Thursday, 27 June 2019

யாகத் தீயில் எழுந்த பெருமாள்.!!

அந்தக் காஞ்சீயில், விச்வகர்மா அமைத்துத் தந்த வேள்விச் சாலையில், கிழக்கு முகமாக அமர்ந்து யாகம் செய்யத் தயாரானார் பிரம்மா. ஆனால் புரோகிதரான வசிஷ்டர் பிரம்மாவைத் தடுத்தார். “எந்த ஒரு வைதிகச் செயலைச் செய்வதானாலும் மனைவி உடனிருக்க வேண்டும்! தங்கள் மனைவியான சரஸ்வதி தேவி எங்கே? அவளின்றி யாகத்தைத் தொடங்க முடியாது!” என்று கூறினார் வசிஷ்டர்.பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் ஒரு சிறிய பிணக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் கோபித்துக் கொண்டு பிரம்மாவை விட்டுப் பிரிந்து சென்ற சரஸ்வதி, வட இந்தியாவில் உள்ள சரஸ்வதி நதிக்கரையில் தவம் புரிந்து வந்தாள். இவ்விஷயத்தை வசிஷ்டரிடம் பிரம்மா எடுத்துச் சொன்னார். சரஸ்வதியிடம் பேசி அவளை எப்படியேனும் அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு, சரஸ்வதி நதிக்கரைக்குச் சென்றார் வசிஷ்டர். அங்கே சரஸ்வதியிடம் வசிஷ்டர் பிரார்த்தனை செய்தும், பிரம்மாவின் மேல் கடும் கோபத்தில் இருந்த அவள், யாகத்துக்கு வர மறுத்து விட்டாள். அதனால், பிரம்மாவின் மற்ற இரண்டு மனைவிகளான சாவித்ரி, காயத்ரி இருவரையும் பிரம்மாவுக்கு அருகில் அமர்த்தினார் வசிஷ்டர். காஞ்சீபுரத்தில் தமது யாகத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார் பிரம்மா.


ஆனால் பிரம்மா யாகம் செய்வதை விரும்பாத அசுரர்கள் அதைத் தடுக்க நினைத்தார்கள். யாகம், தானம், தவம் உள்ளிட்ட நற்செயல்களை வெறுப்பதும் தடுப்பதும் அசுர சக்திகளின் இயல்பாகும். அந்த வகையில் பிரம்மாவின் யாகத்தைத் தடுப்பதற்காகக் காஞ்சீபுரமே இருளில் மூழ்கும்படிச் செய்தார்கள் அசுரர்கள். இருளால் சூழப்பட்ட காஞ்சீயில் யாகம் செய்யமுடியாமல் தவித்தார் பிரம்மா. தனக்கு வழிகாட்டும் படித் திருமாலிடம் வேண்டினார்.அப்போது காஞ்சீயில் விளக்கொளிப் பெருமாள் என்ற திருப்பெயருடன் திருமால் வந்து காட்சியளித்தார். நம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் வேளைகளில் மின்னியற்றி நமக்கு ஒளிதருவது போல், காஞ்சீ நகரமே இருளில் மூழ்கிய வேளையில் திருமால் விளக்கொளியாக வந்து ஒளி தந்து பிரம்மாவின் யாகம் தொடர்ந்து நடைபெற அருள்புரிந்தார்.யாகம் தொடர்ந்து நடைபெறவே, மேலும் கோபம் கொண்ட அசுரர்கள், கைகளில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி யாகசாலையையே அழிப்பதற்காகப் புறப்பட்டு வந்தார்கள். யாகம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் அனைவரும் அசுரர்கள் படையெடுத்து வருவதைக் கண்டு அஞ்சி ஓடினார்கள். மீண்டும் திருமாலின் உதவியை நாடினார் பிரம்மா.

அப்போது எட்டுத் திருக்கரங்களில் எட்டு ஆயுதங்களை ஏந்தியபடி அஷ்டபுஜப் பெருமாளாகத் திருமால் அங்கே தோன்றினார்.வாள், வில், அம்பு, கதை, சங்கு, சக்கரம், கேடயம், தாமரை என்று எட்டுக் கரங்களில் எட்டு ஆயுதங்களோடு வந்து அசுரர்களைத் தாக்கி விரட்டினார் திருமால். பிரம்மாவின் யாகம் மீண்டும் அமைதியாக நடைபெறத் தொடங்கியது.திருமாலால் விரட்டப்பட்ட அசுர சக்திகள், சரஸ்வதி நதிக்கரையில் இருந்த சரஸ்வதி தேவியை அண்டினார்கள். “உங்களை விட்டுவிட்டு சாவித்ரி, காயத்ரி என்னும் மற்ற மனைவியரோடு உங்கள் கணவர் பிரம்மா யாகம் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அதை வேடிக்கை பார்க்கலாமா? நீங்கள் அதைத் தடுக்க வேண்டாமா?” என்று பலவாறு சரஸ்வதியிடம் அவர்கள் கூற, வெகுண்டெழுந்த சரஸ்வதி தேவி, வேகவதி என்னும் நதியாக மாறினாள். பிரம்மாவின் யாகசாலையை அழிப்பதற்காகப் புறப்பட்டு வந்தாள்.வேகவதி வெள்ளம் பொங்கி வருவதைக் கண்டு, யாகம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் அஞ்சி ஓடினார்கள். 

மீண்டும் திருமாலின் உதவியை நாடினார் பிரம்மா. அப்போது வேகாசேது என்ற திருநாமத்துடன், அந்த வேகவதி நதிக்குக் குறுக்கே அணையாக வந்து சயனித்தார் திருமால். வேகாசேது என்றழைக்கப்பட்ட அந்தப் பெருமாள், பின்னாளில் திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்குக் கட்டுப்பட்டு அவர் பின்னே சென்றபடியால், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று பெயர் பெற்றார்.பிரம்மா, சரஸ்வதி இருவரையும் அழைத்துப் பேசி, சமாதானப்படுத்தி, இணைத்து வைத்தார் திருமால். சரஸ்வதி, சாவித்ரி, காயத்ரி ஆகிய மூவருடன் தனது அஸ்வமேத யாகத்தைத் தொடர்ந்து செய்தார் பிரம்மா.தனது பாபங்கள் அனைத்தும் தீருவதற்காகவும், இறைவனைக் குறித்த தியானம் நன்கு கைகூடுவதற்காகவும் பிரம்மா மேற்கொண்ட அந்த வேள்வி, சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தசியில், ஹஸ்த நட்சத்திரத்தில், ஞாயிற்றுக் கிழமையன்று இனிதே நிறைவு பெற்றது.யாக வேதியில் இருந்து ஆயிரம் சூரியன்கள் உதித்தாற்போல் வரதராஜப் பெருமாள் புண்ணியகோடி விமானத்துடன் தோன்றிப் பிரம்மாவுக்குக் காட்சியளித்தார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment