Sunday, 27 May 2018

ஏழரைச் சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்யத்தான் வேண்டுமா?

இந்த பரிகாரங்களால் என்ன மாற்றங்கள் ஏற்படும்? 

கிரகங்களை ப்ரீதி செய்யும்போது நமக்கு எந்த விதத்தில் அவை நன்மையைச் செய்கின்றன?

ஏழரைச் சனிக்கு பெரும்பான்மையான ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களில் சில :

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து தயிரும், எள்ளுப்பொடியும் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்தபின், ஏழை எளியோருக்கு எள்ளுப்பொடி சாதம் தானம் செய்யலாம்.

சனி பகவானின் சந்நதியில் எள் முடிச்சிட்ட விளக்கேற்றி வைத்து கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சனிக்கு ப்ரீதியான ஒன்று. சனிக்கிழமையில் ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடும் ஏழரைச் சனியிடம் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

மேற்சொன்ன பரிகாரங்கள் செய்வதால் பெருத்த மாற்றங்களை எதிர்பார்க்க இயலாது.

கிரகங்களை ப்ரீதி செய்வதால் கெடு பலன்களின் தாக்கம் குறையுமே அன்றி முழுமையாக அதிலிருந்து விடுபட இயலாது.

இவ்வாறான பரிகாரங்கள் செய்வதால் கிரகங்களால் உண்டாகும் பலன்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது.

மனம் பக்குவம் அடையும்போது கவலை ஏதும் தெரிவதில்லை.

அசுப கிரஹங்களில் முதன்மையானது சனி என்பதால் இந்த பயம் வருகிறது.

சனி என்றாலே தீய கோள், தீய பலனை மட்டுமே தரும் என்பது போன்ற கருத்து நிலவுகிறது.

சோதனைகளை தந்து நமது முன்னேற்றத்திற்கு சனி தடையாக இருப்பார் என்று எண்ணுவதால் சனி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கு, ஏன் காதால் கேட்பதற்குக் கூட அச்சம் கொள்கிறோம்.

உண்மையைச் சொன்னால் சனியின் மீதான இந்த பயம் அர்த்தமற்றது. சனி என்ற கோள் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் ‘வேகத்தடை‘ (Speed Break) போன்றது.

வேகமாக சாலையில் பயணிக்கும் ஒருவருக்கு வேகத்தடையைக் கண்டதும் ஒருவித எரிச்சல் தோன்றும்.

நமது வேகத்தினை இது குறைத்து விட்டது என்று வருத்தம் கொள்வோம்.

ஆனால், நமது நலன் கருதியே அது அமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விபத்து ஏற்படாமல் நம் உயிரைக் காக்கும் உயரிய பணியை அந்த வேகத்தடை செய்கிறது.

வேகத்தடையைக் கண்டதும் நிதானித்து சென்றோமேயானால் நமது உயிர் காக்கப்படுகிறது.

மாறாக அதனை மதிக்காமல் சென்றோமேயானால் விபத்து உண்டாகி சிரமம் ஏற்படுகிறது.

சனியின் தாக்கம் அதிகரிக்கும்போது நிதானித்து செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டால் சனியைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

No comments:

Post a Comment