Tuesday, 29 May 2018

குழலி அம்மன் வரலாறு

செய்துங்கநல்லூர் கிராமத்தில் பெரும் நிலக்கிழார் சுந்தரமூர்த்தி அய்யர். இவரிடம் பலபேர் பணியாளர்களாக வேலைபார்த்து வந்தனர். இருப்பினும் விவசாய நிலங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த பக்கத்து கிராமமான வேலங்காடு என்ற ஊரைச்சேர்ந்த பெரியமாடன், மாடத்தி தம்பதியினர்தான் நம்பிக்கைக்கு உரியவர்களாக திகழ்ந்தனர். இவர்கள் வயல்வேலை மட்டுமன்றி, வீட்டில் கால்நடைகளையும் பராமரித்து வந்தனர். அய்யர் வீடுதான் அவர்களுக்கு உலகம். அந்தளவுக்கு விசுவாசத்துடன் வேலை பார்த்து வந்தனர். ஒருமுறை தை மாதம் அறுவடைக் காலம் தள்ளிப்போனது. மாசி மாதம் முதல் நாளன்று, அய்யர், பெரிய மாடனை அழைத்தார். ‘‘ஏலே, பெரிய மாடன், அடுத்த வாரம் பௌர்ணமி வருது, நிறைஞ்ச நாள். அன்னைக்கு அறுவடை வச்சுக்கலாம், முதல்ல குளத்து மேட்டு வயலிலே அறுவடையை ஆரம்பிக்கணும். அப்புறம் மாடத்திகிட்ட, கட்டுசுமக்க ஆட்களை தயார் பண்ணிவைக்க சொல்லு. எல்லாம் தடாபுடல்னு இருக்கணும்.

அறுவடைக்கு முந்தைய நாள் பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சு பழம் படைச்சு பூஜை வைக்கணும், நீ கதிர் அறுவா கொண்டு வந்து சேரு,’’ என்றார். ‘‘வந்திடுறேன் சாமி..’’ என்று கூறி விடைபெற்றான் பெரிய மாடன். மதியம் உணவு உண்ட பின் கட்டிலில் படுத்த அவன் அப்படியே தூங்கிவிட்டான். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உள்ளே வந்த மாடத்தி, கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெரிய மாடனை எழுப்பினாள். ‘‘ஏனுங்க, என்னாச்சு உடம்புக்கு? வயக்காட்டுல ஜோலி எவ்வளவு கிடக்கு, ஒரு கலயம் கஞ்சிய குடிச்சுப்புட்டு, ராசாவாட்டம் மத்தியான நேரம் கட்டிலில கிடந்து உறங்குறீங்களாக்கும்.’’ ‘‘மாடத்தி, நேத்திக்கி ராத்திரி, காட்டுப்பன்றி தொல்லை தாங்கமுடியல, பனியில அத விரட்டி, தூக்கமும் போச்சு, குளிரும், காய்ச்சலுமா இருக்கு. தலை தூக்கி இருக்க முடியல,’’ என்றான் மாடன். ‘‘அதான பார்த்தேன், சும்மா படுக்கமாட்டேளே, இருங்க, கசாயம் காய்ச்சி தாரேன்,’’ என்று கூறி கசாயம் காய்ச்சினாள் மாடத்தி.

அந்தி கருக்கல் நேரம் வயல் காவலுக்கு புறப்பட்ட பெரியமாடனை தடுத்தாள், மாடத்தி, ‘‘உங்ககூட, இன்னிக்கு, நானும் காவலுக்கு வாரேன், வயக்காட்டு குடிசையில ஒத்தையில கிடந்து, உங்களுக்கு ஏதாச்சும் ஒண்ணுண்ணா, என்ன பண்றது?’’‘‘ராத்திரி நேரம், வயக்காவலுக்கு நீ எதுக்கு புள்ள, வூட்டுல பிள்ளங்க கூட படுத்து தூங்கு.’’ என்று மறுத்தான் மாடன். ஆனால், மாடத்தி கேட்பதாக இல்லை. ‘நானும் வருவேன்’ என்று கண்டிப்புடன் கூறிய மாடத்தி, சூடுபடுத்திய தண்ணீர் நிரப்பிய தூக்கு பாத்திரமும், 2 கோணி பைகளையும் கையில் எடுத்துக்கொண்டு, தனது கணவன் வைத்திருந்த வேல்கம்பை வாங்கிக்கொண்டு, வீச்சருவா ஒன்றை கணவனிடத்தில் கொடுத்து, ‘‘இப்போ வாங்க போகலாம்,’’ என்று கூறினாள். இருவரும் வயல்காட்டை நோக்கிச் சென்றனர். வயல்காட்டில் உள்ள குடிலில் கட்டிலில் பெரிய மாடனும், அதன் அருகே தரையில் மாடத்தியும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் ‘மாடத்தி...ஏம்மா, மாடத்தி’ என்று குரல் கேட்டது. திடுக்கிட்டு பார்த்தாள் மாடத்தி. தூரத்தில் அய்யர் நிற்பது போலவும், பொழுது விடிவது போலவும் தெரிந்தது. உடனே எழுந்த மாடத்தி வேல்கம்பை எடுத்துக்கொண்டு அவ்விடம் சென்று பார்த்தாள். அங்கே அய்யர் இல்லை. ‘‘சாமி வந்தது மாதிரி இருந்திச்சே, ஓ! சொப்பனம் கண்டுயிருக்கேன். சரி,’’ என்று ஆறுதல் படுத்திக் கொண்டு குடிலை நோக்கி வந்தபோது, கதிரறுக்கும் சத்தம் கேட்டது. யாரது இந்த நட்ட நடு ஜாமத்துல, இங்க வந்து கதிரறுக்கிறது என்று பார்த்தாள். வயலுக்குள் நடு வரப்பில் இருந்தபடி அதே ஊரைச் சேர்ந்த பலவேசமும், செல்லையாவும் கதிரை மேலோட்டமாக அறுத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த மாடத்தி, உடனே வேகமாக குடிலுக்கு திரும்பி கணவனை எழுப்ப நினைத்தாள். ‘கணவர் உடம்பு சரியில்லாம படுத்துக்கிறாரு, அவர போய் எழுப்பி கிட்டு எதுக்கு, நாம போய் அய்யர் சாமிகிட்ட சொல்லிடுவோம்,’ என்று எண்ணி தனது தலைமுடியை முடிந்துகொண்டு புறப்பட்டாள். எழும்போதே புத்தி தடுமாறிற்று. அய்யர்கிட்ட சொன்னா, இந்த ரெண்டு பேரையும் பஞ்சாயத்துல நிக்கவப்பாங்க, நஷ்ட ஈடு கேப்பாங்க.

நாலு பொம்பள பிள்ளைய பெத்துவச்சிருக்கான் பலவேசம். அதனால நாமளே சத்தம்போட்டு, கண்டிச்சி அனுப்பி வைப்போம் என்று முடிவு எடுத்து, வயல் வரப்புக்குள் சென்றாள். காலெடுத்து வைத்தபோது, யாரோ தள்ளிவிட, வயலுக்குள் விழுந்தாள் மாடத்தி. ‘நம்மள யாரு தள்ளிவிடுறது?’ என்று கேட்டபடி எழுந்து மீண்டும் நடந்தாள் வேகத்துடன். ‘‘யாரு.. வயல்ல என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க, அண்ணேன் பலவேசம், திரும்பி பார்க்காம போயிடுங்க, இல்லேண்ணா, நான் ரொம்ப பொல்லாதவளாயிடுவேன்’’ என்று சத்தம் போட்டவாறு அவர்கள் பக்கம் சென்றாள். அப்போது செல்லையன், ‘‘பலவேசம், மாடத்தி நம்மள காட்டி கொடுத்துவிடுவா, விடிஞ்சதும் நம்ம மானம் கப்பல் ஏறிரும். அதனால... அவ கதையை முடிச்சிடுவோம்,’ என்றான். இருவரும் அரிவாளால் மாடத்தியின் கழுத்தை அறுத்தனர். தலையை வயலுக்குள்ளும், உடலை வாய்க்காலிலும் போட்டு விட்டு, அறுத்த கதிர்களை அள்ளிச் சென்றனர்.

மறுநாள் காலை செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மேகலிங்க மூப்பனார், தன் மனைவியுடன் அய்யர் வயக்காட்டில் வரப்பில் கோரைப்புல் அறுத்துக் கொண்டிருந்தார்கள். புற்களிடையே கிடந்த மாடத்தியின் தலைமுடி, மூப்பனார் கையில் சிக்க, அதையும் புல்லென நினைத்து அறுத்தார். அப்போது பயங்கரமான குலவை சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டனர். பயம் தோன்றியது. சற்று தூரத்தில் மாடத்தியின் தலை கிடந்தது. உடனே பயந்து போன இருவரும் அறுத்த புல்லை கூட எடுக்காமல் வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது முதல் வாந்தி, பேதி என்று அவதிப்பட்டு மூப்பனார் படுத்த படுக்கையானார். மனைவி வடிவுக்கும் காய்ச்சல் அடித்து சாப்பாடு இறங்காமல் தவித்தாள். அக்கம் பக்கத்தினர் அறிவுறுத்தலின் பேரில் சீவலப்பேரி ஊருக்கு குறி கேட்க சென்றனர். அங்கு சன்னியாசி கோனார், ‘‘நீங்கள் கண்டு அஞ்சிய அந்த தலை, மாடத்தியினுடையது’’ என்ற அவர் மாடத்தி கொலை செய்யப்பட்டதைக் கூறினார். பின்னர் ‘‘அவளுக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள். நோய்கள் அகன்று, உங்கள் வாழ்வில் குறைகள் நீங்கும்,’’ என்றார்.

அதனையேற்று அவர்கள் ஊருக்கு வருகின்றனர். அவர்களது சொந்த பந்தங்களான ஐந்து குடும்பத்தார்கள் இணைந்து மாடத்தி அம்மனுக்கு கோயில் கட்டினர். குலவை சத்தம் எழுப்பியதால் குலவை அம்மன் என்று அழைத்தனர். அது பின்னர் குழலி அம்மன் என்று மருவியது. குழலி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டாலும், பூஜையின்போது மேளதாளங்கள் எதுவும் இன்றி பெண்கள் குலவை சத்தம் எழுப்புகிறார்கள். இதை அம்மனும் விரும்புவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குறையோடு சென்று அம்மன் சந்நதியில் கண்ணீர் விட்டு அழுதால் நிச்சயம், அந்த குறைகள் அகன்று, நிறைகள் பெருகும் என்கின்றனர். இது மட்டுமல்லாமல் விவசாயம் செழிப்புற அம்மனை வேண்டி வழிபாடு நடத்துகின்றனர். வயலில் அறுவடையானபின் முதல் நெற்கதிர்களை அம்மனுக்கு படைத்து வழிபடுகின்றனர். இந்த கோயில் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் செய்துங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment