Monday, 28 May 2018

செண்பகவல்லி அம்மன் வரலாறு

நாகக்கன்னிக்குப் பிறந்த சக்தியின் அம்சமான அஷ்ட காளியரில் ஆறாமவள் செண்பகவல்லி என்ற செல்வியம்மன். வடக்கு வாசல் செல்வி, செல்வியம்மன் மற்றும் பல்வேறு நாமங்களில் பல்வேறு பகுதிகளில் இவள் அருள்பாலிக்கிறாள். அஷ்ட காளியரில் பொறுமையானவளாய், ஆக்ரோஷம் கொண்டால் எளிதில் தணியாதவளாய் திகழ்பவள். பொதிகை மலையிலிருந்து இறங்கி, குற்றாலநாதர் கோயிலுக்கு வந்தாள். நந்திதேவன் உள்ளே அனுமதிக்கவில்லை. உடனே கொடி மரத்தில் வந்தமர்ந்தாள். அதன்பின் குற்றாலநாதர் கோயிலில் திருவிழா நடக்கும்போதெல்லாம் கொடியேற்றம் அன்று வாலிப வயதுடைய யாராவது ஒருவர் மாண்டு போவது, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தது. உடனே கேரள நம்பூதிரிகள் வந்து பார்த்ததில் கொடி மரத்தில் இருக்கும் செல்வியம்மன்தான் கொடியேற்றத்தின்போது நடக்கும் துர்மரணங்களுக்கு காரணம் எனத் தெரியவந்தது.

அவர்களது ஆலோசனைப்படி ஒரு மந்திரவாதியை வரவழைத்து செல்வியம்மனை மந்திரத்தால் மதிமயக்கி பொன்னாலான செம்பில் அடைத்து குற்றால மலையில் செண்பக மரங்கள் அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருந்த பகுதியில் குழிதோண்டிப் புதைத்தனர். ஒரு காலகட்டத்தில் மழை அதிகமாக பெய்ததால், குழியில் புதைக்கப்பட்ட பொற்செம்பு, மேலே வந்தது. அப்போது செங்கோட்டையை சேர்ந்த மூப்பனார் வகையறா ஒருவர் தனது வீட்டுக்கு நிலை விடுவதற்காக மரம் வெட்ட கூலியாட்களுடன் செண்பக மலைக்கு வந்தார். அவர் அந்த செம்பை பார்த்து எடுத்துத் திறக்க, மறுகணமே செம்பு மேலே பறந்து, மர உச்சியில் சிக்கிக் கொண்டது. கூடவே அசரீரி கேட்டது: ‘எனக்கு இவ்விடத்தில் கோயில் எழுப்பு. உனக்கு வேண்டிய செல்வங்களை நான் தருவேன்.’ அதன்படி அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

ஒருநாள் பூஜையில் அம்மன் அருள் வந்து ஆடியவர் தனது பெயர் செல்வி என்றும், அஷ்ட காளியரில் ஒருவர் என்றும் தான் வந்ததை கூறி, இதை எனது பூஜையின் போது கதைப்பாடலாக ஒருவர் பாட வேண்டும் என்றும் கூறினார். பின்னர் அவ்வாறே நடைபெற்றது. செண்பக மரங்கள் அடர்ந்த சோலையில் கோயில் கொண்டதால், செண்பககாட்டு செல்வி அம்மன் என்றும், செண்பகமலை செல்வி அம்மன் என்றும் அழைக்கப்பட்டாள். நாளடைவில் செண்பகசெல்லி, செண்பகவல்லி என்றானாள். கேரளத்துக்காரர்கள் வருகைக்கு பின்னர் செண்பகாதேவி என்று அழைக்கப்படலானாள். நெல்லைச் சீமையில் அப்போது வாழ்ந்து வந்த செல்வச் சீமான்களில் ஒருவரான காசி விஸ்வநாதபிள்ளை, தான் கட்டிய புதுவீட்டுக்கு கிரகப் பிரவேசம் நடத்தியபோது புண்ணியதல தீர்த்தங்கள் கொண்டு வந்து தெளிக்க ஆவல் கொண்டார். அதன்படி காசிக்குச் சென்று கங்கை நீரை கொண்டு வந்தார்.

அடுத்து செண்பகா அருவிக்கு சென்று நீரை எடுத்துவர, குற்றாலம் வந்தார். அருவி நீரை பிடித்து வரும்போது, அவ்விடம் வாசம் செய்த செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி, தனக்கு பூஜை செய்யாமல் தண்ணீர் எடுத்துச் செல்லும் காசி விஸ்வநாத பிள்ளையை சோதிக்க எண்ணினாள். தண்ணீர் எடுத்த பின் மீண்டும் ஊருக்கு வண்டியை கட்டினார் பிள்ளை. மலையடிவாரம் வண்டி வந்தபோது,  சாலையோரம் பத்து வயது சிறுமி, பட்டுச்சட்டை, பட்டுப் பாவாடையுடன் நின்றபடி வண்டியை நிறுத்துமாறு கையை காட்டினாள். வண்டி நிற்க, இறங்கினார் பிள்ளை. அந்தச் சிறுமியிடம், ‘‘என்னம்மா இந்த நேரம் தனியே இங்கே நிற்கிறாய்?’’ என்று கேட்க, தன் வீடு நெல்லைச்சீமையில் உள்ளதாகவும், அவர் வண்டியில் வரலாமா என்றும் கேட்டாள்.‘‘வாம்மா,’’ என்ற பிள்ளை, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மனைவி காமாட்சியிடம் அந்தச் சிறுமியை அறிமுகம் செய்து வைத்து, ‘‘லட்சுமி கடாட்சம் பொருந்திய பெண், நம் இல்லம் வந்துள்ளாள்.
நாளை நமது வீட்டில் நடைபெறும் கிரகப் பிரவேசம் முடிந்த பிறகு அனுப்புவோம்,’’ என்று கூறினார். அவரது மனைவிக்கும் அந்த சிறுமியை பிடித்துப் போய்விட்டது. ‘புது வீட்ட வந்து பாரு’ என்று அவளுக்கு வீட்டைச் சுற்றி காட்டினாள். பூஜையறையைக் கண்ட சிறுமி, அங்கே சம்மணம் இட்டு அமர்ந்தாள். ‘‘காமாட்சி அம்மா, இங்க வாங்க,’’ என்று அழைத்தாள். விரைந்து வந்த காமாட்சி, ‘‘என் பேரு எப்படிம்மா உனக்கு தெரியும்?’’ என்று வியப்புடன் கேட்டாள். ‘‘அது இருக்கட்டும், வந்ததுலேர்ந்து சாப்பிடு, சாப்பிடுன்னு சொன்னியே, இப்ப, எனக்கு சாப்பாடு கொண்டு வா’’ என்றாள் சிறுமி. ‘‘கிரகப் பிரவேச பால் காய்ச்சறதுக்கு முன்னாடி இந்த வீட்ல எச்சில் கூடாது; வா, பக்கத்து வீட்ல வச்சி சாப்பிடலாம்,’’ என்றாள் காமாட்சி. ‘‘முடியாது. நான் உன் கையில சாப்பிடனுமுன்னா இந்த வீட்ல வச்சுதான் சாப்பிடுவேன். இல்லேன்னா, சாப்பாடு வேண்டாம்.

நான் புறப்படுறேன்.’’ ‘‘செத்த இரும்மா, அவரு கிட்ட கேட்டுகிட்டு வாரேன்’’ என்று கூறிய காமாட்சி, பின்னர் கணவரோடு வந்து தலை வாழை இலை விரித்து, விருந்து பரிமாறினாள்.உணவு உண்ட சிறுமி, ‘‘இனிப்பு ஏதும் இல்லையா?’’ என்று கேட்டாள். ‘‘நாளைக்குதான் பால்காய்ச்சி. பாயாசம் வைப்போம். இப்ப கேக்கறியே,’’ என்று கூறிய மனைவியை அதட்டி, ‘‘போ, அடுக்களையில வெல்லக்கட்டி இருந்தா கொண்டு வந்து கொடு, கேட்டத இல்லன்னு சொல்லாத’’ என்று கூறினார் பிள்ளை. அதன்படி வெல்லக்கட்டி எடுத்துக்கொண்டு பூஜையறைக்குத் திரும்பினால், சிறுமி அங்கு இல்லை! கணவன், மனைவி இருவரும் வீட்டைச் சுற்றி தேடினர். அப்போது பூஜையறையில் அசரீரி கேட்டது: ‘காசிவிஸ்வநாதா, உன்னோடு வந்தது நான்தான், செல்வி. எனக்கு வடக்கு பார்த்து வாசல் வைத்து கோயில் கட்டு. உன் வாழ்வை வளமாக்குகிறேன். அதோடு என்னை வணங்கும் அன்பர்களுக்கு எல்லா வளமும் நலமும் அளித்து அருள்புரிவேன்.’

செல்வி அம்மனுக்கு கோயில் கட்டிய பிறகே, தான் கட்டிய புது வீட்டுக்கு கிரகப் பிரவேசம் செய்தார் காசி விஸ்வநாத பிள்ளை. அவரது காலத்திற்கு பிறகு அவரது வம்சாவழியினர் கோயிலைப் புதுப்பித்தனர். அப்போது அம்மனின் அருள் வந்து பேசிய ஒருவர், தன்னோடு தனது தங்கைகள் சந்தனமாரி, காந்தாரி ஆகியோர் வந்திருப்பதாகக் கூறி, அவர்களுக்கும் பீடம் அமைத்து வழிபட கூறினாள். அவ்வாறே கோயில் புதுப்பிக்கப்பட்டது. தனது பாட்டனாரின் பெயரைச் சேர்த்து காசி விஸ்வநாத செல்வி என்று அவரது சந்ததியினர் அம்பாளை அழைத்து வந்தனர். நாளடைவில் அந்தப் பெயர் விஸ்வநாத செல்வி என்று சுருங்கியது. அஷ்டகாளியரில் கடைசியான காந்தாரி அம்மனை அவர்கள் துர்க்கை என்று அழைக்க, அதுவே இப்போதும் நிலைத்துவிட்டது.

இக்கோயிலில் விஸ்வநாத செல்வி தனி சந்நதியில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள். அடுத்த சந்நதியில் சந்தனமாரியம்மனும், துர்க்கையும் அமர்ந்துள்ளனர். கோயிலில் துவார கணபதி வடக்கு நோக்கி கன்னி மூலையில் அமர்ந்துள்ளார். செல்வி அம்மனுக்கு பூஜை செய்வது போல கருப்பசாமி கையில் மணியுடன் தெற்கு நோக்கி நிற்கிறார். ஒரு குடும்பத்துக்கான கோயில் பின்னர் ஒரு சமுதாயக் கோயிலாக மாறியது. இப்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்
இருக்கிறது. இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக பைரவர், சுடலைமாடன், பிரம்மராக்கு சக்தி, பேச்சியம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாய் அன்று நடைபெறும் திருமாலை பூஜையும், நவராத்திரி விழாவும் இக்கோயிலில் முக்கிய விழாக்களாகும்.நெல்லை சந்திப்பிலிருந்து அரை கி.மீ. தொலைவிலுள்ள சிந்துபூந்துறையில் கோயில் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment