மகிஷாசுரனை வதம் செய்தபின் எட்டு சகோதரிகளும் சிவபெருமான் தங்களை மணமுடிப்பதாக கூறியிருந்ததால் உடனே சிவனை பார்க்க கயிலாயம் சென்றார்கள். இதையறிந்த சிவன், நந்தி தேவரை ஒரு விஷயம் கூறினார். அதன்படியே நந்திதேவரிடம் வண்டுமலைக்குச் சென்று எட்டு வண்டுகளைப் பிடித்து அவற்றை எட்டுக் குழந்தைகளாக்கி அஷ்ட காளிகள் வரும் வழியில் போட்டார். குழந்தைகள் அழுகுரல் கேட்ட அவர்கள் ஆளுக்கொரு குழந்தையை கையில் எடுத்து அதன் அழுகையை நிறுத்தி, அவர்களுடன் கயிலாயம் வந்தார்கள். சிவபெருமானிடம் அவர் வாக்களித்ததுபோலத் தங்களை மணமுடிக்குமாறு கோருகின்றனர். அப்போது சிவபெருமான் ‘நான் உங்களிடம் கூறியது உண்மைதான். ஆனால், நீங்கள் கன்னியராக வரவில்லையே, கையில் குழந்தையோடு அல்லவா வந்திருக்கிறீர்கள்!’ என்றார். அவர்கள் முகம் மாறியதை கவனித்த அவர் உடனே, ‘உங்களை நான் மணமுடித்து நீங்கள் என்னுடனேயே கைலாயத்தில் தங்குவதைவிட, நீங்கள் பூலோகம் செல்லுங்கள். மனித உயிர்களுக்கு அபயம் அளித்து காக்கும் பொறுப்பையும், பணியையும் மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு எல்லா வரமும் தருவேன்’ என்றார்.
அதைக்கேட்டு நிம்மதியடைந்த அவர்கள் அவர் அறிவுறுத்தியபடியே பொறுப்பு ஏற்க சித்தமானார்கள். அப்போது மாரி முத்தாரம்மன், சிவனிடம், தனக்கு தனியே ஒரு வரம் வேண்டும். அதாவது, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தப்பை உணர்ந்த பின் மன்னிக்கப்பட வேண்டும். அந்த வகையில் எனக்கு முத்து வரம் வேண்டும்’ என்று கேட்டாள். சிவபெருமானும் தனது சக்தியால் 108 முத்துகளை உருவாக்கி, அவற்றை ஓலையால் வேயப்பட்ட பெட்டியில் வைத்து அன்னை மாரிமுத்தாரம்மனிடம் கொடுத்தார். ஆனாலும், ‘இந்த முத்துகள் சக்தி வாய்ந்தவையா?’ என்று அவரிடமே கேட்டாள் மாரி முத்தாரம்மன். ‘நிச்சயமாக’ என்றார் சிவபெருமான். ‘அப்படியானால் அதை உங்களிடமே சோதித்து பார்க்கட்டுமா?’ என்று கேட்டாள் அவள். மெல்ல நகைத்தபடி ஐயனும் சம்மதித்தார். உடனே பெட்டியிலிருந்து முத்துகளை எடுத்து வாரி சிவபெருமான் மேல் இறைத்தாள் மாரி முத்தாரம்மன்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்துகள் விழுந்து வலியால் வேதனைப்பட்டார் சிவன். அதைக்கண்டு பார்வதிதேவி கலங்கினாள். அண்ணன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். அவரும் தங்கையின் அம்சமான மாரி முத்தாரம்மனிடம், ‘நீ தூவிய முத்துகளை நீயேதான் இறக்க வேண்டும்,’ என்றார். அதற்கான வழிமுறையையும் சொல்லிக்கொடுத்தார். அதன்படி தலைவாழை இலையை விரித்து, அதன் மேல் தயாபரனான சிவபெருமானை படுக்க வைத்து, சக்தியின் சூலாயுதத்தால் உருவான வேப்பமரத்தின் இலைகளை அவர் உடல்மீது வருடி முத்துகளை இறக்கினாள் முத்தாரம்மன். ‘அகிலத்தையே ஆளும் சிவபெருமானாலேயே தாங்க முடியவில்லையே, மனித உயிர்கள் எப்படி தாங்கிக்கொள்ளுமோ!’ என்று கருதி மகாவிஷ்ணு அந்த முத்துகளை வாங்கி, கொப்பரையில் போட்டு வறுத்து, அதன் வீரியத்தை குறைத்து அதன்பின் மாரி முத்தாரம்மனிடம் கொடுத்தார்.
முத்து வரமும், தீராத நோய்களை திருநீற்றால் தீர்த்தருளும் வரமும் பெற்ற அஷ்டகாளிகள் அங்கிருந்து பூலோகம் வந்தார்கள். ஆளுக்கொரு பிள்ளையை எடுத்து அந்த எட்டு பிள்ளைகளையும் ஒன்றாக்கி, வழியில் கண்டெடுத்ததால் அந்த பிள்ளைக்கு வயிரவன் என்று பெயரிட்டனர். பூலோகத்தின் சொர்க்கபுரியான பொதிகை மலைக்கு வந்தனர். குற்றாலத்தில் நீராடி, அங்கேயே வாசம் செய்தனர். மாரி முத்தாரம்மன் தான் வந்ததை இவ்வையகம் அறிய வேண்டும் என்றெண்ணி, நெல்லை நகருக்கு வந்தாள். அங்கு வளையல் விற்கும் செட்டியாரிடம் சென்று தனக்கு வளையல் போடும்படி கூற, அவரும் வளையல் போட்டு விட்டார். ஆனால், அன்னை தனது எட்டு கரங்களையும் நீட்டி வளையல் போடும்படி சொன்னபோது செட்டியார் திகைத்தார். ஆனாலும், அந்தக் கரங்களில் வளையல் அணிவித்து விட்டு, ஜோடி ஒன்றுக்கு நாலணா வீதம் கட்டணம் கேட்டார். அன்னை மாரிமுத்தாரம்மன், அந்தப் பணத்தை நெல்லை தெற்கு ரதவீதியிலுள்ள மணியக்காரரிடம் வாங்கிக் கொள்ளுமாறு சொன்னாள். மறுநாள் நெல்லை நகர மணியக்காரரிடம், ‘மஞ்சள் பொட்டும், மங்கலப் பட்டும் அணிந்து வந்த மங்கை ஒருத்தி, தனது கைகளுக்கு வளையல் போட சொன்னாள்; அதற்குரிய பணத்தை உங்களிடம் வாங்கிக்கொள்ளும்படி கூறினாள்’ என்று செட்டியார் கூற, அதைக்கேட்டு வீட்டுக்கு உள்ளிருந்து சினம் கொண்டு வந்தாள் மணியக்காரரின் மனைவி. ‘யாரவள், எனக்கு தெரியாமல்?’ என்று தனது கணவனிடம் கோபமாகக் கேட்க, மறுகனமே அவள் நாவில் முத்துகள் தோன்றின. பேச முடியாமல் அவதிப்பட்டாள். சிறிது நேரத்தில் மேனியெங்கும் முத்துகள் படர அம்மை நோயால் பாதிக்கப்பட்டாள். அதைப் பார்த்து அஞ்சினார் மணியக்காரர். அன்றைய தினம் அவரது கனவில் தோன்றிய மாரி முத்தாரம்மன், தான் யாரென்பதையும், தனக்கு கோயில் கட்டி வழிபட்டால் வந்த பிணி மாறும், இனி வரும் காலம் வளமாகும் என்றும் உரைத்தாள். அதற்கு உடனே சம்மதித்தார் மணியக்காரர்.
அப்போது மாரி முத்தாரம்மன் நெல்லை நகரில் தற்போது கோயில் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, அங்கு ஒரு வேம்பு செடி முளைவிட்டிருக்கும். அதை நாகம் ஒன்று சுற்றியிருக்கும். நாளை காலை சூரிய உதயத்தின்போது இது நடக்கும். அந்த இடத்தில் தனக்குக் கோயில் கட்டுமாறு பணித்தாள். அதன்படி மறுநாள் அங்கு சென்ற மணியக்காரர், அங்கு அம்மன் கனவில் சொன்னது போலவே, வேம்பு செடியை நல்லபாம்பு ஒன்று சுற்றி நின்றது. அவரும், உடன் வந்தவர்களும் அதை கரம் கூப்பி வணங்க, நாகம் அவ்விடம் விட்டு அகன்றது. அந்த இடத்தில் அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. மாரி முத்தாரம்மன் கோயில் என்றழைக்கப்பட்டது. அது மருவி முத்தாரம்மன் கோயிலாயிற்று. கோயிலில் மூலவர் முத்தாரம்மன், அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். இவ்விடமிருந்து பல ஊர்களுக்கு அன்னை திருவிளையாடல் நடத்தி அந்தந்த ஊர்களில் கோயில் கொண்டாள். பிடிமண் மூலமும் பல ஊர்களில் அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. தென் மாவட்டமக்களின் காவல் தெய்வங்களில் முக்கியத்துவம் கொண்டதாக முத்தாரம்மன் திகழ்கிறாள்...
நன்றி
சு.இளம் கலைமாறன்
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment