Thursday, 24 May 2018

மாசானம்_கட்டையேறும்_பெருமாள்_வரலாறு

மாசானம். இந்த மாசான சாமி காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார். வாய்மை தவறாது வாழ்ந்த மன்னன் அரிச்சந்திரனே இந்த மாசான சாமி என்கிறார்கள். அயோத்தி அருகே இருந்த கண்ணோசி நகரத்தை ஆண்டு வந்த சூரிய குலத்து திரிசங்கு மகாராஜாவின் மகன் அரிச்சந்திரன். தந்தையை தொடர்ந்து கண்ணோசி நகரத்தை ஆண்டு வந்தான். சந்திரமதி என்ற கற்புநெறி தவறாத மங்கையை மணந்தான். அவர்கள் லோகிதாசன் என்ற பாலகனை பெற்றெடுத்தனர். பொய் சொல்லாத புண்ணியவனாக கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு வாழ்ந்து வந்தான் அரிச்சந்திரன். ஒரு நாள் தேவலோகத்தில் உள்ள இந்திரசபையில் பூலோகத்தில் சத்தியம் தவறி நடக்கின்றனர்;

இவர்களில் மன்னர்களும் உண்டு என்ற விவாதம் ரிஷிகளிடையே உருவானது. அப்போது வசிட்டர் “பொய்யேதும் சொல்லாமல், சத்தியவானாய், மனுநீதி தவறாது அரசு செய்பவனாய் மன்னன் அரிச்சந்திரன் இருக்கிறான்,” என்று கூறினார். அப்போது விசுவாமித்திரர், “பொய் ஒரு முறையும் கூறாமல் எவரும் இல்லை,” என வாதிட்டார். “ஒரு காலும் பொய் சொல்ல மாட்டான். அரிச்சந்திரன்,” என்று மீண்டும் உறுதியாகக் கூறினார் வசிட்டர். “நான் அவனை பொய் கூற வைக்கிறேன். அப்படி அவன் பொய் கூறி விட்டால்?” என்று விசுவாமித்திரர் கேள்விக்கணை தொடுக்க,  உடனே வசிட்டர், “அரிச்சந்திரன் நான் கூறிய நல்லொழுக்கங்களில் சிறிதேனும் தவறுவாயின், நான் என் தவம் முழுவதும் கைவிட்டு, தலையோட்டிலே கள்ளேந்தியுண்டு தென்திசைநோக்கி செல்வேன்,” என்று சூளுரைத்தார்.

பொய் கூற வைக்க, தனது தவ வலிமையால் அரிச்சந்திரனுக்குப் பல சோதனைகளை கொடுக்கிறார். அவனது வாழ்க்கை நிலையை மாற்றுகிறார். நாடாண்ட அவனை காடாளச் செய்கிறார். கட்டிய மனைவியையும், பெற்ற தவப்புதல்வனையும் பிரியச் செய்து கால்படி அரிசிக்காகச் சுடுகாடு காக்கும் வெட்டியானாகவும் மாற்றினார். மாண்டு போன மகனை எரிக்கும் நிலை வந்தும்கூட பொய் சொல்லாமல் தர்மம் காத்த அரிச்சந்திரனிடம் தோற்றுப்போனார் விசுவாமித்திரர். இறுதியில் அவன் முன் தோன்றிய விசுவாமித்திரர் ‘‘யாம் உன்னை சோதிக்கவே இவ்வாறு சோதனை நடத்தினோம். நீங்கள் மூவரும் கைலாசம் போகக்கடவது,’’ என வரம் தந்தார். கைலாசம் சென்ற அரிச்சந்திரன் சிவபெருமானிடம் ‘‘மனிதப்பிறவி இனி வேண்டாம். கண்டிப்பாக நான் பூலோகம்தான் செல்ல வேண்டும் என்றால் என்னை மானிடர்கள் பூஜிக்க வேண்டும்.

அவர்களுக்கு வேண்டும் வரம் நான் அளிக்க வேண்டும். அதுவும் அவர்களுக்கு பலன் அளிக்க வேண்டும். எனக்கு கோயில், மாடங்கள் எதுவும் வேண்டாம். மயான கரையோரம் காவலனாய், இறைவா, உமக்கு ஏவலனாய், சேவகனாய் இருக்க விரும்புகிறேன்,’’ என்று கேட்டுக்கொண்டான். ‘‘அதன்படியே ஆகட்டும்’’ என்று சிவபெருமான் வரமளித்து பூலோகம் அனுப்பி வைத்தார். மாசற்ற வாழ்வளிக்கும் மாசானம் என்ற பெயரோடு நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மயான பகுதிகளில் திறந்த வெளியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறான் அரிச்சந்திரன். அரிச்சந்திரன் கோயில் என்றாலே நினைவுக்கு வருவது காசி என்னும் வாரணாசி நகரமாகும்.

காசி நகர் மயானத்திற்கு சிறப்பு ஏற்பட காரணம் அம்மயானத்தை ஒரு காலத்தில் அரிச்சந்திரன் காவல் காத்து காசி விசுவநாதரின் ஆசியும், வரமும் பெற்ற காரணத்தினால்தான். காசியில் நடப்பது போன்றே ஒவ்வொரு ஊர் மயானத்திலும் பிணத்தை எரியூட்டிய பிறகு அதை ஆற்றில் கரைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரும்பாலான மயானங்கள் ஆறு, குளம், ஓடை கரையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். கிராமங்களில் களவு, பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற செயல்களில் எவரேனும் ஒருவர் பொய்யுரைத்தால் ‘‘வா, மாசானம் சாமிகிட்ட வந்து சத்தியம் செய்,’’ என்று அழைப்பதுண்டு. காரணம் அப்படி சத்தியம் செய்தால் அது பொய் சத்தியமாக இருந்தால் அவர் மாசான சாமியின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்ற நம்பிக்கை இன்றும் கிராம மக்களிடையே உள்ளது.

மாசான சாமி இருக்கும் இடங்களிலெல்லாம் கட்டையேறும் பெருமாள் சாமி இருப்பார்.  அரிச்சந்திரன் சுடுகாட்டு காவலுக்கு செல்லும்போது, முனிவருக்கு பணம் கொடுப்பதற்காக, காசியில் பிணம் சுடும் புலையன் வீரபாகு என்பவனிடம் தான் உனக்கு அடிமையாக நடப்பேன் எனக்கூறி அவனிடம் பணத்தை பெற்று முனிவரிடம் கொடுத்து அனுப்பினான் அரிச்சந்திரன். அதன்படி பிணம் சுடுவதற்கு கொடுக்கப்படும் கூலியும் முழத்துண்டும் புலையன் வீரபாகுக்கு; வாய்க்கரிசியும், கால் பணமும் அரிச்சந்திரனுக்கும் என்று அவனுக்கும், முன்பு அரிச்சந்திரனிடம் அமைச்சனாக இருந்த சத்தியகீர்த்திக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது.

இப்படி இருக்கையில், அரிச்சந்திரனின் மகன் லோகிதாசன் நாகத்தால் தீண்டப்பட்டு மரணம் எய்தினான். வெட்டியான் அரிச்சந்திரனுக்கு கூலி கொடுக்க பொருளற்ற நிலையில் சந்திரமதி மகனின் உடலை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு வருகிறாள். “கூலி எனக்கு வேண்டாம், ஆனால், புலையனுக்கு கொடுக்க வேண்டுமே” என்று சந்திரமதியிடம், அழுதபடியே அரிச்சந்திரன் கூற, அதுவும் இல்லை என்று சந்திரமதி கூறினாள். லோகிதாசன் உடலை எரிக்கமுடியாமல் ஒதுங்கிக்கொண்டான். தாய் சந்திரமதியால் லோகிதாசன் உடல் சுடுகாட்டில் எரியூட்டுவதற்காக கட்டை மேல் அடுக்கி வைக்கப்பட்டது. எரியூட்டும் முன் விசுவாமித்திரரால் உயிர்பிக்கப்பட்டதால் லோகிதாசன் கட்டையேறும் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment