பாண்டிச்சேரிக்கு பெருமை சேர்க்கும் ஆன்மிகத் தலங்களில் முதன்மையானது மணக்குள விநாயகர் திருக்கோவில். பாண்டிச்சேரியின் வரலாறு துவங்கும் காலம் தொட்டே இத்திருத்தலத்தின் வரலாறும் தொடர்கிறது. குளக்கரை, மரத்தடி, தெருமுனை என எங்கும் காணக்கூடிய விநாயகர் இத்தலத்தில் வீற்றிருக்கும் மாறுபட்ட மற்றும் விசித்திரமான அம்சமே பலரை இதனை நோக்கி ஈர்க்கிறது. மணக்குள விநாயகர் கடலுக்கு மிக அருகில் மனற்பரப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் மணர்குள விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் என்றாகி விட்டது. கோயிலுக்குள் ஒரு சின்ன குளம் காணப்படுகிறது. இந்த இடம் சற்று இருள் சூழ்ந்து காணப்படுவதால் கற்பூர ஒளியில் இந்த கிணற்றை பூசாரி பக்தர்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தனி விநாயக ஆலயங்களில் மணக்குள விநாயகர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. பாண்டிச்சேரி மாநிலம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு ஆதிக்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இத்தலத்து விநாயகரை பல முறை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அகற்ற முற்பட்டனர்.
ஆனால், மீண்டும் மீண்டும் அங்கேயே தோன்றிய விநாயகரால் பலர் அதிர்ச்சிக்குள்ளாகி சிலையை அகற்றும் பணியை கைவிட்டனர். தொடர்ந்து இத்தல விநாயகருக்கு திருவிழா நடத்த பிரெஞ்சு அரசு மறுத்து வந்த நிலையில் பிரெஞ்சுத் துரை டூப்லே விநாயக பக்தராக மாறி விழாவை தொடக்கி வைத்தார். பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வாழ்ந்து வந்த 30-க்கும் மேற்பட்ட சித்தர்களில் தொல்லைக்காது என்னும் சித்தர் மணக்குள விநாயகரால் ஈர்க்கப்பட்டு விநாயகர் சந்நதிக்குச் சென்று அவரை தினமும் தரிசித்து வந்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்த பிறகு அந்த கோயிலுக்கு அருகிலேயே சித்தரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும், யாரது கண்ணிலும் தென்படாமல் சித்தர் விநாயகரை தரிசிப்பதாக கூறப்படுகிறது. நட்சத்திரங்களின் சங்கமம் மணக்குள விநாயகர் கோயில் வளாக சுற்றுச் சுவர்களில் பலவிதமான விநாயகரின் சுதை ஓவியங்களும், 27 நட்சத்திர அதிபதிகளின் ஓவியங்களும் காணப்படுகிறது.
மேலும், முருகனின் அறுபடை வீடுகள், பல கண்கவர் ஓவியங்கள் என ஒரு கொலு மண்டபமாகவே இத்தலம் திகழ்கிறது. இக்கோயிலின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், கோயிலில் பிரம்மாண்டமாக தங்கரதம் மற்றும் வெள்ளி ரதம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் கோபுரம் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கியிருந்த முண்டாசுக் கவிஞர் பாரதி, இந்த விநாயகரை போற்றி நான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் சிறப்பு தென்னிந்தியா மட்டுமின்றி வேறெங்குமே காணக்கிடைக்காத பல சிறப்புகளை இத்தலம் கொண்டுள்ளது என்றால் மிகையல்ல. இத்தலத்தின் பள்ளியறையில் அவரது தாயார் சக்தி தேவியாருடன் உள்ளார் விநாயகர். தினமும் நெய்வேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்கிறார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரஹம் கொண்டு செல்லப்படுகிறது.
இத்தலத்தின் மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர் சிறிய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதில் நீர் வற்றாமல் இருக்கும். திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்து விதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. இக்கோயிலுக்கு அதிகப்படியான வெளிநாட்டுப் பயணிகள் விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக வழங்கியுள்ளனர். அமெரிக்க வைரத்தால் ஆன கவசம் இங்கே காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விநாயகருக்கு கல்யாண உற்சவம் செய்து வெள்ளித்தேர் இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். நாட்டிலேயே இங்கு மட்டும்தான்! நம் இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன கோபுரம் உள்ளது என்றால் அது இத்தலத்தில் மட்டும் தான். மேலும், விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்க அமைந்துள்ளார். பாண்டிச்சேரி மாநிலம் ஒய்ட் டவுன் பகுதியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் ஆலயம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment