Tuesday, 29 May 2018

தீப்பாய்ச்சியம்மன் வரலாறு

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள விட்டிலாபுரம் கிராமத்தில் வசித்து வந்த வேங்கிடகுரு-நாச்சியார் தம்பதியர், முனைஞ்சிப்பட்டியில் கோயில் கொண்டுள்ள பார்வதி அம்மன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை தோறும் முனைஞ்சிப்பட்டிக்கு நடந்துச் சென்று அம்மனை  பூஜை செய்து வழிபட்டு வந்தனர். அம்பாள் அருளால் எல்லா செல்வங்களும் அவர்களுக்கு கிடைத்தன. ஆண்டுகள் பல கழிந்தபின் முதுமை காரணமாக  அவர்களால் முனைஞ்சிப்பட்டிக்கு நடந்து செல்ல முடியவில்லை. ஆகவே, அன்னை பார்வதி தேவிக்கு தம் விட்டிலாபுரம் கிராமத்திலேயே கோயில் எழுப்ப எண்ணினர். அந்த வாரம் கோயிலுக்கு சென்றவர்கள் கோயிலில் அம்பாள் சந்நதி முன் நின்று மனமுருக வேண்டினர். ‘‘வாரம் தவறாமல் உன்னை தரிசித்து  வந்தோம். இப்போது உடல்நிலை காரணமாக இயலவில்லை. தாயே உன்னைப் பார்க்காமல் எங்களால் இருக்கவே முடியாது. உன்னை நினைக்காமல் அன்னம், நீர் உட்கொள்ள மாட்டோம். மாண்டு போனாலும் உன்னை மறவாத வரம் வேண்டும். தாயே, எங்கள் இறுதி காலத்திலும், உனக்கு பணிவிடை செய்து இன்புற விரும்புகிறோம். ஆகவே, நாங்கள் வசிக்கும் விட்டிலாபுரத்தில் கோயில் கொண்டு அருள வேண்டும்,’ என்று வேண்டினர்.

அப்போது சந்நதி முன்புற சுவரில் இருந்த பல்லி, மூன்று முறை குரல் எழுப்பியது. அம்பாள் உத்தரவு தந்துவிட்டாள் என்று அகமகிழ்ந்த தம்பதியர், பூசாரியிடம், ஒரு மஞ்சளில் அம்மனை ஆவாஹனம் செய்து தருமாறு கேட்டனர். அதனடியே அவரும் ஒரு மஞ்சளில் அம்பாளை ஆவாஹனம் செய்து மஞ்சள் துணிக்குள் பொதிந்து நாச்சியார் அம்பாளின் முந்தானையில் வைத்தார். நாச்சியார் முந்தானையை பத்திரமாக பிடித்துக்கொள்ள, இருவரும் விட்டிலாபுரம் நோக்கி புறப்பட்டனர். அப்போது பூசாரி, ‘‘தாயே, நீ அம்மனை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும். இடையில் எங்கேயாவது அம்மனை இறக்கி வைத்தால் அம்பாள் அங்கேயே நிலைகொண்டிடுவாள். ஆகவே, நீ பத்திரமாக கொண்டு செல்’என்று கூறினார். நாச்சியாரும் அதற்கு சம்மதித்து  கணவருடன் புறப்பட்டார். அது நல்ல வெயில் காலம். களைப்படைந்தாலும் மடியில் இருந்த பார்வதி அம்பாள் அருளால் உடனே தெம்பாக நடைபோட்டனர்.
 
அய்யனார்குளம்பட்டி குளக்கரைக்கு வந்த போதுதான் அம்பாள் தனது திருவிளையாடலை ஆரம்பித்தாள். அருமையான குளக்கரை, அதைச் சுற்றி பச்சை  பசேெலனக் காணப்படும் வயல்வெளி, அருகிலேயே குன்று என விளங்கிய அந்த இடம் அம்பாளுக்கு மிகவும் பிடித்து போக, தனது எடையை அதிகரிக்கச்  செய்து, நாச்சியாரை மிகவும் சோர்வடையச் செய்தார். ஏற்கனவே வெயில் கொடுமையில் நடக்க முடியாமல் அவதிப்பட்ட நாச்சியார். அய்யனார்குளம்பட்டி குளத்துக் கரையில் உள்ள புளியமரத்தடியில் அமர்ந்து விட்டார். தாகம் வாட்டவே கணவரிடம் தண்ணீர் கேட்டார். அருகில் உள்ள குளத்துக்கு அவர் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது  நாச்சியாருக்கு மயக்கம் ஏற்பட்டது. கீழே அவர் சாய்ந்தபோது முந்தானையிலிருந்து மஞ்சள் நழுவி கீழே விழுந்தது.  கணவர் வந்து தண்ணீர் கொடுத்ததும் மயக்கம் தெளிந்து  நாச்சியார் கண்விழித்து பார்த்தபோது முந்தானையில் மஞ்சளைக் காணவில்லை. அதிர்ந்து போன நாச்சியார், பதறிப்போய் அக்கம் பக்கம் தேடியபோது ஓரிடத்தில் மஞ்சள் கிடப்பதை பார்த்தார். அதை எடுக்க முடியவில்லை. ‘தாயே, இது என்ன சோதனை’ என்று வேதனையுடன் மீண்டும் எடுக்க முயன்றபோதுதான் பூசாரி சொன்னது நினைவுக்கு வந்தது. பார்வதி அம்பாள் இந்த  இடத்திலமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்க விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொண்டாள். அங்கே பனைஓலை வேயப்பட்ட குடிசை அமைத்து அதில் அம்பாளை நிலை நிறுத்தி, பூஜை செய்து வணங்க ஆரம்பித்தனர். பின்னாட்களில் பூஜை செய்ய பூசாரி ஒருவரை நியமித்திருந்தாலும், வேங்கிட குருவும், நாச்சியாரும் அம்பாளுக்கு உரிய பணிவிடையை செய்யத் தவறவில்லை. அம்பாளின் அருளால் இங்கு வந்து வணங்குபவர்களுக்கு எல்லாம் வேண்டிய  வரம் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் அம்பாளின் புகழ் பரவ ஆரம்பித்தது.

வேங்கிட குருவுக்கு முதுமை காரணமாக படுக்கையில் இருந்தார். ஒருநாள் நாச்சியாரை அழைத்து, ‘வரும் அமாவாசை அன்று நான் இந்த பூலோகத்தை விட்டு சென்று விடுவேன்,’ என்றார். மிகவும் துக்கமுற்ற நாச்சியார், ‘நீங்கள் இல்லாமல் இவ்வுலகில் நான் தனித்து வாழ்வது முடியாத காரியம்,’ என்றார்.  ‘என் மறைவுக்கு பிறகு, பார்வதி அம்பாளுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு. அதை முடித்து பின்பு, நீ என்னை வந்தடையும்வரை எனது ஜீவன் சிவலோகம் போகாது. தன்னலமற்ற நபர்கள் அம்பாளின் கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள வந்ததும் நீ என்னுடன் கலந்து விடு. நான் படுத்திருக்கும் கட்டிலின் மேல்பகுதியில் இருந்து பல்லி ஒன்று உன் மேனியில் விழுந்து ஓடும். மீண்டும் அதே இடத்திற்கு வந்து சப்தம் எழுப்பும். அதை  எனது அழைப்பாக ஏற்று நீ புறப்படு,’ என்றார். அவர் சொன்னபடியே அடுத்த அமாவாசையன்று அவர் உயிர் நீத்தார். ஆண்டு ஒன்று முடிந்த நிலையில் அவர் சொன்னதுபோலவே பல்லி நடந்துகொள்ள, மறுநாள் பொழுது புலர்ந்ததும், தனது உறவுகள் மற்றும் ஊர் மக்களை அழைத்து தனது முடிவை  தெரிவித்தார், நாச்சியார்.

மேளதாளம் முழங்க முத்தாலங்குறிச்சி தாமிபரணி நதிக்கரையை நோக்கி வந்தார். அங்கு மிகப்பெரிய நெருப்பை உருவாக்கினார். அடுத்து தாமிரபரணியில் மூழ்கினார். பின்னர்  நனைந்த உடையுடன் கணவரின் நாமத்தை சொல்லியபடி தீக்குள் இறங்கினார். அக்னி ஜூவாலையாக வந்த  வேங்கிடகுரு அவரை வாரி அணைத்து ஏற்றுக்கொண்டது. இரு ஆத்மாக்களும் சிவலோகம் அடைந்தன. மறு திவசம் வந்தபோது உறவினர் கனவில் நாச்சியார் தோன்றினார். ‘நான் நெருப்பில் இறங்கிய தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் ஒரு லிங்கமாக நான் உள்ளேன். அதை எடுத்து வணங்கி  வந்தால் நான் உங்களுக்கு கேட்ட வரம் தருவேன்,’ என்று கூறினார். அதன்படி உறவினர்கள் தாமிரபரணி ஆற்றங்கரைக்குச் சென்று பார்த்தபோது லிங்கம் கிடைத்தது. அதை எடுத்து வணங்கி வந்தனர்.  நாச்சியார், தீயில் பாய்ந்து உயிரை மாய்த்து தெய்வமானதால் தீப்பாய்ச்சிஅம்மன் என்று அழைக்கப்பட்டார். ஆனால், நாச்சியார் மூலம் உருவான பார்வதியம்பாளையும், முத்தாலங்குறிச்சி தாமிரபரணி கரையில் உள்ள தீப்பாச்சி அம்மனையும் ஒரே நேரத்தில் வணங்க முடியவில்லை. ஆற்றில் வெள்ளம் வந்தால் முத்தாலங்குறிச்சிக்கு செல்லமுடியாது.

எனவே, தீப்பாச்சியம்மனையும் அய்யனார்குளம் பட்டிக்கு கொண்டு வந்து ஒரே இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர். ஓலை குடிசையாக இருந்த கோயில் மிகப்பெரிய கான்கிரீட் கட்டிடமாக மாறியது. இக்கோயிலுக்கு கிழக்கு நோக்கி வாசல் உள்ளது. கருவறையில் பார்வதி அம்பாள் உள்ளார். அடுத்த அறையில் தீப்பாச்சியம்மன் உள்ளார். அதில் நாச்சியாரும், வேங்கிடகுருவும் இணைந்து தீப்பாச்சியம்மனாக ஒருமித்து காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள்  நம்புகின்றனர். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு அடிக்கடி வந்து கொண்டிருந்தால் அவர்கள் இருவரும் ஒருமுறை இத்தலம் வந்து தீப்பாய்ச்சியம்மனை மனமுருக வேண்டி சென்றால் குடும்ப பிரச்னைகள் தீர்ந்து இருவரும் ஒருமித்து வாழ்வர் என்பது அனுபவபூர்வமான நம்பிக்கை.
கோயில் முன்பு மணி மண்டபம் உள்ளது.

கன்னி மூலையில் வல்லப மகா கணபதியும், அடுத்த மூலையில் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். பார்வதி அம்பாள், நாச்சியார் மூலம் வந்து தங்கிய  புளியமரம், கோயிலின் தல விருட்சமாக உள்ளது. இந்த புளியமரத்தின் கீழே நாகர்சிலை உள்ளது. சிவனணைந்த பெருமாள், ஸ்ரீபத்பநாபசுவாமி,  சுடலைமாடசுவாமி, இசக்கியம்மன், பேச்சியம்மன் மற்றும் நவகிரக சந்நதியும் உள்ளன. இந்தக் கோயிலில் பவுர்ணமி புஜை, சங்கடஹரசதுர்த்தி, பங்குனி உத்திரம், ஐப்பசி திருக்கல்யாணம், நவராத்திரி திருவிழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. தினமும் இரண்டு கால பூஜை உண்டு. இங்குள்ள  நாகருக்கு  பால் ஊற்றி, மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வந்தால் சர்ப்ப தோஷம் நீங்குகிறது என்கிறார்கள்.

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் செய்துங்கநல்லூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அய்யனார்குளம்பட்டியில் இக்கோயில் இருக்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment