தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது தேரிக்குடியிருப்பு. இங்குள்ள குதிரைமொழித்தேரி பகுதியில் எழுந்தருளியிருக்கிறார் கற்குவேல் அய்யனார். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கொடி மரம் வைக்க நினைத்த ஊர் மக்கள் சிலர், ஆறுமுகம் ஆசாரி தலைமையில் ஒரு குழுவாகப் புறப்பட்டனர். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள காக்காச்சி மலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடி காட்சி தந்த செழுமையாக வளர்ந்திருந்த சந்தன மரத்தைக் கண்டு அதை வெட்ட முற்பட்டனர். முதல் வெட்டு மரத்தின்மீது பட்டதும், கோடாரி தெறித்துத் துள்ளி குழுவினர் அனைவரையுமே பலி வாங்கியது. எஞ்சிய ஆறுமுகம் ஆசாரி பயந்து அலறி, சின்னதம்பி மரைக்காயரைத் தேடி ஓடோடி வந்தார். அவரோ, மரத்தின் கிழக்கு திசையில் வாயிலிருந்து ரத்தம் கொட்டியபடி இறந்து கிடந்தார். அந்த நண்பகல் நேரத்தில், மரத்தின் மேலிருந்து ஆதாளி சத்தம் கேட்டது.
ஆறுமுகம் ஆசாரி அஞ்சி நடுங்கி, உயிர் பயம் கொண்டு ஓடினார். அவரை பின் தொடர்ந்து 21 தேவதைகளும் ஓலமிட்டு ஓடி வந்தனர். மலையடிவாரம் வந்த ஆசாரி, மகாலிங்கம், சொரிமுத்தய்யன் மற்றும் பூதத்தார் வீற்றிருக்கும் ஆலயம் வந்தார். ஆண்டவனை நினைத்து அழுது புலம்பினார். உடனே சொரிமுத்தய்யன் தோன்றினார். ‘‘அஞ்ச வேண்டாம். என் சகோதரன் ஆறுமுகனுக்கு கொடிமரம் வைக்கும் நோக்கில் வந்த உனது பயணம் வெற்றியாகும். இங்கேயே நில்’’ என்று கூறிவிட்டு, கருவறையிலிருந்து வெளியே வந்தார். கோயிலுக்கு வெளியே ஆதாளி போட்டுக்கொண்டிருந்த 21 தேவதைகளையும் அழைத்து விசாரித்தார். ‘நாங்கள் குடியிருந்த மரத்தை வெட்டினான் இவன்’ என்று அவை புகார் சொல்லின. ‘உங்களுக்கு குடியிருக்க என் பகுதியில் இடம் தருகிறேன். அந்த மரத்தை நீங்களே செந்தூருக்குக் கொண்டு சென்று ஒப்படையுங்கள்.
இங்கு நிலையம் கொள்ளுங்கள். என்னை நாடி வரும் பக்தர்கள் உங்களையும் பூஜிப்பார்கள். அவர்களுக்கு நல்லருள் புரிந்து, மக்களை காத்து வாருங்கள். முதலில் கொடிமரத்தை கொண்டு சேருங்கள்,’ என்று உத்தரவிட்டார் சொரிமுத்தய்யனார். அவர் உத்தரவை ஏற்று சுடலைமாடன் தலைமையில் 21 தேவதைகள் திருச்செந்தூருக்கு கொடிமரத்தை கொண்டுசென்றனர். கொடிமரம் கொண்டு செல்ல ஆணையிட்ட சாஸ்தா, அவர்களை வெள்ளைக் குதிரையில் பின் தொடர்ந்து வந்தார். அவருக்கு செம்மண் தேரியான அந்த பகுதி பிடித்துவிட, தற்போதைய கோயிலிருக்கும் பகுதியில் நின்ற கற்குவா மரத்தடியில் வந்தமர்ந்தார். நிலக்கிழார், வில்வண்டி கட்டி நெல்லை சீமைக்கு சென்றுவிட்டு வந்தபோது, அவரை முதியவர் ரூபத்தில் வந்த சாஸ்தா தடுத்து நிறுத்தி, தண்ணீர் கேட்டார். அவரும் கொடுத்தார். பின்னர், அவ்விடம் விட்டகன்ற சாஸ்தா அன்றிரவு அவரது கனவில் தோன்றி, ‘நான் சாஸ்தா. நீ வசிக்கும் பகுதியிலுள்ள கற்குவா மரத்தில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு இவ்விடம் பிடித்து விட்டது. இங்கே எனக்கு கோயில் எழுப்பி பூஜித்து வா, உன்னை மேம்படுத்துவேன். என்னை நம்பி வணங்கும் யாவருக்கும் எல்லா வளமும், நலமும் அளித்து காத்தருள்வேன்,’ என்றுரைத்தார். அதன்படி அந்த நிலக்கிழார், அப்பகுதியை ஆண்ட சிற்றரசன் உதவியுடன் கோயில் எழுப்பினார். கற்குவா மரத்தின் மேல் அமர்ந்த அய்யன் என்றழைத்தனர். அதுவே மருவி கற்குவேல் அய்யன் என்றாகி, பின்னர் கற்குவேல் அய்யனார் என்றானது. அய்யன் உரைத்ததன்படி 21 தேவதைகளுக்கும் கோயிலில் நிலையம் கொடுக்கப்பட்டது. அந்த நிலக்கிழார் தனது மகனுக்கு சுவாமியின் அருள் நிலைக்க வேண்டும் என்பதற்காக கற்குவா அய்யனார் என்று பெயரிட்டார். அது சுருங்கி கற்கைய்யனார் என்றானது. அவர் வம்சாவழியில் வந்த கைய்யனார், இதே பகுதியை ஆட்சி செய்த அதிவீர ரண சூரபாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தார்.
அவர் கற்குவேல் அய்யனாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். பழி, பாவங்களுக்கு அஞ்சி நடந்தார். மன்னனின் கோட்டைக்கு அருகே அழகான சுனை இருந்தது. அந்த சுனையின் மேற்பரப்பில் ஒரு மாமரம் இருந்தது. ஒருநாள் சுனையில் நீர் அருந்திய முனிவர் ஒருவர், மரத்திலிருந்து விழுந்த மாங்கனியை எடுத்தார். அது நல்ல மணம் வீசியது. உடனே அக்கனியுடன் கோட்டைக்குச் சென்றார். மன்னனைக்கண்டு, ‘இறைவனுக்கு நாளொரு கனி, படைத்து பின்னர் நீங்கள் அதை உண்டால் பிணியும், மூப்பும் அண்டாது’ என்றுரைத்தார். மன்னனும், அந்த மரத்திற்கு காவலுக்கு ஆள் போட்டு பாதுகாத்து தினமும் ஒரு கனியை கொண்டு வரச் செய்தார். அதே பகுதியில் கணவனை இழந்த பேச்சித்தாய் என்பவள் வாழ்ந்து வந்தாள். இளம் வயதிலேயே கற்குவேல் அய்யனார் மீதும், அவ்வாலயத்தில் அருள்புரியும் பேச்சியம்மன் மீதும் அளவற்ற பக்தி கொண்டிருந்தாள். ஒருநாள் அதிகாலையில் பேச்சித்தாய் சுனையிலிருந்து ஒரு குடத்தில் நீரை எடுத்து மேற்பரப்பில் வைத்தாள்.
மற்றொரு குடத்தில் நீரை எடுத்துக்கொண்டிருந்தாள். அந்த நேரம் மரத்திலிருந்த கனி, நீர் நிரம்பிய குடத்திற்குள் விழுந்தது. இதை கவனிக்காத அவள், தலையிலும், இடுப்பிலுமாக நீர்க்குடங்களை எடுத்துக்கொண்டு இல்லம் சென்றாள். காலையில் பூஜைக்கு தயாரான மன்னன், கனி வராதது கண்டு காவலர்களை அழைத்து காரணம் கேட்டான். மன்னனின் உத்தரவிற்கிணங்க வீரர்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேடினர். கடைசியில் பேச்சித்தாய் வீட்டிலும் எல்லா இடங்களிலும் தேடினர். எதுவும் அறியாத பேச்சித்தாய், கதவின் பின்னால் ஆடவர் முகம் பார்க்க வெட்கப்பட்டு ஒளிந்து நின்றிருந்தாள். நீர்க் குடத்தைக் கவிழ்த்தபோது, மாங்கனி தென்பட்டது. உடனே அதை எடுத்துக்கொண்டு மன்னனிடம் சென்றார்கள்.
தன்முன் நிறுத்தப்பட்ட அந்த பெண்ணைப்பார்த்து, ‘இவளுக்கு மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதைமேல் ஏற்றி, ஊரை வலம் வரச்செய்து, சுண்ணாம்பு காளவாயில் தள்ளுங்கள்’ என்று ஆத்திரத்துடன் ஆணையிட்டான் மன்னன். அப்பொழுது அமைச்சர் கைய்யனார், ‘அரசே, ஆத்திரத்தில் ஆணையிடாதீர்கள். அது நம் பரம்பரையையே பாழ்படுத்தும்,’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், மன்னன் கேட்கவில்லை. சுண்ணாம்பு காளவாயிலில் தள்ளப்பட்டு உயிர் போகும் நிலையில் பேச்சித்தாய் சுற்றி நின்றோர் மத்தியில் மன்னனுக்கு சாபம் இட்டாள். கற்குவேல் கோயிலில் பேச்சியம்மனாக இருப்பதும் அந்த பேச்சித்தாயிதான் என்று பக்தர்கள் சிலர் கூறுகின்றனர். பேச்சித்தாயின் சாபத்தின் அப்பகுதி அழிந்து பின்னர் மீண்டது என்றும் கூறுகின்றனர். பேச்சித்தாயின் சாபத்தின்படி அந்தக் கோயிலே பின்பக்கம் விரிந்தும், முன்புறம் சுருங்கியும் சுளவு போலவே உள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment