தூத்துக்குடி மாவட்டத்தில், அக்காலத்தில் நான்கு பெரிய மாமரங்கள் அடர்ந்து வளர்ந்தோங்கியிருந்த பகுதி நாலுமாவடி என்று அழைக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் பரந்தாமனும், பரமசிவனும் ஒன்றே என்பதை குறிக்கும் வகையில் சில கோயில்களில் சிவனிணைந்த பெருமாள் சாமி சிலை இடம்பெற்றிருக்கும். அக்கோயில்களில் காவல் தெய்வங்களுக்கு அசைவ படைப்புகள் படைக்கப்பட்டாலும், சிவனிணைந்த பெருமாளுக்கு சைவம் மட்டுமே படைக்கப்படுகிறது. அந்த வகையில் சிவனே பாதக்கரையான் சாமியாக அவதரித்ததாகவும், ஆதியில் அவதரித்தவர் நாராயணன் என்றும் இப்பகுதி மக்கள் கருதி, இருவருக்கும் கோயில் எழுப்பி பூஜித்து வந்தனர். ஒருநாள் நீலவண்ண பெருமாள் என்பவர் பனைமர உச்சியில் பாளையை சீவிக்கொண்டிருந்தபோது, வயது முதிர்ந்த ஒருவர் பனைமரத் தடியில் நின்றபடி, அவரிடம், “பதநீர் குடிக்க வேண்டும். பட்டைக்கு ஓலை வெட்டிப் போடு’’ என்றார். பெருமாளும் ஓலையை வெட்டிப் போட்டார். பிறகு இறங்கி வந்து பார்த்தால் முதியவரைக் காணோம்.
மறுநாள் நீலவண்ண பெருமாள் பனைமரத்தில் பாளை சீவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அதேபோல முதியவர் வந்து அதேமாதிரி கேட்டார். இம்முறை வெட்டிப் போட்டுவிட்டு உடனே சரசரவென்று இறங்கி வந்தார். இப்போதும் முதியவரைக் காணவில்லை. திகைத்து நின்றபோது காலருகே கரையான் ஒன்று ஊர்ந்தது. அதைக் காலாலேயே இடறிவிட்டார். மூன்றாவது நாளும் அதே முதியவர் வந்து கேட்டபோது, பனைமர உச்சியில் இருந்த நீலவண்ண பெருமாள் ‘‘யாருவே நீரு? உமக்கு என்ன வேணும்? ஏன் இப்படி வந்து உசுர வாங்குறேரு?” என கோபத்துடன் கத்தினார். உடனே அவர் பார்வை இழந்தார். அதனால் பனைமரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தார். உடனே அந்த முதியவர் சாதாரண மானவர் அல்ல என்று உணர்ந்தார். ‘‘ ஐயா, நான் தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்,”. என்று கெஞ்சினார்.
அப்போது முதியவர் நெற்றியில் பட்டையும், இடது கரத்தில் கதாயுதம் தாங்கியும், வலது கரத்தால் ஆசீர்வதித்தபடியும் காட்சி கொடுத்தார். பளிச்சென்று பார்வை பெற்ற நீலவண்ண பெருமாள் இறங்கி வந்தார். ‘‘ஐயா, என்னை மன்னித்து, நான் அறியாது செய்த பாவத்தை போக்க வேண்டும்’’ என்றார். சுவாமியாகக் காட்சி தந்த முதியவரோ “இந்த இடம் எனக்கு பிடித்துப் போய்விட்டது. இங்கே நீ எனக்கு கோயில் எழுப்பி பூஜித்து வா,’’ என்றார். அதற்கு நீலவண்ண பெருமாள், ‘‘நானே பனை ஏறி அன்றாடம் ஜீவனம் நடத்துபவன், உமக்குக் கோயில் உருவாக்க என்னிடம் ஏது வசதி’’ என்று கேட்டார். அதற்கு சுவாமி “இந்த இடத்தில் வரும் புரட்டாசி மாதம் 10ம் தேதிக்கு மேல் செவ்வாய் கிழமையில் மூன்று குருத்து ஓலைகளை நட்டு, மாலை சூட்டி தேங்காய், பழம் படைத்து, கிடா வெட்டி பொங்கலிட்டு என்னை வழிபடு. நான் உன்னையும் இந்த ஊர் மக்களையும் காத்து நலம் அளிக்கிறேன்,’’ என்றார்.
‘‘உங்களை எப்படி அழைப்பது?’’ ‘‘உன் பாதமருகே கரையானாக நான் தோன்றினேனல்லவா, அதனால் பாத கரையான் என்றே அழைத்துக்கொள்.’’ அதன்படியே நீலவண்ண பெருமாள் செய்தார். பனை ஓலை மகிமை அறிந்து பக்தர்கள் கூடினர். மக்கள் பாதக்கரையானிடம் கேட்டது கிடைக்கவே நாளுக்கு நாள் பக்தர்கள் அதிகமாயினர். நாளடைவில் கோயில் எழுப்பப்பட்டது. கோயிலில் கிழக்கு பார்த்து ஆதிநாராயணர், அவரை அடுத்து பாதகரையான் சுவாமி நின்றபடி அருள்பாலிக்கிறார். அருகில் பலவேசக்காரசாமி என்ற பலவேசமுத்து குதிரையில் அமர்ந்திருக்கிறார். பரமசிவன்-பார்வதி கிழக்கு நோக்கி தரிசனம் அருள்கின்றனர். கணபதி, மரத்தில் தனியாக கிழக்கு நோக்கி உள்ளார். முருகன், வள்ளி-தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கிறார்.
பட்டாணி சாமி, அகத்தியர், சிவனிணைந்த போத்தி, மலையாள வைத்தியர் ஆகியோர் வடக்கு நோக்கி உள்ளனர். எதிரே பாதாள வடிவம்மனுக்கு தெற்கு நோக்கிய தனிச்சந்நதி உள்ளது. முத்துப்பேச்சி, பத்திரகாளி, முப்பிடாதி, இசக்கி, சுடலைமாடன் ஆகியோர் ஒரே இடத்தில் உள்ளனர். மேற்கு நோக்கும் மாசனபோத்திக்குத் தனிச்சந்நதி. பேச்சி அம்மன் மேற்கு நோக்கியும், தெற்கு நோக்கி காலதேவனும் உள்ளனர். ஒரு காலத்தில் மண்பூடமாக இருந்த சந்நதிகள், இடைக்காலத்தில் வண்ணச்சிலையாக நிறுவப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10க்கு அடுத்த செவ்வாய்கிழமை கோயிலில் கொடைவிழா நடைபெறுகிறது. விழாவின்போது, இரவு மாசன போத்திக்கு சாமக்கொடை, அதன் பிறகு பாதளக்கரை சாமிக்கு பந்தம் பிடித்து ஆடும் நிகழ்வு, வெள்ளையம் முதலாளிக்கு சேவல் குத்தி ஆடுதல், பாதள வடிவம்மைக்கு மஞ்சள் நீராட்டு போன்றவை நடைபெறும். சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை தீவட்டித் திருவிழா பட்டாணிசாமிக்கு நடைபெறுகிறது.
இதில் அரிசி மாவு, கருப்பட்டி சேர்த்து ரொட்டி போல் செய்து படைக்கிறார்கள். இதை உண்பவர்களுக்கு நினைத்த காரியம் நடக்கும். வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்கின்றனர். நாலுமாவடி கிராமத்தை சேர்ந்த சலவை தொழிலாளி ஒருத்தி பக்கத்து ஊருக்கு திருமணமாகி போனாள். அந்த ஆண்டு நடந்த கோயில் கொடைக்குத் தன் கணவனையும் அழைத்துவர அவள் எண்ணினாள். ஆனால், கணவனோ, “பாதக்கரை சுவாமிக்கு என்ன இரட்டை கொம்பா? நான் ஏன் வரவேண்டும்” என ஆணவத்துடன் கூறினான். பின்பு அரைகுறை மனதுடன் வந்தான். அப்போது அந்த பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தாள். கொடைக்கு வந்த அவள் கணவன் சுவாமியை பற்றி குறை கூறிக்கொண்டே இருந்தான். எதிர்பாராதவகையில் அவன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு குறை பிரசவத்துடன் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையை பார்த்த அவள் கணவன் மிகவும் அதிர்ச்சியுற்றான்.
ஆம், அந்தக் குழந்தை இரட்டை கொம்புடன் பிறந்திருந்தது! இதை பார்த்த கணவன், மனைவி இருவரும் மனமுடைந்து போயினர். இதை கேள்விப்பட்ட ஊர் பெரியவர்கள் அந்த பெண்ணிடம், “கொடைவிழாவின் போது சுவாமிக்கு தீப்பந்தம் ஏற்றி உன் கையினால் எண்ணெய் ஊற்றினால் சுவாமியின் கோபம் தணியும்” என்றார்கள். அதுபோலவே அவளும் செய்தாள். காலங்கள் கடந்தது. அதன்பின் இரட்டை கொம்புடன் பிறந்த குழந்தை இறந்துபோயிற்று. அடுத்து மற்ற குழந்தைகள் நலமாகப் பிறந்தன. இன்றும் கொடைவிழாவின்போது சலவை தொழிலாளர் குலத்தில் பிறந்த பெண் ஒருத்திதான் தீப்பந்தத்தில் எண்ணெய் ஊற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறாள். பாதக்கரையானால் வளம் பெற்ற பலர் பல நாடுகளில் உள்ளனர்; நன்றிக் கடன் செலுத்த கொடைவிழா தோறும் இங்கு வருகின்றனர். கோயில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் பணிக்க நாடார் குடி யிருப்பு மற்றும் நாலுமாவடி ஆகிய இரண்டு இடங்களில் பாதக்கரை சுவாமிகள் கோயில் உள்ளது. குரும்பூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில்கள் உள்ளது...
நன்றி
- சு. இளம்கலைமாறன்
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment