கீழப்பாவூர் ஊருக்கு நாலாபுறமும் உள்ள குளங்களின் தண்ணீரை நம்பித்தான் அப்பகுதி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் விடாது பெய்த கனமழையின் காரணமாக கீழப்பாவூர் பெரிய குளம் நிரம்பியது. குளத்தின் கரையையொட்டியுள்ள விவசாய நிலங்கள் ஊர் பண்ணையாருக்கு சொந்தமானவை. பண்ணையாரின் பணியாளர்களில் ஒருவரான முத்துக்காளை காலையில் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோளில் மண்வெட்டியுடன் நிலம் நோக்கி சென்றான். குளத்தின் கரையின் தென்புறத்து மடையை திறந்து விட்டான்.
அப்போது குளத்தின் ஒரு கரை பகுதி உடைந்து தண்ணீர் வெளியேற துவங்கியது. அவன் கடவுளை வேண்டிக்கொண்டே தனது பணியில் அதிவேகமாக ஈடுபட்டான். அப்போது பச்சை நிறத்தில் கண்டாங்கி சேலைகட்டி நடுத்தர வயதுடைய பெண் அங்கு வந்தாள். ‘‘என்னப்பா, கொட்டும் மழையில வேலை செய்யுறியே, உன் உடம்புக்கு ஏதாவது சீக்கு வந்திடப்போகுதுப்பா, போய் ஒதுங்கி நின்னு’’ என்றாள். ‘‘நான் என் உடம்ப பார்த்தா..? ஊருக்குள்ள இருக்கற சனங்க நிலைமை என்னவாகும்? விதைச்ச நெல்லும், முளைச்ச பயிரும் வீணா போகும். எனக்கும், என் குடும்பத்துக்கும் படியளக்கிற எசமான் என்மேல வெச்சிருக்கற நம்பிக்கை மண்ணாப் போகும் ஆத்தா.
அதனால என்னால ஏலுறவரைக்கும் கரை உடைபடாம அடைக்கணும். இந்த வழியா யாராச்சும் ஆடு, மாடு பத்திட்டு போனா அவங்ககிட்ட சங்கதிய சொல்லி, ஊருலயிருந்து வீட்டுக்கு ஒரு ஆம்பிளய மம்பட்டியோட வரச்சொல்லு’’ என்றான். ‘‘சரிப்பா, நான் குளத்த பாத்துக்கிறேன். நீ போய் ஊருலயிருந்து ஆளுங்கள கூட்டியிட்டு வா,’’ என்று அந்த பெண் கூறியதும், கொட்டும் மழையிலும் இடியென சிரித்தான் முத்துக்காளை. ‘‘உங்களால எப்படிம்மா முடியும்?’’ என்று கேட்டான்.‘‘இந்தா, இப்ப பாரு,’’ என்றபடி உடைப்பு எடுத்திருந்த பகுதியில் அந்தப் பெண், தனது வலது பாதத்தை வைத்தாள். தண்ணீர் வெளியேறுவது நின்றது! குளத்தில் கரை முட்ட தண்ணீர் நிரம்பியிருக்க, மழையும் மேன்மேலும் அதிகமாகப் பெய்து கொண்டிருந்தது.
உடைப்பு நின்றதை கண்டு வியந்த முத்துக்காளை, குளம் வேறெங்காவது உடைப்பெடுத்துவிடுமோ, பெரும் மழையோ அல்லது இடி, மின்னலோ வந்து, அதக்கண்டு பயந்து இந்த பொம்பள, இங்கே இருந்து போயிட்டா குளம் உடைஞ்சுடுமோ என்று அச்சமுற்றான். அப்போது, ‘‘முத்துக்காளை, நீ ஊருக்குள்ள போய் ஆளுங்கள கூட்டிட்டு வா, நான் குளத்து கரை உடையாம பார்த்துக்கிறேன்,’’ என்றாள் அந்தப் பெண். முத்துக்காளை, ‘‘அம்மா, நான் உங்கள, என்ன பெத்த ஆத்தாவாகவும், அதுக்கும் மேல நான் கும்பிடுற சாமியாவும் நினைச்சி கேக்கிறேன். நான் வரும் முன்னாடி, இங்கே இருந்து போயிட மாட்டிங்களே?’’ என்று தயக்கத்துடன் கேட்டான்.
‘‘ம்...ஹும், போக மாட்டேன்.’’ ‘‘அப்படின்னா என் வலது கையில அடிச்சி சத்தியம் செய் ஆத்தா... நான் சாதியில குறைஞ்சவன்னு நினைச்சி, கையில அடிச்சி சத்தியம் பண்ண தயங்குறீங்களோ, சரி ஆத்தா உன்னை நம்பித்தான் போறேன்...’’ ‘‘நில்லு, உன் வலது கையை நீட்டு,’’ என்று கூறியபடி முத்துக்காளையின் வலது கையில் அடித்து, ‘‘நீ வரும்வரை இந்த இடத்தை விட்டு நான் நகரவும் மாட்டேன். குளம் உடைய விடவும் மாட்டேன்’’ என்றாள். முத்துக்காளை ஊருக்குள் விரைந்தான். பண்ணையார் வீட்டுக்கு வந்தான். ‘‘ஐயா, ஐயா’’ என்று அலறலாக அழைத்தான். பதில் கொடுத்தார் பண்ணையார்: ‘‘ஏலே, காளை, வண்டி பெறைக்கு வா, இங்கதான் இருக்கேன்.’’
தன்னருகே வந்த முத்துக்காளையிடம் ஒரு துணியை கொடுத்து, ‘‘ஏலே, துண்ட புடி, முதல்ல தலையை துவத்து...ம், இப்ப சொல்லுலே, என்ன நடந்துது,’’ என்று கேட்ட பண்ணையார், அவன் விவரம் சொல்லச் சொல்ல, வியந்தார். ‘‘நான் போய் ஆட்கள கூட்டிகிட்டு குளத்துக்குப் போறேன்,’’ என்றான் முத்துக்காளை. ‘‘ஏலே, காளையா, நீ ஆளயும் திரட்ட வேண்டாம், குளத்துக்கும் போக வேண்டாம். ஆமாலே, பத்து ஆம்புளங்க ஒண்ணா சேர்ந்தாகூட பண்ண முடியாத வேலய, ஒத்த பொம்பளயா நின்னு செய்யுறாங்கன்னா, அது சாதாரண பொம்பளயா இருக்காது. ஏதோ தெய்வ சக்திதான் அது. நீ போகிறவரைக்கும் அந்த அம்மா அங்கிருந்து போக மாட்டாள்ளே?’’ பண்ணையார் கேட்டார்.
‘‘ஆமாங்க எசமான். என் உள்ளங் கையில அடிச்சி சத்தியம் பண்ணியிருக்காக’’ என்றான் முத்துக்காளை. ‘‘அப்படின்னா, அந்த அம்மா அங்கிருந்து போகமாட்டாங்க, குளத்தையும் உடைய விடமாட்டாங்க. நாளைக்கு வௌ்ளன போய் பார்ப்போம். இத ஆருகிட்டயும் சொல்லிட்டு திரியாத, என்ன?’’ என்று கூறி அவனை அனுப்பி வைத்தார் பண்ணையார். மறுநாள் காலையில் குளத்தின் கரையில் பெண்ணின் பாத சுவட்டைப் பார்த்தார்கள். குளம் உடைபடாமல், வெள்ள பேராபத்திலிருந்து நம்மை காத்தது அம்மன்தான் என்று கருதிய பண்ணையார் மற்றும் அவ்வூர் மக்கள், ‘ஆபத்து காத்த அம்மன்’ என்று பெயரிட்டு அந்த அம்மனை வணங்கி வந்தனர்.
குளத்தின் அருகே வயல்வெளிகளுக்கு இடையே அம்மன் சிலையை வைத்து ஊர் மக்கள் வணங்கி வந்தனர். பின்னால் ஒருசமயம், தென்காசி சிற்றரசனின் மகளை அருகே உள்ள சிற்றரசனுக்கு மணமுடித்து கொடுத்திருந்தார்கள். ஒருநாள் இளவரசிக்கும், அவரது மாமியாருக்கும் இடையே மனவேற்றுமை ஏற்பட, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறிய இளவரசி, தன் தந்தை வீட்டுக்கு நடந்து சென்றாள். கீழப்பாவூர் அருகே வரும்போது மூன்று கள்வர்கள் இளவரசியிடம் நகையை பறிக்க முயன்றனர். உடனே, அருகே இருந்த ஆபத்து காத்த அம்மன் சிலை முன்னே நின்று, ‘‘அம்மா, நீ சக்தியுள்ள தெய்வம் என்றால் என்னை இந்த ஆபத்தில் இருந்து காப்பாத்து’’ என்று மண்டியிட்டு வேண்டிக்கொண்டாள் இளவரசி.
அப்போது ஒரு கள்ளன் ஓடி வந்து, இளவரசியை வாளால் வெட்ட முயன்றான். இளவரசி எழுந்து சிலைக்கு பின்னால் போய் கீழே அமர்ந்து ஒளிந்தாள். மீண்டும் கள்ளன் ஒருவன் வெட்ட, சிலை மீது கீறல் விழுந்தது. அதேநேரம் அவன், கைகால் செயலிழந்து மயக்கமுற்று விழுந்தான். மற்ற இருவரும் அதனைக் கண்டு பயந்தோடினர். அதைக் கண்ட இளவரசி பயபக்தியுடன் ‘அம்மா,’ என்று மகிழ்ச்சிக் கூக்குரலிட்டாள். இதனிடையே இளவரசியின் கணவரான சிற்றரசன், தனது வீரர்களுடன் மனைவியை தேடி வந்தான். அவள் சத்தம் கேட்டு அவ்விடம் வந்தான். அம்மனின் சக்தியை எடுத்துக் கூறினாள் இளவரசி.
ஆபத்தில் இருந்து மகளை காப்பாற்றிய அம்மனுக்கு தென்காசி பாண்டிய மன்னன், புதுச்சிலை அமைத்து கோயிலும் கட்டியதாக கூறப்படுகிறது. மூலவர் ஆபத்து காத்த அம்மன் கோயிலின் வாசல், வடக்கு பார்த்து உள்ளமையால் அம்மன் வடக்கு வா செல்வி என்றும் அழைக்கப்படுகிறாள். இக்கோயிலில் விநாயகர், கருப்பசாமி, சப்த கன்னியரும் அருள்பாலிக்கின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாத பௌர்ணமி அன்று கொடை விழா நடைபெறுகிறது. இக்கோயில் கீழப்பாவூர் பேருந்து நிலையத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில் வயல்களுக்கு நடுவே, பெரியகுளம் அருகே அமைந்துள்ளது.
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment