Thursday, 29 August 2019

பொற்காசு பெற்ற புகழ்த்துணை நாயனார்.!!

அழகாபுத்தூர்,  கும்பகோணம்


அழகிய ஊர்களும், அற்புதக் கோயில்களும், பரந்த வயல்களும், பசுமை நிறைந்த மரங்களும், குளிர்ந்த சோலைகளும் சூழ்ந்த சோழ தேசத்தின் அரிசொல் நதியென்னும் அரசலாற்றின் கரையில் அமைந்த அழகான ஊர்தான் அழகாபுத்தூர். முன்பு, புத்தூர், திருப்புத்தூர், செருவிலிபுத்தூர், அரிசிற்கரைபுத்தூர் போன்ற பெயர்களைக் கொண்ட இப்பதி, மூவரால் தேவாரம் பாடப்பெற்ற பெருமையுடையது. காவிரித் தென்கரையின் 66வது திருத்தலமிது. சங்கு  - சக்கரம் ஏந்திய கந்தன் இங்கு தனது துணைவியரோடு, கல்யாண கோலத்தில் பரிகார நாயகனாக அருள்புரிவது அற்புதம். இத்தலத்தில் வாழ்ந்த புகழ்த்துணை என்னும் சிவனடியார் நித்தமும், நியமப்படி இத்தல ஈசனைப் பூஜித்து வந்தார். ஒரு சமயம் இவ்வூரைப் பஞ்சம் பிடித்து வாட்டியது. உணவு கிடைக்காமல் வருந்தி, மெலிந்தாலும், தொடர்ந்து சிவனது பூஜையை விடாது செய்தார். 

ஒருதினம் பசியால் மிகவும் வாடிய அவர், அரசலாற்றில் இருந்து குடத்தில் நீரெடுத்து வந்து, சிவனார் மீது ஊற்றியபோது, மயங்கி, நீர்க்குடத்தை சிவலிங்கத்தின் மீது போட்டுவிட்டு விழுந்தார். இவரது கனவில் தோன்றிய சிவனார், ‘‘நீ அறியாமல் செய்த பிழைக்கு வருந்த வேண்டாம். பஞ்சம் நீங்கும் வரை நாள்தோறும் உனக்கு படிச்செலவுக்கு (தினசரி செலவுக்கு) பொற்காசு ஒன்று தருகிறேன்,’’ எனக்கூறி மறைந்தார். கண்விழித்த அடியார், அரனார் அருளுக்கு பெருநன்றி கூறி, இல்லம் திரும்பினார். சிவபெருமான் தன் ஆணைப்படியே நித்தமும் ஒரு பொற்காசினை அடியார் வாசற்படி மீது வைத்தருளினார். அது கொண்டு பஞ்சம் தவிர்த்து பரமனை பக்தியோடு பூஜை செய்து வந்தார். ஈசன் மீது நீங்காப்பற்று கொண்ட நாயனார், இறுதியில் சிவகதி பெற்று பிறவாநிலை அடைந்தார். 

‘‘பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்,’’ எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது உயர்ந்த சிவநேசத்தை தனது திருத்தொண்டர் தொகையில் அழகுற அடிக்கோடிட்டு காட்டுகின்றார். வருடந்தோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று புகழ்த்துணை நாயனாரின் குருபூஜை, சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன. சேக்கிழாரும் இவரது புகழை செழிப்புறக் கூறி, இவரது பெரும்பக்தியை உலகிற்கு பறை சாற்றுகின்றார். சம்பந்தர் 
இப்பதியை ‘புத்தூர்’ என்றே பகர்கின்றார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அழகாபுத்தூர் கும்பகோணம் - திருவாரூர்  சாலையில் இத்தலம் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment