Wednesday, 30 May 2018

சேர்வாரன் சாமி வரலாறு

சேலம் மாநகரின் தற்போதைய கிச்சிப் பாளையம், அப்போது ஒடுக்கப்பட்டவர்கள் ஒதுங்கி வாழ்ந்த பகுதி. அந்த இடத்தைச்  சேர்ந்தவன் சேர்வாரன். அங்குள்ள சந்தைப்பகுதியில் பனை ஒலை குடிசையில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தான். 25  வயது கட்டிளம் காளை. இடுப்பில் வேட்டி கட்டி அதன் மேல் ஒரு கை வீதி கொண்ட பெல்ட் அணிந்திருப்பான். அந்த  பெல்ட்டிலிருந்து ஒரு வாரை பிணைத்து அந்த வார் இடுப்பிலிருந்து தோள் வழியாக பின்புறம் இணைக்கப்பட்டிருக்கும்.  வேட்டியும் முழங்காலுக்கு மேலிருக்கும். பார்ப்பவர்கள்., ‘‘சேர்வா, போலீசுகாரக மாதிரி வார் போட்டியிருக்கிற, ஆனா, உடம்புல  ஒரு சட்டத்துணி போட்டுக்கலையே!’ என்று கேலி செய்வார்கள். அதற்கு சிறிய புன்னகையை மட்டுமே பதிலாக்குவான்  சேர்வாரன்.

சேலத்தில் தற்போது குகை என்று அழைக்கப்படும் பகுதியில் அரண்மனைக்காரர்கள் என்ற வசதி படைத்தோர் வாழ்ந்து வந்தனர்.  அவர்களை பண்ணை வீட்டுக்காரர்கள் என்றும் அழைத்தனர். ஒருநாள் பண்ணை வீட்டிலிருந்து வேலைக்காரன் குப்பன்,  சேர்வாரனிடம் வந்து, “ஏய், உன்ன, மூத்தவரு பண்ணைக்கு வரச்சொன்னார்” என்றான். சேர்வாரன் மனதில் சந்தோஷம்.  ‘எப்படியும் பண்ணை வீட்டு அண்ணன் தம்பிங்க ஏழு பேரும் செருப்பு தைக்க சொல்வாக, அந்த துட்டுல தாய், தகப்பனுக்கு  புதுத்துணிக வாங்கி கொடுக்கணும்’.

பண்ணை வீட்டுக்கு சென்றான்.  வீட்டில் யாரும் இல்லை, அமைதி இருந்தது. வாசலில் நின்றபடி, “ஐயா, சேர்வாரன்  வந்திருக்கேங்...” என்று குரல் கொடுத்தான். உள்ளிருந்து கொலுசு ஒலி கேட்டது. கூடவே மல்லிகை மணம் வீச வாசலுக்கு  முன்பு தேவதைபோல பண்ணை வீட்டு பருவமங்கை, ஏழு அண்ணன்மார்களின் ஒரே தங்கை கம்மாடச்சி நின்றிருந்தாள். “யாரு  நீ, என்ன வேணும்?” அதிகாரமாகக் கேட்டாள்.

தலை குனிந்து பதிலளித்தான் சேர்வாரன்: “அம்மா, நான்... சேர்வாரன்..’’
“சேர்வாரனா? எந்த நாட்டு இளவரசரு...” என கேலியாக கேட்டாள் அவள்.
“அம்மா, நான் செருப்பு தைக்கிறவன்.’’
“அப்படி சொல்லணும்லா, அப்பதான
தெரியும். நிமிந்து முகத்தை காட்டு.”
“அம்மா, அப்படி நான் பார்க்க கூடாது...’’ என்று தயங்கிய சேர்வரானிடம், “நான் பார்க்கணும்லா” என்றாள் கம்மாடச்சி  மிடுக்குடன். நிமிர்ந்தான் சேர்வாரன். அவனை பார்த்தவுடன், “என்னய்யா, உன் கண்ணுக்கு மை தீட்டுவியா, இமையில கூட  எவ்வளவு முடி வளர்ந்திருக்கு, உன் கண்ணு அழகா இருக்குயா” என்று வியந்து கேட்டாள்.

“அம்மா, நீங்க விளையாட்டா சொல்றத, யாராச்சும் கேட்டுப்புட்டா, உங்க அண்ணங்க, என் கண்ண நோண்டி புடுவாங்க. நான்  போயிட்டு அப்புறமா வாரேன்மா,’’ என்று கூறிய அவனிடம், “யோவ், எங்க அண்ணங்க களத்துமேட்டுல நிக்கிறாங்க போய்  பாரு.” என்ற தகவலை கூறிவிட்டு, சேர்வாரன் நடந்து செல்வதை ரசித்து பார்த்தாள். களத்துமேட்டில் பண்ணை வீட்டுக்காரர்கள்  சுற்றி நிற்க, ஒருவனை போட்டு அடித்து உதைத்து கொண்டிருந்தான் மூத்த பண்ணயார். ஒரு வேலைக்காரனை தனியாக  அழைத்துக்கேட்டான் சேர்வாரன். 

“களத்துமேட்டுல வச்சிருந்த நெல் மூடை ஒண்ணைக் களவாடிட்டான். அதனால அவனை மூத்தவரு இரண்டு தட்டு தட்டறாரு,  வேற ஒண்ணுமில்ல. இங்கேயே நில்லு. ஐயா, உன்ன கூப்பிடுவாரு,’’ என்றான் அவன். சிறிது நேரத்தில் மூத்தவர்  ராஜமாணிக்கம், தம்பிகளுடன் வந்தான். “ஏ, சேர்வாரா, அரண் மனைக்கு வா,’’ என்று அழைத்தான். வீட்டில் வரவேற்பறையில்  அனைவரும் இருக்க, தங்கையை அழைத்தான். கம்மாடச்சியும் வந்து தூணில் சாய்ந்தபடி நின்றாள். வீட்டுக்கு வெளியே நின்ற  சேர்வாரனை உள்ளே அழைத்தான்.

நாம கம்மாடச்சியோட பேசினத பார்த்துட்டாங்களோ, என்ன நடக்குமோ தெரியலையே என்ற கலக்கத்துடன் வந்தான் சேர்வாரன்.  தங்கையை நாற்காலியில் அமர வைத்து, “சேர்வாரா, என் தங்கச்சிக்கு அழகா செருப்பு செய்யனும் அளவு எடு. இதுக்குதான்  உன்னை கூப்பிட்டு விட்டோம்,’’ என்றான் மூத்தவன். அளவு எடுத்துச் சென்ற சேர்வாரன் மூன்றாவது நாள் அழகான செருப்பு  செய்து கொண்டு வந்தான். வீட்டில் யாருமில்லை. அன்று போல் பண்ணையார்கள் எவனையாவது களத்து மேட்டுல  அடித்துக்கொண்டு இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு, குரல் கொடுத்தான் சேர்வாரன்.

கம்மாடச்சி வந்தாள். “சேர்வாரா, வா, வா, உன்னை பாக்கிறதுக்காகத்தான் அண்ணிங்க கூப்பிட்டதுக்கு கூட, எனக்கு வர  வசதியில்லன்னு சொல்லிட்டு நான் கோயிலுக்கு போகல. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். சேர்வாரா, நீ என்கூட வாழ்க்கையில  ஒண்ணா சேருவியா?” என்று கேட்டாள். “அம்மா, என்ன பேசுறீங்க? நீங்க ஒசந்த சாதி, நீங்க காலில போடுறத, கையில  எடுத்து துடைக்கிறவங்க நாங்க. யோசிச்சு தான் பேசுறீங்களா?’’ திகைத்துத் தடுமாறி கேட்டார் சேர்வாரன்.   ஆமா, சேர்வாரா நான் முடிவு பண்ணிட்டேன். சின்ன வயசிலேயிருந்தே நான் நினைச்சத அடைஞ்சிட்டு வாரேன். எங்க  அண்ணங்க எப்படியும் வாங்கி கொடுத்திருவாங்க, ஆனா, அவங்ககிட்ட சொன்னா, நீ எனக்கு கிடைக்கமாட்ட. நான் வாழ்ந்தா,  உங்கூடத்தான் வாழனும்ன்னு முடிவு பண்ணிட்டேன். சாதியச் சொல்லி என்ன சோதிக்காத, நீ திடமான ஆம்பிளையா இருந்தா,  உன்மேல உனக்கு நம்பிக்கை இருந்தா என்னை கூட்டிட்டு போ, இப்பவே போலாம் வா,’’ என்றவள், அணிந்திருந்த உடை,  நகைகளுடன் சேர்வாரன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

இருவரும் சேலத்திலிருந்து நெல்லைக்கு வந்தனர். சொரிமுத்தையன் கோயில் அருகே இருக்கும் வனப்பேச்சியம்மன் கோயிலில்  மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வேலாயுதபுரத்தை  அடுத்திருக்கும் பட்டாடை கட்டிஎன்னும் மலை கிராமத்தில் குடியேறினர். மகாராணியாக இருந்த கம்மாடச்சியை ஒரு  வேலையும் செய்ய விடாமல் எல்லாவற்றையும் தானே செய்தான் சேர்வாரன். ஆனால், அவளோ மற்ற பெண்களைப்போல்  தானும் கணவனுக்கு உரிய பணிவிடையை செய்ய விரும்பினாள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பிரியத்துடன்  வாழ்ந்து வந்தனர்.

கிராமத்தை விட்டு தள்ளி, அடர்ந்த வனப் பகுதியில் ஏறுமாடம் கட்டி குடியிருந்தனர். பகலில் தான் வளர்த்துவந்த நாயை  கம்மாடச்சிக்கு துணையாக வைத்துவிட்டு, சேர்வாரன் மலையிலிருந்து இறங்கி, தோட்டங்களிலிருந்து காய்களும்,  கானகத்திலிருந்து கனிகளையும் எடுத்துக்கொண்டு வ்ருவான். கொஞ்சநாள் கம்மாடச்சியின் அண்ணன்மார்களிடம் இருந்து  தப்பிப்பதற்காக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, அப்புறம் ஏதாவது ஊர்ப்பகுதியில் சென்று வாழ முடிவு செய்திருந்தனர்.
தினமும் நண்பகல் நேரம் அங்குள்ள நீர்நிலையில் குளித்து விட்டு, மனைவிக்கு தண்ணீரும் எடுத்துச் செல்வான் சேர்வாரன்.
இது அந்த பட்டாடை மலை கிராம மக்களுக்கு தெரியும். இது இப்படி இருக்க, சேலத்தில் சேர்வாரன் தனது தங்கையை  கடத்திக்கொண்டு சென்று விட்டான் என்ற கோபத்தில் சேர்வாரனின் குடும்பத்தை சித்ரவதை செய்தனர் அரண்மனைக்காரர்கள்.  அவர்களில் ஒருவர், அவரது உறவினர் பாண்டிய நாட்டில் இருப்பதாகவும், ஒருவேளை அங்கு சென்றிருக்கலாம் என்று கூற,  மதுரைக்கு வந்தனர். இருவரின் அங்க அடையாளங்களை கூறி விசாரித்தபடி சங்கரன்கோவில் பகுதிக்கு வந்தனர். நான்காவது  நாள் பட்டாடைகட்டி மலைகிராமத்திற்கும் வந்தனர்.

சேர்வாரன் குளிக்கும் குளத்தில் தங்களது குதிரைகளுக்கு நீர் காட்டினர். அப்போது குளத்தருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த  சிறுவனிடம் விசாரித்தார்கள். அவன் சொன்ன தகவல்களை வைத்து அண்ணன்மார்கள் ஏழுபேரும் ஆளுக்கொரு பக்கமாக  கையில் வாளுடன் அங்கே பதுங்கிக்கொண்டனர். சேர்வாரன் வந்தான். தன் தோளில் போட்டிருந்த துணியை எடுக்க  முற்பட்டபோது, ‘வெட்டுங்கடா’ என்று கம்மாடச்சியின் மூத்த அண்ணன் குரல் கொடுத்தான். சத்தம் கேட்டு ஓட முற்பட்ட  சேர்வாரனை ஒருவன் வெட்டினான். வயிற்று பகுதியில் வெட்டுப்பட்டதும் ரத்தம் பீறிட்டது. கையில் இருந்த துணியைக்  கொண்டு வயிற்றில் கட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடினான் சேர்வாரன். அவனைத் துரத்தியபடி ஓடி வந்தார்கள்  அண்ணன்மார்கள்.

சேர்வாரனை அந்த நிலையில் கண்ட கம்மாடச்சி பதறினாள். சேர்வாரன் நடந்ததை கூறினான். ‘‘என் உடன் பிறந்தவங்கன்னு  நினைச்சு விட்டுட்டு வந்தீங்களா? அவங்க, சங்காத்தம் வேண்டாமுன்னு வந்தபோதும், சங்க அறுக்க வந்திட்டாங்களே, போங்க,  உங்கள கொன்னுட்டு என்ன முண்டச்சியாக்க வந்த என்அண்ணன்களை முண்டமாக்கிட்டு வாங்க,’’ என்று அவள் ஆவேசமாகக்  கத்தினாள். உடனே வீறுகொண்டு சென்றான் சேர்வாரன். தன்னை நோக்கி வீசிய வாளை பறித்து எதிரே வந்த ஏழு பேர்களின்  தலையையும் கொய்தான்.

பிறகு, தன் நிலை மயங்க, ‘‘கம்மாடச்சி... கம்மாடச்சி...’’ என்று கத்தினான். அவனருகே ஓடோடி வந்தாள் கம்மாடச்சி. அவள்  மடியில் சாய்ந்தான் சேர்வாரன். ஏதோ பேச முற்பட்ட அவன் வாயை மூடிய கம்மாடச்சி, ‘‘நான் சுமங்கலியாகத்தான் சாகணும்.  நீங்க எதுவும் பேசாதீங்க’’ என்றாள். உடனே தன் நாவை பிடுங்கிக்கொண்டு உயிரைவிட்டாள். சேர்வாரனும் அடுத்த விநாடியே  மாண்டு போனான். நாட்கள் நகர்ந்தன. நடுவக்குறிச்சி ஜமீன்தார், வேட்டைக்குச் சென்றுவிட்டு ஒருமுறை அவ்வழியாக வந்தார்.  தனது உதவியாளருடன் அந்த குளத்தில் இறங்கி குளித்தார். நீராடிவிட்டு அங்கிருந்து புறப்படும்போது கீழே விழுந்தார். எழுந்து  புறப்பட முயற்சிக்கையில் மீண்டும் குதிரையுடன் கீழே விழுந்தார்.

பின்னர் ஒருவாறு முயற்சித்து அரண்மனை வந்து சேர்ந்தார். அரண்மனை ஆஸ்தான ஜோதிடரை அழைத்து நடந்த சம்பவத்தை  கூற, அவர், ‘‘கிரக பலத்தில் குற்றம் இல்லை. மை போட்டு பார்த்தேன். அங்கே துடிகொண்ட ஒரு தெய்வம்  நிலைகொண்டுள்ளது. அதை சாந்தப்படுத்த படையல் போட்டு பூஜை செய்ய வேண்டும்,’’ என்றார்.  அதன்படி படையல்  போடப்பட்டது. சுற்றுவட்டார கிராமத்திலுள்ள அனைத்து சாதியினரும் பூஜையில் கலந்து கொண்டனர். பூஜை நடக்கும் நேரம்  நிலை கொண்ட தெய்வம் எவர் ஒருவர் மேல் வந்து தான் யார் என்பதையும், படையல் ஏற்றுக்கொண்டதையும் கூறுவது அந்த  பகுதியில் வழக்கம். 

பூஜை நடந்து கொண்டிருந்தபோது ஜோதிடர் பின்னால் நின்ற அருந்ததியர் ஒருவர் மேல் சாமி அருள் வந்தது. ‘இவன் சாமியாடி  மற்றவர்களுக்கு திருநீறு கொடுப்பதா’ என்று பொறாமைப்பட்ட ஜோதிடர், அருள் வந்தவரின் கால் பெருவிரலை மிதித்தபடி  மந்திரம் சொன்னார். வந்த வேகத்தில் சாமி அருள் அற்று போயிற்று. இந்த சம்பவங்கள் எதுவும் ஜமீனுக்கோ ஜமீன்  ஆளுகளுக்கோ தெரியாது. பூஜை முடிந்து அனைவரும் இல்லம் திரும்பினர். அன்றிரவு ஜோதிடரின் தொழுவத்தில்  கட்டப்பட்டிருந்த அனைத்து மாடுகளும் மாண்டு போயின. அதிகாலை எழுந்து பார்த்த ஜோதிடர் கதறினார்.

உடனே சாமியாடிய நபரை அழைத்து வந்து காரணம் கேட்க, அவன் ‘‘உன் மந்திர சக்தியால் என் குல சாமியை கட்டி  வைத்திருக்கிறாய், அவிழ்த்து விடு, மறுநிமிடமே ஆயிரைகள் உயிர்த்தெழும்,’’ என்றான். அதன்படி ஜோதிடர் செய்ய,  ஆயிரைகள் உயிர்த்தெழுந்தன. நடந்தவற்றை ஜமீனிடம் கூறிய ஜோதிடர் அடுத்த பூஜைக்கு நாள் குறித்து கொடுத்தான். பூஜை  நடந்தது. அன்று அருள் வந்து ஆடியவர் தான் யார் என்பதையும், தனக்கும், தனது மனையாள் கம்மாடச்சிக்கும் நிலை கொடுத்து  பூஜித்து வந்தால் சிறப்பான வாழ்வளிப்பதாகவும் கூறினார்.

பதினெட்டுபட்டி அருந்ததியரும், ஜமீனும் சேர்ந்து சேர்வாரனுக்கும் கம்மாடச்சிக்கும் அவர்கள் கொலையுண்ட இடத்தில் கோயில்  எழுப்பினர். பிற்காலத்தில் பிடிமண் மூலம் பல்வேறு இடங்களில் சேர்வாரனுக்கு கோயில்கள் உருவாயின. சேர்வாரன்  கோயிலின் தலைமை பதியாக பட்டாடைக்கட்டி திகழ்கிறது. சங்கரன்கோவில், நெற்கட்டும்சேவல், ஆராய்ச்சிபட்டி, ஆயாள்பட்டி,  குருக்கள்பட்டி, ஊத்தாங்குளம், ஊத்துமலை உள்பட பல ஊர்களில் சேர்வாரனுக்கு கோயில் உள்ளன. வேண்டுபவர்களுக்கு மன  உறுதியையும், சிறப்பான வாழ்வையும் அருள்கிறார் சேர்வாரன். இந்த கோயில் சங்கரன்கோவிலிருந்து 6 கி.மீ. தூரத்தில்  திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ள ஆராய்ச்சிபட்டியில் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment