சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் இருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் சிவ ஆலயங்கள் கட்டப்படுகின்றன. அவ்வாறு ஆகம விதிப்படி கட்டப்பட்ட புகழ்பெற்ற 28 சிவாலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
அவற்றில் ஒன்று ஸ்ரீ நெல்லையில் கோவில்.
மூலவர்: நெல்லையப்பர்
வேண்ட வளர்ந்தநாதர்,வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர், வேணுவன மகாலிங்கேஸ்வரர், வேணுவனேஸ்வரர்
தாயார்: காந்திமதியம்மை, வடிவுடையம்மை
தல விருட்சம்: மூங்கில்
தீர்த்தம்: பொற்றாமரைக்குளம் ஸ்வர்ண புஷ்கரணி கருமாரித் தீர்த்தம், சிந்துபூந்துறை
ஆகமம்: காரண ஆகமம், காமீக ஆகமம்
இசைக் கருவி: சாரங்கி
புராண பெயர்கள்: வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலி வேலி, சாலிநகர், சாலிவாடி, பிரமவிருந்தபுரம், தாருகாவனம்
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும்.
இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
16 ஆம் நூற்றாண்டு நூல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு ‘வேணுவனம்’ என்று பெயர் சூட்டிப் பாடுகிறது.
‘வேணு’ என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர் மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால் இந்த ஊரை ‘நெல்வேலி’ எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள்.
இத்திருத்தலம் பாண்டியநாட்டு பாடல் பெற்ற பதினான்கு தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
அகத்தியரின் வரலாற்று நூலிலே இக் கோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இக் கோவில்.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது
தேவாரப் பாடல் பெற்ற 274 தலத்தில் 204வதாக விளங்குகிறது
அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது.,
சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.
சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று
ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகும்.
32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம்.
இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.
திருவிளையாடல் புராணத்தில் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை, பன்னிரெண்டாம் திருமுறை நூல்களில் இத்திருக்கோயிலைப் பற்றி பாடப்பட்டுள்ளன.
நான்மறைகளும், சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பின. அதற்காக நான்கு வேதங்களும் சிவபெருமானை வேண்டின. எனவே, வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க, இறைவன் லிங்கமாய் அமர்ந்தார் என்பது தலபுராணம் ஆகும்.
நான்கு வேதங்களும்
சிவபிரானிடம், ஈசனின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் வேண்டும் எனக் கேட்க,
அதன்படியே இறைவன்,
தான் நடனம் புரியும் இருபத்தியோரு திருத்தலங்களில் தென்காஞ்சி எனப்படும் திருநெல்வேலியில், மூங்கில் மரங்களாய் வேதங்கள் தோன்ற லிங்க உருவில் சிவன் அருள்பாலிக்கிறார்.
ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார்.
அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து பின் பொதிகை மலையை அடைந்து
பூமியை சமன் படுத்தினார்.
இங்கே திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக் கோலத்தில் காட்சி கொடுத்தனர்.
இராமபிரான், சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.
சுவாமி நெல்லையப்பர் சன்னிதியில் இரட்டை கருவறைகள் அமைந்துள்ளன.
அதில் பிரதான கருவறையில் நெல்லையப்பரும், அருகில் உள்ள மற்றொரு கருவறையில் நெல்லை கோவிந்தனும் உள்ளனர்.
இதில் நெல்லை கோவிந்தன் மார்பில் சிவலிங்கம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கிய கீர்த்தியுடைய கங்காளநாதரின் பிச்சாடன மூர்த்தி கோலமும் புகழ் உடையது.
இந்திரத்துய்மன் என்னும் அரசனுக்குத் துருவாச முனிவர் இட்ட சாபம் நீங்க உதவிய ‘கரிஉருமாறி தீர்த்தம்’ அமையப்பெற்ற சிறப்புடையது இத் தலம்.
இத்திருத்தலத்தின் புராணப்பெயர்கள்
இறைவன் அம்மையோடு இங்கு வந்து உகந்து வீற்றிருப்பதால் பேர் அண்டம்
ஊழிக்கால முடிவில் எல்லாம் அழிந்தாலும் இத்தலம் மட்டும் அழியாததால் (அனவரதம்)
பிரளயச்சிட்டம்
ஐந்து எழுத்து ஓசை எங்கும் நிறைந்ததால் தென்காஞ்சி
அம்பிகை தவம் செய்தும் சிவத்தை பூஜித்தும் இறைவனை மணம் முடித்ததால் சிவபுரம்
பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் ஆகியோர் இங்கு வந்து வணங்கி மகிழ்ந்து கொண்டிருப்பதால் திரிமூர்த்திப
இந்திரனின் ஐராவதம் யானை இங்கு வந்து வணங்கி நிற்பதால் இபபுரி
திருமால் ஆமை வடிவமாகி இங்கு சிவபூஜை செய்ததால் கச்சபாலயம்
பிரம்மன் சிவபூஜை இயற்றுவதால் பிரம்மபுரம்
மேலான தர்மங்கள் தொடர்ந்து நிலைபெற்று இருப்பதால் தரணிசாரம்
பிரம்மனுக்கு விஷ்ணு இங்கு அருள் புரிந்ததால் விண்டுதலம்
மேலான நற்கதி போகம் முதலியவற்றை இத்தலம் தருவதாலும் கம்பை நதி காமாட்சி அருளுவதாலும் தென்காஞ்சி காமகோட்டம்
சகல சித்திகளையும் அடைய வல்ல ஸ்தலம் ஆதலால் சகல சித்தி ஸ்தலம்
இங்குள்ள விநாயகர் முக்குறுணி விநாயகர் ஆவார்.
வலது கையில் மோதகம் இடது கையில் தந்தும் என மாற்றி வைத்துள்ளார்.
பொதுவாக நவகிரக சந்நிதியில் புதன் கிழக்கு பார்த்து இருப்பார்
ஆனால் இங்கு வடக்கு பார்த்து சிறப்புடன் அருள்பாலிக்கிறார்.
இக் கோவிலில் மார்கழி மாதம் நடக்கும் காலை பூஜை கிடையாது
கார்த்திகை மாதத்தில் அதி காலை 4 மணிக்கு அனைத்து இறைவனுக்கும் பூஜை நடைபெறுகிறது.
சிவனும் பார்வதியும் ஒன்று என்பதை விளக்கும் பொருட்டு பிரதோச காலத்தில்
அம்பிகை சன்னதியில் உள்ள நந்திக்கும்
பிரதோச பூஜை நடைபெறுகிறது.
அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர் லிங்கத் திருமேனி சற்று வாழ்வில் உள்ளது.
துர்க்கை அம்மன் தெற்கு நோக்கி சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.
மூலவர்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்த லிங்கத்தின் மத்தியில் அம்மன் உருவம் அபிசேகத்தின் போது மட்டும் தெரியும்.
திருக்கடையூரில் இறைவன் நிகழ்த்தியது, பிறக்கும் போதே இறப்பின் நாளை தெரிந்து கொண்டு பிறந்த இளைஞனுக்காக எமனை எட்டி உதைத்த திருவிளையாடல். ஆனால் இந்த தலத்தில் இறைவன் நிகழ்த்தியது, முதுமை அடைந்து உரிய காலத்தில் மரணம் சம்பவிக்க இருந்த பக்தனை, மரண பயத்தில் இருந்து விடுவித்து முக்தி அளித்த திருவிளையாடல்.
ஸ்வேத கேது என்கிற அரசன் நெல்லையம்பதியை ஆண்டு, அனுதினமும் நெல்லையப்பரை பூஜித்து வந்தான்.
வாரிசு இல்லாது அவனது அந்திமக்காலம் நெருங்கியதை அறிந்து இறைவனது ஆலயத்திலே அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தான்.
அப்போது காலன் அரசனை ஆட்கொள்ள அந்தப் பாசமானது இறைவன் மீதும் விழுந்தது.
காலனை எதிர்த்தார் இறைவன்.
இறைவன் அரசனிடம், மனம் வருந்தி மாள வேண்டாம் என்றும் அரசன் இஷ்டப்பட்டு தானே முக்தியடையவும் இறைவன் அருள் பாலித்த திருவிளையாடல் இத்தலத்தில் நடந்தது.
“கூற்றுதைத்த நெல்வேலி” என்கிற பெரியபுராண பாடல் (886) வரிகள் மூலம் சேக்கிழார் பெருமான் இந்நிகழ்வை பதிவு செய்துள்ளார்.
இத்திருக்கோயிலின் சுவாமி சந்நிதி முதலாம் திருச்சுற்றில் இந்த காலசம்ஹாரமூர்த்தியின் கோலம் புடைப்புச் சிற்பமாக சுப்பிரமணியர் சந்நிதி அருகில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருவிளையாடல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பூரம், உத்திரம், ஹஸ்தம் ஆகிய மூன்று தினங்களில் சிவலிங்க பூஜை செய்து, பஞ்சமூர்த்திகளை ஒரே ரதத்தில் வைத்து திருவீதி உலாவரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அம்பாள்
அன்னை அறம் வளர்த்தவளாகி,
இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்
அம்மை தான் படைத்த உலகத்தைக் காத்தற்பொருட்டு இறைவனை வேண்டித் தவம் இயற்றி, அவன் அருளை உலகம் பெறும்படிச் செய்தது வரலாறு.
உமாதேவி கயிலை மலையினின்றும் நீங்கி, இறைவனிடம் இருநாழி நெல் பெற்று, வேணுவனம் அடைந்து, முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தது,
கம்பை நதியின் அருகிலேயே இறைவனை நினைத்துத் தவமிருந்து, நெல்லை நாதனது திருவருட் கோலக்காட்சி எய்தி மணந்தருளியது,
இறைவன் சிவனும் சக்தியுமாய் இலங்கி உயிர்களுக்குப் போக வாழ்வினை அளித்தருளி அம்மை அப்பனாய் எல்லா உயிர்களையும் காத்து அருள்வது,
உயிர்களுக்குத் தவம் இயற்றும் முறையை அறிவுறுத்தற் பொருட்டு காந்திமதி அன்னை கமலபீட நாயகியாக காமாட்சி என்ற திருநாமத்துடன் தவக்கோலம் கொண்டது,
உயிர்களோடு இரண்டறக் கலந்து சிவமாந்தமைப் பெருவாழ்வு எய்துவதை அறிவுறுத்தற் பொருட்டு அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி திருக்கல்யாண விழா நடத்தியது ஆகிய திருவிளையாடல்கள் நடைபெற்ற மேன்மையுடையது இத்தலம்.
அம்மன் தலையில் வைரமணி முடி, இராக்குடியுடனும், முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடனும், நவமணி மாலை அணிந்தும், காலில் மணிச் சிலம்பும், வலக்கரம் உயர்த்திய நிலையிலும், இடக்கரம் தாழ்த்திய நிலையிலும், கிளியுடனும் காட்சி தரும் காந்திமதி அம்மனின் தோற்றம், கருணை வடிவம்.
காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப் பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது.
அர்த்தசாம பூஜையின் போது தினமும் அம்பாளுக்கு வெள்ளை புடவை உடுத்தப்படுகிறது. மறுநாள் காலை வரை வெள்ளை புடவையில் அம்மன் காட்சி தருகிறார்
உலகம் அழியும் காலத்தில் அனைத்தும் அம்பிகையிடம் ஐக்கியம் ஆவதை இவ்வாறு காட்டுகிறார்கள்.
திருநெல்வேலி பெயர் வர காரணமானவர் வேதபட்டர் ஆவார்.
முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வொரு ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார்.
சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தன. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரைச் சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்குச் சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லைக் காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.
அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காகக் காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே எனப் பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார்.
மன்னரும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி எனப் பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
சிவபெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.
ஒரு ஏழை விவசாயி இறைவனுக்குப் படைக்க நெல்லைக் காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரெனப் பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர் என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.
கோவில் உருவான வரலாறு:
ராமக்கோனார் என்கிற சிவபக்தர் அந்த ஊரின் அரசருக்கு(ராம பாண்டியனுக்கு)
வேணுவனம் என்கிற மூங்கில் காட்டைக் கடந்து சென்று தினமும் பால் கொண்டு போய் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இவர் அந்தக்காட்டின் வழியே வரும் வரும்போதெல்லாம், ஒரு இடத்தில் கால் இடறி பால் குடம் கீழே விழுந்து பால் சிதறும். பானை மட்டும் உடையாது!.
இப்படியே தினமும் நடந்து கொண்டிருந்தது. பால் குறைவதற்குக் ராமக் கோனார் சொன்ன காரணம் கேட்டு அரசர் கோபமடைந்து சத்தம் போட்டார்.
மறுநாள் பால் கொண்டு வந்த ராமக் கோனார் கையில் கோடாலி ஒன்றையும் கொண்டு வந்தார்.
அந்த இடத்திற்கு வந்ததும் வழக்கம் போல் இடறியது. பால் பானை கீழே விழுந்து பால் சிதறியது. பானை உடையவில்லை.
பூமிக்குள் புதைக்கப்பட்ட அல்லது வெட்டி எடுக்கப்பட்டது போக எஞ்சி நிற்கும் மூங்கில் துருத்திகள்தான் தன் காலை இடறி விடுகிறது என்கிற எண்ணத்துடன் தன் கையில் கொண்டு வந்த கோடாலியால் அவற்றை அகற்ற வெட்டத் துவங்கினார்.
அப்போது வெட்டப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறிப் பெருக்கெடுத்தது கண்டு பயந்து போனார்.
அங்கிருந்து ஓடிச் சென்று அரசரிடம் தான் கண்ட காட்சியைக் கூறினார்.
தினமும் பால் கொட்டுவதற்கான காரணம் கூறி வந்த கதையை நம்ப மறுத்த அவர் இந்தக் கதையைக் கேட்டு மிகவும் கோபமடைந்தார்.
இருப்பினும் ராமக்கோனார் சொல்லும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டு முடிவெடுக்கலாம் என்கிற எண்ணத்துடன் தனது படை வீரர்களுடன் சென்றார்.
மரத்தில் குருதி வடிவத்தைக் கண்டார். அந்நிலையில் ஆயன் இறைவனை எண்ணி பெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்து, இறைவனது முழு திருமேனியையும் காட்டியருள்க என வேண்டி இரத்தம் வரும் பகுதியைத் தொட்டவுடன் குருதி வருவது நின்றது.
நிலவினைச் சூடிய தலையில் ஆயனால் வெட்டுபட்ட காயத்துடன் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க முழு, வானுயர வடிவத்தினையும், பின் அரசனின் வேண்டுகோளுக்கிணங்க
தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
திருமூலநாதருக்கும், வேயின் முளைத்த லிங்கத்திற்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் ஆகம விதிப்படி திருக்கோயில் அமைத்து விழாக்களும் நடத்தினார் அரசர்.
இத்திருவிளையாடல் பங்குனி மாதம் செங்கோல் திருவிழாவின் நான்காம் நாள் அன்று நடைபெறுகிறது.
கோயிலின் அமைப்பு:
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி இருக்கிறது. அதனைக் கடந்து சென்றால் கொடிமரம் இருக்கிறது. கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். அதற்கு முன்பு மிகப்பெரிய விநாயகர் வீற்றிருப்பார். சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சிலைகளும் இருக்கிறது. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார்.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. இதன் துவக்கத்தில் “இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஏழு ஸ்வரங்களின் ஒலி கேட்கும்.
இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் போன்ற சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சன்னதிகள் உண்டு. கோயிலின் மிகப்பெரிய உள் தெப்பம் இங்கு உள்ளது. கோயிலுக்கு வெளியே 50 மீட்டர் தொலைவில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.
இரண்டு கோயில்களுக்கும் கிழக்குப் பக்கத்தில் தனித்தனியே பெரிய கோபுரம் உள்ளது. அம்மன் கோயிலுக்குத் தென்பகுதியில் ஒரு வாசலும், வடக்குப் பகுதியில் சங்கிலி மண்டபத்தின் மூலையில் ஒரு வாசலும் உள்ளது. இதைப் போலவே சுவாமி கோயிலுக்கு வடபுறமும், மேற்குப் புறமும் தனித்தனியாக இரு வாசல்கள் இருக்கின்றன.
காந்திமதியம்மன்:
இத்திருத்தலத்தில் நெல்லையப்பருக்கு இருப்பது போன்றே காந்திமதியம்மனுக்கும் சமமானப் பிரிவுகளுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மன் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
சிறப்புப் பூஜைகளும் கோவில் திருவிழா நாட்களும்:
தனித்தனி பூஜை:
நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு.
இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது.
பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும்.
பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும்.
ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.
காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப் பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது.
தன்னில் நீராடும் தாமிரபரணி :
இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாக எடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர்.
தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு.
அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம். கங்கையும், யமுனையும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரியவரும்.
தாமிரபரணியில் தண்ணீர் வற்றாதது ஏன்? :
திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை.
இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள்.
ஆம்! இக்கோயிலின் அமைப்பை பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.
கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம் வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும்.
ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.
தாமிரசபை
பஞ்சபூத ஸ்தல இறைவன் நடனமாடிய சபைகள் ஐந்து உள்ளன.
1. திருக்குற்றாலம் - சித்திரசபை
2. மதுரை - வெள்ளிசபை
3. திருவாலங்காடு - ரத்தின சபை
4. சிதம்பரம் - பொற்சபை
என இந்த வரிசையில்,
5. திருநெல்வேலி - தாமிரசபை
அமைந்துள்ளது.
தாமிர சபை மண்டபத்தின் உள்ளே சந்தன சபாபதியை வழிபடலாம். வடக்குப் பிரகாரத்தில் அஷ்டலெட்சுமி, சனீஸ்வர பகவான், சஹஸ்ரலிங்கம் போன்றோரது தரிசனம். நெல்லை நகரத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் அம்மன் கோயில், சுவாமி கோயில் என இரு பகுதிகளாக அமைந்துள்ளன. அம்மன் கோயில் தென்புறம், வடபுறம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது. அதேபோல சுவாமி கோயிலும் வடபுறம், மேற்க்குபுரம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் சுவாமி ரதம், அம்மன் ரதம், விநாயகர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டிகேஸ்வரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன. அது போலவே, இத்திரு கோயில் சார்ந்த ஆறு சபைகள் உள்ளன. அவை,
1. சிந்துபூந்துறை - தீர்த்த சபை
2. மானூர் - ஆச்சர்ய சபை
3. அம்மன் கோயில் முன்புறம் வடப் பக்கமாக சிவன் ஆனந்த நடனம் புரிந்த - சௌந்திர சபை
4. அம்மன் கோயிலின் திருக்கல்யாண மண்டபம் - கல்யாண சபை
5. சுவாமி கோயிலின் முன்பக்கம் - அழகிய ராஜசபை
6. சுவாமி கோயிலின் மேல்புறம் - தாமிர சபை
அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் ஆரம்பத்தில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பிற்காலத்தில் 7-ம் நூற்றாண்டில் நின்றசீர்நெடுமாறனாலும் கட்டப் பட்டவையாகும். கி.பி. 1647-ம் ஆண்டு வாக்கில் வடமலையப்ப பிள்ளையன் இரண்டு கோயிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை கட்டினார். இத்திருக்கோயிலில் சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என பல்வேறு மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபங்கள் சிற்பக் கலையின் சின்னமாகத் திகழ்கின்றன.
பதிகங்கள்
இத்திருக்கோயில் இறைவன், இறைவியைப் போற்றி சமயப் பெரியோர்களும், புலவர் பெருமக்களும் பதிகங்கள் பாடி பெருமை கொண்டுள்ளனர். நெல்லையப்பர் பிள்ளை அவர்கள் பாடிய திருநெல்வேலி தல புராணம், அருணாசல கவிராயர் இயற்றிய வேணுவன நாதர் புராணம், வித்வான் சொக்கநாதப் பிள்ளை பாடி அருளிய காந்திமதிஅம்மை பிள்ளைத் தமிழ், ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லைச் சிந்து, திருநெல்வேலி சேத்திரக் கும்பி, மும்மணிக் கோவை போன்ற நூல்கள் இத்தல இறைவன், அன்னையின் அருளினை சிறப்பித்துக் கூறுகின்றன.
வியப்பில் ஆழ்த்தும் சிற்பங்கள்:
நம் நாட்டு திருக்கோயில்களின் சிறப்பம்சமான சிற்ப வேலைப்பாடுகள் இத்திருக்கோயில் முழுவதும் வியாபித்திருக்கின்றன. திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற் கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள் காணக் கிடைக்கின்றன. மேற்கூரையில் மட்டுமல்லாது இருபுறங்களிலும்
உள்ளே சென்றால்
தூண்கள்தோறும் சிற்பவேலைப்பாடுகள், ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு, மறுபக்கம் தன் பெரியபிள்ளைக்கு சோறூட்டும் அன்புத் தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்துச் செல்லும் அக்கால கணவன் மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம்தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனைக் கொல்லவந்து, கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன், போன்றோரது சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்யும் வண்ணம் அமைந்துள்ளன. இந்த சிற்பங்களில் எலும்பு தெரிகிறது. நரம்பு, நகம், மண்டை ஒட்டு மாலையில் ஒவ்வொரு தலையும் தனித்தனியாகத் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால் முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல, உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு.
இசைக்கு இவ்வுலகமே அடிமை என்பதை உணர்த்தும் இசைத் தூண்கள் நெல்லையப்பர் சன்னதி முன்பாக. ஏழு ஸ்வரங்களும் எழுகின்றன இந்த இசைத் தூண்களில்.
மல்யுத்த வீரர்கள் சண்டைப் பயிற்சி மேற்கொள்ளும் காட்சி அப்படியே சாளர வடிவத்தில். மேல் புறம் ஒரு தலை, கீழ்புறம் ஒரு தலை வடிவம். ஒருவரது ஒரு காலால் மற்றவரது காலினையும், கையினால், கையினையும், துளி கூட நகர முடியாத அளவிற்கு கால் கைகளாலேயே கிடுக்கி பிடி பிடித்திருக்கும் மல்யுத்தக் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிற்பக் காட்சி.
ஒவ்வொரு தூண்களின் அடிபாகத்தில் அக்கோயிலைக் கட்ட உதவியவர்களின் சிலைகளும், தூண்களின் மேற்புறத்தில் சிங்கங்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்கூரையில் வரிசையாக நீண்ட தூண்களை படுக்கை வாக்கில் அடுக்கியது போன்ற அமைப்பு.
தட்சிணாமூர்த்தி சன்னதியின் வெளிப்புறத்தில் எத்தனை அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முன் மண்டபம். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். இக்கோயிலில் அமையப் பெற்றுள்ள சிற்பங்களைக் காண ஒரு நாள் போதாது.
கணவன்-மனைவி ஒற்றுமை
இந்த திருத்தலத்தில், திருமணம், சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் மற்றும் மிருத்யுஞ்சய மகா வேள்வி ஆகியவை செய்வது சாலச்சிறந்தது என்கிறார்கள்.
மேலும் இந்த ஆலயத்தில் கணவன்-மனைவி ஒற்றுமைக்கும், வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக, தினசரி நிகழ்வு ஒன்று நடக்கிறது.
அதாவது இத்தல இறைவனான நெல்லையப்பர்,
தினமும் அப்பாளுக்கு 6 கால பூஜையின் போதும் பூ மற்றும் புடவைகளை கொடுப்பார்.
அதே போல காந்திமதி அம்பாள், சுவாமிக்கு நெய்வேத்தியம் (நிவேதனம்) வழங்குகிறார்.
தாமிரசபை
நெல்லையப்பர் கோவில் வரலாற்றில், தாமிர சபை நடனம் குறிப்பிடத்தக்க ஒன்று. சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் ஆனந்த தாண்டவமும், திருவாலங்காடு ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவமும், மதுரை வெள்ளியம்பலத்தில் சுந்தர தாண்டவமும், குற்றாலம் சித்திர சபையில் அசபா தாண்டவமும் புரிந்த எம்பெருமான், நெல்லையப்பர் கோவில் தாமிர சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சி சிறப்பானது. இந்த ஆலயத்தில் தை அமாவாசை அன்று, 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும், பத்ர தீப திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை அன்று லட்ச தீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம், லட்ச தீப விழாக்களின் போது மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்படும்.
ஆயிரங்கால் மண்டபம்:
அம்பாள் சன்னிதி வளாகத்தில் 1,000 தூண்களை கொண்ட ‘ஆயிரங்கால் மண்டபம்’ அமைந்துள்ளது. இந்த மண்டபம் 520 அடி நீளம், 63 அடி அகலம் கொண்டது. இந்த மண்டபத்தில், ஐப்பசி திருக்கல் யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் பங்குனி உத்திர திருவிழாவில், பங்குனி உத்திரம் அன்று மன்னருக்கு, சுவாமி செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த மண்டபம் ஆமை ஒன்றால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.
ஊஞ்சல் மண்டபம் :
அம்பாள் சன்னிதி முன்பு 96 தத்துவங்களை தெரிவிக்கும் வகையில், 96 தூண்களைக் கொண்ட ‘ஊஞ்சல் மண்டபம்’ அமைக்கப்பட்டுள்ளது. ஐப்பசி திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பிறகு சுவாமி, அம்பாள் ஊஞ்சலில் ஆடும் ஊஞ்சல் உற்சவமும், ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் இந்த மண்டபத்தில் நடத்தப்படும். இந்த மண்டபத்தை கி.பி. 1635-ம் ஆண்டு சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையன் கட்டினார்.
சோமவார மண்டபம்:
சுவாமி சன்னிதியின் வடக்கு பக்கம் ‘சோமவார மண்டபம்’ இருக்கிறது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், நவராத்திரி நாட்களில் நடைபெறும் பூஜைகளும் இந்த மண்டபத்தில் வைத்து செய்யப்படுகின்றன. 78 தூண்களை கொண்ட பெரிய மண்டபம் இது.
மணி மண்டபம்:
இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி தொங் குவதால் ‘மணி மண்டபம்’ என்று அழைக்கப்படலாயிற்று. நின்றசீர்நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இது. ஒரே கல்லில் சுற்றிச் சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. எந்த ஒரு சிறு தூணைத் தட்டிப்பார்த்தாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். தூண்கள் தோறும் ஸ்வரங்கள் மாறுபடும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான ஸ்வரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. இவை அனைத்தும் ‘இசைத்தூண்கள்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இசைத் தூண்கள் அமைந்துள்ள கோவில்களில், காலத்தால் முற்பட்ட இசைத்தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.
சங்கிலி மண்டபம்:
சுவாமி கோவிலையும், அம்பாள் கோவிலையும் இணைப்பதாக அமைந்திருப்பதால், இதற்கு ‘சங்கிலி மண்டபம்’ என்று பெயர். 1647-ம் ஆண்டு கட்டப்பட்ட மண்டபம் இது. இந்த மண்டப தூண்களில் காமவிகார குரங்கு, வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் ஆகிய சிற்பங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
வசந்த மண்டபம்:
100 தூண்களுடைய வசந்த மண்டபத்தில் கோடை காலத்தில் வசந்த விழா நடத்தப்படும். இந்த மண்டபத்தை சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலை வனம் 1756-ம் ஆண்டு திருவேங்கட கிருஷ்ண முதலியாரால் அமைக்கப்பட்டது.
கல்வெட்டுகள்:
மிகப் பழமையான கல்வெட்டு கி.பி 950 ல் இருந்த வீரபாண்டியன் சாசனங்கள் ஐந்து. இவை வட்ட எழுத்தில் எழுதப்பட்டவை. கல்வெட்டுகள் பாண்டியர்கள் சோழர்களை வென்றதாகச் சொல்கிறது.
திருவிழாக்கள்:
இத்திருக்கோயிலில் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
சித்திரை - வசந்த்மஹோற்சவம் (பதினாறு தினங்கள்),
வைகாசி - விசாகத்திருநாள் (ஆனி பெருந்தேர் திருவிழா),
ஆனி - பிரம்மோற்சவம் (ஆனி பெருந்தேர் திருவிழா),
ஆடி - பூரத்திருநாள் (பத்து தினங்கள்),
ஆவணி - மூலத்திருநாள் (பதினொரு தினங்கள்),
புரட்டாசி - நவராத்திரிவிழா (பதினைந்து தினங்கள் லட்சார்ச்சனையுடன்),
ஐப்பசி - திருக்கல்யாணம்உற்சவம் (15 தினங்கள்),
கார்த்திகை - கார்த்திகைதீபம், சோமவாரத் திருவிழா (ஒரு நாள்),
மார்கழி - திருவாதிரைவிழா (பத்து தினங்கள்),
தை - பூசத்திருவிழா (பத்து தினங்கள்),
மாசி - மகாசிவராத்திரி (ஒரு நாள்),
பங்குனி - உத்திரத்திருநாள் (பத்து தினங்கள்).
கோவில் காலை 6.00 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கும்பகோணத்தில் இருந்து 379 km
கும்பகோணத்தில் இருந்து திருச்சி மதுரை திருமங்கலம் விருதுநகர் திருநெல்வேலி அடையலாம்.
No comments:
Post a Comment