கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் : தென்காசி - திருநெல்வேலி
தாமிரபரணி எனப்பெறும் ஜீவநதி பாயும் தென்பாண்டி நாட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி எனும் புனிதத் தலம் இயற்கை வளம் மிகுந்த ஒரு பேரூராகும். பொதிகை மலையின் திருக்குற்றாலத்துக்கு அருகமைந்த இவ்வூரின் நடுவண் கம்பீரமாகக் காணப்பெறுவது உலகம்மை உடனுறைய காசி விஸ்வநாதர் அருட்பாலிக்கும் திருக்கோயிலாகும். இவ்வாலயம் 14ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் திகழ்ந்திருந்தது என்பதை இவ்வாலயத்திலுள்ள 1309, 1384 ஆகிய ஆண்டுகளில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுச் சாசனங்கள் மூலம் அறிய முடிகிறது.
மூலவராக காசிவிஸ்வநாதர் அருட்பாலிக்க முன் மண்டபம் பிற்கால நாயக்கர் காலத்தில் எழுப்பப் பெற்றது என்பதனை அம்மண்டபத்தில் திகழும் பிரமாண்ட தூண்களில் உள்ள தெய்வத் திருமேனிகள் வாயிலாக அறிய முடிகிறது. உலகம்மை ஆலயம் தனித்துத் திகழ்கின்றது. தற்போது ஒன்பது நிலைகளுடன் திகழும் இவ்வாலய கோபுரத்தின் பழைய கட்டுமான கல்ஹாரம் (முதற்தளம் வரை உள்ள பகுதி) ஒரு வரலாற்றுப் பெட்டகமாகவும், தமிழ் இலக்கியமாகவும் காட்சி நல்குகின்றது.
மதுரை சுல்தானியர்களின் ஆட்சிக்குப் பிறகு கி.பி. 1371ல் வீரகம்பணன் மதுரையைக் கைப்பற்றி விஜயநகரப் பேரரசின் கீழ்க்கொணர்ந்தான். கி.பி. 1371க்குப் பிறகு பாண்டியர்கள் திருநெல்வேலிப் பகுதியை அடைந்து அங்கிருந்து ஆட்சி புரியலாயினர். கி.பி. 1422ல் முடிசூடிய ஜடிலவர்மன் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் தென்காசி நகரை எடுப்பித்து விஸ்வநாதர் கோயிலைக் கட்டுவித்தான். பின்னர் 1463ல் மரணமுற்றான். இவனுக்குப் பின்னர் தென்காசியில் பாண்டியர்களின் ஆட்சி தொடர்ந்தது. இவர்களைப் பற்றிய வரலாற்றினைப் பாண்டிய குலோதயம் எனும் வடமொழி நூல் விரிவாக எடுத்துரைக்கின்றது. இவன் தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கிழக்குக் கோபுரத்தை ஒன்பது நிலையுடைய கோபுரமாக எடுத்தான்.
அவன் எடுத்த கோபுரத்தின் மேல்நிலைகள் பின்னாளில் பேரிடி தாக்கியதால் அழிவுற்றது. காலவௌ்ளத்தில் மேன்மேலும் அழியத் தொடங்கிய அக்கோபுரம் 1990ல் புதுப்பிக்கப் பெற்று புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. அக்கோபுரத்தை எடுத்த பராக்கிரம பாண்டியன் தான் எடுப்பித்த கோபுரத்தைப் பின்னாளில் காப்பவர்களை அடிபணிந்து வணங்குவதாக அவன் கூறிக்கொண்டது பல்வேறு கல்வெட்டுப் பாடல்களாக இக்கோபுரத்தில் பொறிக்கப்பெற்றுள்ளன. மேலும் அவன் இறந்த ஆண்டும் அங்கு பாடலாகப் பதிவு பெற்றுள்ளது.
இக்கோபுரப் பணி முற்றுப் பெறுவதற்கு முன்பே பராக்கிரம பாண்டியன் இறந்ததால் அதனை அவனுடைய தம்பி குலசேகர பாண்டியன் முற்றுபெறச் செய்தான். அச்செய்தியும் அக்கோபுரத்திலேயே ஒரு பாடலாகப் பதிவு பெற்றுள்ளது. கோபுரத்தின் நுழைவு வாயிலின் இருமருங்கும் கல்வெட்டுப் பாடல்களும், பிற சாசனங்களும் இடம் பெற்றுள்ளன. பராக்கிரம பாண்டியனும் குலசேகரப் பாண்டியனும் செய்த இக்கோபுரப் பணி பற்றியும் பாண்டியனின் வேண்டுகோள் பற்றியும் கூறும் பதிமூன்று கல்வெட்டுப் பாடல்களையும் அவை தம் பொழிப்புரைகளையும் இனி வரிசையாகக் காண்போம்.
சாசனச் செய்யுள்கள்
‘அன்பினுடன் சகாத்த மாயிரத்து முந்நூற்றறுபத்
தெட்டின்மேல் வைய்காசித் திங்கள்
மன்தியதி யீரைந்திற் பூருவ பக்கமருவு
தெசமியில் வௌ்ளி வாரந்தன்னில் மின்
திக ழுத்தரநாள் மீனத்தில் வாகைவே லரி
கேசரி பராக்கிரம மகிபன் தென்திசையிற்
காசிநாதர் கோயில் காணச்சென்றுநின்று
தரிழ்சணைதான் செய்வித்தானே’
இப்பாடலில் சாலிவாகன சகாப்தம். 1368ல் வைகாசி மாதம் பத்தாம் நாள் பூர்வபட்ச தசமி திதி, உத்திர விண்மீன் கூடிய வெள்ளிக்கிழமையன்று தென்நாட்டில் காசி விஸ்வநாதர் கோயில் எடுப்பித்து தரிசனம் செய்வித்தான் என்று கூறுகின்றது. இங்கு குறிக்கப்படும் நாள் கி.பி. 1446-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாளைக் குறிப்பதாகும்.
பன்னு கலியுக நாலாயிரத் தைஞ்ஞூற் றைம்
பத் தெட்டின் மேலெவரும்
பணிந்து போற்றச்சென்னெல்வ
யற் றென்காசி நகரில் நற்கார்த்திகைத்
திங்கள் தியதியைந்திற் செம்பொன்
வாரமன்னிய மார்கழி நாளில் மதுரை
வேந்தன் வடிவெழு தொணாத பராக்கிரம
மகிபன் சொன்ன வரைபோற் றிருக்கோபுர
முங் காணத் துடியிடையா யுபானமுதல்
துடங்கி னானே.
இந்த இரண்டாம் பாடலில் கலி வரும் 4558இல் செந்நெல் விளையும் தென்காசி நகரில் கார்த்திகை மாதம் ஐந்தாம் நாளில் மலைபோன்ற கோபுரம் எடுப்பதற்காக உபானம் முதல் கட்டுமானப் பணியினைத் தொடங்கினான் என்று கூறுகின்றது. இது கி.பி. 1457ல் நிகழ்ந்ததாகும்.
சேலேறிய வயற் றென்காசி யாலையந் தெய்
வச்செயலாலே சமைத்த திங்கென் செய
லல்ல வதனையின்ன மேலே விரிவு
செய்தே புரப்பாரடி வீழ்ந்தவர்
தம் பாலேவல் செய்து பணிவன்
பராக்கிர பாண்டியனே
இந்த மூன்றாம் பாடல் சேல் மீன்கள் துள்ளக்கூடிய வயல்கள் சூழ்ந்த தென்காசி நகரில் திகழும் ஆலயம் அமைத்தது பராக்கிரம பாண்டியனான என்னால் நிகழ்ந்தது அன்று. அது தெய்வச்செயல் ஆகும். இக்கோயிலைப் பின்னாளில் யாரேனும் விரிவு செய்து காப்பாற்றுவார்களாயின் அவர்களின் திருவடிகளில் வீழ்ந்து நான் வணங்குவதோடு அவர்களுக்கு ஏவல் செய்தும் பணி செய்வேன் என்றும் அம்மன்னன் கூறுவதாக அமைந்துள்ளது.
மனத்தால் வகுக்கவு மெட்டாத கோயில்
வகுக்கமுன்னின்றெனைத்தான் பணி
கொண்ட நாதன் தென்காசி யென்றுமண்
நினைத்தா தரஞ்செய்து தங்காவல் பூண்ட
நிருபர்பதந் மேல்தனைத்தாழ்ந் திறைஞ்சித்
தலைமீ தியானுந் தரித்தனனே
மனத்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் சிறந்த கோயிலொன்றினைத் தென்காசி மண்ணில் வகுப்பதற்கு என்னைப் பணிகொண்ட அந்த ஈசனின் கருணையால் எனக்கு ஆதரவாக நின்ற காவல்புரியும் அரசர்களின் திருவடிகளைத் தாழ்ந்து வணங்கி என் தலைமேல் தரித்தேன் என்று கூறுவதாக இந்த நான்காம் பாடல் அமைந்துள்ளது.
பூந்தண் பொழில்புடை சூழுந்தென் காசி
யைப் பூதலத்தில்தாங்கிளை யுடனே புரப்
பார்கள் செந்தா மரையாள் காந்தன் பராக்
கிரமக் கைதவன் மான கவசன்கொற்கை
வேந்தன் பணிபவ ராகி யெந்நாளும்
விளங்குவரே
குளிர்ந்த சோலைகளையுடைய தென்காசி நகரைத் தன் சுற்றத்தார்களுடன் காப்பாற்றுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் திருமகள் அருள் பெற்றவனும், கொற்கை வேந்தனுமாகிய பராக்கிரம பாண்டியனால் எந்நாளும் பணிந்து போற்றப்படுபவர்களாக விளங்குவார்கள் என்பது இந்த ஐந்தாம் பாடலின் கூற்றாகும்.
காண்டகு சீர்புனை தென்காசிக் கோபுரக்
கற்பணியாறாண்டில் முடித்துக் கயிலை
சென்றா னகிலேசர் பதம்பூண்டுறை சிந்தை
யரிகேசரி விந்தைப் போர்கடந்த பாண்டி
யன் பொன்னின் பெருமாள் பராக்கிரம
பாண்டியனே
தென்காசி கோயிற் கோபுரத்தினைக் கல்லால் கட்டுவித்த பணி ஆறு ஆண்டுகளாக நிகழ்ந்துவரப் பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் மண்ணுலக வாழ்வை நீத்து கயிலையை அடைந்து அகிலேசனாகிய சிவபெருமானின் பதம் பெற்றார் என்பது ஆறாம் பாடலின் கூற்றாகும்.
ஆரா யினுமிந்தத் தென்காசி மேவுபொன்
னாலைந்து வாராதோர் குற்றம் வந்தாலப்
போதங்கு தந்ததனை நேராக வேயொழித்
துப்புரப் பார்களை நீதியுடன் பாரா ரறியப்
பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே
தென்காசியில் பொன்னாலயமாக விளங்குகின்ற விஸ்வநாதர் ஆலயத்திற்கு வாராத ஒரு குற்றம் ஏற்பட்டு குறைவுகள் ஏற்பட்டால், அப்போது அதனை அங்கு நேராக வந்து குற்றம் களைந்து காப்பாற்றுபவர்களை உலகம் முழுவதும் அறியுமாறு நீதியோடு இன்றே பராக்கிரம பாண்டியனாகிய நான் அவர்களுக்குப் பணிகிறேன் என்ற அவ்வரசனின் ஆழ்மனத்தின் வெளிப்பாடே ஏழாம் கல்வெட்டுப் பாடலாக மிளிர்கின்றது.
அரிகே சரிமன் பராக்கிரம மாற னரன
ருளால் வரிசேர் பொழிலணி தென்காசிக்
கோயில் வகுத்துவலம்புரிசேர் கடற்புவி
போற்றவைத் தேனன்பு பூண்டிதனைத்திரி
சேர் விளக்கெனக் காப்பார்பொற் பாதமென்
சென்னியதே
தென்காசி கோயிலின் புகழை உலகமெலாம் அறியுமாறு போற்றி, திரிசேர் விளக்கென காப்பவர்களின் பொற்பாதங்களைப் பராக்கிரம மாறன் தன் தலைமீது சூட்டிக் கொண்டதாக இந்த எட்டாம் பாடல் கூறுகின்றது.
சாத்திரம் பார்த்திங் கியான்கண்ட பூசைகள்
தாம்நடாத்தியேத்தியவன்பால் விசுவநா
தன் பொற்கோயி லென்றும் புரக்கப்பாத்
திபன் கொற்கைப் பராக்கிரம மாறன் பரி
வுடனல்கோத்திரந் தன்னி லுள்ளார்க்கு
மடைக்கலங் கூறினனே
சாத்திரங்கள்படி கண்ட பூசைகளை எல்லாம் விஸ்வநாதரின் பொற்கோயில் விளங்குமாறு என்றும் போற்றும் சிறந்த கோத்திரத்தார்கள் அனைவருக்கும் பராக்கிரம மாறன் அடைக்கலம் அளிப்பதாக இந்த ஒன்பதாம் பாடல் இயம்புகின்றது.
மென்காசை மாமல ரன்ன மெய்யோற்கும்
விரிஞ்சனுக்கும் வன்காசு தீர்ந்திடும் விச்
சுவ நாதன் மகிழ்ந்திருக்கப்பொன்காசை
மெய்யென்று தொட்ட கைக்குமிப் பூதலத்
துத்தென்காசி கண்ட பெருமாள் பராக்கிர
மத் தென்னவனே
திருமாலும் பிரம்மனும் வியக்குமாறும் விஸ்வநாதர் மகிழ்ந்திருக்குமாறும் பொற்காசுகளால் திருப்பணி செய்து தென்காசி கண்டவன் பெருமாள் பராக்கிரமத் தென்னவனே என்பது இப்பத்தாம் பாடலின் பொருளாகும்.
ஏரார் சகாத்த முந்நூற்றுட னாயிரத் தெண்
பத்தஞ்சிற் சீராரு மார்கழி சித்திரை நாளிற்
சிறந்துகுற்றம் வாராத பூரணையினிற் பராக்
கிரம மாற
கயிலாயந்தான் .......... கண்டனனே
சாலிவாகன சகாப்தம் 1385இல் (கி.பி. 1463) மார்கழி மாதம் சித்திரை விண்மீன் கூடிய பூரண நாளில் பராக்கிரம பாண்டியன் கயிலையம்பதியடையும் பேறு பெற்றான் என்பதே பதினோராம் பாடல் கூறும் செய்தியாகும்.
கோதற்ற பத்தி யறுபத்து மூவர்தங் கூட்டத்
திலோதீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்
பொன் னம்பலத்தோ வேதத்திலோ சிவ
லோகத்திலோ விசுவ நாதனிருபாதத்திலோ
சென்று புக்கான் பராக்கிரம பாண்டியனே
தொகையடியார்களான அறுபத்து மூவர் கூட்டத்தில் ஒருவராகவோ, சிவபெருமான் சூடியுள்ள வெள்ளிச் சிலம்பிலோ, தில்லைப் பொன்னம்பலத்திலோ, வேதத்தினுள்ளோ, சிவலோகத்திலோ அல்லது விஸ்வநாதர் இருபாதத்திலோ சென்று புகுந்துவிட்டான் பராக்கிரம பாண்டியன் என்று கூறுகிறது பன்னிரெண்டாம் பாடல்.
ஓங்குநிலை யொன்ப துற்றதிருக் கோபுரமும்பாங்கு பதினொன்று பயில்தூணுந் - தேங்குபுகழ்மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசிதன்னிலன்றி யுண்டோ தலத்து
ஒன்பது நிலைகளுடைய இத்தகைய சிறந்த கோபுரம், பதினொரு தூண்கள் உள்ள மண்டபம் இவைகள் பராக்கிரம பாண்டியன் செய்த தென்காசிக் கோயிலிலன்றி இவ்வுலகத்தில் எங்கேனும் காண முடியுமா? என்கிறது இப் பதிமூன்றாம் பாடல்.
குலசேகர பாண்டியனின் கோபுரப்பணி கி.பி. 1463இல் பராக்கிரம பாண்டியன் தென்காசி விஸ்வநாதர் ஆலய கோபுரப் பணியைச் செய்து கொண்டிருந்த காலத்திலேயே கயிலாயநாதனின் திருவடிகளை அடையும் பேறு பெற்றான். உடன் அவனது தம்பியான குலசேகர பாண்டியன் அப்பணியை பூர்த்தி செய்தான். இதனைத் தென்காசி விஸ்வநாதர் ஆலயத்து முன்மண்டபத்தின் வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டுப் பாடல்.
விண்ணாடர் போற்றுந் தென்காசி பொற்கோபுர மீதிலெங்களண்ணாவி செய்த பணி யிப்படி குறையாய்க் கிடக்கவொண்ணா தெனக்கண் டுயர்ந்த தட்டோடெங்கு மூன்றுவித்தான்மண்ணாளு மாலழகன் குலசேகர மன்னவனே என்று கூறுகின்றது.
தென்காசியில் கோபுரம் எடுத்தது பற்றிப் பேசும் இக்கல்வெட்டுப் பாடல்களைத் தொகுத்து நோக்கும்போது பராக்கிரம பாண்டியனின் பக்திப் பெருவுணர்வும், எதிர்காலத்தில் அக்கோபுரம் காக்கப்பட வேண்டும் என்ற பெருவிழைவும் வெளிப்படுவதைக் காண முடிகின்றது. பக்திப் பெருக்கோடு செய்யப்படுகின்ற தர்மங்கள் சூரியன், சந்திரன், உள்ளளவும் தடையின்றிச் செயல்பட வேண்டும் என்பதுதான் தமிழ் மன்னர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. இதனைத் தமிழ்க் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. மேலும், அவற்றை எதிர்காலத்தில் காப்பார் திருவடிகளைத் தலைமேல் தரித்துப் போற்றும் மரபு தமிழகத்துப் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றாகத் திகழ்ந்திருக்கிறது.
வலஞ்சுழி வலம் கொள்வார் அடி என் தலைமேலவே என்று முதன் முதலில் இம்மரபுக்கு வித்திட்டவர் திருநாவுக்கரசு பெருமானாவார். பின்னர் வந்த சோழர்களும், பாண்டியர்களும் இம்மரபை மிகவும் போற்றினர். போற்றுதற்குரிய இப்பண்பின் உச்ச வெளிப்பாட்டைப் பராக்கிரம பாண்டியனின் 6 பாடல்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக ஏழாம் பாடலில் பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே - என்ற வரி அம்மன்னவனின் உயர்வு நிலையைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
பல்லவர் காலம் தொட்டுச் சோழர் பாண்டியர் காலம் வரை கோயில்களும், அறக்கட்டளைகளும் நன்கு போற்றப்பட்டு வந்தன. 1319க்குப் பிறகு 1371 வரை தமிழக கோயில்கள் இருண்ட காலத்தைச் சந்திக்க நேர்ந்ததால் கோயில்களின் அழிவு பற்றி அவற்றை எடுப்பிக்க முயன்றவர்கள் பெரிதும் கவலைப்படத் தொடங்கினர். கி.பி. 1457இல் தென்காசி விஸ்வநாதர் ஆலயத்துக் கோபுரத்தைக் கட்டத் தொடங்கிய பராக்கிரம பாண்டியன் அக்கோபுரம் எக்காலத்தும் அழியக்கூடாது, அதனை மக்கள் போற்ற வேண்டும். அழிவுகள் நேரிடின் அவற்றைப் போக்க முயல வேண்டும் என்பதற்காகவே அப்பாடல்களைக் கல்மேல் எழுத்தாகப் பொறித்துச் சென்றுள்ளான்.
இத்தகைய சூழல்கள் ஏற்பட்டதால்தான் பின்னாளில் பொறிக்கப்பட்ட அறக்கல்வெட்டுக்களில் காப்பவர்கள் அடையும் பலன் பற்றியும், அழிப்பவர்கள் அடையும் கேடுகள் பற்றியும் குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. கி.பி. 15ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் அக்கல்வெட்டில் வேண்டிக்கொண்ட வண்ணம் 21ஆம் நூற்றாண்டில் அக்கோபுரம் மீண்டும் பொலிவு பெற்றுள்ளது ஆறுதலான நிகழ்வாகும்.
அதிவீரராமபாண்டியனின் கோபுரச் சாசனம்:
தென்காசி விஸ்வநாதர் கோயில் பெரிய கோபுரத்தில் வடபுறச் சுவரில், தென்காசி பாண்டியன் அதிவீரராம பாண்டியன் அக்கோயிலுக்கு வழங்கிய தானங்களைப் பற்றிப் பட்டையமாகக் கொடுத்ததை பாடலாகவுள்ள கல்வெட்டொன்று கீழ்க்காணுமாறு விவரிக்கின்றது.
அத்தர் தென்காசி கண்டோன் கண்ட ஆலயமும்அடியாரும் வாழ்வுபெற வந்த அழகன் அதிவீரராமன் சருவமானியம் ஆகக் கொடுத்த படிதான் சித்திரைப் பரணியூர்த் தெண்ட கோஷப் பொன்திரும்பக் குடுத்து அவ்வூரில் செங்கோட்டையார் கொண்ட பகுதியும் நிறுத்தித் திருக்கோயில் பகுதியாய் வைத்ததை அறக்கு கழிய தாயம் கணக்குடன் மகா நவமி திருநாள் இடைவந்த காணிக்கை பட்டர் பகுதி காண்அம்பல்வரி இவை எலாம் கழித்துப்பத்திரமாய்க் குண ராம நாதற்கு மேற்படிபணங்கழித்து அடியர் வீட்டுப் பணமுங் கழித்து இப்படிச் சருவமானியப் பட்டையமும் அருளினானே
இவ்வாறு கோயிலுக்கு வழங்கப்பெற்ற சருவமானியமாகிய நிலக்கொடையினை மக்கள் பார்வையில் இருக்கும் வண்ணம் கல்வெட்டாகக் கோபுர வாயிலில் பொறித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தென்காசி செல்வோர் ஆலய கோபுர வாயிலும், மண்டபத்தில் திகழும் அரிய இத்தமிழ்ப் பாடல்களைக் கண்டு தமிழ் மன்னர்களின் மாண்பினை உணர்வீராக...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment