுறுத்தினார்.

அபராதரட்சகர் தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த சுவேதகேதுவிடம் வந்தான் திலோத்தமை. தவசீலர் விழித்ததும் அவரது தாள்பணிந்து சாபவிமோசனம் அளிக்கும்படி கோரினாள். ‘ஓ திலோத்தமையே! எனது சாபம் பொய்க்காது. நீ தேவாம்சத்துடன் புவியில் நீலன் என்னும் வானரமாய் பிறப்பாய்! பின் மதுவனத்தில் உள்ள அபராதரட்சக பெருமானை வணங்கி விமோசனம் பெறுவாய்’ என்றார். தேவதச்சனின் மகனாக நீலம் பூத்த உடலுடன் நீலன் என்னும் குரங்காக திலோத்தமை பிறந்தாள். அபராதரட்சகர் தலத்திற்கு நீலனாக வந்தாள். நீவா நதியில் நீராடி இறைவழிபாடு செய்தாள். ஆடுதுறை பரமனும் நீலனை தனது அருட்பார்வையால் ஆட்கொண்டார். பின்னர், ‘நீலனே! தேவர்கள் வானர வடிவில் கிஷ்கிந்தையில் தோன்றியுள்ளனர்.

நீயும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ராமனுக்கு தொண்டு செய்வாய்’ என்று கூறினார். அதன்படி ராமனுடன் இருந்து சேது சமுத்திரப் பாலம் அமைக்க முக்கிய பங்காற்றி பெருமை பெற்றாள். இறுதியில் அங்கதன், சுக்ரீவன், அனுமன், சுஷேணன் ஆகிய வானரர்களுடன் ஒருங்கே சு.ஆடு துறைக்கு வந்து நீவா நதியில் நீராடி இறைவனை வணங்கி சாபம் நீங்க பெற்றாள். வானரங்கள் நீராடியதால் அத்தலம் ‘வானர ஸ்நான தீர்த்த புரம்’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள அம்மன் சந்நதிக்கு எதிரில் நீலன், அனுமன் முதலானோரின் சிற்பங்கள் மண்டப தூண்களில் செதுக்கப்பட்டு உள்ளது. கோபுரத்திலும், மண்டப தூண்களிலும் குரங்கு சிற்பங்கள் அதிக அளவில் உள்ளன. பெரம்பலூர் தாலுகா தொழுதூர்திட்டக்குடி சாலையில் ஆக்கணூருக்கு தெற்கே ஒரு கி.மீ, தொலைவிலும், திருச்சி விழுப்புரம் ரயில் பாதையில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கே 15 கி.மீ. தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது...

No comments:

Post a Comment