Wednesday, 30 May 2018

தளவாய் மாடசாமி தேரிக்குடியிருப்பு

பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவன் மேல் சினம் கொண்டிருந்தான். தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு இருவரும் சிவபெருமானின்  அடிமுடி தேடி அலைந்தும் பார்க்க முடியாமல் தோல்வி அடைந்தது கேட்டு கோபம் கொண்டிருந்தான். சிவனை தனது காலில் விழவைக்க வேண்டும் என்ற  செருக்குடன் சிவனை நோக்கி தட்சன் கடும் தவம் புரிந்தான்.தட்சனின் கடும் தவத்தை கண்டு சிவபெருமான், அவன் முன் தோன்றினார். அப்போது தட்சன்,  சிவபெருமானிடம் ‘‘தாங்கள் எனக்கு மருமகனாக வரவேண்டும், அதற்கு உமாதேவி எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்,’’ என்று கேட்டான். சிவனும், ‘‘நீ  விரும்பிய படியே ஆகட்டும்,’’ என்று வரமளித்தார். அதன்படி தட்சனும், அவனது மனைவி தாருகாவல்லியும், தாருகாவனத்திற்கு சென்றபோது அழகான அந்த  பெண் குழுந்தையைக் கண்டெடுத்தனர். குழந்தைக்கு தாட்சாயினி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பருவ வயதை அடைந்ததும், சிவன் தாட்சாயனியை  மணமுடித்தார். மகளை மணம் முடித்த மருமகன் என்ற உறவில் சிவபெருமான், மாமனார் என்ற உறவில் தன்னை வணங்க வேண்டும் என்று தட்சன் கர்வம்  கொண்டான்.

அது நடக்கவில்லை என்பதால் சிவன் மேல் தட்சனுக்கு கோபம் அதிகரித்தது. இந்த நிலையில் சிவபெருமானனை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,  மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினான் தட்சன். அதற்கு ஈரேழு லோகத்திலுள்ளவர்களுக்கும் அழைப்பை விடுத்தவன், தனது மருமகன் என்ற உறவின்  அடிப்படையில்கூட சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதையறிந்து கோபமுற்ற தாட்சாயினி, சிவனிடம் சென்று தனது தந்தையிடம் இது குறித்து கேட்டு  வருவதாக கூறினாள். சிவபெருமான் தடுத்தார். செல்ல வேண்டாம், உனக்கு உரிய மரியாதை கிடைக்காது என்று கூறினார். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல்  தாட்சாயினி தனது தந்தையிடம் சென்று கேட்டாள். அதற்கு தட்சன், சிவபெருமானை அவமதித்து பேசியதோடு மகள் என்றும் பாராமல் தாட்சாயினியையும்  அவமதித்தார். வந்த காரியம் நடந்தேறாததால் தாட்சாயினி கடும் சினம் கொண்டாள். நடந்தவற்றை அறிந்த சிவபெருமான், தனது மேனியின் வியர்வை துளிகளை  ஒன்றாக்கியும், சடை முடியை எடுத்தெறிந்தும் ஒரு புத்திரனை உருவாக்கினார்.  வியர்வையில் பிறந்த புத்திரன் வியர்வை புத்திரனாகி, வீரபுத்திரர் ஆனார். அது மருவி வீரபத்திரர் என அழைக்கப்படுகிறார். வீரபத்திரர் வேகம் கொண்டு வேள்வி  சாலைகளை அழித்தார். தட்சனை வாளால் வெட்டினார். வெட்டுப்பட்ட தட்சனின் தலை, வேள்விக்குழியில் விழுந்து எரிந்தது. முண்டம் தரையில் விழுந்தது. தனது  பதி மாண்டதை அறிந்து துடிதுடித்த தட்சனின் மனைவி தாருகாவல்லி, சிவனிடம் முறையிட்டாள். தவறை உணர்ந்து இனி நல்வாழ்வு வாழ, மீண்டும் அவருக்கு  உயிர்பிச்சை இடுமாறு வேண்டினாள். அவளது அழுகுரலுக்கு இறங்கிய சிவபெருமான், வடக்கே தலை சாய்த்து உறங்கும் உயிரினத்தின் தலையை கொய்து உனது  கணவனது உடலில் சேர்த்து வை, அவன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். வேகம் கொண்டு எழுந்த தாருகாவல்லி, அங்கும் இங்கும் ஓடினாள்,  அலைந்தாள். சற்றுத் தொலைவில் கருப்புநிற ஆடு ஒன்று வடக்கே தலை சாய்த்து படுத்திருந்தது. அதன் தலையை கொய்து வந்து தனது கணவனின் உடலோடு  ஒட்ட வைத்தாள். உயிர்பெற்று எழுந்தான் தட்சன். ஆட்டுத் தலையுடன் எழுந்த அவன் தனது கரங்களை கூப்பி, சிரம் தாழ்த்தி சிவனை வணங்கினான்.

மகாவிஷ்ணுவால் தாட்சாயினி உடல்கள் சிதறுண்டு சக்தி பீடங்களாக மாறின. சிவனின் ஆங்காரமும் தணிந்திருந்த வேளை, தட்சனின் பணிவை கண்டு  மனமிறங்கி, ‘‘நீயும் போற்றப்படுவாய், உன்னை வணங்கி துதிக்கும் அடியவர்களுக்கு கொல்லும் வரம், வெல்லும் வரம் அளிக்கும் பாக்யம் உனக்கு தருகிறேன்.  உடனே நீ பூலோகம் சென்று மகா சாஸ்தாவின் தளபதிகளில் ஒருவனாக திகழ்வாயாக,’’ என்று வரமளித்து பூலோகம் அனுப்பி வைத்தார்.தலை மாறிய சாமி  என்றும் தலை மாறிய மாடன் என்றும் அழைக்கப்பட்ட அவர், பின்னர் தளவாய் மாடன் என்று அழைக்கப்பட்டார். தென்மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக  வணங்கப்படுகிறார், தளவாய் மாடசாமி. தூத்துக்குடி தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். குறித்த காலத்தில்  திருமண பாக்யம் கிட்டாதவர்கள் இவரை வணங்கி வந்தால் திருமணம் விரைந்து நடந்தேறும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment