Friday, 25 May 2018

பூலங்கொண்டாள் வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஊரைச் சேர்ந்த மாலைக்குட்டி நாடார் தனது உறவினர்களுடன் ஏற்பட்ட சொத்து தகராறின் காரணமாக ஊரை விட்டு, தனது தாய்வழி ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அடுத்துள்ள பொடியன்விளையில் குடியேறினார்.  தனது வீட்டருகே குலதெய்வமான செங்கிடாக்காரனுக்கு பீடம் அமைத்துக் கொடுத்தார்; வௌ்ளிக்கிழமை மற்றும் முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார். மாலைக்குட்டி நாடாருக்கு ஆறு ஆண் குழந்தைகள். அவரது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஆவல் கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை செங்கிடாக்காரனுக்கு நடந்த பூஜையின்போது அருள் வந்து ஆடும் தனது கணவனிடத்தில், மங்கை ஒன்று மழலையாய் வேண்டும் என்று வரம் கேட்டாள்.

மாலைக்குட்டி நாடார் மேல் வந்திறங்கிய செங்கிடாக்காரன் கூறினான்: ‘‘பெண்ணே, உனக்கு பெண் குழந்தைக்கு யோகம் இல்லை. அப்படியே பிறந்தாலும் 14 வயது வரை தான் இருப்பாள்’’ என்றார். ஆனாலும் அவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை ஆசை அதிகமாகியது. அவ்வூரிலிலுள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு விடாமல் சென்று வழிபட்டதன் பலனாக, அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது மகள் பூ போன்ற உள்ளம் கொண்டவளாக திகழ வேண்டும் என்பதற்காக பூ உளம் கொண்டாள் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். பூ உளம் கொண்டாள் 13 வயதில் பருவம் அடைந்தாள்.

அதன் பின்னர் அவள் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. அதனால் தனது அண்ணன்மார்களிடம், ‘என்னைப்போன்ற பெண்கள் ராட்டு நூற்கிறார்கள். நானும் ராட்டு நூற்க விரும்புகிறேன். எனக்கு பொழுதும் போகும். வரவுக்கும் வழி ஆகும்’ என்றாள். அப்போது மூத்தவன் பண்டாரம் கூறினான்: ‘‘நம்ம அய்யாவும், அம்மயும் தேடி வச்சிருக்காவ, போதாகுறைக்கு நாங்களும் உழைக்கோம். உனக்கு நேரம் போலன்னு சொல்லுறியா வாங்கித்தாரோம். நீ உழைச்சிதான் நாங்க சாப்பிடனுமுன்னு, இல்ல, கேட்டியா?’’‘‘சரி அண்ணே, எனக்கு நேரமே போவ மாட்டங்கு, எவ்வளவு நேரம்தான் தாயம் விளையாட முடியும்?’’தங்கைக்காக ராட்டு வாங்க அண்ணன்மார் ஆறுபேரும் புறப்படலானார்கள்.

கோட்டாறு, வடசேரி, தெங்கம்புதூர் எனப் பல ஊர்களில் தேடியவர்கள், திங்கள்சந்தைக்கு வந்தார்கள். இவர்கள் தேடிப்போன தெங்கம்புதூர் நபர் தனது தம்பிகளுடன் காளைகள் வாங்கப் புறப்பட்டார். இவர்களிடம், தாம் நல்ல தறியாக வாங்கித் தருவதாகச் சொல்லி அழைத்துச் சென்றனர். திங்கள் சந்தையில் தறி வாங்கிக்கொண்டு தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்ட சந்தோஷத்தில் ஊருக்கு திரும்பினர். இரவு நெருங்கியதால் தெங்கம்புதூர்காரர்கள், பண்டாரத்தையும் அவரது தம்பிமார்களையும் தங்கள் இல்லம் வந்து இரவு தங்கிச் செல்லுமாறு கூறினர்.

முதலில் மறுத்தவர்கள் பின்னர் சோர்வின் காரணமாக ஒத்துக் கொண்டார்கள். அங்கு உணவு உண்ண அமர்ந்தபோது, பண்டாரத்தின் கடைசி தம்பி சுடலமுத்து, ‘‘அண்ணே, இவங்க என்ன சாதி சனமோ, உம்பாட்டுக்கு சம்மணத்த போட்டிட்டுருக்க, விருந்துண்டு போனால் சம்மந்தம் காணும் உறவுக்கு தொடக்கமாகிரும், அதனால முதல்ல எந்திரி, நம்ம வீட்டப் பாத்துப்போவும்’’ என்றான். ‘‘நீ ஒரு கூறுகெட்டவன், வர முன்னாடி யோசிக்கணும், வந்தாச்சி இங்ஙன கிடைச்சது சாப்பிட்டுகிட்டு உறங்கி முழிச்சி போவும் என்னா.’’‘‘சரி, என்னா எளவாம் செய், மூத்தவனா போன. என்னத்த சொல்ல..’’‘‘வந்த இடத்தில என்ன எளவு, கிளவுன்னு...? தம்பி என்ன சொல்லுகாரு?’’ என்று கேட்டபடி தெங்கம்புதூர்காரர்களின் தாய், சாப்பாடு பாத்திரங்களுடன் வந்து இலையில் சோறு போட்டாள். ஆறுபேரும் உண்டனர்.

முடிவில் வெற்றிலையையும் வாங்கி மென்றனர். உடனே ஊருக்குக் கிளம்பினர். ‘‘எங்க வீட்டுக்கு நீங்களும் ஒருநாளு வரணும். அப்ப எங்க கவனிப்ப பாருங்க’’ என்று கூறி, வீட்டின் விலாசத்தையும் வரும் வழியையும் கூறினார்கள்.‘‘ராத்திரி நேரத்திலயா? விடிஞ்சு போலாமுல்லா?’’ என்ற அவர்களின் கேள்விக்கு, ‘‘பௌர்ணமி வெளிச்சம் நல்லா இருக்கு, நாங்க போயிருவோம், நீங்க போய் உறங்குங்க, வரும்போது கண்ணை கட்டுச்சுண்ணு சொன்னியள்ளா, போங்க,’’ என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி பயணித்தனர். வீட்டுக்கு ராட்டுடன் வந்த அண்ணன்மார்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள் பூஉளம் கொண்டாள். நாட்கள் நகர்ந்தது ஆண்டு ஒன்றும் முடிந்தது.       பூஉளம் கொண்டாளை பெண் கேட்டு உறவினர்கள் பலர் வர, மாலைக்குட்டி நாடார், தம் மகன்களிடம் ‘‘அவளுக்கு கிடாரம் கணக்கில தங்கத்த போட்டு கட்டிட்டு போவ, எங்க அப்பன் பூமியான நெல்லை சீமையில இருந்து மாப்பிள்ள வருவாம். அதுவரைக்கும் அவ என் மொவளா, இந்த வீட்டு இளவரசியா இருப்பா, என்னல நா சொல்லது உங்களுக்கு விளங்குதா! ’’ என்று இறுமாப்புடன் கூறினார். ஒருநாள் காலை நேரம் தெங்கம்புதூரிலிருந்து ஆண்களும், பெண்களுமாக ஒன்பதுபேர் தாம்பூல தட்டுடன் வந்தனர். நடு வீட்டில் விளக்குமுன்பு வைத்தனர். ‘‘நீங்க யாரு, உங்களுக்கு என்ன வேணும்’’ என்று கேட்ட பண்டாரத்தின் தாயாரிடம், ‘‘உங்க மகள பொண்ணு கேட்டு வந்திருக்கோம்’’ என்றனர்.

அதைக்கேட்ட மாலைக்குட்டி நாடாருக்கு கோபம் வந்தது. ‘‘என் புள்ளய கட்டிக்க உங்க மவனுக்கு என்ன தகுதி இருக்கு’’ என்று கத்தினார். அவர்கள், அவருடைய மகன்கள் தறி வாங்க சென்றபோது ஏற்பட்ட பழக்கம், தனது வீடு வந்து விருந்துண்டது என விரிவாகப் பேசினர்.‘‘நிறுத்து புள்ளே, உன் வியாக்கியானத்தை நான் கேக்கல’’ என்றபடி பழத்தட்டுகளை வெளியே தூக்கி எறிந்தார் மாலைக்குட்டி. தந்தையின் செயலைப் பார்த்து அண்ணன்மார்கள் திகைத்து நின்றனர். வந்தவர்களோ தாங்கள் அவமானப்பட்டதை எண்ணி கோபம் கொண்டனர். இரு குடும்பத்தினரும் வார்த்தைகளை கடந்து பேசி சண்டையிட்டனர். பெரும் சண்டையிட்டு விலகியபோது, ‘‘தெங்கம்புதூர்காரன என்ன நினைச்ச, இன்னும் எட்டு நாளைக்குள் உம் மக என் தம்பிக்கு பொண்டாட்டி. இது நடக்கும் பார்’’ என்று சபதம் இட்டுச் சென்றனர்.

மாலைக்குட்டி நாடார், தனது மகன்களிடம் ‘‘நாம காட்டுக்குள்ள குடியிருக்கோம். தெங்கம்புதூர்காரனுக சொன்னபடி செஞ்சிடபோறானுக, அதனால ஒருத்தன் மாத்தி ஒருத்தன் உடம்புறந்தாளுக்கு காவல் இருங்கலே.’’ என்று எச்சரித்தார். தந்தையின் கட்டளை ஏற்று பூஉளங்கொண்டாளுக்கு அண்ணன்மார்கள் காவல் இருந்தனர். தெங்கம்புதூர்காரர்களின் அண்ணன் தங்கமணி மலையில், மாடுகள் மந்தை போட்டத்தில் மாந்திரீகவாதிகளாக திகழ்ந்த காணி புலையன்மார்களுடன் கொண்ட பழக்கத்தால் மந்திர வித்தைகளை கற்றிருந்தான். அவர்களது குலதெய்வம் கருங்கிடாகாரன். ஒருநாள் வெள்ளிக்கிழமை இரவு கருங்கிடாகாரனுக்கு உரிய பலியுடன் கூடிய பூஜையை நடத்தினர்.

மந்திரவாதியை வைத்து மாலைக்குட்டி நாடாரின் குலதெய்வமான செங்கிடாக்காரனை மந்திரித்து சிமிழுக்கு அடைத்தனர். கருங்கிடாக்காரன் தங்கமணியின் தம்பி போன்று உருமாறி பூஉளங்கொண்டாள் அருகே சென்று அவளை வசீகரித்து தன்னோடு அழைத்துச் சென்றான். அப்போது காவலுக்கு இருந்தபடி தூங்கிவிட்ட மூன்றாவது அண்ணன், பல்லி ரூபம் கொண்டு செங்கிடாக்காரன் வந்து எழுப்பிய குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். பக்கத்தில் தங்கையை காணாமல் திடுக்கிட்டான். கிழக்கு நோக்கி ஒரு ஆணுடன் அவள் செல்வதைக்கண்டு தன் பக்கம் ஆட்களை திரட்டிக்கொண்டுஈட்டி, தீப்பந்தங்களுடன் அவர்களை பின் தொடர்ந்தான். மாலைக்குட்டி நாடாரும் அவர்கள் பின்னே பதறியடித்து ஓடினார்.

பின்னால் ஒரு கூட்டம் ஓடி வருவதைக் கண்ட கருங்கிடாக்காரன் தனது சக்தியை பயன்படுத்தி அவர்களை அழிக்க முற்பட்டான். அப்போது அடைப்பட்ட சிமிழை உடைத்தெறிந்து வெளியே வந்தான் செங்கிடக்காரன். ஆங்கார ரூபம் கொண்டு அவர்கள் முன்னே சென்றான். மானிடர்கள் யார் கண்ணுக்கும் தெரியாத அவனை கண்ட கருங்கிடாக்காரன் தனது ஆத்திரத்தில் அருகே இருந்த அகஸ்தியர் கோயில் (அகஸ்தீஸ்வரர்கோயில், வடுகன்பற்று) கிணற்றில் பூஉளங்கொண்டாளைத் தள்ளி, நீரில் மூழ்கடித்துவிட்டு மாயமானான். கிணற்றில் உயிரற்று கிடந்த மகளைக்கண்டு மாலைக்குட்டி நாடார் கதறினார். அண்ணன்மார்களும், உறவினர்களும் கதறி அழுதனர். அவளது தாய் மயக்கமுற்று விழுந்தாள். அவளது உடலை பொடியன்விளைக்குக் கொண்டு சென்றனர்.

தம் வீட்டருகே அடக்கம் செய்தனர். கருங்கிடாக்காரன் யார் கண்ணுக்கும் தெரியாததால் அவனது செயலும் யாருக்கும் தெரியவில்லை. ‘கோயில் கிணற்றில் விழுந்து மாலைக்குட்டி நாடார் மகள் இறந்து விட்டாள்; அதனால் கோயிலுக்குத் தீட்டு ஏற்பட்டது’ என்று சொல்லி மன்னர் அபராதம் விதித்தார். தோப்பிலிருந்து பனை மரங்களை வெட்டி விற்று அபராதம் செலுத்தினார் மாலைக்குட்டி நாடார். அந்தப் பகுதியின் அந்தணர்கள் அவர்களை ஏளனம் செய்தனர். ஒருநாள் தண்ணீர் எடுக்க வந்த பிராமண பெண்கள் 4 பேர் தீட்டு குறித்து பேசியபடியே தண்ணீர் இறைத்தனர். அப்போது ஆவியாக இருந்த பூஉளம் கொண்டாள், அவர்களை பலி வாங்கினாள். தொடர்ந்து இவ்வாறு எட்டுக்கும் மேற்பட்ட பெண்கள் இறந்துவிட, அவர்கள் மாலைக்குட்டி நாடாரிடம் வந்து முறையிட்டனர். 

அவர் தன் மகன்கள் உதவியுடன் மகளின் ஆத்மாவை பூஜை செய்து சாந்தப்படுத்த பூஉளம் கொண்டாளுக்கு பூஜை செய்து சாந்தப்படுத்த பொடியன்விளையில் கோயில் எழுப்பினார். கோயிலில் பூஉளம் கொண்டாள், செங்கிடாக்காரன், கருங்கிடாக்காரன், சுடலைமாடசுவாமி ஆகிய
தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். அதுபோல் பிராமணர்கள் வடுகபற்றிலுள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் வடக்கு பக்கம் தனி பிராகாரத்தில் வடக்கு நோக்கி புடைப்புச் சிற்பமாக பூஉளம் கொண்டாளை அமைத்தனர். தற்போது பூஉளம் கொண்டாளை கிராம மக்கள் பூலங்கொண்டாள் என்று அழைத்து வழிபட்டு வருகின்றனர்.

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment