நெல்லைச் சீமையின் நிலக்கிழார்களில் ஒருவரான காசி விஸ்வநாதர் வீட்டு வேலைக்காரன் கருப்பன். சிந்து பூந்துறையிலுள்ள செல்வி அம்மன் கோயிலுக்கு செல்லும் விஸ்வநாதருக்கு கருப்பன் வண்டி ஓட்டிச் செல்வான். சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக கருப்பன் கோயிலுக்கு வெளியேதான் நிற்கவேண்டும். அங்கிருந்து சந்நதியைப் பார்க்கும் அவனுக்கு அம்மன் சிலை தென்படவில்லை. காசி விஸ்வநாதர் குடும்பத்தாரும், உறவினர்களும் அம்மன் சந்நதியை சூழ்ந்து நின்று வணங்க பூஜை நடைபெற்றது. கோயிலின் வெளியே நின்ற கருப்பன், ‘‘தாயே, நீ சின்னஞ்சிறு பெண்ணாய், பாவாடை சட்டையில் சிரித்த முகத்தோடு வண்டிப் பாதையில் நின்று வண்டியை நிறுத்தச் சொல்லி கையசைத்த காட்சி, என் கண்ணுக்குள் இப்போதும் நிலைத்திருக்கிறது. ஆத்தா, உன் முகம் காண வந்தேன். முடியவில்லை. வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் காட்சி கொடுப்பாயோ, என் போன்ற ஏழைகள் உன்னை காண முடியாதோ’’ என கண்ணீர் சிந்தி மனம் உருகி வேண்டினான்.
பூஜை முடிந்தது. அம்மன் அருள் வந்து ஆடுபவர், சந்நதி முன்னே கூடியிருந்தவர்களின் ஒவ்வொருவர் முகத்திலும் தண்ணீர் வாரி இறைத்து திருநீறு பூசிக் கொண்டிருந்தார். அம்பாள் தரிசனம் கிட்டாத கருப்பன், வருத்தத்துடன் தன் வீட்டுக்குச் சென்றான். அன்றிரவு உணவருந்தாமலே படுக்கைக்கு சென்றான். அவனது கனவில் தோன்றினாள், அன்னை ஆதிபரா சக்தியின் வடிவமான, அஷ்ட காளியரில் ஒருவரான செல்வி அம்மன். ‘‘கருப்பா, என்னை பார்க்க முடியாமல் மனம் வருந்தினாய், நான், நாளை காலை வண்ணான்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் மூன்று அத்திமரங்கள் ஒன்றாக நிற்கும் கசத்தில் (ஆழமான பகுதி) இருப்பேன். வந்து பார்,’’ என்றாள். உடனே எழுந்த கருப்பன், ‘ஆற்றுக்கு போகவேண்டும். ஆத்தா என்கிட்ட பேசிட்டா, என் கனவில வந்திட்டா,’ என்று ஆனந்தம் மிக, என்ன செய்வதென்று தெரியாமல் சந்தோஷ களிப்பில் திகழ்ந்தான். பொழுது புலர்ந்தது.
ஆற்றங்கரையை நோக்கி ஓடினான். அம்பாளை பார்க்கும் முன் சுத்தமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு, ஆற்றில் நீராடினான். ஈரத்துணியோடு அம்பாளை பார்க்க தயாரானான். கசத்தில் இறங்க அச்சமாக இருந்தது. ஆனாலும், வலையைக் கொண்டுவந்து கசத்தில் வீசினான். வலையில் சிக்கியது அழகான அம்மன் சிலை! அந்த சிலையை அதே கரையில் வைத்து ஓலையால் குடிசை அமைத்து வழிபட்டான். அவனது நிலை உயர, கோயிலும் உயர்ந்தது. ஆனாலும் பெருங்கோயிலாக மாறவில்லை. அவனது காலத்திற்குப் பிறகு கோயில் பராமரிப்பு இல்லாமல் போக, அதே பகுதியில் வசித்த மற்றொருவர் கனவில் தோன்றிய அம்மன், தான் வந்ததை கூறி, தனக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் நலமும் வளமும் அளிப்பதாக கூறினாள். அதன்பிறகு அவர் தான் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்களோடு இணைந்து கோயிலில் தொடர்ந்து பூஜை செய்து வந்தார்.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, மிகப்பெரிய ஆறு என்பதால், அந்தப் பெரியாற்றில் கண்டெடுக்கப்பட்ட செல்வி அம்மன், பேராற்று செல்வி என்றும் பேராத்து செல்வி அம்மன் என்றும் அழைக்கப்பட்டாள். அது தற்போது பேராச்சியம்மன் என்று மருவிவிட்டது. மூலவர் பேராத்து செல்வி அம்மன் வலது காலை குத்துக்கால் இட்டு, இடது காலை தொங்கவிட்டு எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறாள். சுயம்புவாக தோன்றிய லிங்கேஸ்வரர், கன்னிமூலையில் இரட்டை விநாயகர், சங்கிலி பூதத்தார், நல்லமாடன், கால பைரவர், தளவாய்மாடன், பேச்சி, சுடலைமாடன் ஆகிய தெய்வங்கள், உடன் அருள்பாலிக்கின்றனர். அம்பாள் முன் வேதாளமும், பலி பீடமும் உள்ளன. சித்திரை மாதம் 3ம் செவ்வாய் கொடை விழா நடைபெறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒருமுறை கொடை விழா நடந்து கொண்டிருக்கும்போது, சுற்றுலா மாளிகையில் ஒய்வெடுத்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர், ‘தூங்கவிடாமல் என்ன சத்தம்?’ என்று சிப்பாயிடம் கேட்க, சிப்பாய், பேராத்து செல்வி அம்மனுக்கு கோயில் கொடை விழா நடப்பதாக கூறினார்.
அந்த அதிகாரி, சிப்பாயை கோயிலுக்கு அனுப்பி, மேளதாளங்கள் அடிப்பதை உடனே நிறுத்துமாறும், கொடை விழா நடத்துவதற்கு தடை விதித்திருப்பதாகக் கூறுமாறும் சொல்லி அனுப்பினார். சிப்பாய் நடுங்கினான். ‘‘அய்யா, அது சக்தி வாய்ந்த தெய்வம். அம்மன் கிட்ட விளையாடப்புடாது,’’ என்றான். ‘‘ஏய், மேன், உனக்கு நான் அதிகாரியா, இல்லே அந்த அம்மனா? நான் சொல்றதை செய் மேன்,’’ என்று சினத்துடன் கூறினார். வேறுவழியில்லாமல் சிப்பாய் கோயிலுக்கு வந்து விழா கமிட்டி நிர்வாகிகளிடம் எச்சரித்தான். உடனே கொடைவிழா நடுநிசியில், அரைகுறையாக, நின்றது. மறுநாள் காலையில் அதிகாரிக்குக் கண்கள் தெரியவில்லை. கத்தினார், கதறினார். அருகிலிருந்த சிப்பாய், ‘‘துரை, உடனே கோயிலுக்கு வாங்க, எல்லாத்துக்கும் அந்த அம்மன்தான் காரணம்,’’ என்று சொல்லி அழைத்து வந்தான். அதிகாரி தவறை உணர்ந்து விழா நடத்த அனுமதித்தார்.
பார்வையற்றவராய், சிப்பாய் உதவியுடன் கோயிலில் நின்று கொண்டிருந்தார். இரவில் நின்ற விழா, காலையில் தொடர்ந்தது. அம்மன் அருள் வந்து ஆடியவர், ‘துரையை எட்டாம் கொடைக்கு மரகத கண்மலர் எனக்கு வாங்கி வைக்கச்சொல்; அதன்பின் அவனுக்கு கண் பார்வை வரும்’ என்றார். அதன்படி எட்டாம் கொடைக்கு மரகத கண்மலர்கள் இரண்டு வாங்கி அதிகாரி கோயிலுக்குக் கொடுத்தார். பூஜையின்போது அந்த கண்மலர்கள் அம்பாளுக்கு சாத்தப்பட்டன. அதேநேரம் அதிகாரிக்கு பார்வை மீண்டது. அதிகாரி ஆனந்தம் கொண்டார். மனம் உருகி சிரமேல் கரம் கூப்பி வணங்கினார். அந்த மரகத கண்மலர்கள் தற்போதும் அம்பாளுக்கு சாத்தப்படுகிறது. செங்கோட்டையில் இருந்த ஆங்கிலேய பிரபு ஒருவர் தொழுநோயால் அவதிப்பட்டார். அம்பாள் அருளால் பார்வை மீண்ட அதிகாரி இவரை சந்தித்து, பேராத்து அம்மனின் பெருமைகளை எடுத்துக்கூறினார்.
பிரபு தனக்கும் நோய் தீரவேண்டும் என்று பேராத்து செல்வி அம்மன் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டார். அவர் தினமும் காலை, மாலை இருவேளை தாமிரபரணி ஆற்றில் குளித்து அம்பாளை பூஜித்து வந்ததன் பலனாக 108வது நாள் அவருக்கு குஷ்ட நோய் முற்றிலுமாக நீங்கியது. அவர் அம்பாளுக்கு தனது சொந்த செலவில் கொடை விழா நடத்தினார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி குட்டந்துறை என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்ககிழமை நடைபெறும் முளைப்பாரி திருவிழாவும், புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழாவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தீராத நோய்களை தீர்த்து பேரருள் புரிகிறாள் பேராத்து செல்வி அம்மன். இக்கோயில் நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது.
நன்றி
- சு.இளம் கலைமாறன்
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment