Thursday, 24 May 2018

பதினெட்டாம் படி கருப்பசாமி வரலாறு

வால்மீகி ஆசிரமத்தில் கர்ப்பிணியாகத் தங்கியிருந்த சீதை, அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அவனுக்கு லவன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள். ஒருமுறை பச்சிளம் பாலகனாக இருந்த லவனை, வால்மீகியிடம் ஒப்படைத்து விட்டு, நந்தவனத்திற்கு அருகேயுள்ள நீரோடைக்கு தண்ணீர் எடுக்கச் சென்றாள். செல்லும் வழியில் புலி உறுமும் சத்தம் கேட்டது. தனது மகனை, வால்மீகி முனிவரின் கண்காணிப்பில் விட்டுட்டு வந்தோமே, அவர் தியானம் செய்து கொண்டிருப்பாரே, வனவிலங்குகளால் தனது மகனுக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அஞ்சிய சீதை, பாதி வழியிலேயே திரும்பி வந்தாள். அவள் நினைத்ததுபோலவே வால்மீகி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

பிஞ்சுக் கரங்களையும், கால்களையும் அசைத்தபடி புன்சிரிப்புடன் இருந்த தனது மகனை கையில் எடுத்து, மார்போடு வாரி அணைத்துக் கொண்ட சீதை, குழந்தைக்கு முத்தமழை பொழிந்தாள். யாகசாலைக்கு பின்புறம் சென்று குழந்தைக்கு அமுதூட்டினாள்.  தியானம் முடிந்து, கண் விழித்து பார்த்த முனிவர் திடுக்கிட்டார். குழந்தையை காணவில்லை. நீர் முகந்துவரப் போயிருக்கும் சீதைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தார். உடனே, ஓரு தர்ப்பை புல்லை எடுத்து தனது சக்தியால் லவனைப்போன்று ஒரு ஆண் குழந்தையை உருவாக்கினார். அப்போது சீதை லவனை ஏந்தியபடி வந்தாள். ஆசிரமத்தில் லவனைப் போலவே இன்னொரு குழந்தை இருப்பதைக் கண்டு வியந்தாள். ‘‘யார் குழந்தை இது? எப்படி இங்கே?’’ என்று முனிவரிடம் கேட்டார்.

அதற்கு அவர், “சீதா, நீ லவனை எடுத்துச் சென்றது தெரியாமல், லவனைக் காணவில்லை என்று நான் பதறிப் போய்விட்டேன். உனக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் குழம்பினேன். உடனே தர்ப்பை புல்லால் இந்தக் குழந்தையை உருவாக்கினேன்,’’ என்றார். முனிவர் மீது பரிதாபப்பட்ட சீதை, அவர் மனம் வருந்தக்கூடாதே என்பதற்காக, ‘‘அதற்கென்ன, இந்தக் குழந்தையையும் நானே வளர்க்கிறேன்,' என்று கூறி, அந்த குழந்தைக்கு குசன் என்று பெயரிட்டு, லவனுக்கு இணையாக வளர்த்து வந்தாள். (குசம் என்றால் தர்ப்பைப்புல்) தன்னுடைய அஸ்வமேத யாக குதிரையை லவனும் குசனும் மடக்கி வைத்திருக்க, அதை அறிந்த ராமர் அவர்கள் யாரென அறியாமல் இருவரோடும் போரிட்டார்.

முடிவில் லவன் தன் மகன் என்றும், குசன் தர்ப்பை புல்லால் உருவானவன் என்றும் வால்மீகி முனிவர் சொல்ல அறிந்தார். இந்நிலையில் சீதையின் கற்பை சோதிக்க தீக்குண்டம் தயாரானது. முடிவில் சீதை பூமிக்குள் புகுந்து மறைந்தாள். அதன் பின்னர் தனது வாரிசுக்கு முடி சூட்ட ராமர் நினைத்தார். தனது மகனை அடையாளம் காண எண்ணினார். அவையோர் யோசனைப்படி இருவரையும் யாகத்தீயில் இறங்கி வருமாறு கூறினார். லவன் எளிதாக இறங்கி வந்தான். குசன் நெருப்பில் இறங்கி, உடல் கருகிய நிலையில் துடித்தபடி வெளியே வந்து விழுந்தான். உடனே ராமன், குசன் மீது இரக்கப்பட்டு, ‘‘சரி, நீயும் என் மகன்தான், உனக்கும் ராஜ்யத்தில் சில பகுதிகள் தருகிறேன். நீயும் நாடாள வேண்டும்,’’ என்றார். 

அதற்கு குசன் ‘‘இந்த வாலிப பருவத்தில் இப்படி அழகு இழந்து, கருத்த மேனியுடன் நான் இந்த நாட்டில் இருக்க விரும்பவில்லை, கானகம் செல்கிறேன்,’’ என்று கூறிவிட்டு, வால்மீகியின் ஆசிரமம் நோக்கிச் சென்றான். குதிரையில் பயணம் தொடர்ந்த அவன், தொடர மன உளைச்சலுடன் மேற்கு மலைத்தொடர் பகுதிக்கு வந்தான். பின்னால் புலி உறுமும் சத்தம் கேட்டது. உடனே கையில் வைத்திருந்து வாளை எடுத்து வீச முற்பட்டான். அப்போது ஹரிஹரசுதனான ஐயப்பனின் குரல் கேட்டது: ‘‘யேய் கருப்பா, நிறுத்து!’’ கருப்பன் திரும்பி பார்த்தார், புலிமீது அமர்ந்தபடி ஐயப்பன் காட்சியளித்தார். ‘‘இந்தக் காட்டிற்குள் தனித்து செல்கிறாயே, நீ யார்?’’ என்று கேட்டார். (கருப்பன் என்று பெயர் சூட்டியதே ஐயப்பன் தான்) நடந்த தனைத்தையும் குசன் சொன்னான்.

பின்னர் அவன் ஐயப்பனிடம், ‘‘இந்த அடர்ந்த கானகத்தில் புலி கூட்டத்தை கூட்டிக்கொண்டு, வன்புலி மீது அமர்ந்தபடி எங்கு செல்கிறீர்?’’ என்று கேட்க, ஐயப்பன் தனது பிறப்பையும், இதற்கான காரணத்தையும் கூறினார். அதாவது, தன்னை வளர்த்த அன்னை கோப்பெருந்தேவியின் தீராத வயிற்று வலியை போக்க வைத்தியர் கூறியதன் பேரில், தந்தை பந்தளராஜன் ராஜசேகரன் உத்தரவிற்கிணங்க புலிப்பாலுக்காக புலியை அழைத்துச் செல்வதாக ஐயப்பன் பதிலுரைத்தார். பின்னர், ‘‘உனக்கு யாரும் இல்லை என்று கலங்க வேண்டாம். நான் இருக்கிறேன். வா,’’ என்று சொல்லி கருப்பனைத் தன்னுடன் சபரி மலைக்கு அழைத்துச் சென்றார். ‘‘இங்கு இரவு தங்கிக்கொள். நாளை உதயமாகும்போது நான் வந்து விடுகிறேன்.’’ என்று கூறிச்சென்றார்.

புலிகள் கூட்டத்துடன் வருவதைக் கண்ட அவரது தாய் ஐயப்பனின் காலடியில் வந்து விழுந்தாள். 'மணிகண்டா, என்னை மன்னித்து விடப்பா, என் வயிற்றுப்பிள்ளை ராஜ்யம் ஆள வேண்டும் என்பதற்காக, கடவுள் தந்த தெய்வப்பிள்ளையான உன்னை காட்டுக்கு அனுப்பி வைத்த பாவி நான். என்று கூறி அழுதாள். மன்னன் ராஜசேகரன் கோபம் கொண்டான். இந்த சதிக்கு காரணமாக இருந்த அமைச்சரையும், உடந்தையாக இருந்த அரண்மனை வைத்தியரையும் கட்டி இழுத்து வாருமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டான். அவர்களை மன்னித்து விட்டுவிடும்படி ஐயப்பன் கேட்டுக்கொண்டான்.’’ பின்னர் புலிகளின் பக்கம் திரும்பி, ‘‘இந்திரனே, தேவர்களே நீங்கள் செய்த உதவிக்கு நன்றி, நீங்கள் தேவலோகம் திரும்பலாம்,’’ என்று சொல்ல, மறு நிமிடமே ஐயப்பனை சுமந்து வந்த புலியும், புலி கூட்டமும் மறைந்தன. மன்னன் ராஜசேகரன் ஏதும் புரியாமல், ‘‘மணிகண்டா, யாரப்பா நீ? என்ன திருவிளையாடல் இது?’’ என்று கேட்டார்.

‘‘அதை நான் சொல்கிறேன் மன்னா,’’ என்று அறிவித்தபடி உள்ளே வந்தார் அகத்திய மாமுனிவர். அவர் ஐயப்பனின் பிறப்பையும், அதற்கான காரணத்தையும் கூறினார். ராஜசேகரனும், கோப்பெருந்தேவியும் மெய் சிலிர்த்து போனார்கள். ஹரியும், ஹரனும் பெற்ற மைந்தனா நமது மடியில் தவழ்ந்தது என்று எண்ணி வியந்தனர். ராஜசேகரன் அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க விரும்பியபோது ‘‘தந்தையே என்னை மன்னித்து விடுங்கள். மகிஷியை அழிக்கும் அவதார நோக்கத்துக்குப் பிறகு இந்தக் கலியுகத்தில் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களைக் காக்க வேண்டியது என் கடமை. எனக்கென்று ஓரிடத்தை அமைத்துக்கொண்டு, என்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க விரும்புகிறேன். அரச சிம்மாசனத்தை விட பக்தர்களின் இதய சிம்மாசனமே எனக்கு விருப்பமானது,’’ என்றார் ஐயப்பன்.

‘‘எந்த இடம் உனக்கு வேண்டுமோ எடுத்துக்கொள்’’ என்று மன்னர் அனுமதிக்க, ஐயப்பன் அம்பு எய்தார். அது விழுந்த இடம் சபரிமலை. ‘‘அந்த இடத்தில் ஆலயம் அமைக்க வேண்டும். எப்படி என்பதை அகத்திய மாமுனி கூறுவார்,’’ என்று கூறிய ஐயப்பன், அனைவரிடமும் விடைப்பெற்று ஜோதியாய் உருமாறி மறைந்தார்.
அகத்தியர் கூறியபடி ஆலயம் அமைக்கப்பட்டது. கருப்பனிடம் வந்த ஐயப்பன். ‘‘கருப்பா, இவன் உன்னோடு இருப்பான்,’’ என்று கூறி தனது இளம் வயது முதல் உடனிருந்த ஒரு வாலிபனைக் காட்டினார். அவர்தான் பதினெட்டாம் படியின் கீழ் கருப்பனோடு நிற்கும் கொச்சு கடுத்த சுவாமி. உயர்ந்த உடல்வாகும், கருத்த மேனியும் கொண்டு, வல கரத்தில் அரிவாளும், இடக் கரத்தில் கதாயுதமும் கொண்டு நின்ற கோலத்தில் பாதுகாவலனாக நிற்கிறார் கருப்பன்.  ஐயப்பன் இருக்கும் இடங்களில் எல்லாம் காவலனாக இந்த கருப்பன் இருந்து வருகிறார்.

பதினெட்டாம் படியின் கீழ் நிற்பதால் அவருக்கு பதினெட்டாம் படி கருப்பன் என்று பெயர். ஐயப்பனை நினைத்து சபரி மலை செல்ல மாலை அணியும் முதல்நாள் பூஜையின் போது அனைவரும் சரணகோஷம் சொல்வதுண்டு. அப்போது கருப்பனை அழைக்க வேண்டும். அது போல் இருமுடி கட்டி வீட்டில் இருந்து புறப்படும்போது வீட்டு வாசலில் சிதறு தேங்காய் உடைத்து ‘நான் மணிகண்டனைக் காண சபரிக்கு செல்கிறேன். அதுவரைக்கும் என் வீட்டிற்கும், குடும்பத்திற்கும். நீயே காவலாக இரு,’ என்று கருப்பனை வேண்டிக்கொள்வது வழக்கம். அதுபோல் மலைக்கு சென்று வீடு திரும்பும்போதும் வாசலில் சிதறு தேங்காய் உடைத்து
‘நான் தரிசனம் கண்டு வந்துவிட்டேன். இதுவரை என் வீட்டையும், குடும்பத்தையும் காத்த உனக்கு நன்றி அய்யனே,‘ என்று சொல்வதும் வழக்கம். அப்படி ஒரு காவல்தெய்வம்தான் கருப்பன்.

அந்த கருப்பன் தான், ஆரியங்காவில் சுடலைமாடனை தடுத்தார். 'மாகாளிப்பெரும்புலையனை வதம் செய்துவிட்டு, ரத்தக்கறையுடன் காணப்படுகிறாய். நீ பாபநாசத்தில் தீர்த்தமாடியும், கன்னியாகுமரியில் கடலாடியும் வந்தால் உள்ளே அனுமதிப்பேன்' என்று கூறினார். இவர்களின் குரல் கேட்டு அங்கு வந்த அன்னை பேச்சியம்மன், ‘‘இப்போது அந்தி பொழுதாச்சு, எங்கும் போகவேண்டாம், இங்கு இரவு தங்கி, நாளை உதயத்திற்கு பின் செல்லலாம்,‘‘ என்று கூறி சுடலைமாடனையும், மாஇசக்கியையும் தன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தாள்.

ஆரியங்காவில் ஐயப்பன் கோயில் வடக்கு வாசலில் சுடலைமாடன் கருப்பண்ணசாமியாகவும், மாஇசக்கி, கருப்பாயியாகவும் நின்ற கோலத்தில் அருள்கின்றனர்.
கருப்பண்ணசுவாமி வலது கையில் அரிவாளும், இடது கையில் வல்லாயுதமும் கொண்டிருக்கிறார். கருப்பாயி கேரள மரபில் வலது பக்கம் கொண்டையிட்டு சுவாமியின் அருகே நிற்கிறாள். வலது பக்கம் அவரின் வாகனமான வெள்ளைக்குதிரையும் காணப்படுகிறது. கோயிலின் வெளியே புலமாடன் இரு கரம்
கூப்பியபடி நிற்கிறார்.  கோயிலின் வட கிழக்கே பேச்சியம்மன் கோயில் உள்ளது. அங்கும் சுடலைமாடன், இசக்கியம்மன், பேச்சியம்மன் மூவரும் உள்ளனர்.

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment