முத்தாலங்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி பாயும் பசுமை வளமிக்க ஊர் முத்தாலங்குறிச்சி. இங்கு தன்னை நாடி வரும் பக்தர்களின் துயர் நீக்கி அருள் பாலிக்கிறாள் அம்பிகை நல்லாண் பெற்ற குணவதி. தாயிழந்தவருக்குத் தாயாய், நாதியற்றவருக்கு நானிருக்கிறேன் என்று அரவணைக்கும் அன்னை இந்த குணவதி. ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் நடுத்தர வசதி கொண்ட வணிகராக நமச்சிவாய செட்டியார் வாழ்ந்து வந்தார். மனைவி அமுதவல்லி மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டிருந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்து தந்தை மற்றும் பாட்டி உறவுகளோடு வாழ்ந்த அமுதவல்லிக்கு தனது கணவனின் அன்பு தாயன்பு கிடைக்காத ஏக்கத்தை மறக்கச்செய்தது.
மணம் முடிந்த மறு மாதமே கர்ப்பமுற்றாள் அமுதவல்லி. பெண்ணை கட்டி கொடுத்ததோடு, தனது கடமை முடிந்ததாக கருதி, மதுரையில் உள்ள தனது கடை வியாபாரத்தில் கவனம் செலுத்தி வந்தார் அமுதவல்லியின் தந்தை கணபதிசெட்டியார். 7 மாதம் முடிந்த நிலையில் அமுதவல்லிக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறவேண்டிய தருணம் வந்தது. முன்னின்று நடத்த வேண்டிய தந்தையான கணபதி செட்டியாரோ, தனது உறவினர் ஒருவரிடம் பணமுடிப்பை கொடுத்து, தன்னால் இப்போது தொழிலை விட்டுவிட்டு வரமுடியவில்லை என்றும், வளைகாப்பை ஊராரையும், உறவினரையும் அழைத்து நல்லமுறையில் நடத்தச் சொல்லுமாறும், தேவைப்பட்டால் மீண்டும் பணம் கொடுத்து அனுப்புவதாகவும் சொல்லியனுப்பினார்.
பிறந்த வீட்டில் நடத்தப்பட வேண்டிய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தாமல் பணம் தான் பெரிதென்று மாமனார் நடந்து கொண்டதை நினைத்து மனம் வருந்தினார் நமச்சிவாய செட்டியார். பின்னர் வளைகாப்பை நடத்தினார். ஊராரும், உறவினரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி முடிந்து 2 மாதம் ஆனது. நமச்சிவாய செட்டியாருக்கு வணிக ரீதியாக இலங்கைக்கு செல்ல வேண்டும். நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை தனியாக விட்டு செல்ல முடியாத நிலை. அது மாமனார் மேல் கோபமாக மாறியது. “குல வழக்கப்படி தலை பிரசவம் தாய்வீட்டில்தான். ஆனால், உனக்கு பெத்தவள் செத்து போய் விட்டாள். பெத்தப்பன் தற்குறியாகிவிட்டான்.
ஊரு, உலகத்திலே பொண்ணே கிடைக்காத மாதிரி, என்னை பெத்தவங்க உன்னை எனக்கு கட்டிவச்சிட்டாங்க. எல்லாம் என் தலைவிதி,” என்று அவர் ஆத்திரத்துடன் பேசிவிட்டு வெளியே சென்று விட்டார். அதுவரை அவரிடமிருந்து கடுஞ்சொற்களைக் கேட்டிராத அமுதவல்லி, மிகவும் வருத்தப்பட்டாள். மனம் குமுறியது, இருப்பினும் வயிற்றில் குழந்தை பாரத்துடன், கண்ணீரை துடைத்துக்கொண்டு, வீட்டிலிருந்து புறப்பட்டாள். கால் போன போக்கில் பயணம் தொடர்ந்தாள். மனதுக்குள் பல சிந்தனைகள். வாழ்வதா, சாவதா? இல்லை, கணவன் மனம் மாறி, கோபம் தணிந்து தேடி வருவான். அதுவரைக்கும் மெதுவாக
நடக்கலாம் என்று யோசித்தபடி மரசோலை
நடுவே நடந்தாள். ஏரல், தென்திருப்பேரை,
ஆதிச்சநல்லூர், கொங்கராயகுறிச்சி தாண்டி
முத்தாலங்குறிச்சி வந்து சேர்ந்தாள்.
முத்தாலங்குறிச்சியில் அந்தணர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். பெரும்பாலானோர் வைணவத்தை தழுவிய போதும், சுந்தரேஸ்வர அய்யர் தனது முன்னோர்களுக்கு காட்சி கொடுத்த அம்பிகை குணவதிக்கு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள வேப்பமரத் தின் கீழ் ஓலை கீற்றில் ஒரு சிறிய குடிசை அமைத்து வழிபட்டு வந்தார். முக்கிய விரத நாட்களிலும், மாத முதல் மற்றும் கடைசி வெள்ளி, செவ்வாய் நாட்களிலும் பூஜை செய்து வந்தார். அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த அமுதவல்லிக்கு, வெயிலின் தாக்கம், நடந்த தளர்ச்சி காரணமாக நா வரண்டு, தண்ணீர் தாகம் எடுத்தது.
குடிசை வாசலில் அமர்ந்தாள். ‘அம்மா, அம்மா’ என்று முணுமுணுத்தாள். பெற்றவளை நினைத்துப் புலம்பினாள்.
அப்போது வயது முதிர்ந்த பெண்மணி ஒருத்தி அவளிடம் வந்து ‘கூப்பிட்டியாமா?’ என்று கேட்டாள். ‘நான் என் தாயை நினைத்தேன் அம்மா,’ என்ற அமுதவல்லி, அந்த பெண்ணிடமிருந்த தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை வாங்கி, நீர் அருந்தி தாகம் தீர்த்துக்கொண்டாள். ‘‘நீ இருந்திட்டு போம்மா, நான் ஆத்துல குளிக்கப்போறேன்,’’ என்று கூறிவிட்டு அந்த பெண்மணி சென்றுவிட்டாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் அமுதவல்லிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கத்தினாள், கதறினாள், எழுந்து நின்றாள், பின்னர் உட்காருவாள். இப்படியே ஒரு மணி நேரம் தவித்த அமுதவல்லி குடிசைக்குள் புகுந்தாள். அங்கு சிவப்பு பட்டு அலங்காரத்தில் அம்மன் சிலை இருந்தது. அதன் பாதங்களை பற்றிக்கொண்டு, ‘‘தாயே என் வலியை போக்கு, துயரத்தை நீக்கு’’ என அழுது புலம்பினாள். சிலையில் தன் தலையை முட்டினாள்.அப்போது அவளது தாகம் தீர்த்த பெண் வந்து, அமுதவல்லியின் தோளை பிடித்து “கலங்காதே நானிருக்கிறேன்’’ என்று கூறி, சாணம் பூசப்பட்ட மண் தரையில் அமர்ந்தாள். ‘‘என் மடியில் தலை வைத்துக்கொள்” என்று கூறினாள். தலைவைத்த அமுதவல்லி, வலி மறந்தாள், தன்னை மறந்து தூங்கினாள். பிரசவம் நல்லபடியாக முடிந்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. பெற்ற மகளுக்கு தாயாய் இருந்து பணிவிடைகள் செய்தாள் அந்த பெண். வணிகம் முடிந்து வீடு திரும்பிய நமச்சிவாய செட்டியார், வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு துடித்தார். அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தார். போவோர், வருவோரிடம் கேட்டார். பயம் தொற்றிக்கொள்ள, நடையில் வேகம் கொடுத்தார். முத்தாலங்குறிச்சி வந்தவர். ஆற்றங்கரையில் நின்று கதறி அழுதார்.
அப்போது அங்கே ஒரு சிறுமி வந்து, “ உங்க மனைவி அந்த குடிசையில இருக்கிறாங்க போய் பாருங்க.” என்றாள். உடனே பரவசமானார் நமச்சிவாய செட்டியார். அந்த சிறுமிக்கு கண்ணீர் மல்க நன்றி சொல்லிவிட்டு குடிசைக்குள் நுழைந்தார். அங்கே, அமுதவல்லி தான் பெற்றெடுத்த குழந்தையுடன் கண்ணீர் வழிய அமர்ந்திருந்ததைக் கண்டார். கணவனிடம் நடந்ததை கூறினாள். செட்டியார் தனது வாரிசை எடுத்து முத்தமிட்டார். ‘‘சரி வா, வீட்டுக்கு போகலாம்,’’ என்று மனைவியை அழைத்தார். “கொஞ்சம் இருங்க, அந்த அம்மா வரட்டும், அவங்க கிட்ட சொல்லிட்டு போகலாம்” என்றாள் அமுதவல்லி. நேரம் கடந்தது. இரவானது. “சரி, இன்றிரவை இங்கேயே கழிப்போம். நாளை பொழுது விடிந்து செல்வோம்.
பச்சை பிள்ளயோட ராத்திரி போக வேண்டாம்” என்று தனது கணவனிடம் சொன்னாள் அமுதவல்லி. இரவு அங்கே தூங்கினர். அதிகாலை நேரம், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த செட்டியார் கனவில் வந்த குணவதி அம்மன், “உனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததும் நான், சிறுமியாய் வந்து உன் மனைவி இருக்கும் இடத்தை காட்டியதும் நான்தான். உன் குலம் தழைக்க வைப்பேன். வணிகம் சிறக்க வைப்பேன். எனக்கு இதே இடத்தில் கோயில் கட்டு” என்று கூறிச் சென்றாள். விழித்துப்பார்த்தார். கனவின் வந்த அதே நிற ஆடையில் அங்கிருந்த அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது! அமுதவல்லியும் எழுந்தாள். குழந்தையுடன் இருவரும் அம்மனை மனதார வணங்கினர்.
சூரிய ஒளி, அம்மன் சிலை மேல் பட்டது. அம்மன், அவர்களுக்கு காட்சி கொடுத்தாள். செட்டியார் கோயிலை கட்டினார். பிற்காலத்தில் கோயில் சிதைந்து போய்விட்டது. பின்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவராக குணவதியம்மன், அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறாள். இவ்வாலயத்தில் சங்கலி பூதத்தார், பைரவர், சுடலைமாடன், இசக்கியம்மன், பேச்சியம்மன், உச்சி மாகாளி, பெரிய மாடத்தி, மாடன், பத்திரகாளி, கருப்பசாமி உள்ளிட்ட காவல் தெய்வங்களும் உள்ளன. குழந்தை பேறு நல்லபடியாக நடக்க இந்த அம்மனை வேண்டிக்கொண்டால் எல்லாம் சிறப்புறும். மழலை செல்வம் வேண்டுவோர் இந்த அம்பாளை வந்து வணங்கி சென்றால் பலன் நிச்சயம் உண்டு...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment