தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்துக்குட்பட்ட கவுண்டம்பட்டியில் 800 ஆண்டு களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்திலிருந்து 100 குடும்பங்கள் வந்து குடியேறின. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வைரவன் கவுண்டர். இவரது உடன் பிறந்த அக்காவிற்கு முதல் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளைப் பெற்றவுடனேயே அவள் இறந்துவிட்டாள். அவளுடைய கணவன் விரக்தியுற்று அந்தக் குழந்தைகளை அனாதரவாக விட்டுவிட்டு எங்கோ போய்விட்டான். குழந்தைகளின் மீது பரிவு கொண்ட வைரவன், தனது பொறுப்பில் அந்தக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு வீரவையம்மாள், சின்னவையம்மாள் என பெயரிட்டார். வைரவனின் தாயாரும் குழந்தைகளின் பாட்டியுமான தோனியம்மாவின் ஆதரவில் அவர்கள் குறை தெரியாமல் வளர்ந்தார்கள். தாய்மாமன் மீதும், பாட்டி மீதும் பெரிதும் பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார்கள்.
தங்களுக்குப் பதின்மூன்று வயதான பின்பும் சிறு குழந்தைகள் போலவே அவர்கள் பழகிவந்தார்கள். பாட்டி அடிக்கடி தவிப்புடன், ‘‘உங்க ரெண்டு பேரையும் எத்தன நாள் சொல்லுறது, பாவாடை சட்டை மட்டும் போடாதிக, தாவணி போடுங்கன்னு,’’ என்று கோபித்துக்கொள்வாள். ‘‘போம்மா, அது சமைஞ்ச பிறவு போடுவோம். இப்பவே எதுக்கு?’’ என்று விடலைத்தனமாக பதிலுரைப்பாள் வீரவை. ‘‘அடியே, அது எனக்கு தெரியுமிடி, வயசுக்கு மிஞ்சி வளர்ந்து தொலைஞ்சிருக்கியே, அதான் சொன்னேன்,’’ என்று மேலும் கோபிப்பாள் பாட்டி. ஒருநாள், ‘‘நாங்க குளிச்சிட்டு வாரோம், நீ சோறாக்கி வை,’’ என்று சொல்லிவிட்டு இரு பெண்களும் சொன்னபடியே குளித்துவிட்டு பாவாடை, சட்டையோடு தாவணியும் அணிந்து கொண்டுவந்து பாட்டி முன் நின்றார்கள். அவர் களைக் கண்டு பூரித்துப்போன தோணியம்மா, ‘‘என் மகள உரிச்சு வச்சிருக்கீங்க.
நீங்க தாவணி போட்டு, உங்க மாமன் பாத்ததில்ல, அவன் பாத்தான்… அசந்துபோவான்,’’ என்றாள். வீரவை மாமனுக்கு சோறு கொண்டு கொடுத்துவிட்டு பிறகு தாங்கள் சாப்பிடுவதாகச் சொல்லி, புறப்பட்டனர். கவுண்டம்பட்டியிலிருந்து, 5 கி.மீ. தூரத்திலுள்ள மேலக்கல்லூரணிக்கு சென்றனர். அந்த காட்டுப் பகுதியில் வைரவன் கவுண்டர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் விடுகதை போட்டுக்கொண்டும், சிரித்தபடி பேசிக் கொண்டும் வேகமாக நடைபோட்டார்கள். அப்போது சின்னவை, ‘‘அக்கா பாம்பு என் கால சுத்திடுச்சு’’ என்று படபடப்புடன் கூறினாள். உடனே வீரவை, ‘‘சின்னு அப்படியே நில்லு. நம்ம இரண்டு பேரு காலையும் சேர்த்து தான் சுத்தியிருக்கு’’ என்று கூற இருவரும் அசையாமல் நின்றனர். தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வைரவன்கவுண்டர், ‘இதுக ரெண்டும் ஏன் அப்படியே அசையாம, சிலையாட்டம் நிக்குதுக?’ என்று எண்ணியபடி அவர்களருகே வந்தார்.அவர்கள் கால்களை நல்ல பாம்பு ஒன்று பின்னியிருப்பதைக் கண்டு மருண்டு, தன் கையில் இருந்த தொரட்டி கம்பால் பாம்பை வெட்ட, அது துண்டுபட, அதன் தலை சிதறி வந்து, வைரவன் தலையில் விழுந்து அவரைத் தீண்டியது. அதே இடத்தில் வாயில் நுரை தள்ள, மாண்டு போனார் வைரவன் கவுண்டர். வீரவையும், சின்னவையும் மாமன் உடலருகே விழுந்து கதறினர். சிறிது நேரத்திற்கு பின்னர் வீரவை, ‘‘சின்னு, நாம என்ன பாவம் பண்ணினோமோ தெரியல, பெத்த ஆத்தா, அப்பன பார்த்ததுதில்ல, தாய்க்கு தாயா இருந்து, நமக்காக கஷ்டப்பட்ட மாமன் சாவுக்கு நாம காரணமாயிட்டோம். இனி நாம இந்த மண்ணுல வாழ கூடாது. ஊரார், உறவினர் பழி சொல்லும் ஆளாக கூடாது. வா, சாவோம்.’’ இருவரும் அங்கிருந்த ஒரு வன்னி மரத்தின் முன் நின்று வேண்டிக்கொள்ள, மரம் பளிச்சென்று தீப்பற்றி எரிந்தது.
அந்த தீயினுள் வீரவையும், சின்னுவையும் இறங்கினர். நின்ற கோலத்தில் உடல் கருகி, மாண்டு போயினர். இந்த சம்பவத்திற்கு சில ஆண்டுகளுக்கு பின் கவுண்டம்பட்டியில் வசித்து வந்த வளையல் வியாபாரி ஒருவர் வீரவை-சின்னவை அடக்கமான இடத்தின் வழியாகச் சென்றார். அங்கே ஒரு கூரைக் கொட்டகை போன்றும், அந்த கொட்டகையின் ஜன்னல் வழியாக இரண்டு இளம் பெண்களின் கைகள் மட்டும் வெளியே தெரிவது போலவும் தோன்றியது அவருக்கு. கூடவே, ‘‘செட்டியாரே, எங்க கைகளுக்கு வளையல் போடுங்க,’’ என்று பெண்களின் குரலும் கேட்டது. ‘‘துட்டு கொடுங்க தாயி, அப்புறமா வளையல் போடுறேன்,’’ என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்று பக்கத்திலுள்ள ஓர் ஊருக்குச் சென்று வியாபாரத்திற்காக, வளையல் மூட்டையை பிரித்தார்.
மூட்டையிலிருந்த எல்லா வளையல்களும் உடைந்துபோயிருந்தன! இதேபோல மறுநாளும் ஏற்பட்டது. செட்டியார் குறிகேட்க, குறி சொன்ன பெண், வீரவை, சின்னுவை கதையை கூறி அவர்கள் தான் வளையல் கேட்டதாக சொல்ல. மறுநாள் செட்டியார் அந்தக் கொட்டகைக்குச் சென்று ஆறு ஜோடி வளையல்களை அங்கே வைத்துவிட்டு வியாபாரத்துக்குச் சென்றார். அன்று நல்ல லாபத்தில் அவருக்கு வியாபாரமாயிற்று. அதுமட்டுமல்ல, வீட்டில் மூட்டை கட்டி வைத்திருந்த உடைந்த வளையல்கள் எல்லாம் இப்போது முழுமையாக இருந்தன! இந்த விஷயங்களை வீரவை, சின்னவை குடும்பத்தாரிடம் அவர் கூற, அவர்கள் மேலக்கல்லூரணியில் அந்தப் பெண்கள் அக்னியில் அடக்கம் ஆன அந்த இடத்தில் கோயில் கட்டினர்.
கோயிலுக்குச் சென்று வழிபட்டவர்களின் குறைகள் நிவர்த்தி ஆனது. தோஷங்கள் விலகின. நாளடைவில் அது அக்கம் பக்கம் கிராமங்களில் பரவ, ஆலயம் தேடி பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வருகை தந்தனர். திருமணம் தடைப்பட்ட பல பெண்களுக்கு இவ்வாலயம் வந்தபின் திருமணம் நடந்தேறியதால் தங்கள் வாழ்க்கைக்கு மாலை கொடுத்த தாய் என்பதால் இதனை மாலையம்மன் கோயில் என்று அழைக்கலாயினர். இந்தக் கோயிலில் வீரவை-சின்னுவை அவதரித்த திங்கட்கிழமையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவர்கள் அடக்கமான வைகாசி மாதம் விசாகம் நாளில் குருபூஜை நடக்கிறது.
அப்போது செட்டியார் வீட்டிலிருந்து இன்றும் வளையல் கொண்டு வரப்படுகிறது. அவர்கள் தற்போது அந்த வியாபாரம் செய்யாவிட்டாலும் வளையல் கொடுப்பதை மட்டும் நிறுத்தவில்லை. கோயிலில் தினசரி பூஜை நடக்கிறது. இந்தக் கோயிலில் பலியிடுதலோ, அசைவ படையலோ இல்லை. இக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த நாகலாபுரம் பஞ்சாயத்திலுள்ள மேலக்கல்லூரணியில் அமைந்துள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment