பொழிக்கரை - திருநெல்வேலி மாவட்டம்
தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பொழிக்கரை கிராமத்தில் அருளாட்சி செய்து வருகிறார் மாயாண்டி. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சிக்குட்பட்ட 18வது வார்டுதான் இந்த பொழிக்கரை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சுயம்புலிங்க நாடார் மகன் ராமசாமிக்கு, கரிசல் கிராமத்தை சேர்ந்த பொன்னுலிங்க நாடார் மகள் தங்கத்தை திருமணம் முடித்து வைத்தனர். தங்கம் தனது பெற்றோரைவிட தாயாய், தந்தையாய் நினைப்பது, அவள் அறிவு தெரிந்த நாள் முதல் வழிபட்டு வந்த குல தெய்வம் மாயாண்டி சுவாமியைத்தான். திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு செல்லும் முன்பு தங்கம், கணவன் ராமசாமியுடன் மாயாண்டி கோயிலுக்கு சென்று வணங்கி, கண்ணீர் மல்க விடைபெற்று சென்றாள்.
மாதம் தோறும் கடைசி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தனது கணவனுடன் மாயாண்டி கோயிலுக்கு வந்து தேங்காய் உடைத்து, பழம் படைத்து வணங்கி செல்வாள். ஒருசமயம், கர்ப்பமுற்றிருந்த தங்கம் மதியப் பொழுதில் ஆற்றில் குளிக்க சென்றாள். தெருவில் கிடந்த முள் அவள் காலில் குத்தியது. உடனே “அப்பா” என்று வலி தாங்கமுடியாமல் கத்தினாள் தங்கம். “என்னை கூப்பிட்டியா ஆத்தா” என்று குரல் கேட்க, நிமிர்ந்தாள். அருகே முறுக்கு மீசை முகத்துடன் வெற்றிலை போட்ட வாயுடன் புன்னகைத்தார், கணவரின் தாய்மாமா பெருமாள் நாடார். ‘‘பெரியப்பா முள் குத்திட்டு,’’ என்ற தங்கத்திடம், ‘‘ நீ ஆற்றுக்கு குளிக்க போகவேண்டாம்ன்னு தடுத்திருக்கு. வயித்து புள்ளையோடு ஆத்துக்கெல்லாம் போகக் கூடாது ஆத்தா, போய் வீட்டுல குளி’’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்த தங்கம் நடந்ததை தனது மாமியார் முத்துலட்சுமியிடம் கூறினார். ‘‘என்ன தங்கம் சொல்ற, எங்க அண்ணன் கடையத்துல இருக்கிற மக வீட்டுக்கு நேத்தே போயிட்டாரே. இங்க எப்படி வந்தாரு. அதுவும் நம்ம வீட்டுப் பக்கம் வந்திட்டு உள்ள வராமல் போவாரா?’’ என்று கேட்டாள்.
ஒரு வாரத்துக்குப் பிறகு வீட்டுக்கு வந்த அண்ணனிடம் முத்துலட்சுமி கேட்டாள். அவர் ‘‘நான் வரவே இல்ல தாயி’’ என்றார். உடனே தங்கத்திடம், ‘‘ஆத்தா, உன் சாமி மாயாண்டி சுடலை தான் என் ரூபத்தில வந்து உன்னை ஆத்துல குளிக்கவிடாம தடுத்திருக்கு. மாயாண்டி உன் கூட தாம்மா
இருக்கிறாரு,’’ என்று பரவசமாகச் சொன்னார். ‘‘ஆமாண்ணே, என் மருமக வந்த பிறகு தான் மேல காட்டுல பனைகளும் அதிகமாகியிருக்கு’’ என்று பெருமைபட்டுக் கொண்டாள் முத்துலட்சுமி.
அடுத்த மாத கடைசி செவ்வாய்க்கிழமை அன்று தனது கணவர் குடும்பத்துடன் மாயாண்டி கோயிலுக்கு சென்று மனமுருக வழிபட்டாள் தங்கம். திருநீறை அதிகமாக வீட்டுக்கு வாங்கி வந்தாள். அந்த காலக்கட்டத்தில் கிராமங்களில் ஆங்கிலேயர்களால் மதமாற்றம் அதிகம் நடந்து கொண்டிருந்தது. கரிசல் கிராமத்தில் மாயாண்டியை வழிபட்டு வந்தவர்களும் வீடு உள்ளிட்ட சலுகைகளுக்காக மதம்மாறினர். இதனால் கோயில் பராமரிப்பின்றி போனது. குழந்தைப்பேறு, கைக்குழந்தை வளர்ப்பு என பொறுப்புகள் அதிகரித்ததால் தங்கமும் கோயில் பக்கம் செல்ல முடியாத நிலை. ஆனாலும், ஒரு வெள்ளிக்கிழமை தனது கணவன், குழந்தையுடன் கோயிலுக்கு சென்றாள் தங்கம். கோயிலில் புதர் மண்டி, சிலந்தி வலைகள் பின்னியிருந்தன. ‘‘என் சாமிய யாருமே கவனிக்கலங்க, நாம கோயில பராமரிப்பு செய்வோமுங்க’’, என்றாள். கணவனோ, ‘‘தங்கம், நான் பொண்ணு எடுத்தவன், இந்த ஊருல வந்த நின்னு செய்தால் அது சரியாகாது,’’ என்றான். ‘‘அப்படின்னா நம்ம ஊருல சாமிக்கு கோயில கட்டுவோம்ங்க’’ என்றாள். ‘‘அதுவும் முடியாது ஊரு பெரிய மனுசங்க சம்மதிக்கணும் நாம எதயும் செய்ய முடியாது,’’ என்று பதிலுரைத்தான். இருவரும் கற்பூரம் ஏற்றி சாமியை வணங்கி விட்டு வந்தனர். அன்று பொழிக்கரை ஊர் நாட்டாமையாக இருந்த ராமையா நாடாரின் கனவில் வந்த மாயாண்டி சுவாமி, ‘‘எனக்கு உன் ஊரில நிலையம் கொடு, உன் ஊர் மக்களை நோய்நொடியின்றி காத்தருள்வேன்,’’ என்றார். நாட்டாமை தான் கண்ட கனவை தனது சகாக்களிடம் கூறி, ஊரில் கோயில் கட்ட முடிவு செய்தனர்.
கரிசல் ஊருக்கு மேளதாளத்துடன் சென்று அங்குள்ள மாயாண்டி கோயிலில் இருந்து பிடி மண்ணை மஞ்சள் துணியில் கொண்டு வந்து ஆற்றங்கரையோரம் கோயில் அமைத்தனர். ஆற்றங்கரை சுடலைமாடசுவாமி என்ற பெயருடன் சுவாமியை வணங்கி வந்தனர். கோயிலின் சிறிது தொலைவில் வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. அந்த கோயிலின் அர்ச்சகர் வேங்கட கிருஷ்ணன் அய்யர், அந்த வழியாக சென்றபோது ‘‘என்னப்பா புதுசா வாதை கோயிலெல்லாம் கட்டியிருக்கிறீங்க?’’ என்று ஊர் தலைவரிடம் கேட்க, ‘‘சாமிதான் நான் உன் ஊருக்கு வாரேன்னு சொல்லி வந்தாக,’’ என்று பதிலுரைத்தார். ‘‘அதுசரி, ஆனா, இந்த மாதிரி சாமிக்கு பொங்கல், இட்லி, தோசை எல்லாம் பிடிக்காது, ஆடு, கோழின்னு அசைவமா படைக்கணுமே, அத சொன்னேன்,’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
மாயாண்டி சுடலை வெள்ளி, செவ்வாய் நாட்களில் இரவில் வேட்டைக்கு செல்வதுண்டு. வழக்கம் போல் அக்ரஹாரம் வழியாகத்தான் அன்றும் வேட்டைக்கு சென்றார். வேங்கட கிருஷ்ணன் ஐயர் வீட்டுக்கு போனதும், தனது மனைவி பங்கஜத்திடம்,‘‘நெய் தோசை செய்து வை, நான் கை, கால் அலம்பின்டு வந்திடுறேன்’’ என்றபடி, கிணற்றடிக்கு சென்றார். நெய் வாசனையை முகர்ந்த மாயாண்டி சுடலை வேங்கட கிருஷ்ணன் வீட்டு முன் நின்று ‘‘அம்மா தர்மம்’’ என்றார். ‘‘சாமத்தில என்ன தர்மம் வேண்டியிருக்கு?’’ என்று கத்தினாள் பங்கஜம். ஐயரும் கிணற்றடியிலிருந்து வந்து ‘‘இப்ப ஒண்ணுமில்ல, போயிட்டு நாளைக்கு காலையில வா,’’ என்றார். அதற்கு மாயாண்டி சுடலை, ‘‘சாமி வீட்டு நெய் தோசை மணம் வீதி வரைக்கும் வீசுதே!’’ என்றார். ‘‘இப்ப நான் வெளிய வந்து தரமுடியாது’’ என்றாள்பங்கஜம்.
‘‘நான் ஜன்னல் வழியா கையை நீட்டுறேன். எனக்கு கொடு’’ என்று கேட்டபடி, சமயலறை ஜன்னல் வழியாக கை நீட்டினார் மாயாண்டி. அதற்கு பங்கஜம் தோசை கரண்டியைக் கொண்டு, சுடலையின் கையில் ஓங்கி அடித்தார். அந்த அடியை வாங்கிக்கொண்டு சுடலைமாடன் வேட்டைக்கு சென்று விட்டார். மறு நாள் முதல் அக்ரஹாரத்திலுள்ள அனைவரும் வாந்தி, பேதியால் அவதிப்பட்டனர். பல்வேறு மருத்துவம் பார்த்தும் யாருக்கும்
குணமாகாததால் கேரளாவில் இருந்து நம்பூதிரியர்களை வரவழைத்து கண்ணடியான் சத்திரம் பகுதியிலுள்ள அப்பன்வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து பிரசன்னம் பார்த்தனர். அதில் ஆற்றங்கரையோரம் கோயில் கொண்டுள்ள மாயாண்டிசுடலைமாடனின் வேலைதான் இது என்பது தெரிந்தது.
உடனே பூசாரியான சண்முக கம்பரை வரவழைத்து மாயாண்டிசுடலை கோயிலுக்கு அக்ரஹாரம் சார்பாக சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்ய வேண்டும் என்றனர். அதன்படி ஒரு வெள்ளிக்கிழமை பூஜை நடை பெற்றது. அப்போது கோயிலில் சாமியாடிய கோமரத்தாடி, ‘‘எனக்கு நெய் தோசை படையல் வேண்டும், அதுவும் அரை பனை உயரத்து படையல் வேண்டும்,’’ என்று கேட்க, அடுத்த வெள்ளிக்கிழமை அதன்படியே நெய் தோசை படையல் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அரை பனை உயரத்திற்கு அடுக்கி வைக்க முடியாது என்பதால் பனை மரம் ஒன்றைப் பாதியாக வெட்டி, அதை மாயாண்டி சுடலை முன்பு நிற்கும் படி நட்டு, அதன் மேல் தலைவாழை இலை விரித்து தோசை அடுக்கி வைத்து பூஜை நடந்தது. அந்த பூஜையை சுடலைமாடன் ஏற்றுக்கொண்டார்.
வேங்கடகிருஷ்ணன் மற்றும் அக்ரஹாரத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அப்போது பங்கஜத்தின் முன் நின்ற படி சாமி
யாடுபவர் ‘‘நீ அடித்த அடி இன்னும் வலிக்கிறதே,’’ என்று கூற, மாயாண்டிசுடலை பீடத்தின் முன்பு ஐயர் தனது மனைவியுடன் மன்னிப்பு கேட்டார். மாயாண்டியும் மனம் இறங்கினார். அப்போது ஐயர், ‘‘மாயாண்டி வந்த பிணி மாற வேண்டும், வரும் பிணிகள் அண்டாமல் விலக வேண்டும்,’’ என்று கேட்டுக்கொண்டார். ‘‘ நீங்க இல்லம் செல்லும் முன் எல்லாம் மாறி விடும்,’’ என்றார் சாமியாடி. அதனை தொடர்ந்து கோயில் கொடை விழா நடைபெறும் போதெல்லாம் அக்ரஹாரத்திலிருந்து மேளதாளத்துடன் நெய் தோசை கொண்டு வரப்பட்டு அரை பனை மரம் மேல் தோசை படையல் நடைபெறும். சில காலம் பிறகு இந்த வழிபாடு நிறுத்தப்பட்டுவிட்டது.
பொழிக்கரை மாயாண்டி சுடலைமாட சுவாமி கோயிலில் இசக்கியம்மன், மாசானம், கட்டையேறும் பெருமாள் ஆகிய தெய்வங்கள்
அருட்பாலிக்கின்றனர். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இக்கோயிலில் ஆடி மாதம் 3வது செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறும். கோயிலில் சாமி ஆடுபவர் 10 தீப்பந்தங்களை ஒரு சேர, மார்போடு பிடித்தபடி சாமியாடுவது பார்ப்பவரை மெய் சிலிர்க்க வைக்கும். மாயாண்டி சுடலை, தீராத கடன், விலகாத பிரச்னைகள், நீங்காத நோய்எல்லாம்தீர்த்து நம்பி வருபவர்களும் நல்லருள் புரிந்து வருகிறார்...
நன்றி
- சு.இளம்கலைமாறன்
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment