நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை பூர்வீகமாகக் கொண்ட தடிவீரன்கோனார் மகன் ராமகிருஷ்ணன், அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ள கோபாலசமுத்திரம் என்ற ஊரில் பால் வியாபாரம் செய்து வந்தார். ஒருமுறை தனது குலதெய்வமான சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயிலுக்கு கொடை விழா காண குடும்பத்துடன் சென்றார். அப்போது அங்கு சாமியாடியவர், அவரைப் பார்த்து ‘‘இந்தாப்பா, நீ என்ன என்னை கண்டுக்காம இருக்கிற, நீ எனக்கு தனிக்கொடை கொடுக்கணும்,’’ என்று கூறினார். ‘‘நான் அந்தளவுக்கு வசதியோடு இல்ல, உன்னை வாரம் தவறாம வந்து வணங்கணும்னுதான் நினைக்கேன். தொழில முடக்கிட்டு வர முடியல, இதுல எங்கிருந்து கொடை கொடுக்க?’’ என்று பதில் கூறினார் ராமகிருஷ்ணன். உடனே, சாமியாடுபவர், ‘‘ம்.. ஓ...’’ என்று ஆதாளி போட்டுக்கொண்டு திருநீறு கொடுத்தார். வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் வழக்கம் போல் தனது பால் வியாபாரத்தை தொடர்ந்தார்.
21 நாள் கழித்து சாமவேளையில் அவர் கனவில் வந்த சுடலைமாடன், ‘‘நான் உன் இருப்பிடம் தேடி வருகிறேன். நீ வசிக்கிற ஊரிலேயே எனக்கு நிலையம் கொடுத்து கோயில் எழுப்பி பூஜித்து வா, உனது வாழ்வை வளமாக்குவேன். உன்னில் நான் வந்திறங்குவேன்,’’ என்றார். மறுநாள் ராமகிருஷ்ணன், தான் கனவில் கண்ட அந்த இடம் தேடினார். அது ஊரின் கிழக்கே மயானக் கரையோரம் இருக்கும் குளம் என்பது தெரியவந்தது. அந்தக் குளத்தின் தென்மேற்கில் ஒரு பகுதியை சுத்தம் செய்தார். பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை ஊரிலிருந்த சிலருடன், சுடலையின் தலைமைப்பதியான சீவலப்பேரிக்கு வந்தார். அங்கு மேளதாளம் இசைக்க, மகுடம் வாசிக்க, பூசாரி ராமலிங்கம், கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து ராமகிருஷ்ணனிடம் கொடுத்தனுப்பினார். ஏற்கனவே சுத்தம் செய்துவைத்திருந்த இடத்தில் பிடிமண் கொண்டு மண்பீடம் அமைத்து கோயில் கட்டி வழிபட்டனர்.
தனது வேலைகளுக்கிடையில் தினமும் இரண்டு வேளை கோயிலில் பூஜை செய்து வந்தார். நாளடைவில் மண் பீடங்கள் மாற்றப்பட்டு கற்சிலை பீடம் உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் பூசாரி ராமகிருஷ்ணன் மீது சுவாமி வந்திறங்கி வாக்கு தந்தார். அவர் வாக்குபோல நடக்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது. கல்லூர் அருகே, பழவூரைச் சேர்ந்த பண்டாரம் என்பவருக்கு 6 குழந்தைகளும் பிறந்து இறந்துவிட, 7வதாக பெண் குழந்தை பிறந்தது. அதுவும் மூச்சு, பேச்சின்றி வயிறு பெரிதாகி நெல்லையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இது முன்னோர்கள் செய்த பாவம் என்றனர் சிலர். மருத்துவரும் கைவிட்டுவிட்டதால் பண்டாரம், அவர் மனைவி மற்றும் உறவினர்கள் அழத்தொடங்கினர். அப்போது அங்கிருந்த ஒருவர், பண்டாரத்திடம், கோபால சமுத்திரத்தில் வீற்றிருக்கும் சுடலைமாடனைப் பற்றி கூற, உடனே கார் பிடித்து புறப்பட்டார் பண்டாரம். கோயிலில் ராமகிருஷ்ணன், சாமியின் முன்பு குழந்தையை படுக்க வைத்தார். பண்டாரம், வேதனை தாங்காமல், ‘‘சாமி, என் சொத்து, வீடு எல்லாத்தையும் சாமி பேருல எழுதி வச்சிரேன். அவரு என்குழந்தையை நல்லாக்கி தரட்டும்,’’ என்றார். அருள் வந்த ராமகிருஷ்ணன், ‘‘உன் நிலபுலன்கள் எனக்கு வேண்டாம். உன் மகள் உடல்நலம் பெறுவாள். வாரிசு தழைக்கும். எனக்கு கொடை விழா தோறும் பொங்கலிட்டு, கருங்கிடா பலி கொடு,’’ என்றார். பண்டாரம் ஒப்புதல் கொடுத்தார். சாமி திருநீறு போட்டார். சிறிது நேரத்தில் குழந்தை வீறிட்டு அழுதது. அதன் வீங்கிய வயிறு வற்றி அழகுடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்ந்தது. இன்றும் கொடை விழாவின் போது, பண்டாரம் குடும்பத்தினர் பொங்கலிட்டு, கருங்கிடா பலி கொடுக்கின்றனர்.
நீதிமானாக நின்றருளும் சுடலையின் அற்புதங்கள் இதுபோல ஏராளம். கொடை விழாவின்போது சுவாமிக்கு திரளசோறு கொடுக்கும் வினோத நிகழ்ச்சி பிற சுடலை கோயில்களைப் போலவே இங்கும் சிறப்பாக நடைபெறுகிறது. கோபால சமுத்திரம் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயிலில் பேச்சியம்மன், பிரம்மராட்சசி அம்மன், சுடலைமாடன் மூவரும் கிழக்கு பார்த்து நின்றபடி அருள் புரிகின்றனர். எதிரே மேற்கு பார்த்து புதியசாமியும், அவர் பின்னால் முண்டனும் நின்றிருக்கிறார்கள். கோயில் முகப்பில் விநாயகர். ஆல், அரசு, வேம்பு, தென்னை என சோலையாய் காட்சி தரும் இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் செவ்வாயன்று கொடை விழா நடைபெறுகிறது. திங்கட்கிழமை மாலை ஊருக்கு வடபுறம் ஓடும் தாமிர பரணி ஆற்றிலிருந்து கும்பம் எடுத்து மேளதாளம், இசை வாத்தியங்களை முழக்கியபடி வருகின்றனர்.
பின்னர் குடியழைப்பு நிகழ்ச்சி. தொடர்ந்து வில்லிசை - கிராம தெய்வங்களுக்கெல்லாம் தலைவனாக திகழும் சாஸ்தா பிறப்பு குறித்த கதைப்பாடல் நிகழ்ச்சி, தொடர்ந்து சுடலை கதை. காலை 6 மணிக்கு சூரிய உதயத்திற்கு பின் பால்குடம் மற்றும் நேர்ச்சை பொருள் எடுத்து வருதல் நடக்கிறது. அடுத்து சுவாமியின் அங்கியும், ஆபரணங்களும் கொண்டு வரும் நிகழ்ச்சி. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், அன்ன படைப்பும் நடைபெறுகின்றன. மதிய பூஜையில் சைவம் படைக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு தடியங்காய் பலி. தடியங்காயின் மீது ஒரு வாழைப்பழம், அதன் மேல் ஒரு தேங்காய், அதன் மேல் ஒரு முட்டை, அதன்மேல் ஒரு எலுமிச்சை, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட அவற்றை சாமியாடுபவர் வெட்ட 5 பொருட்களும் சம அளவில் இரண்டாகப் பிரிகின்றன! வியப்பான காட்சி இது. இரவு 12 மணிக்கு அசைவம் படைக்கப்படுகிறது.
பூஜையின்போது, மகுடம் வாசிக்கும் கனியான், மண்பானை ஒன்றில் தண்ணீருக்கு பதில் பால் ஊற்றி, பச்சரிசிப் பொங்கல் வைக்கிறார். அந்த சாதத்தை, சுவாமி சந்நதி முன்பு பரப்பப்பட்டுள்ள 21 இலைகளில் வைக்கிறார். மண் பாத்திரம் ஒன்றில் 3 உருண்டையும், ஒரு இலையில் 3 உருண்டையும் வைக்கிறார். பின்னர் வலது கையைக் கீறிக்கொண்டு 21 இலையில் தலா 3 சொட்டு ரத்தம் என்ற வகையில் 63 சொட்டு ரத்தம் விடுகிறார். அதோடு ஆட்டுக்குட்டி, பன்றிக்குட்டி, சேவல் ஆகியவற்றின் ரத்தமும் விடப்படுகிறது. பின்னர் அதை 6 உருண்டையாக உருட்டி மண் பாத்திரத்தில் வைத்து மயானத்துக்கு சாமியாடுபவரும், கனியானும் சுவாமியின் அருளோடு, தீப்பந்தமும், அஞ்சுமணி வல்லயமும் ஏந்திச் செல்கின்றனர். மயானம் சென்ற பின்னர் தீப்பந்தத்தை அணைத்து விடுகின்றனர்.
சோற்றைக் கையில் வைத்துக்கொண்டு சுடலையை பெயர் கூறி அழைக்கின்றனர். பின்னர் மேல்நோக்கி வீசி எறியப்படுகிறது. ஆனால், அது கீழே விழுவதில்லை. தொடர்ந்து சாமியாடுபவர் அங்கே எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் ஏதாவது ஒரு பகுதியை வாயில் கவ்வியபடி கோயிலுக்குள் வருவார். சிறிதுநேரம் ஆடியபின், முண்டன் முன்னிருக்கும் பரண் மேல் நின்று ஆடு, பன்றி, கோழி பலிகளை ஏற்கிறார். பின்னர் நீராடுகிறார். ஈரம் சொட்ட சொட்ட நின்றபடி, பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறி திருநீறு வழங்குகிறார். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு சீவலப்பேரி சுடுகாட்டில் இருந்து எடுத்து வரப்படுகிறது.
இந்த கோயில் நெல்லை சந்திப்பு-அம்பா சமுத்திரம் சாலையில் 15 கி.மீ. தொலைவிலுள்ள கோபாலசமுத்திரத்தில் அமைந்துள்ளது. பிராஞ்சேரி என்னும் இடத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது...
நன்றி
- சு.இளம்கலைமாறன்
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment