‘சாதுக்களை ரட்சிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்’ என்று பகவான் வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் வாக்களித்தது, தனது வராஹ அவதாரத்தின்போதுதான். ஹிரண்யகசிபுவின் சகோதரனான இரண்யாக்ஷன், தன் வலிமையால் பூமியைப் பாயாக சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றுவிட்டான். தேவர்களும், முனிவர்களும் வேண்டிக்கொள்ள, திருமால் பன்றியாக (வராஹம்) உருவெடுத்து கடலினுள் புகுந்து, அவ்வசுரனைத் தன் இரு கோரைப்பற்களால் குத்திக் கொன்று, பூமியைத் தன் கோரைப்பற்களின் இடையே சுமந்துகொண்டு மீட்டுவந்தார் என்கிறது வராஹ அவதார வரலாறு. இதனையே பூமிப்பிராட்டி ஆண்டாளாக அவதரித்த போது நன்றியுடன் நினைவு கூர்ந்து தன் பாடலில்,
‘‘பாசி தூர்த்துக் கிடந்த பார்மகற்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமில்லாப் பன்றியாய்’’
- என்று போற்றுகிறாள். விலங்கினங்களிலேயே மிகவும் அசுத்தமானது பன்றி. சேற்றிலே மிதந்து கொண்டும், பூமியில் கிடைக்கும் கோரைக்கிழங்கு போன்றவற்றை உணவாகக் கொண்டு வாழ்வது. தன் பொருட்டு அத்தகைய கீழ்த்தன்மை கொண்ட விலங்காகவே தான் மாறி, தன்னைக் காப்பாற்றியது பற்றி தன் பாசுரத்தில் ஆண்டாள் நன்றி கூறுகிறாள். இந்த அவதார காலத்தில்தான் பூமிப்பிராட்டிக்கும், அவள் மூலமாக உலகத்தோருக்கும் வாக்களிக்கிறார் பரந்தாமன்: எந்த மனிதன் மனம் அசையாமல் நிலைத்திருக்கும்போதும், உடல் ஏதுமின்றிருக்கும்போதும், வாதம்-பித்தம்-சிலேத்துமம் என்ற தாதுக்கள் மூன்றும் ஒரே அளவாய் இருக்கும்போதும் பிறப்பு-இறப்பு இல்லாதவனாகிய என்னை நினைக்கிறானோ, அங்ஙனம் நினைத்த பிறகு, மரணமடையும் சமயத்தில் மரம், கல் என்றிவற்றோடு என்னை நினைக்க முடியாதவனாய் இருக்கின்றானோ, அந்த சமயத்தில், நான் மேலெல்லையாகிய எனது திருவடி நிலையான மோட்ச சாம்ராஜ்ய பலனை அவனுக்கு அளிக்கிறேன். பூமிப்பிராட்டி வராஹப் பெருமானிடம் உலகோர் அனைவரும் மிகவும் எளிதாக திருமாலை அடைய வழி சொல்ல வேண்டியபோது அளித்த வாக்குறுதி இது.
பூமிப்பிராட்டியின் தாயுள்ளத்தையும், எம்பெருமானின் தயாள குணத்தையும் இதிலிருந்து அறியலாம். வாக்குறுதி, அதைக் காப்பாற்றுவது என்பதை நோக்கும்போது வராஹத்தின் வாக்குறுதியே மேலானது என்றும், அதுவே நம்பத்தகுந்தது என்றும் பராசர பட்டர் அருளிச் செய்துள்ளார். நாம சங்கீர்த்தனத்தால் தன்னைப் பாடி உகப்பித்த நம்பாடுவான், கைசிகம் என்ற பண்ணின் பலனைக் கொடுத்து, ஸோம சர்மா என்ற அந்தணனுக்கு சாப விமோசனம் ஏற்பட்ட சரிதையை வராஹப் பெருமான் பூமிப்பிராட்டிக்குக் கூறி, நாம சங்கீர்த்தனத்தின் மேன்மையை விளக்கினார். இதனை கோதாபிராட்டியும், ‘‘தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே’’ என்று நாச்சியார் திருமொழியில் குறிப்பிட்டுள்ளாள். இப்படிப்பட்ட வராஹ பெருமான் பூமிப்பிராட்டிக்கு மட்டுமேயல்லாமல், ஆழ்வார்கள் அனைவருக்குமே ஞானத்தை அருளியவன். நம்மாழ்வார், ‘‘ஏனத்துருவாய் இடந்த ஞானப்பிரானை யல்லால் இல்லை நான் கண்டது நல்லதுவே’’ என்று வராஹ பெருமானை ஞானப்பிரான் என்றே போற்றுகிறார்.
திருமங்கையாழ்வார் ‘‘பன்றியாய் அன்று பாரசும் கீண்ட பாழியான் ஆழியானே அருளே நன்று நானுய்யக் கண்டு கொண்டேன்’’ என்று வராஹப் பெருமான் அருளால் தான் ஞானம் பெற்றதாய்க் கூறுகிறார். பெரியாழ்வாரும் ‘‘எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஒதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான்’’ என்கிறார். ஞானப்பிரான் அருளினால் ஆழ்வார்களின் பாடல்களும் ஞானத்தமிழில் அமைந்தன. பூதத்தாழ்வார் தன் பாடலைத் தொடங்கும் போதே ‘‘ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்’’ என்று ஆரம்பிக்கிறார். வராஹப் பெருமானை வணங்குபவர்கள், அவனின் திருமேனியை தரிசிக்கப் பெறுவர். பூதத்தார் மேலும் தொடர்கையில் ஞானப்பிரான் அருளால் ‘அவனைக் கண்டு ஞானத்தமிழ் அருளிச் செய்தவர் யானே இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது’ (சிறந்த தமிழ் மொழியில் சொல் மாலைகள் விண்ணப்பித்து பெரிய தமிழ் கலையில் வல்லவனாய் உனக்கும் மிக நல்லவனாய் இருப்பவன் அடியேன் ஒருவனே) என்று கூறிக் கொள்கிறார்.
இந்த பூதத்தாழ்வாரை, ‘ஞானப்பிரானை தம் நெஞ்சில் கொண்ட கடல்மல்லையில் அவதரித்த பூதத்தாழ்வாரே தம் தலைவர்’ என்று போற்றுகிறார் திருமங்கையாழ்வார். இத்தகைய பெருமைகளைத் தன்னிடத்தே கொண்ட வராஹப் பெருமானுக்கு நாடெங்கும் பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. வராஹப் பெருமானின் வழிபாடு தொன்மையானது. ஸ்ரீமுஷ்ணம் தஞ்சாவூர் மாமணிக் கோயில், திருவிடந்தை, திருக்கடல்மல்லை, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருவேங்கடம், திருக்குறுங்குடி போன்ற தலங்களில் இந்தப் பெருமையை உணரலாம். காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயிலில் காட்சியளிக்கும் கள்ளழகரையும் ஆதிவராஹப் பெருமான் என்றே திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார்: ‘நெடுவிசும் பணவும் பன்றியாய் அன்று பாசுரம் கீண்ட பாழியான்.’ பொய்கையாழ்வார், த்ரிவிக்கரம அவதாரத்தில் நீ உலகை அளக்கும்போது பூவுலகமானது உன்னுடைய திருவடியளவே இருந்தது. ஆனால் அதே பூவுலகம் ஸ்ரீ வராஹப் பெருமானாய் வந்தபோது உன் இரண்டு கோரைப் பற்களுக்கிடையில் சிக்குமளவிற்குச் சிறியதாய் அமைந்திருந்தது, என்னே உன் திருமேனி, என்னே பெருமை,’ எனப் போற்றுகிறார்.
ஸ்ரீமுஷ்ணத்தில் சிறு உருவாய் இரண்டு திருக்கரங்களையும் இடுப்பில் வைத்துக் கொண்டு காட்சியளிக்கிறார். வராஹப் பெருமானின் திருவுருவம் வராஹ நரசிம்மமாக ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் அமைந்துள்ளது. பஞ்சமுக ஹனுமானின் ஐந்து முகங்களில் ஒன்று வராஹம். வராஹப் பெருமானே திருவிடந்தையில் அகிலவல்லி சமேத ஆதிவராஹனாய் இடப் பக்கத்திலே லக்ஷ்மியை அணைத்தவாறு காட்சியளித்துக் கொண்டிருக்க, திருக்கடல்மல்லை என்ற திவ்யதேசத்தில் பல்லவர் கால குடவரைக் கோயிலில் ஸ்ரீ ஆதிவராஹப் பெருமான் தன் வலப்பக்கத்தில் லக்ஷ்மியை அணைத்தவாறு காட்சியளிப்பது வேறு எங்கும் காணக் கிடைக்காத அமைப்பு. வராஹப் பெருமான் தம் வலத்தொடையில் லஷ்மியை தாங்கிட அவர் வலத் திருவடியின் கீழ் ஆதிசேஷன் தம்பதி சமேதராய்க் காட்சியளிக்கிறார். இப்பெருமான் திருக்கோயில் திருவலவெந்தை என அழைக்கப்படுகிறது. இங்கு பெருமான் இவ்வாறு காட்சியளிப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு.
முதலாழ்வார்களில் இரண்டாவதான பூதத்தாழ்வாரின் அவதாரத் தலமன இத்தலத்தில் அருள்மிகு தல சயனத்துறைவார் நிலமங்கைத் தாயாருடன் பிரதான கோயிலில் காட்சியளிக்க திருவலவெந்தைப் பெருமானின் சந்நதி பழைய கலங்கரை விளக்கம் அருகே குடவரைக் கோயிலாக அமைந்துள்ளது. பல்லவ அரசனான ஹரிசேகர மகாராஜா தம் குலதெய்வமான திருவிடந்தையில் ஆதிவராஹப் பெருமான் மீது அபரிமிதமான பக்தி கொண்டு தினமும் கடல் மல்லையிலிருந்து திருவிடந்தை வந்து பெருமானை தரிசித்து கடல்மல்லை திரும்பி தம் அரண்மனையில் நான்காயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்த பிறகே தாம் உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் திருகடல்மல்லைக்குச் செல்வதற்கு முன்பாகவே அரசன் முன் ஒரு வயோதிக அந்தணராகவும் ஒரு சிறுமியுடன் தோன்றி தமக்கு பசியாக உள்ளது என்று கூற, அரசன் தன் குலதெய்வமான திருவிடந்தைப் பெருமானை மானசீகமாகப் பிரார்த்தனை செய்து அம்முதியவரையே வராஹப் பெருமானாகவும், சிறுமியை பூமிப்பிராட்டியாகவும் நினைத்து உணவளித்தான். அதனால் மனமகிழ்ந்த பெருமான் பூமிப்பிராட்டியுடன் அரசனுக்கு அங்கேயே காட்சியளித்தான் என்கிறது வரலாறு.
இந்த சந்நதி 1200 வருடங்களுக்கு மேல் பழமையானது. பல்லவர்களால் அமைக்கப்பட்ட இக்குடவரைக் கோயிலில் பெருமான் திருவடி கீழ் ஆதிசேஷன் தன் பத்தினியுடன் காட்சியளிக்கிறார். எம்பெருமானுக்கு வலப்புறத்தில் ஸ்ரீ காமம் என்ற கஜலட்சுமியையும், கங்காதரன் என்ற ஈஸ்வரனும் இடப்புறத்தில் பிரம்ம ஸ்ரீ காமம் என்ற விஷ்ணு துர்கையும், சதுர்முக பிரம்மாவும் உள்ளனர். பல்லவ மன்னர்களில் ஒருவரான ஹரிசேகர மகாராஜா தெற்கு நோக்கியும், எதிரில் வடக்கு நோக்கி மகேந்திர பல்லவனும் காட்சியளிக்கிறார்கள். தவிரவும் உத்ஸவ மூர்த்தியும், சக்கரத்தாழ்வாரும் காட்சியளிக்கிறார்கள். திருமங்கையாழ்வார் இப்பெருமானை ஞானப்பிரான் என்று போற்றுகிறார். இப்படி இத்தலத்தில் மட்டுமே வராஹப் பெருமான் வலப்புறத்தில் லட்சுமியை தாங்கியபடி வித்தியாசமான கோலத்தில் காட்சியளிக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமான் சந்நதிக்கும் புனரமைப்பு செய்து மகா சம்ரோக்ஷணம் நடைபெற்றது. இந்த ஆதிவராஹப் பெருமானை தரிசித்தால் கல்வி வளரும், ஞானம் வளரும், பூமி சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றியடையலாம். சர்ப்ப தோஷங்கள் நீங்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் நிறைவேறும். நன்மக்கட்பேறு அமையும். அன்பர்கள் அனைவரும் பெருமானை தரிசித்து பலன் பெறுவோமாக...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment