தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் கடல் கரையோரம் அமர்ந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வு அருள்கிறாள் முத்தாரம்மன். சம்பு என்ற தீவுக்கப்பால் ஏழு கடல் தாண்டி, கமலை என்ற சுனை அருகே மாணிக்கத்தால் ஆன புற்று ஒன்று இருந்தது. அதில் ஐந்து தலை நாகம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந் நாகம் பல காலம் சேமித்து வைத்த விஷமானது ஒரு அமுதக் கலசமாக மாறியிருந்தது. ஒரு நாள் அந்த நாகம் தன் வயிற்றிலிருந்த கலசத்தை ஈன்றெடுத்தது. விஷத்தன்மை கொண்ட அந்த ஐந்து தலை நாகம் ஈன்றெடுத்த கலசத்திலிருந்து ஏழு அரக்கியர்கள் தோன்றினர்.
அதில் மூன்று அரக்கியர்கள் பெற்றெடுத்த நீலன், குமுதன், ஆதித்தன் என்ற மூன்று குழந்தைகளையும் அவர்கள் வளர்த்து வந்தனர். குழந்தைகள் துள்ளி விளையாடும் பருவம் வந்த பின், அரக்கியர்கள் ஏழு பேரும் மூன்று குழந்தைகளையும் வனத்தில் விட்டுச்சென்றனர்.
மூன்று குழந்தைகளும் வனத்தில் அநாதைகளாகத் திரிந்து கொண்டிருந்தனர். அவ்வனத்தில் சக்திமுனி என்பவர் யாகம் செய்து கொண்டிருந்தார். அவர் செய்த யாகத்தில் வெளிப்பட்ட புகை விண்ணுலகத்தையே திக்குமுக்காடச் செய்தது. தேவர்களால் அந்தப்புகையைத் தாங்க முடியவில்லை. அவர்கள் அன்னை சக்தியிடம் முறையிட, பார்வதி தேவி வனத்திற்கு இறங்கி வந்தாள். அந்த யாகத்தையும் அதில் வெளிப்படும் புகையையும் அடக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டாள் தேவி. அப்போது பார்வதியின் நெற்றியில் வியர்வை அரும்பியது. அதை தனது வலக்கரத்தின் விரல்களால் வழித்துக் கீழே விட்டாள். அந்த வியர்வை முத்து, முத்தாக பூமியில் விழுந்தது. அதிலிருந்து முத்தாரம்மன் தோன்றினாள். யாகம் நிறைவடைந்தது. புகை விலகியது. சக்தி கயிலாயம் புறப்படலானாள். அப்போது முத்தாரம்மன் தானும் உடன் வருவதாக கூற, சக்தி, அந்த முத்தாரம்மனை, அநாதையாய் காட்டில் திரியும் அரக்கியர்கள் பெற்ற மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கும்படி கட்டளையிட்டு அனுப்பினாள்.
பார்வதி தேவியின் கட்டளையின்படி முத்தாரம்மன் நீலன், குமுதன், ஆதித்தன் ஆகிய மூன்று குழந்தைகளுக்கும் தாயாக இருந்து வளர்த்து வந்தாள். அவர்களுக்காக, தனது சேனைப்படைகளைக் கொண்டு காண்டாபுரம் என்ற வனத்தை அழித்து அதில் முப்புர கோட்டை ஒன்றை முத்தாரம்மன் அமைத்தாள். அந்தக்கோட்டை முக்கோண வடிவில் அமைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி, வெங்கலம் ஆகிய மூன்று உலோகங்களால் முப்புர வாயிலுடன் அமைந்த அந்தக் கோட்டையில் நடுவண்ணமாக அன்னை முத்தாரம்மன் அமர்ந்திருந்தாள். முப்புர கோட்டையில் அமர்ந்ததால் அன்னைக்கு திரிபுர சுந்தரி என்ற நாமம் உருவானது. பெரியவர்களான வளர்ப்பு மைந்தர்கள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்தாள் முத்தாரம்மன். திருமணமான அவர்களுக்கு நீலனுக்கு சந்தனகுமரன், குமுதனுக்கு முத்துதம்பி, ஆதித்தனுக்கு முத்துக்குமரன் என 3 பேரன்களை கண்ட முத்தாரம்மன் அவர்களை பாசத்தோடு வளர்த்து வந்தாள். முத்தாரம்மனின் மூன்று பேரன்களும் வளர்ந்து பெரியவர்களாயினர்.
தங்களின் செல்வாக்கு, சக்தி அனைத்தும் அவர்களுக்கு புரியத் தொடங்கியதும் யாருக்கும் பயப்படாமல் செயல்பட்டனர். ‘அரக்கத்’தனமான குணம் அவர்களிடம் மெல்ல மெல்ல மேலோங்கியது. கோட்டை கட்டி வாழ்ந்தாலும் குலக்குணம் மாறாது என்பார்கள். அது போல் அரக்க வம்சத்தில் பிறந்ததன் விளைவால் கொடூர குணம் அவர்களிடையே தோன்றியது. தேவர்களை வெறுக்கத் தொடங்கினர். தேவர்களின் யாகம், அவர்களின் போக்கு எல்லாவற்றையும் எதிர்த்தனர். மூன்று பேரின் தகப்பன்களும் தம் மக்களுக்கு உதவினர். தேவர்களால் முத்தாரம்மன் பேரப்பிள்ளைகளின் செயல்களைத் தாங்க முடியவில்லை. திருமாலிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். திருமால் மூவரையும் அழிக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. இறுதியில் திருமால், தேவர்களை சிவனிடம் முறையிடுமாறு கூறினார். தேவர்கள் ஒன்று கூடி சிவனிடம் சென்று முறையிட்டார்கள். தேவர்களுக்கு அபயம் அளிப்பதாக சிவபெருமானும் பதிலளித்தார். சிவபக்தி கொண்ட முத்தாரம்மன் பேரன்கள் சிவபூஜை செய்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து அவர்களை அழிக்க சிவன் வந்தார். சிவனை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் முத்தாரம்மனும், அவளது மகன்கள், பேரன்கள் அனைவரும் சிவனின் காலில் விழுந்து வணங்கினர். அப்போது சிவன் கையிலிருந்த சூலத்தைக் கீழே போட்டார். பின்னர் புன்னகைத்தார். அனலான அய்யன் பார்வை பட்டு கனல் பரவி முப்புரமும் எரிந்து சாம்பலானது. அதில் முத்தாரம்மன் தவிர மற்றவர்கள் எரிந்து சாம்பலாயினர். முத்தாரம்மன் கடும் கோபம் கொண்டு தம் மக்களான நீலன், குமுதன், ஆதித்தன் மூவரையும் உயிர்த்தெழச் செய்யுமாறு வேண்டினாள். சிவனும் மனமிறங்கி அம்மூவரையும் உயிர்த்தெழ செய்தார்.
பின்னர் முத்தாரம்மன் கேட்டதற்காக வரங்கள் பல அளித்தும், தன் நாமம் சொல்லி அழைக்கும் போது, உடனே அவ்விடம் தான் எழுந்தருள்வதாகவும் கூறி தென்திசை அனுப்பி வைத்தார். வரங்கள் பெற்ற முத்தாரம்மன். பொதிகை மலைக்கு வந்தாள்.
அந்த சமயம் கயிலாயத்தில் சிவபெருமானும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தேறியது. அப்போது வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்திட, உடனே சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசைக்கு அனுப்பி வைத்தார். அவ்வாறு தென்திசை வந்த அகத்திய முனிவர் பொதிகை மலையில் வாசம் செய்தார். ஒரு முறை அகத்தியர் திருச்சிரலைவாய் (திருச்செந்தூர்) நகருக்கு யாத்திரை மேற்கொண்டார். செல்லும் வழியில் வீரைவளநாடு (குலசேகரப்பட்டினம்) என்ற பகுதியில் (தற்போதைய குலசேகரப்பட்டினம் அப்போது வனமாக இருந்தது.) மரச்சோலையில் அவர் சீடர்களோடு ஓய்வு எடுத்தார். அந்த நேரம் அவ்வழியாக வந்த வரமுனிவர், அகத்தியரை வரவேற்கவில்லை, மாறாக அவரை அலட்சியம் செய்ததோடு அவரது சீடர்களை அவமதித்தார். இதை அறிந்த அகத்தியர், அவர் மேல் சினம் கொண்டு, என்னை அவமதித்த நீ அசுர குணம் கொண்டு, உனது தீ வினையால் பலரால் அவமதிக்கப்படுவாய் என்று சபித்தார். சாபத்தால் அரக்க குணம் பெற்ற வரமுனி, கண்ணில் பட்ட உயிர்கள் உள்ளிட்ட பூலோக வாசிகளை பல வகைகளில் துன்புறுத்தினார்.
இதையறிந்த அகத்தியர் சிவனிடம் முறையிட, சிவபெருமான் முத்தாரம்மனை அனுப்பி வைத்தார். முத்தாரம்மன் அரக்ககுணம் மேலோங்கியிருந்த வரமுனியை வதம் செய்தாள். வரமுனி ரிஷியாக இருந்ததாலும் வேதங்கள் கற்றுணர்ந்த அந்தணர் என்பதாலும் அவரை வதம் செய்ததால் முத்தாரம்மனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. தோஷம் விலக முத்தாரம்மன் கடற்கரையோரம் இருந்த வனத்தில் சிவனை நோக்கி தவமிருந்தாள். முத்தாரம்மனின் தவத்தை மெச்சி சிவன் தோன்றினார். அதுமட்டுமன்றி தேவியின் வேண்டுகோளுக்கிணங்கிய சிவன், ஒண்ணே முக்கால் நாழிகை நேரம் சக்தியின் வியர்வை துளியில் பிறந்த முத்தாரம்மனுடன் ஒரு சேர அமர்ந்தார். இதனால் மனம் மகிழ்ந்தார் முத்தாரம்மன். முத்தாரம்மன், ‘‘என் பக்தர்களுக்காக இங்கு என்னோடு இணைந்து காட்சி கொடுக்க வேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டாள். அதன் காரணமாக இத்தலத்தில் சிவன் லிங்க வடிவம் இல்லாமல் அருவம் உருவமாக எழுந்தருளியதால் ஞானமூர்த்தீஸ்வரர் என்ற நாமத்துடன் முத்தாரம்மையோடு வீற்றிருக்கிறார். இது நடந்த பின் முத்தாரம்மன் வீரைவளநாடு (தற்போதைய குலசேகரப்பட்டினத்தில்) ஓங்கி உயர்ந்த புற்றாக வளர்ந்து நின்றாள்.
பிற்காலத்தில் இந்த கடற்கரை வனம் குலசேகரப்பாண்டியன் ஆட்சிக்காலத்தில் துறைமுகமாக விளங்கியது. இதனால் மன்னனின் பெயரால் குலசேகரப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த புற்றின் வழியாக சாலை அமைக்கும் பணி நடந்தது. புற்றை இடிக்கவும் அதனை ஒட்டி நின்ற மரத்தை வெட்டவும் பணியாளர்கள் அங்கு வந்தனர். மரத்தின் கிளையை வெட்டியவுடன் ரத்தம் வடிந்தது. எந்த கிளையை வெட்டினாலும் ரத்தம் பீறிட்டது. சற்று நேரத்தில் மரத்தின் கீழிருந்த புற்றின் மேல் சுவாமியின் முகமும், அன்னையின் முகமும் தெரிந்தன. அனைவரும் பயபக்தியுடன் கை தொழுதனர். பின்னர் அந்த மரத்தையும் வெட்டாமல், புற்றையும் இடிக்காமல் சாலை அமைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் அந்த புற்றுக்கு பால் ஊற்றி வணங்கி வந்தனர். அப்போது மரவேலை செய்து வந்த ஒருவரும் தினமும் புற்றை வழிபட்டு வந்தார்.
நாட்கள் செல்ல அந்த புற்றுக்கு பூஜைகள் செய்யலானார். ஒருநாள் அவரது கனவில் வந்த முத்தாரம்மன், ‘எனக்கும் சுவாமிக்கும் சிலை செய்து வைத்திருக்கிறான் எனது பக்தன். நான் சொல்லும் அடையாளத்தை சொல்லி அவனிடம் சென்று கேள். பொன், பொருள் எதுவும் கேட்காமல் சிலையை தந்து, உன்னுடன் வந்து நிலையம் கொள்ள செய்வான். அதன்பின் என்னை பூஜித்துவா, உன்னையும், என்னை முழுமையாக நம்பி வழிபடும் அன்பர்களுக்கும் எல்லா வளமும், நலமும் அளித்து காப்பேன்’ என்றாள். தன் கனவை ஊர்ப்பிரமுகர்களிடம் அவர் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்துள்ளது மயிலாடி. இங்கு பரந்த கானகத்தில் பெரிய பெரிய பாறைகள் அமைந்திருந்தன. அதிலிருந்து சிலைகளை செய்து உள்ளூர், வெளியூர்களுக்கு சிலர் அனுப்பி வந்தனர். அந்த பணியின் காரணமாக அங்கேயே குடில் அமைத்து வாழ்ந்து வந்தனர்.
அதே பணியில் இருந்தவர்கள் தங்களது விருப்பப்படி வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். ‘சக்தி வழிபாட்டில் தீவிரமாக இருந்தார் சுப்பையா என்பவர். அவரது கனவில் சிம்ம வாகினியாக வந்த முத்தாரம்மன், தான் குலசேகரப்பட்டினத்தில் இருப்பதாகவும், தனக்கு அங்கே கோயில் கட்ட வேண்டும் என்றும், பஞ்சலிங்கம் தோன்றிய பகுதியிலிருந்து கல் எடுத்து கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் வைத்து சிலைவடித்து, வரும் பௌர்ணமி அன்று உன்னைத் தேடி வரும் 7 நபர்களிடம் கொடுத்து அனுப்பு. நாளை உனது கனவில் சுவாமியும், நானும் தோன்றுவோம் அந்த உருவத்தை மனதில் வைத்து சிலை வடித்துக்கொள்’ என்றாள். அதன்படி மறுநாள் கனவில் சுவாமியும், அம்பாளும் காட்சி கொடுக்க அதே உருவில் சிலை வடித்தார் சுப்பையா ஸ்தபதி. பௌர்ணமி அன்று குலசேகரப்பட்டினத்தில் இருந்து வந்த ஏழு பேர்களிடம் சிலையை கொடுத்து அனுப்பினார்.
அங்கு ஓலைக்கூரையால் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் மட்டுமே பூஜை செய்துவந்தனர். அப்பகுதியை சுற்றியுள்ள பதினாறு கிராமத்திலும் நிலங்கள் வைத்திருந்த பண்ணையார், இதைக் கேள்விப்பட்டு வந்தார். ‘வெள்ளாமை குறைச்சலாக இருக்கு, உன் சாமிக்கு சக்தியிருந்தா அதை பெருக்கி தர வை, நீ கேட்கிறத நான் செய்யுறேன்,’ என்று அவர் கூற, பூசாரி, திருநீறு கொடுத்து, ‘பண்ணையார் ஐயா, இந்த முறை வெள்ளாமை சிறந்து விளங்கும், ஆத்தா, முத்தாரம்மனுக்கு கோயில் கட்ட உதவி செய்யுங்க,’ என்றார். பண்ணையாரும் சம்மதித்தார். வெள்ளாமை சிறந்தது. பண்ணையார் மனம் குளிர்ந்தது. அவர் உதவியுடன் கோயில் கட்டப்பட்டது. கோயிலில் ஒருநாள் பூஜை நடந்து கொண்டிருந்த நேரம் ஒரு குறத்தி பெண் கோயில் வாசலில் வந்து நின்றாள்.
பண்ணையார் தனது மீசையை முறுக்கிய படி, ‘நான் கோயிலுக்கு வரும்போது கண்ட நபர்களை எல்லாம் அனுமதிக்கக் கூடாது’ என்று பூசாரியிடம் வற்புறுத்த, ‘ஐயா, அம்மாவ பார்க்க வருகிறவர்கள தடுக்க, எனக்கு அதிகாரம் இல்லை,’ என்றார்.‘என்னையே எதிர்த்து பேசுகிறாயா!’ என்று கேட்டு சினம் பொங்க சென்று விட்டார். மறுநாள் காலையில் பண்ணையாரின் கன்னம் வீங்கியது. வலியால் துடித்தார். உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தார். முத்தாரம்மனை வேண்டினார். அன்றிரவு அவரது கனவில் தோன்றி, ‘உன்நிலை தாழ்த்தி, கோலத்தை மாற்றி இன்றிலிருந்து எட்டாவது நாள் என் சந்நதிக்கு வா, உன் பிணியை தீர்க்கிறேன்,’ என்றாள். அதன்படி, அந்த பண்ணையார், தனது கோலத்தை குறவர் போல மாற்றிக்கொண்டு, எட்டுநாள் உணவு உண்ண வாய் திறக்க முடியாமல் அவதிப்பட்டவர், நடக்க முடியாமல் நடந்து அன்னையின் சந்நதி வர, கோயில் சிலையில் அம்மன் சிரித்தபடி காட்சி கொடுத்தார்.
அவருக்கு மட்டுமே தெரிந்ததால் சந்நதியிலேயே அம்மா, அம்மா என்று தன்னையறியாமல் கத்தினார். அப்போது குரங்கு ஒன்று வந்து, அவரது கையில் வாழைப்பழத்தை போட, அதை உண்ட அவர் மறு கணமே உடல்நிலை தேறினார். தவறை உணர்ந்து அம்மனிடம் மன்னிப்பு கேட்டார். அன்னையின் திருவிளையாடல் பலருக்கும் தெரியவர, நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமானது. பண்ணையார் வேஷம் போட்டு வந்ததால் அன்னை தரிசனம் கொடுத்து அருள்புரிந்தார் என்பதற்காக பலரும் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேஷம் கட்டி வந்தனர். அதன் பின்னரே பக்தர்கள் வேஷம் கட்டும் நிகழ்வு தொடங்கியது. தன்நிலை தாழ்த்தி வேஷமிட்டு வரும் அடியவர்களுக்கு அவர்கள் வாழ்வின் நிலையை உயர்த்தி வைக்கிறாள் அன்னை முத்தாரம்மன். பண்ணையார் வழி வந்த சேது என்பவரும் அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தசரா விழாவை இவ்வாலயத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இப்பகுதியிலுள்ளவர்கள் வெளியூர்களில் குடியேற, அங்கும் இங்கிருந்து பிடிமண் கொண்டுபோய் அம்மனுக்கு ஆலயங்கள் உருவாயின. இவ்வாலயத்தை நிறுவியவர் இங்கே ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படுகிறது. முத்தாரம்மன் கோயிலில் உள்ள விக்கிரங்களை 1934ம் வருடம் அய்யாத்துரை கவிராயர் பீடம் அமைத்து அனுஷ நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அய்யாத்துரை கவிராயரின் ஜீவசமாதி அருகே அவரது சகோதரர்கள் பால், முத்தையன் இருவரின் ஜீவசமாதிகளும் உள்ளன. அய்யாத்துரை கவிராயர் ஜீவசமாதியை அடைவதற்கு முன் தனது உறவினர் கந்தனிடம் பூஜைப்பணியை ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. கோயிலில் மூலவராக ஞானமூர்த்தீஸ்வரரும், முத்தாரம்மனும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இக்கோயிலில் தசரா, முக்கிய விழாவாகும். தசரா என்றால் பத்து இரவுகள் என்று பொருள். விழா தொடங்கி பத்தாவது நாள் இரவு அசுரனை, அன்னை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அம்மனை வேண்டி வேஷம் கட்ட நினைப்பவர்கள் முதலில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தசரா விழாவிற்கு வந்து அம்மனை தரிசிக்க வேண்டும். பின்னர் அம்மன் சந்நதியில் பூ கட்டி வைத்து பார்ப்பார்கள், அதில் சிவப்பு பூ விழுந்தால் அம்மன் உத்தரவு கொடுத்ததாக கருதி வேஷம் கட்டுவார்கள். அதுவும் பூசாரி சொல்லும் வேஷத்தையே கட்ட வேண்டும். காளி, சுடலைமாடன், ஆஞ்சநேயர் வேஷம் கட்டும் நபர்கள், காப்புகட்டி 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். மற்ற வேஷம் கட்டுபவர்களுக்கு 10 நாட்கள். காளி வேஷம் கட்ட 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை. இக்கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால் சிவன் லிங்கமல்லாத வேறு உரு கொண்டிருப்பது. அதோடு, சிவனும், முத்தாரம்மனும் வடக்கு நோக்கி காட்சி தருவது. ஒரே நேரத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் பூஜை நடக்கிறது. கோயிலின் தல விருட்சம், வேப்பமரம்.
இக்கோயில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி சாலையில் 16 கி.மீ தூரத்தில் உள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment