Monday, 21 May 2018

உக்கிரமாகாளியம்மன்

திருச்சி-தென்னூர்

ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் ஆலயம் திருச்சி  தென்னூரில் அமைந்துள்ளது. ஆலயம் வட திசைநோக்கி உள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் நீண்ட பிராகாரம். இடது புறம் சாம்புகாமூர்த்தியின் தனிச்சந்நதி உள்ளது. வலதுபுறம் மகாவில்வமரம் பலநூறு தொட்டில்களை சுமந்த வண்ணம் காட்சி தருகின்றது. அடுத்து மகாமண்டபம் பளிங்குக் கற்களால் தளம் அமைக்கப்பட்டு பளபளவென்று காட்சி தருகின்றது. மண்டபத்தின் நடுவே சூலம், பீடம், சிம்மம் ஆகியவை மூலவரின் எதிரே அமைந்துள்ளன. மகாமண்டபத்தை அடுத்துள்ள கருவறை நுழைவாயிலை நெடிதுயர்ந்த துவாரபாலகிகளின் சுதை வடிவத் திருமேனிகள் இருபுறமும் அலங்கரிக்க, அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் அரக்கன் மகிஷனை வதம் செய்யும் திருக்கோலத்தில் அன்னை அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். அன்னை உக்கிரமாகாளியம்மனுக்கு எட்டு கரங்கள்.

வலது கரங்களில் சூலம், அம்பு, வஜ்ரம், சக்கரம் ஆகிய ஆயுதங்களை ஏந்திய அன்னை தன் இடது கரங்களில் வில், கட்சம், சங்கு, கபாலம் ஆகியவைகளை ஏந்தி காட்சி தருகிறாள். அன்னையின் இடது புறம் சந்தன கருப்பு சாமியும், வலதுபுறம் உற்சவ அம்மனும் தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றின் மேற்கில் சப்த கன்னியர், மதுரைவீரன், சங்கட விமோசன ஆஞ்சனேயர், பரிபூரண விநாயகர்,  விஷ்ணு துர்க்கை ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருட்பாலிக்கின்றனர். வடக்குத் திருச்சுற்றில் தலவிருட்சமான வன்னி மரம் நெடிதுயர்ந்து வளர்ந்துள்ளது. தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள ஸ்ரீ உக்கிரகாளியம்மனும், இங்குள்ள ஸ்ரீ உக்கிரமாகாளியம்மனும் கர்ப்ப கிரகத்தில் ஒரே உருவத்தில் தோற்றம் அளிப்பது வியப்பிற்குரியதாகும். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் முற்கால சோழ வம்சத்தினரால் வழிபட்டு வந்துள்ளது.

காலப்போக்கில் ஏற்பட்ட வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றத்தால் இக்கோயில் சிதைந்து போனதாகவும் பின்னர், ஊர் மக்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். உய்யக்கொண்டான், கோரையாறு, குடமுருட்டி போன்ற ஆற்றின் கரைகளில் திருச்சியில் உள்ள செல்லாண்டியம்மன், குழுமாயி, குழந்தலாயி, அடைக்காயிஅம்மன் மற்றும் உக்கிரமாகாளியம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளது. இந்த ஊரின் சிறப்பு அம்சம். பங்குனி மாதம் இங்கு 15 நாட்கள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.  அன்னை வீதியுலா வருதல், தேரோட்டம், அருள்வாக்கு கூறுதல், மஞ்சள் நீராட்டு, விடையாற்றித் திருவிழா போன்றவை மிகவும் கோலாகலமாக நடைபெறும். சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக தினசரி இங்கு வந்து திருவிழாவில் பங்கு பெறுவார்கள். அப்போது அன்னைக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறும்.

அன்னைக்கு மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதால் கண் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட நோய்களில் இருந்து பூரண நலம் பெறலாம் என கூறுகின்றனர். குழந்தைப் பேறு இல்லாது தவிக்கும் தம்பதியர் அன்னையிடம் வந்து தங்களது குறைகளை முறையிடுகின்றனர். வாழ்க்கையைப் பற்றிய கவலையுள்ளோர் இங்கு வந்து உன்னத வாழ்வைப்பெறுகின்றனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள தென்னூர் அண்ணா நகரில் இந்த ஆலயம் உள்ளது. மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தென்னூர் வரை நகர பேருந்து வசதி உள்ளது...

No comments:

Post a Comment