திருச்சி - இனாம் புலியூர்
சில நூறு ஆண்டுகளுக்கு முன் காட்டுப் பகுதியாக இருந்த பூமி, இனாம்புலியூர். ராமாயணத் தொடர்பு இருந்ததோ என்னவோ இதனை சபரி வனம் என்றும் அழைத்திருக்கிறார்கள். கிராம மக்கள் விறகு பொறுக்கவும், ஆடு மேய்க்கவும் வருவது உண்டு. காலையில் வந்து மாலையில் வீடு திரும்புவார்கள். அங்கே பசுமையான புதர் ஒன்று இருந்தது. ஆடுகளும் மாடுகளும் அந்தப் புதர் அருகே செல்லும். ஆனால், அங்குள்ள புற்களை மேயாமல் திரும்பிவிடும். ஒருசில நேரங்களில் அந்தப் புதர் அருகே செல்லும் அவை, மிரண்டுபோய் திரும்ப ஓடிவரும். இக்காட்சியைக் காணும் மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு எதுவும் புரியவில்லை. ஒருநாள் அந்தப் புதரருகே என்னதான் இருக்கிறது என்று பார்க்க அவர்கள் அதனருகே சென்றனர். ஆரம்பத்தில் எதுவும் தெரியவில்லை. பின் புதரை விலக்கிப் பார்த்தார்கள்.
அங்கே ஒரு அம்மன் சிலையைக் கண்டனர். ஆடு, மாடுகள் இச்சிலையைப் பார்த்துதான் மிரள்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு, ஊருக்குள் வந்து நடந்ததைக் கூறினர். ஊர் மக்கள் வந்து பார்த்தனர். ஒன்றுகூடிப் பேசினர். அந்தச் சிலையை பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் கட்டுவது என முடிவு செய்தனர். உடனே கூரை வேய்ந்து அம்மனை கொலுவிருத்தினர். சபரி வனத்தில் கிடைத்த அந்த அம்மனை, ஸ்ரீ ராமன் அருள்பெற்ற சபரியாகவே கருதி அருள்மிகு சபரிவன மாரியம்மன் என்று போற்றினார்கள். ஊர் மக்களின் கோரிக்கைகளை அம்மன் நிறைவேற்றினாள். அன்னையின் சக்தி புரியத் தொடங்கியது. இதனாலேயே சபரிவர அம்மன் என்றும் காலப்போக்கில் சபரிவார அம்மனும் ஆனாள் இந்த அம்பிகை. ஓலைக்கூரையாக இருந்த ஆலயம் இன்று கற்றளி ஆலயமாகக் காட்சி தருகிறது. கோயில் கிழக்குதிசை நோக்கி அமைந்துள்ளது.
முகப்பில் பலி பீடம். ஆலய முகப்பை அடுத்து மகா மண்டபம். மகாமண்டபத்தின் இடதுபுறம் கருப்பண்ணசாமி சந்நதி. நிறைய சூலங்களுடன் அவர் அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டப நுழைவாயிலில் இருபுறங்களிலும் துவாரபாலகிகளின் சுதை வடிவங்கள். கருவறையில் அன்னை சபரிவார மாரியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு சூடம் ஏற்றி தீபாராதனை காட்டுவது கிடையாது, விளக்கு தீபம் தான். ஆங்கில, தமிழ் மாதப் பிறப்பு, ஆடிமாத வெள்ளிக் கிழமைகள், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவராத்திரியின்போது அபிஷேகம் முடிந்து பக்தர்களுக்கு தட்டைப்பயிறு சுண்டல் விநியோகம் செய்வார்கள். சித்திரை மாதம் மூன்று நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும். சுற்றிலும் உள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் இந்நாட்களில் ஆலயத்திற்கு வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்.
அன்னைக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கும். காப்பு கட்டிய 14ம் நாள் தொடங்கி 3 நாட்கள் மிக விமரிசையாக இந்த விழா நடைபெறும். இரண்டாம் நாள் அன்னைக்கு பொங்கல், மாவிளக்கு படைப்பார்கள். பின் பால்குடம், அலகு, கரகம் பாலித்தல் என ஆலயம் நோக்கி திரண்டு வரும் பக்தர்கள் கூட்டம் தீக்குழி மிதிக்க, சூழ்ந்திருக்கும் பக்தர்கள் பக்திப் பரவசமடைவார்கள். பல நூறுபேர் பங்கு பெறும் இந்த வைபவத்தில் பலருக்கு அம்மன் அருள் வருவதுண்டு. அன்று அன்னை முத்துப் பல்லக்கில் வாணவேடிக்கையுடன் திருவீதியுலா வருவாள். மூன்றாம் நாள், அம்மன் திருவீதி உலா முடிந்த பிறகு, மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா இனிதே நிறைவு பெறும். ஆலயத்தின் வலதுபுறம் பலநூறு ஆண்டுகளைக் கடந்த, பிரமாண்டமாகக் காட்சிதரும் ஆலமரங்கள் இரண்டு உள்ளன. ஆலயத்தின் இடது புறம் அரச மரம் உள்ளது. குழந்தைப் பேறு வேண்டும் சுமங்கலிகள் இந்த மரத்தில் தொட்டில் கட்டிச் செல்கின்றனர். தடை நீங்கி விரைந்து திருமணம் நடக்கவும், குழந்தைப் பேறு வேண்டியும், பெண்கள் அன்னையிடம் மனம் உருகி வேண்டிக்கொள்ள அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது.
மனம் நிறையும் அவர்கள், அன்னையின் சந்நதிக்கு வந்து, மாவிளக்கேற்றி, அபிஷேகம் செய்து, புடவை சாத்தி நன்றியினை கண்ணீர் மல்க தெரிவித்துக் கொள்கின்றனர். குழந்தைக்கு காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகளையும் அன்னையின் சந்நதியிலேயே நடத்துகின்றனர். ஆலயத்தின் இடதுபுறம் விநாயகர் சந்நதி உள்ளது. அடுத்துள்ளது, அம்மா மண்டபம். அம்மை நோய் கண்டவர்கள், துணையுடன் இந்த மண்டபத்துக்கு வந்து சில நாட்கள் தங்குகின்றனர். தினசரி அன்னையின் தீர்த்தம் அவர்களுக்குத் தரப்படுகிறது. அவர்கள் படிப்படியாக குணமாகிறார்கள். முற்றிலும் குணமானதும் அம்மனை தரிசித்துவிட்டு மகிழ்வோடு இல்லம் திரும்புகின்றனர். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நெய்தலூர் காலனி செல்லும் நகரப் பேருந்தில் பயணித்து புலியூர் நிறுத்தத்தில் இறங்கி ஒரு கி.மீ. தெலைவு நடந்து சென்று ஆலயத்தை அடையலாம். தினசரி இரண்டு கால பூஜைகள் உண்டு. காலை 6 முதல் 8 மணிவரையிலும் மாலை 5 முதல் இரவு 8 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment