தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பையன் பறம்பர், தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்று மனம் வருந்தினார். மனைவி ஆறுமுகத்தாளை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் சென்று அந்த ஆறுமுகத்தானை வணங்கினார். அப்போது கோயில் வடக்கு பிராகாரத்தில் வெளியே நின்றிருந்த குறி சொல்லும் பெண், ‘‘சாமியோவ், இங்க வாங்க’’ என்று சுப்பையனை அழைத்தாள். ‘‘உம்ம பொஞ்சாதிய கைய நீட்டச் சொல்லுங்க’’. அப்படியே ஆறுமுகத்தாள் கைநீட்ட, அதில் குறி பார்த்த அந்தப் பெண்,
‘‘பட்ட தீட்ட பல்லி தின்னதாலே
ஒட்ட உறவாடியும் உள்ளே
வெட்ட விழுந்து போச்சே
பல்லி தோஷத்தாலே
பிள்ள யில்லாம ஆச்சே
வள்ளி சந்நதி முன்னே நின்னு சொல்லுதேன்.
வெள்ளி நிறமாட்டம் வரும் மாசி மாதத்திலே
புள்ள வந்து பொறப்பான்.’’
என்றாள். மனம் மகிழ்வோடு வீடு வந்து சேர்ந்தனர் தம்பதியினர். மறு மாதமே கருவுற்றாள் ஆறுமுகத்தாள். மாசி மாதம் வந்தது. மகனும் பிறந்தான். ‘‘என் அண்ணன் தம்பி எல்லாத்துக்கும் பொம்பள புள்ளைங்கதான். நமக்கு முத்தாட்டம் ஆம்புள புள்ளைய அந்த செந்தில் ஆண்டவன் கொடுத்திருக்கான். இவன்தான் என் குடும்பத்துக்கே சொத்து. அதனால புள்ளைக்கு முத்துன்னு பேரு வைக்கிறேன்’’ என்று சொல்லி அப்படியே பெயர் சூட்டி மகிழ்ந்தான் சுப்பையன்.
முத்து வளர்ந்தான். 21 வயது எட்டி, இளம் காளையாய் திகழ்ந்தான்.
அருந்ததியர் வம்சத்தில் பிறந்திருந்தாலும் அரசன்போல உடல் வாகுவை பெற்றிருந்தான். ஆறுமுகத்தாள் தனது கணவனிடம், ‘‘இந்தா பாருய்யா, தோளுக்கு மேல வளர்ந்த மவன வீட்லேயே வச்சி சோறு போட்டா எப்படி? அவனும் நாலு இடத்தில சோலி பாத்து துட்டு சேர்க்கட்டும்,’’ என்றாள்.‘‘என்ன புள்ள சொல்லுத நீ, நான் ஒத்த மவன வச்சிருக்கேன். நானும், நீயும் உழைக்கிறது பத்தாதோ?’’ சுப்பையன் கேட்டான். ‘‘அதுக்கில்லையா, அவனுக்கின்னு பொஞ்சாதி புள்ளங்க வந்தா காப்பாத்த வேண்டாமா? அதுக்காவது கைய திருத்தி விடலாமுல்லா.’’ ‘‘சரி, சரி’’ என்றான் சுப்பையன்.
மறுநாள் காலையில் பொழுது புலர்ந்ததும் மகனை அழைத்துக் கொண்டு பாண்டியர் வீட்டில் வேலைக்குச் சேர்த்தான். அங்கே மாட்டு தொழுவத்தில சாணம் அள்ளுவது, தொழுவத்தை சுத்தம் செய்வது, மாட்டை குட்டையில் கொண்டு கழுவுவது போன்ற வேலைகளைச் செய்து வந்தான் முத்து. அவனது முதலாளி சோமசுந்தர பாண்டியன், அவனிடம், ‘‘ஏலே முத்து நல்லா சோலி பாக்கிற, ஒழுக்கமா, விசுவாசமா இருக்கணும் என்ன, உனக்கு மூணு வேள சாப்பாடும், விளைச்சலுக்கு 10 மரக்கா நெல்லும், நல்ல நாள் பொறப்புகள் வந்தா வேட்டி முண்டும் தரச்சொல்லுதேன் என்ன! கெட்டிக்கார பயலா நடந்துக்க,’’ என்று அறிவுறுத்தினார்.
‘‘சரிங்க ஐயா,’’ என்றான் முத்து. ஆண்டுகள் இரண்டு ஆன பின்னர் நல்ல வேலைக்காரன் என்று பெயரெடுத்ததோடு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காத ஒழுக்கத்தையும் வளர்த்துக்கொண்டான். ஒருநாள் சாமவேளையில், ஏழு கள்வர்கள், மந்தையில் அடைக்கப்பட்டிருந்த மாடுகளை ஆளுக்கொன்றாக கயிறு கட்டி ஓட்டிச் சென்றனர். மற்ற மாடுகளின் கலசலும், கன்று குட்டிகளின் கத்தலும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த முத்துவை எழுப்பிவிட்டன. ஏழு மாடுகளைக் காணவில்லை என்பது தெரிந்தது. உடனே மாடுகளின் கால் தடம் பின்பற்றி பௌர்ணமி வெளிச்சத்தில் நடந்தான். ஊர் எல்லையை அடைந்தபோது பொழுது புலர்ந்தது. அதேசமயம் அவன் கள்வர்களை கண்டு விட்டான். அவர்களோடு ஒத்தையாக நின்று சண்டையிட்டு போராடி மாடுகளை மீட்டு வந்தான். அவனது வீரத்தைப் பாராட்டிய சோமசுந்தர பாண்டியன் அவனை முத்துவீரன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அவன் முத்து வீரனானான். சில நாட்கள் கழித்து, ஒரு மாலைப்பொழுதில் தோழியர்களோடு உலா வந்தாள் பாண்டியன் வீட்டு கணக்குப் பிள்ளையின் மகள் கோமதி. கழிவு நீர் ஓடையைத் தாண்டியபோது அவளுடைய தங்கச் சங்கிலி ஓடையினுள் விழுந்தது. ‘‘அய்யய்யோ, என் தங்கசங்கிலி போச்சே,’’ என்று கத்தினாள், உடனிருந்த தோழிகளும் ‘‘யாராச்சும் வாங்களேன்,’’ என்று குரல் கொடுத்தார்கள்.
அவ்வழியாக கன்றுக்குட்டியை தோளில் சுமந்தபடி முத்துவீரன் செல்ல, அவன் பின்னால் அந்தக் கன்றை ஈன்ற பசுவும் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண்களிடம், ‘‘ஏன் சத்தம் போடுறீங்க?‘‘ என்று கேட்டான் முத்துவீரன். நடந்ததை கோமதி கூற, உடனே முத்துவீரன் கன்று குட்டியை கீழே இறக்கி வைத்துவிட்டு, சகதியாக இருந்த கழிவு நீர் ஓடையில் இறங்கினான். சிறிது நேரத் தேடலுக்கு பின் கிடைத்த தங்க சங்கிலியை நல்ல தண்ணீரில் கழுவி, தனது வேட்டி துணியால் துடைத்து அவளிடம் கொடுத்தான். தோழிகள் நன்றி சொல்ல, ‘‘நீங்க நன்றி சொல்றது இருக்கட்டும். சங்கிலிக்கு உடமக்காரங்க ஒண்ணும் சொல்லலையே’’ என்று முத்துவீரன் கேட்டதும், கோமதி நிமிர்ந்து பார்த்தாள். முழு நிலவு முகம் கொண்ட அவள் தனது முத்துப் பற்களை காட்டி புன்னகைத்தபடி பதிலேதும் சொல்லாமல் சென்று விட்டாள்.
வீட்டிற்குச் சென்றதும் அவளது தாய் ‘‘இவ்வளவு நேரமா நகை நட்டுகள போட்டுகிட்டு எங்கன சுத்திட்டு வார? நேரமே வீடு வந்து சேரணுமுன்னு தோணலையா உனக்கு. எங்க போறா, வாரா, சும்மா காலாத்திட்டு வரட்டுமேன்னு விட்டா, நேரம் காலம் தெரியாமலா சுத்துற?’’ என்று சத்தம் போட்டாள்.
அப்போது தோழி, ‘‘அம்மா, கோமதி சங்கிலிய தொலைச்சுட்டா,’’ என்று ஆரம்பித்து விவரங்களைச் சொன்னாள். உடனே, கோமதியின் மூத்த அண்ணன், ‘‘அறிவு இருக்கா உனக்கு? தங்கமோ, வைரமோ தீண்டப்படாதவன் தொட்டு எடுத்துக் கொடுத்தத வாங்கி கழுத்தில மாட்டிகிட்டு வந்து நிக்கிற, துடைச்சி கொடுத்தா தீட்டு விலகிருமா என்ன?
சங்கிலிய கழற்றி தூர போடு. அது உன் கழுத்தில கிடக்கிறத பாக்கும்போது, ஏதோ அவனே உன் கழுத்த கட்டி நிக்கிறமாதிரி எனக்கு தெரியுது’’ என்று கத்தினான். அதைக் கேட்டு தாய், ‘‘ஏலே சிதம்பரம் என்ன வார்த்தை பேசுதல, கை நிமிந்த புள்ள கிட்டபோய் கண்ட பயல சேத்து வச்சு பேசுற,’’ என்று
அவனைக் கண்டித்தாள்.‘‘நான் பேசினது இருக்கட்டும் அந்த சங்கிலிய கழற்றி போட சொல்லு’’ என்றான் அண்ணன். இதனால் மருண்ட கோமதி அழுதபடி தனது படுக்கைக்கு சென்றாள். அன்று முழுக்க எதுவும் உண்ணாமல், உறங்காமல் இருந்தாள்.
நல்ல தூக்கத்தில் அண்ணன் பேசியது போல தனது மார்பில் கிடக்கும் சங்கிலியை பார்க்கும்போது தனது மார்பில் முத்துவீரன் படுத்திருப்பது போன்று எண்ணலானாள். அவன் நினைவை விரட்ட முடியாமல் தவித்தாள். நாட்கள் நகர்ந்தன. தான் உணவு உண்ட பாத்திரத்தைகூட அண்ணன்மார்கள் பயன்படுத்தாமல் தன்னை அவமதிப்பதை கண்டு தனக்குள் அழுது புலம்பினாள் கோமதி. சங்கிலியை கழற்றி பீரோவில் வைத்துவிட்டு தனது மூத்த அண்ணனிடம் சென்று, ‘‘அண்ணே செத்துப் போயிடலாமுன்னு தோணுதுண்ணே,’’ என்றாள்.
‘‘ஏன், கழுத அப்படி சொல்லுக, உன் மேல நாங்க பாசம் வச்சிருக்க போயிதான் நீ பண்ணின இந்த தப்ப பொறுத்துக்கிட்டோம்,’’ என்ற அவன் தங்கையின் கைகளை பற்றி ஆறுதல் கூறி கண்ணீரை துடைத்து விட்டான். ‘‘உன்னை ராசாத்தி மாதிரி வாழ வைக்க அண்ணன்கள் அஞ்சு பேரு இருக்கோம். நீ சாவப் போறேன்னு சொல்லுக. தப்ப நீ உணர்ந்திட்டியே அதுவே போதும் என்றான்.
கோமதி வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருப்பதைப் பார்த்த மூத்த அண்ணன், ‘‘எப்பவும்போல இரும்மா, உனக்கென்ன கவலை? போ, உன் சேக்காளி புள்ளங்கள கூட்டிட்டு காடு, கரைன்னு சுத்தாம, கோயிலு குளமுன்னு போயிட்டு வா, மத்தியானம் சாப்பாட்டுக்கு வீடு வந்து சேரு’’ என்று ஆறுதலாகக் கூறினான். தோழிகளோடு வெளியே வந்த கோமதி தோட்டக் காட்டிற்குச் சென்றாள். அங்கே கொடுக்காபுளி பறிக்க முயன்று, முடியாமல் தவித்தனர். தொலைவில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களை உதவிக்கு அழைத்தனர். ஒரு பையன், ‘‘எங்களால முடியாது அக்கா, அந்தா போற முத்துவீரன கூப்பிடுங்க,’’ என்று கூற, ‘‘ஏண்டா பெயர சொல்ற? உன் வயசு என்ன, அவரு வயசு என்ன’’ என்று கோபமாகக் கேட்டாள் கோமதி.
‘‘ஓ… கத அப்படி போகுதா!’’ என்ற சிறுவர்கள் சிரித்துக்கொண்டே ஓடினர். உடனே தோழி கல்யாணி, ‘‘என்னட்டி, உனக்கு கிறுக்கு ஏதாவது புடிச்சுபோச்சா, சாதியில குறைஞ்சவன பேரு சொல்லிதானே கூப்பிடுவோம்?’’ என்று கேட்டாள். ‘‘அவனுக்கு என்னட்டி குறைச்சல்? திடகாத்திரமான உடம்பு, துணிச்சல்!’’ என்ற கோமதி, அவ்வழியே பனை ஓலைகளை சுமந்தபடி வந்த முத்துவீரனை அழைத்தாள். அவன் அருகே வந்ததும் கோமதி திடீரென அழுதாள். ‘‘ஏங்க அழுவுறீங்க? நான் என்ன புள்ளபுடிகாரனா’’ என்று கேட்டான் முத்துவீரன். அவன் கையை பிடித்த கோமதி ‘‘ஒத்த சங்கிலிய எடுத்துக்கொடுத்து செத்து போற அளவுக்கு என்ன நினைக்க வச்சுப்புட்டீங்க’’ என்றாள்.
அதைக்கண்டு தோழிகள் திடுக்கிட்டு நின்றபோது, சற்றுத் தொலைவில் இக்காட்சியைக் கண்ட கோமதியின் உறவினர் ஒருவர், ‘‘உச்சி வெய்யில் வருமுன்ன வீடு போய் சேருங்க புள்ளைங்களா,’’ என்று சத்தம் போட்டார். ‘‘கோமதி நாங்க இன்னைக்கு செத்தோம். இந்தா பூதலிங்கம்பிள்ளை பாத்துட்டு போறாரு, நாளைக்கு எங்கப்பன் எனக்கு பாடை கட்டியிருவான்’’ என்றாள் கல்யாணி. ‘‘உங்களுக்கே இந்த நிலமைன்னா, எனக்கு’’ என்று பதறினாள் கோமதி. பிறகு முத்துவீரனிடம், ‘‘இந்தா பாரு, இந்த ஜென்மத்தில உன் கூடத்தான் என் வாழ்வோ, சாவோ. சீக்கிரம் என்னை கூட்டியிட்டு எங்காச்சும் போ,’’ என்று பரபரத்தாள்.
‘‘தொட்டாலே தீட்டுன்னு சொல்லுற என்ன கூட்டிட்டு போக சொல்லுகளே’’ என்று வௌ்ளாந்தியாய் கேட்டான் முத்துவீரன். நம்பிக்கையோடு கோமதி தனது தோழிகளிடம் சொன்னாள்: ‘‘பூதலிங்கம் மாமா வீட்ல போய் சொல்லுறதுக்கு முன்னோடி நீங்க போய் சொல்லி உங்களுக்கு வர இருக்கும் கெட்ட பெயரை மாத்திக்கங்கடி” என்று கூறி தோழிகளை விரட்டினாள். உடனே தோழிகள் கோமதி வீடு சென்று மூத்த அண்ணனிடம் விவரம் சொன்னார்கள். ‘‘நீங்க, நல்ல புள்ளங்களா இருக்கப்போய் உடனே வந்து சொல்லுறீங்க, என்கூடயும் வந்து பொறந்துச்சே. இப்ப எங்க இருப்பா அந்த கழுத,” என்று கேட்டபடி தனது சகோதரர்களை அழைத்துக்கொண்டு கையில் ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு மூத்தவன் புறப்பட்டான்.
‘‘என் பெத்த அப்பன் ஆத்தா நிலம என்னவாகும்? இப்படி திடுமுடுன்னு கூட்டிட்டுப் போக சொல்லுதியே. எனக்கு உங்கமேல மருவாதி இருக்கே தவிர விருப்பம் வரலியே,’’ என்று தவிப்புடன் கூறினான் முத்துவீரன்.‘‘முத்து நான் உன்னை நம்பி இருக்கேன். ஒண்ணு என்ன கூட்டிட்டு போ, இல்லண்ணா இங்கேயே என்னை கொன்னுபோடு. வீட்டுல இவ்வளவு நாளும் செல்லமா வளர்த்திட்டு, இப்போ அந்த சங்கிலி விஷயத்தில என்னை அப்படி பேசிட்டாணுங்க எங்க அண்ணமாறுங்க, என்னால தாங்க முடியல, இதுல எங்க மாமா வேற ஏதாச்சும் தப்பா சொன்னா, என்ன பேசியே கொல்லுவானுங்க,’’ என்றாள் கோமதி. ‘‘சரி, என்னை நம்பி வந்திட்ட வா போலாம்’’ என்றபடி அவளது கையை பிடித்து அழைத்துச் சென்றான் முத்துவீரன். கோமதியின் அண்ணன் மார்கள் பூதலிங்கத்திடம் போய் கேட்க, அவரோ ‘தங்கச்சிய நான் பார்க்கவே இல்லையப்பா, அவ எப்படிப்பா காட்டுக்கு போவா?’ என்று பதில் கூறினார். இதையறிந்த கோமதியின் தோழிகள், கோமதி அவசரப்பட்டுட்டாளே என்று வருந்தினர். தோணுகால் கிராம எல்லையில் எருக்கம்பூ செடிகளிடையே பதுங்கி இருந்தனர் முத்துவீரனும், கோமதியும். அந்த இடம் நோக்கி அவளது அண்ணன்மார்கள் அருவாள், வேல் கம்போடு வந்து கொண்டிருந்தனர். ‘‘அவங்க கையில கிடைச்சா நம்மள கண்டதுண்டமா வெட்டி போடுவானுங்க. எப்படியும் சாகத்தான் போறோம், அதுக்கு முன்னாடி நாமளே செத்துருவோம், வலிக்காம சாக வழியிருந்தா சொல்லுங்க, உங்களத்தான் கேட்கிறேன்’’ என்றாள் கோமதி.
கண்ணீர் வழிந்தோடிய அவளது கன்னத்தை துடைத்து விட்டு முத்துவீரன் சிரித்தான். ‘‘என்னை நம்பி வந்தவள் நீ, உன்னை காப்பாற்றி வாழ வைப்பது எனது கடமை, வருபவர்களின் தலைகளைக் கொய்து உனது கால்மாட்டில் வைக்கிறேன்’’ என்றான். அப்போது அவனது வாயை மூடிய கோமதி, ‘‘எனது அண்ணன்மார்களை எதிர்த்து சண்டை போடுங்க, ஆனா அவங்க உசுருக்கு உங்களால் எதுவும் ஆகக்கூடாது’’ என்றாள். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் நின்று கோமதியின் தலைமுடியை பிடித்து இழுத்தான் அவளது கடைசி அண்ணன். ‘‘ஓடுகாலி நாயே உனக்கு என் கையால தான் சாவு’’ என்று அரிவாளை எடுத்து வீச, தனது வலது கையால் தடுத்து அவனை மார்பில் உதைத்தான் முத்துவீரன்.
அப்போது மூத்த அண்ணன் முத்துவீரனை அரிவாளால் வெட்டினான். கீழே சரிந்து விழுந்த முத்துவீரனை ஐந்து பேரும் சேர்ந்து கண்ட துண்டமாக வெட்டினார்கள். ‘‘சாணி அள்ளுற பைய உனக்கு ஜமீன் வீட்டு கணக்குபிள்ள பொண்ணு கேக்குதோ’’ என்று கெக்கலித்தார்கள். கோமதியையும் வெட்டிக் கொன்றனர். முத்துவீரன் கொலையுண்ட சேதி கேட்டு ஓடோடி வந்தனர் அவனது பெற்றோர். தலை வேறு முண்டம் வேறாக கிடந்த உடலை ஒருங்கே வைத்து அழுதாள் பெற்றவள். இறுதி சடங்குகள் முடிந்து எட்டு நாட்கள் கடந்தன. முத்துவீரன் ஆவியாக வந்து கோமதியின் அண்ணன்மார்களை பலி எடுத்தான். கோமதியின் சாதியினர், முத்துவீரன் தகப்பன் சுப்பையனிடம் சென்று ‘‘நடந்தது நடந்து போச்சு. அவன் ஆத்மாவ சாந்தப்படுத்தனும். ராவு இருட்டி யாரும் ஊருக்குள்ள நடமாட முடியாம அஞ்சறாங்க’’ என்றனர்.
இதையடுத்து மலையாள மாந்திரீகவாதிகளை வரவழைத்து அவர்கள் சொன்னபடி, முத்து வீரனுக்கு தோணுகால் கிராமத்தில் பீடம் அமைத்து, நிலையம் கொடுத்து நாற்பத்தோரு வகை பண்டங்களும், ஒன்பது வகை பழங்களும் வைத்து பூஜித்தனர். கோயிலும் எழுப்பப்பட்டது. முத்துவீரன் சாந்தமான தெய்வமானான். அவனை நம்பி கை தொழும் அடியவர்களுக்கு அருள்பாலித்தான். முத்துவீரனுக்கு தோணுகால், தெற்கு கழுகுமலை, வானரமுட்டி, ஆத்திகுளம், நக்கலமுத்தம்பட்டி, ஆசூர் கிராமங்களில் கோயில்கள் உள்ளன. கோமதிக்கும் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அம்மன் கோயில் என்று அழைக்கின்றனர். அவரது சாதி பெண்கள் மட்டுமே கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆண்கள் யாரும் வருவதில்லை. முத்துவீரன் கோயிலுக்கு மேற்கு பக்கம் அம்மன் கோயில் உள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment