தென்காசிக்கும், இலஞ்சிக்கும் இடையே ஹரிஹரஆறு, குண்டாறு, சிற்றாறு என்ற மூன்று ஆறுகளும் ஒன்றாக கூடுகின்றன. அதனால் அந்த பகுதியை முக்கூடல் என்று அழைக்கின்றனர்.
தென்காசி, இலஞ்சி பகுதிகளிலுள்ள சலவைத் தொழிலாளர்கள், அந்த முக்கூடல் கரைப்பகுதியில் நின்றபடி சலவை செய்வார்கள். வேலை முடித்து மாலையில் வீடு திரும்பும் அவர்கள், ஆற்றுக்கு வந்து மீன் பிடித்து செல்வார்கள். அன்று அவற்றை சமைத்து சாப்பிடும் இவர்கள், மீதமுள்ள மீன்களை காய வைத்து கருவாடு ஆக்கி மற்ற நாட்களில் உணவுப்பொருளாக பயன்படுத்துவார்கள்.ஒரு முறை சலவைத் தொழிலாளிகள் ஆறு பேர் சேர்ந்து ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்றனர். பௌர்ணமி என்பதால் நிலவு இரவைப் பகலாக்கிகொண்டிருந்தது. நான்கு பேர் ஆற்றுக்குள் நின்று மீன் பிடிக்க, இரண்டு பேர் கரையில் நின்றபடி அவர்கள் பிடித்துக் கொடுக்கும் மீன்களை வாங்கி துணி விரிப்பில் போட்டனர்.
வகை, வகையான மீன்கள் கிடைத்தன. மீன் பிடிக்கும் ஆர்வத்தில் அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. நள்ளிரவானது. தண்ணீருக்குள் நின்று கொண்டிருந்ததால், கால்கள் விறைத்தன. அப்போது ஒரு சுறா மீன் அவர்களிடம் சிக்கியது. வியப்போடும், உற்சாகத்தோடும் அதை பிடித்து அதனைத் தூக்க முயன்றனர். முடியவில்லை. மீண்டும் தூக்க முயன்றபோது, மீன் தனது வால்பகுதியால் அவர்களை தாக்கியது. பயந்துபோன நான்கு பேரும் சுறா மீனை விட்டுவிட்டுக் கரையேறினர். பிடித்த மீன்கள் போதும், என்ற முடிவோடு வீட்டிற்கு திரும்பினர். மறுநாள் காலையில் சலவைக்குப் போகாமல், உடல் நலம் குறைந்து, வாந்தி, பேதி என்று அவதிப்பட்டனர்.
வைத்தியர்களிடம் சென்றும் சரியாகவில்லை. அதனால் உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் ஆரியங்காவில் இருந்த நம்பூதரியிடம் சென்று கேட்டனர். அப்போது அவர், அது பலவேசக்காரன் வேலைதான். என்று கூறி, காணிக்காரனைப் போய் பார்க்குமாறு சொன்னார். அதன்படி அவர்களும் காணிக்காரனை பார்த்து. நடந்ததை கூறினர். காணிக்காரன் ஒரு யோசனை சொன்னார். அதன்படி ஆற்றங்கரையில் மண் பீடம் எழுப்பி, ஆடு, கோழி படையலிட்டு சுடலைமாடனை நினைத்து பூஜித்தனர். பூஜையின் உச்சத்தில், ஒருவர் மீது பலவேசக்காரன் வந்திறங்கினார். ‘‘யாரும் அஞ்ச வேண்டாம், நான்தான் சுடலைமாடன். சுறா மீனாக வந்தது நான்தான். இது நான் நடமாடும் பகுதி.
நடு ஜாமத்தில் என் பகுதிக்குள் இவர்கள் இருந்ததால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. சரி, இந்தா என் திருநீற்றை பூசிக்கொள். அந்த நாலு பேரும், நலமுடன் எழுந்து நடப்பார்கள்” என்று அருள்வாக்கு சொன்னார். அதேசமயம் வீட்டில் படுத்திருந்த நாலு பேரும் ஏதோ ஒரு புதிய சக்தி வந்தது போல், சுறுசுறுப்புடன் எழுந்து வேகமாக பூஜை நடக்கும் இடத்துக்கு வந்தனர். சாமியாடி அவர்களை பார்த்து, ‘‘இனி உன் உடம்புக்கு ஒண்ணும் ஆகாது... வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு போகணும்; வீட்டுல இருக்கிற நேரம் காட்டுல என்ன வேலை?” என்று கடிந்துகொண்டு ஆதாளி போட்டார். ஆதாளி என்றால் ‘ஓ...ஓ...’ எனப் பெரிதாகக் குரல் கொடுப்பது. பின்னர், ‘‘ம்... என்னை வணங்கி வந்தால் எல்லாம் நலமாக நடக்கும். உங்கள் வம்சம் விருத்தியாகும்.
21 பீடம் அமைத்து எனக்கு பூஜை செய்யுங்கள். நான் உங்களுக்கு துணை நிற்பேன்,” என்று கூறினார். பிறகு அருள் வந்து ஆடியபடி அப்படியே மயங்கி விழுந்தார். அவரை பிறர் தாங்கிப் பிடிக்க, பூஜை செய்த காணிக்காரன், அவர் முகத்தில் தண்ணீர் தெளிக்க சகஜநிலைக்கு வந்தார். அன்றிலிருந்து அவர் கோமரத்தாடியாக இருந்து வந்தார். அவர் கூறியது போன்று, 21 மண் பீடங்கள் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இக்கோயிலில் சுடலைமாடன், பலவேசக்கார சாமியாக, அதாவது, தாடியுடன் முனிவர் வேடத்தில் தவசி தம்புரானாக விளங்குகிறார். பிரம்மராக்கு சக்தி, கரடி மாடன், கருப்பன், சுடலை, இசக்கியம்மன், பேச்சியம்மன், நாகம்மன் ஆகிய நாமங்களில் பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இடைக்காலத்தில் மேம்படுத்தி கட்டியபோது, முத்துபட்டன், சின்னதம்பி ஆகியோரின் சுதை சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டன. பெருமாளை வழிபடும் அந்தணர் குலத்தில் பிறந்து, சுடலைமாடனை வழிபட்டு, அவரின் அருள் பெற்றவராக வீரனாக வாழ்ந்து கள்வர்களால் கொலை செய்யப்பட்டு, வீரமரணம் அடைந்த ஒருவரின் சுதை சிற்பமும் அங்கே உள்ளது. அதுபோல தாழ்ந்த குலத்தில் பிறந்து, சுடலைமாடனின் பக்தனாக மாறியவர் சின்னதம்பி. ஒரு வீரனாக திகழ்ந்து, தனது திறமை மற்றும் உடலமைப்பில் ஈர்ப்பு கொண்ட உயர் குல பெண் ஒருத்தி, ஒருதலைபட்சமாக விரும்பியதற்காக, அந்த பெண்ணின் உறவினர்களால் கொலை செய்யப்பட்டவர் சின்னதம்பி. இவரின் சுதை சிற்பமும் இங்கு உள்ளது. மூலவராக கருப்பண்ணசாமி என்ற நாமத்தில் சுடலைமாடன் இருக்கிறார்.
கோயில் முக்கூடல் சுடலைமாடசுவாமி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் கொடை விழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் கடைசி வியாழக்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாள் குடியழைப்பு. வெள்ளிக்கிழமை, அன்ன படைப்பும், உச்சிகால தீபாராதனையும். அதன் பின்னர் சுவாமி மயானம் சென்று வருகிறார். இதனை வேட்டைக்கு செல்லுதல் என்கிறார்கள். வேட்டைக்கு சென்று வந்த பின்னர் ஆடு, கோழி பலியிடுதல் நடக்கிறது. அடுத்த நாள் சனிக்கிழமை பூப்படைப்பு தீபாராதனை, மாலையில் வாழிபாடலுடன் விழா நிறைவு பெறுகிறது. வாழிபாடல் என்பது கொடை விழாக்களில் மகுடம் அல்லது வில்லிசை என்ற இசை நிகழ்ச்சி.
விழா நிறைவு பெறும் நாளில் கொடை விழா நடத்தும் அன்பர்கள், அவர் குடும்பங்கள், வம்சங்கள், ஊர்க்காரர்கள், தேசத்துக்காரர்கள் என எல்லோரையும் வாழ்த்தி பாடுவார்கள். அதாவது, ‘என்னை மகிழ்விக்கக் கொடைவிழா நடத்திய என் மக்கள், என் பிள்ளைகள் வாழ வேண்டும். நோய், நொடி அண்டாமல், பேய், பிசாசு, நெருங்காமல், விஷப்பூச்சிகள் தீண்டாமல், துயரங்கள் ஏற்படாமல் எப்போதும் இன்புற்று வாழிய வாழியவே’ என அவர் பாடுவதாக மகுடம் அல்லது வில்லிசை கலைஞர்கள் பாடுவார்கள். இத்துடன் கொடை விழா நிறைவு பெறுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment