Saturday 26 May 2018

சப்பாணி மாடன் வரலாறு

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் குழலி அம்மன் கோயிலில் வீற்றிருக்கும் சப்பாணி மாடன், பருவ வயதில் ஏற்படும் எண்ணோட்டங்களுக்கு தடைப்போட்டு நல்வழி நடக்கச் செய்கிறார். சஞ்சலங்கள், சலனங்கள் முதலானவற்றை போக்கி நல்லருள் தருகிறார். நெல்லை மாவட்டம் கரிசூழ்ந்தமங்கலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த கோட்டியப்பன், ஒரு சலவைத் தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கு மருத்துவச்சியாக திகழ்ந்தார். அப்பகுதியின் சிற்றரசன் பூதப்பாண்டியின் மனைவிக்கு காளியம்மாள் சிறப்பாகப் பிரசவம் பார்த்ததால், கோட்டியப்பன்-காளியம்மாள் தம்பதிக்கு ஊர் எல்லையில் குடிசை அமைத்து வசிக்கவும், துணி துவைக்க ஒரு குளத்தையும் சிற்றரசன் பட்டயம் போட்டுக் கொடுத்தார். அதற்கு நன்றிக் கடனாக தங்களுக்கு பிறந்த மகனுக்கு பூதப்பாண்டி என பெயரிட்டு வளர்த்தனர் தம்பதியர். மகன் ஆரம்ப கல்வியை முடித்து மேலும் படிக்க ஆவல் கொண்டான்.

அதற்கு அப்போதைய சமுதாய ஏற்றத்தாழ்வு இடம் அளிக்கவில்லை. மேலும் சக வயதுடையோரும், ஊர்க்காரர்களும் அவனை பூதம் என்றே அழைத்தனர். காரணம் பாண்டி என்பது குறிப்பிட்ட குலத்தவருக்கான பெயர் என்பதால் துணி வெளுக்கிறவனுக்கு இந்தப் பெயர் கூடாது என்று கூறி அவனை பூதம் என்றே அழைத்தனர். சிறுவன் வாலிபனானான். தாயிடம் கற்றுக்கொண்ட சில மருத்துவ முறைகளை தானும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு செய்து வந்தான். சுளுக்கு எடுத்தல், வாய்வுப் பிடியை நீக்குதல், முதலான சிகிச்சை முறைகளை செய்து கிராமத்தில் நற்பெயர் பெற்றான். முக்கியமாகக்  கண்ணில் விழுந்த தூசியை நாவால் தடவி எடுக்கும் வித்தையை அவன் மட்டுமே கற்றிருந்தான். ஒரு முறை பருவப்பெண் ராக்காயிக்கு கண்ணில் தூசி விழுந்து அவதிக்குள்ளானாள். பெற்றோர் ஒரு திருமணத்துக்காக வெளியூர் சென்றிருந்தனர். வீட்டில் பாட்டியும் இவளும் மட்டுமே. பேத்திக்கு, தூசி தட்ட பூதப்பாண்டியை கோலம்மாள் அழைத்து வந்தாள். பூதப்பாண்டி, ராக்காயியை படுக்க வைத்து கண் தூசியை, நாவால் எடுத்து விட்டான்.

அதற்குக் கூலியாக 2 உழக்கு கடலையை கொடுத்து அனுப்பினாள் பாட்டி. குடும்பத்தினரை தவிர வேற்று ஆண்களை முகம் எடுத்து பார்க்காத ராக்காயி, முதன் முதலில் தன்னைத் தொட்டு தூசி எடுத்த பூதப்பாண்டியன் மேல் மையல் கொண்டாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளுத்த துணி கொண்டு வந்த பூதப்பாண்டியனிடம் தனது விருப்பத்தை தெரிவித்தாள். ‘‘ஆத்தோய், உங்க சாதி சனம் மட்டுமில்லை, ஒட்டு மொத்த 16 கிராமத்து சனங்களும் என்னையும், எங்க அப்பன் ஆத்தாவையும் கொன்னு போடுவாயிங்க... வேண்டாம் ஆத்தா, நீங்க ஏதாச்சும் நினைச்சிப்புட்டு என்னை இல்லாம ஆக்கிப்போடாதீக. முதல்ல துணியை எண்ணி வைங்க, நான் கிளம்புறேன்,’’ என்று கூறியபடி புறப்பட்டான் பூதப்பாண்டியன். மறுநாள் மேலத்தெருவில் நடந்து சென்ற பூதப்பாண்டியனை கையசைத்து அழைத்து ‘‘நீ என்ன கல்யாணம் பண்ணி எங்காச்சும் கூட்டிப்போ, இல்லண்ணா நான் அரளிவிதையை அரைச்சி குடிச்சிபோடுவேன்,’’ என்று கூற, பூதப்பாண்டி கையெடுத்து வணங்கினான். அந்தக் கைகளை ராக்காயி தொட்டாள்.  அதை அப்பகுதியை சேர்ந்த ஊர் நாட்டாண்மைக்கு உடனிருப்பவர் கண்டார். ‘‘ஏலே, என்னலே அங்க நடக்குது?’’ என்று குரல் கொடுக்க ராக்காயி, ‘‘பெரியப்பா துணி வெளுத்தது சரியில்லன்னு சொல்லிகிட்டுயிருந்தேன்,’’ என்றாள். பூதப்பாண்டியன் ‘‘ஏ, சாமி எதுவும் தப்பா  நடந்துடல, நீங்க மானத்தை வாங்கி போடாதீக’’ என்றதும், ‘‘படுக்காழி, நீ பண்ணினது பண்ணிப்போட்டு, மானம், கீனம்முன்னா பேசுதே’’ என்று கூறியபடி அக்கம் பக்கத்தாரை அழைத்தார். 7 ஊரு கிராம மக்கள் உடனே திரண்டனர். பூதப்பாண்டியன் ஊர் மக்கள் திரள்வதை பார்த்து, பயந்து ஓடினான். அவனைப் பின் தொடர்ந்்தவர்கள் அவன் மேல் கற்களை வீசினர். அப்போது, ஒருவர் வீச்சருவை வீச, அது பூதப்பாண்டியன் வலது காலில் பட்டு முட்டுக்கு கீழ் பகுதி துண்டாகி விழுந்தது. ரத்தம் சொட்ட ஓடினான் பூதப்பாண்டியன். பின் தொடர்ந்தவர்கள் கையில் கிடைத்தவற்றையெல்லாம் அவன் மேல் வீசிக்கொண்டே துரத்தினர்.

மயானக்கரையோரம் வந்த அவனால் அதற்கு மேல் ஓட முடியவில்லை. நெல்லி மரத்து மூட்டருகே விழுந்தவன் நிமிர்ந்து பார்த்தான். சற்று தொலைவில் சுடலைமாடன் வீற்றிருந்தார். அவர் சந்நதிக்கு சென்றால் ஊர்க்காரர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்று எழுந்திருக்க முயன்றான். அதற்குள் ஒருவன் வீசிய கல்லொன்று அவனது தலையில் பட, அவன் அப்படியே விழுந்தான். பின்னால் வந்தவர்கள் அவனை கண்டதுண்டமாக வெட்டினர். சிறிது நேர துடிப்பிற்கு பின் அவன் மூச்சு அடங்கிற்று. விஷயம் கேட்டுக் கதறியபடி ஓடிவந்த கோட்டியப்பன் மகனின் உடல் பாகங்களை ஓலை பெட்டியில் எடுத்துச்சென்று மயானத்தில் வரிசையாக அடுக்கி வைத்தார். அவனுடைய வலது முழங்காலுக்குக் கீழே துண்டாடப்பட்டிருந்தது. ‘சண்டியர் மாதிரி இருந்த உன்ன, ஊர்க்கார சண்டாளனுக, சப்பானியா ஆக்கி போட்டானய்யா என்று அழுது புலம்ப, காளியம்மாள், ‘சுடலை நீ இருக்கது உண்மையா? என் மகன் உடல எரிக்க மாட்டேன்.

அவன இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்களுக்கு காரியம் முடிஞ்ச பிறகு தான் இவனுக்கு அனல் மூட்டுவேன். உன் பார்வையில் இருக்கும் இந்த மையானத்தில் அவனை புதைக்கிறேன். இல்லை இல்லை விதைக்கிறேன்,’’ என்று கூறிக் கதறினாள். பூதப்பாண்டியன் இறந்து 16 வது நாள், பூதம் என்று அழைத்த ஊராருக்கு அவன் உண்மையிலே பூதமாகி போனான். அவனை முதலில் கண்டவர், அரிவாளால் வெட்டியவன், கடைசியாக கல் எறிந்தவன் 3 பேரும் ரத்தம் வாந்தி எடுத்து மாண்டார்கள். தொடர்ந்து நள்ளிரவு நேரம் வீட்டுக்கு முன்நின்று அந்த வீட்டுக்காரர்களை பேர் சொல்லி உறவினர்கள் அழைப்பது போல் இருக்கும் வெளியே வந்து பார்த்தால் யாரும் இருக்கமாட்டார்கள். மறு நாள் முதல் அவர்களுக்கு ஏதேனும் நோய் வந்து படுத்த படுக்கையாவார்கள். பட்டப்பகலிலும் நடந்து போவோர், வருவோர் வண்டி கட்டி என செல்வோர் மீதெல்லாம் எங்கிருந்தோ கல், மண் கட்டி என் விழும். இந்த நிகழ்வுகள் 41 நாட்கள் தொடர்ந்துன. அந்த 7 ஊர்காரர்களும் அவதிப்பட்டனர். ஊர் நாட்டாமைகள் ஒன்று கூடி ஒரு மந்திரவாதியை வரவழைத்து சோழி போட்டுப் பார்த்தனர்.

அப்போது இது எல்லாம் பூதப்பாண்டியன் வேலை என்பது தெரிந்தது. உடனே பூதப்பாண்டியனுக்கு  மண் பீடம் அமைத்து படையல் போட்டு பூஜை செய்தனர். அப்போது கூடியிருந்த ஒரு வாலிபர் மீது பூதப்பாண்டியன் இறங்கி, ‘‘ஏய், என்னை கொன்றவங்கள பழி தீர்த்துவிட்டேன். இன்னும் சிலபேரு பாக்கியிருக்காங்க, சும்மா விடமாட்டேன் அவங்கள’’ என்று கூறியதும், ஊரார், ‘உன்னை சாந்தப்படுத்த என்ன செய்யனும் சொல்லு, நாங்க அதன்படி செய்றோம்’ என்றனர். வாலிபன் கூறினான்: ‘‘நீங்க என்ன சாமின்னு அழைக்கனும். எனக்குக் கோயில் எழுப்பனும். கொடை கொடுக்கனும், நடு சாமத்தில பூஜை செய்யனும். சுற்று வட்டார கிராமங்களுக்கு நள்ளிரவு நான் கச்சைகட்டி, கையில் தீப்பந்தத்துடன் வலம் வருவேன். அன்று எல்லா சாதிக்காரங்களும் அவங்க அவங்களுக்கு தோணுற மாதிரி பலகாரங்கள் செய்து வீட்டு வாசலில வச்சுகிட்டு, கதவ சாத்திடனும். நான் எந்த வீட்டுல வேணா சாப்பிடுவேன்.

கொடை கொடுக்கும் போது, என் குலத்து வாலிபனை மாலையிட்டு அலங்கரித்து, அவனது வலது காலைக்கட்டி விழாவில் பங்கேற்க வையுங்கள் அவன்மேல் நான் இறங்குவேன். உங்களை மேம்படுத்துவேன். எனக்கு பூஜை செய்யும் முன் அய்யன் சுடலைமாடனுக்கு படையலிட்டு பூஜை செய்ய வேண்டும்.’’ அதன்படி இன்றும் அந்த ஊர்க்காரர்கள் செய்து வருகின்றனர். நள்ளிரவு பூதப்பாண்டியன் அருள் வந்து ஆடுபவர் யார் வீட்டு பலகாரங்களை சாப்பிடுகிறாரோ அந்த வீட்டில் வளங்கள் பெருகுவதாக கிராமத்தினர் கூறுகிறார்கள். சப்பாணி மாடன் தலைமையிடமாக கரிசூழ்ந்த மங்கலம் இருந்தாலும், அவரை வழிபட்டு வந்தவர்கள் இடம் பெயரும் ஊர்களில் எல்லாம் சுடலைமாடன், சாஸ்தா கோயில்களில் நிலையம் கொடுத்து வணங்கி வருகின்றனர். வாலிப வயதில் சஞ்சல எண்ணங்களால் தடுமாறும் இளைஞர்களை சப்பாணி மாடன் கோயிலுக்கு அழைத்து வந்து வழிபட்டால் மறுவாரமே அந்த எண்ணங்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு பெற்றவர்கள் மனம் விரும்பும் பிள்ளைகளாக மாறி வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். 

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், செய்துங்கநல்லூரில் உள்ள குழலி அம்மன் கோயிலில் சப்பாணி மாடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment