கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்
வல்லம் என்ற பெயரில் தொண்டை நாட்டில் ஒரு திருத்தலமும், சோழ நாட்டில் ஒரு திருத்தலமும் விளங்குகின்றன. குடியாத்தம் வட்டம் ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள திருவல்லம் எனும் மூதூர் தற்காலத்தில் திருவலம் என வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தரின் பாடல் பெற்றது இத்தலம். தஞ்சாவூருக்கு அருகே உள்ள வல்லமோ, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்றில் இடம் பெற்ற ஒரு பழம் பதியாகும்.
சங்கத் தமிழ் நூலான அகநானூற்றில் இந்த வல்லத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஒரு மன்னவனைப் பற்றிய குறிப்பு காணப்பெறுகின்றது. அகநானூற்றுப் பாடல் எண்.356ல் பரணர் எனும் புலவர் ‘‘நற்றேர்க் கடும் பகட்டி யானைச் சோழர் மருக நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் நல்லடி உள்ளானாகவும்’’ எனக் குறிப்பிட்டு வல்லம் எனும் நகரத்து அரசனின் பெருமையினை உரைத்துள்ளார்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால அரசர்களின் கோட்டைகளின் மதில், அரண், அகழி ஆகியவை பற்றி ஆராய முற்படும்போது, தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே அவற்றின் எச்சங்கள் இன்றளவும் காணப்பெறுகின்றன. புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள பொப்பண்ணக்கோட்டை, வட்ட மதிலரண், அகழி ஆகியவற்றுடன் திகழ்கின்றது. அடுத்து தஞ்சாவூருக்கு அருதேயுள்ள வல்லத்தில் மட்டுமே நீள்வட்ட வடிவில் திகழும் பழைய அகழியின் எச்சங்களைக் காணலாம்.
அந்த கோட்டைக்குள் ஒரு பழமையான சிவாலயமும், பிற்காலத்திய விக்கிரம சோழ விண்ணகரம் எனும் திருமால் ஆலயமும், கோட்டைக்கு வடக்கே வடவாயிற்செல்வியான கரிகாற்சோழ மாகாளி என்ற திருநாமமுடைய தேவியின் திருக்கோயிலும் இன்றளவும் பழமைச் சுவடுகளைச் சுமந்தவண்ணம் திகழ்கின்றன. பழமையான கல்வெட்டுகள் இத்தேவியை ‘‘கரிகாற்சோழ மாகாளி’’ எனக் குறிப்பதால் கரிகாற்சோழன் காலத்திலிருந்தே இவ்வாலயம் திகழ்கின்றது என்பது திண்ணம்.
தொல்காப்பியம் எனும் சங்கத்தமிழ் இலக்கண நூலுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அகத்திணை இயல் முப்பதாம் சூத்திரத்திற்கு உரை கூறும்போது ‘‘சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், கலன்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும் முதலிய பதியிற் தோன்றி...’’ என்று குறிப்பிட்டுள்ளதை நோக்கும்போது கரிகாற்சோழ மாகாளி திகழும் வல்லம், எத்தனை பழமையான பதி என்பது நன்கு விளங்கும்.
1987ம் ஆண்டு விழுப்புரம் வட்டம் எசாலம் எனும் ஊரிலுள்ள ராமநாதேஸ்வரர் திருக்கோயிலில் அவ்வூர் மக்கள் திருப்பணி செய்தபோது பிராகாரத்தில் புதையுண்டிருந்த இருபத்தி மூன்று செப்புத் திருமேனிகள், பூஜை பாத்திரங்கள், பதினைந்து செப்பேடுகள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பெற்று ராஜேந்திர சோழனின் லச்சினையோடு கூடிய ஒரு செப்பேட்டுச் சாசனத் தொகுதி ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தனர். கங்கைக்கொண்ட ராஜேந்திர சோழனின் அச்செப்பேட்டுச் சாசனத்தில், ராஜேந்திர சோழனின் முன்னோர்களைப் பற்றி கூறும் இடத்தில் கரிகாற்சோழனுக்கு முன்னவனாக வல்லப சோழன் என்பான் வல்லபபுரி எனும் வல்லம் நகரத்தைத் தோற்றுவித்து அங்கிருந்தவாறு அரசு மேற்கொண்டான் என்று கூறப்பெற்றுள்ளது. பின்னர் இங்கு கரிகாலன் காலத்தில் கரிகாற்சோழ மாகாளி கோயில் தோற்றம் பெற்றிருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது.
திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் திகழும் வல்லம் நகரத்திற்கு வடக்கில், ஆலங்குடி செல்லும் சாலையில் பேரழகோடு ஏகெளரி அம்மன் கோயில் என்ற பெயரில் இவ்வாலயம் திகழ்கின்றது. ஒரு பரந்தவெளியில் இரண்டு மதில்கள், இரண்டு திருச்சுற்றுகள் சூழ இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
நுழைவுப் பகுதியில் மகாகோபுரப் பகுதி மொட்டைக் கோபுரமாக அகன்ற வாயிலுடனும், நுழைவுப் பகுதிக்கு மேலாக சுதையால் அமைந்த காளிதேவியின் உருவத்துடனும் காட்சி நல்குகின்றது. மகாவாயில் கடந்து உள்ளே செல்லும்போது சில கிராம தேவதைகளின் சிற்பங்களும், தொன்மையான சோழர் காலத்து சிவாலயம் ஒன்றில் இடம் பெற்றிருந்த தெய்வச் சிற்பங்கள் சிலவும் இடம் பெற்றுள்ளதைத் தரிசிக்கலாம். இரண்டாம் கோபுரம் கடந்து உள்ளே நுழையும்போது சாலாகார விமானத்துடன் திகழும் மூலட்டானமும், முகமண்டபங்களும், திருச்சுற்று மதிலும் சூழ கரிகாற்சோழ மாகாளியின் திருக்கோயிலைக் காணலாம்.
எட்டுத் திருக்கரங்களுடன் பீடத்தின் மேல் ஒரு காலை குத்திட்டும், ஒரு காலை கீழே தொங்கவிட்டு, கீழே கிடக்கும் அரக்கன் உடலை மிதித்த வண்ணம் தேவி செம்மாந்த திருக்கோலத்தோடு காட்சி நல்குகின்றாள். தலைக்கு மேலே சுவாலா மகுடம் அக்னிப் பிழம்பாகக் காட்சி நல்குகின்றது. திருக்கரங்களில் வாள், கேடயம், உடுக்கை, பாம்பு, மணி, கபாலம், சூலம் ஆகியவற்றைத் தாங்கியுள்ள இத்தேவி, ஒரு கரத்தில் மலர் ஏந்தி அருள்பொங்கப் பொலிகிறாள். ஆசனத்தை நாகங்கள் அலங்கரிக்கின்றன. இத்திருவடிவம் சுதையால் வடிக்கப் பெற்றதாகும். மிகத்தொன்மையான ஆலயங்களில் மூலத்திருமேனியை படா சாதனம் என்று சுதையாலேயே அமைப்பர். ஈராயிரம் ஆண்டுகளாக இத்தேவி சிலா வடிவில் இடம் பெறாமல் சுதையாகவே தொடர்ந்து திகழ்வது சேய்மையான மரபாகும்.
வேண்டுவார்க்கு வேண்டுவனவற்றை ஈயும் கண்கண்ட தெய்வமாக கரிகாற்சோழ மாகாளி விளங்குகின்றாள். இத்தேவியை பிற்காலச் சோழர்காலத்தில் வல்லத்துப் பட்டாரகி என்றும், வல்லத்துக் காளா பிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என்றும் அழைத்தமையை
இவ்வாலயத்து சோழர் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. பின்னாளில் நாயக்கர்கள் வல்லத்துக் காளி எனக் குறிப்பிட்டனர். பிற்காலத்தில் ஏகெளரி, ஏகவீரி என்றப் பெயர்களால் மக்கள் அழைத்து இத்தேவியைப் போற்றவாயினர். வல்லத்து ஏகவீரி அம்மன் கோயில் என்பதே பாமரர் வழக்காக உள்ளது. இத்தேவியின் உற்சவ விக்கிரகமாக அழகான செப்புத் திருமேனியொன்றுள்ளது. மூலத் திருவடிவம் போன்றே எட்டுக்கரங்களுடன் பதும பீடத்தில் தேவி ஜுவாலா மகுடத்துடன் திகழ்கின்றாள். இத்திருமேனி பத்ரபீடம் ஒன்றின் மேல் பொருத்தப் பெற்றுள்ளது.
அந்த பத்ர பீடத்தில் ஐந்து அரக்கர்களின் தலைகள் உள்ளன. பக்கவாட்டில் ‘‘வழியடுமைக் கொண்ட குமரன் உகந்தடுமை சதா சேவை’’ என்ற தமிழ்ப் பொறிப்பு காணப்பெறுகின்றது. இந்த பத்ர பீடத்தை தலைமுறை தலைமுறையாக வல்லத்து காளாபிடாரிக்கு அடிமைத் தொண்டு புரியும் மரபில் வந்த குமரன் என்பவன் மனமுவந்து இத்தேவிக்கு அடிமைச்சேவகம் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளான். அவன் செய்தளித்த பீடமாக இது இருத்தல் வேண்டும்.
பரசிவர் அல்லது பாரகைவர் எனும் மரபினர் சோழர் காலத்திலும் பின்பும் தேவி கோயிலின் பூசகர்களாக யாமள தந்திரநெறி அமைதியில் பூஜை செய்தனர் என்பதற்கு பல கல்வெட்டுகள் சான்றுகளாக உள்ளன. வல்லம் சிவாலயத்திலுள்ள சுந்தரபாண்டியனின் கல்வெட்டொன்றில் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனின் ஆணை குறிக்கப்பெற்றுள்ளது. அதில் குலசேகர பாண்டியனால் நிறைவேற்றப்பெற்ற அந்த ஆணையின்படி வல்லத்துப்
படாரி கரிகாற்சோழ மாகாளி கோயில் பரசிவனுக்கு அளிக்கப் பெற்ற பூஜை உரிமைகள் விவரிக்கப் பெற்றுள்ளன.
தற்போது இவ்வாலயத்தில் திகழும் கல்வெட்டுச் சாசனங்களில் பழைமையானது, முதலாம் பராந்தக சோழனால் பொறிக்கப் பெற்றதாகும். முதல் பராந்தக சோழனின் நாற்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி. 947ல்) அப்பேரரசனின் அலுவலர்களில் ஒருவனான அனந்தன்காரி எனும் பராந்தக முத்தரையன் வல்லத்து பட்டாரிகைக்கு வழங்கிய கொடை பற்றி கூறப்பெற்றுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான இச்சாசனம் ஆலயத்து மகாமண்டபத்து நிலைவாசல் அறுகாலில் உள்ளது.
முதலாம் ராஜராஜ சோழன் இவ்வாலயத்துக்கு வந்து இத்தேவியை வழிபட்டுச் சென்றுள்ளான். அப்பேரரசனின் ஆறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 991 ல்) வின்னனேரி எனும் ஊரில் இருந்த முகாம் அலுவலகத்திற்கு ராஜராஜசோழன் சென்றபோது இத்தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்துள்ளான். அப்போது நிலக்கொடை அளித்தான். இதனைக் குறிப்பிடும் கல்வெட்டு இவ்வாலயத்து மகாமண்டபத்துத் தூணில் உள்ளது. அதில் இத்தேவியின் பெயர் வல்லத்து காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை எனக் குறிக்கப்பெற்றுள்ளது. தஞ்சை நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரும், அச்சுதப்ப நாயக்கரும் தங்கள் ஆட்சிக் காலங்களில் இவ்வாலயத்தைப் புதுப்பித்து செப்பம் செய்தனர் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.தஞ்சாவூர் மாவட்டத்தில் பழங்காலம் முதல் வழிவழியாகத் தொடர்ந்துவரும் கோயில்களில் பாடப்பெறும் நாட்டுப்புற பாடல்களில் வல்லத்து ஏகவீரியின் புகழ் உரைக்கப் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
சங்ககாலம் முதல் தொடர்ந்து வல்லத்து காவல் தெய்வமாக விளங்கும் கரிகாற்சோழ மாகாளியின் அருளினைப் பெற்று நலம் பெற்றவர்கள் எண்ணிலடங்கார். ராஜராஜசோழனே நேரில் வந்து வணங்கி அருள்பெற்ற அந்த ஆலயத்திற்கு நாமும் சென்று தேவியை வழிபட்டு அருள் நலம் பெற்றுய்வோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment