ஒரு சமயம் அம்பிகை கயிலையில் ஈசனுடன் ஏகாந்தமாக வீற்றிருந்தாள். அப்போது விளையாட்டாக ஈசனின் கண்களை மூடினாள். உடனே உலகம் இருண்டது. உயிர்கள் அனைத்தும் துன்பத்திற்கு ஆளாயின. இதனால் அம்பிகை ஈசனின் கோபத்திற்கு ஆளானாள். தன் கோபம் தீர, அவள் பூலோகத்தில் பிறந்து, தக்க சமயத்தில் காஞ்சிக்குச் சென்று தம்மை வழிபடுமாறு ஈசன் ஆணையிட்டார். ஈசனின் திருவுளப்படியே பத்ரிகாசிரமத்தில் காத்யாயன முனிவருக்கு புதல்வியாக பிறந்தாள் அன்னை. கண்ணை இமை காப்பது போல் காத்யாயினி என்று பெயரிட்டு அந்தக் குழந்தையை வளர்த்து வந்தார் முனிவர். தக்க பருவத்தை அவள் அடைந்ததும் அக்குழந்தை பூவுலகம் வந்த காரணத்தை உணர்ந்து கொண்ட காத்யானர், தேவியை தவம்புரிய காஞ்சிபுரம் அனுப்பி வைத்தார்.
காத்யாயினி மணலில் லிங்கம் உருவாக்கி ஈசனை நோக்கி கடுந்தவம் புரிந்தாள். அன்னையின் அன்பின் ஆழத்தை அரிய விரும்பினார் ஈசன். கங்காதேவியை கம்பா நதியாக உருமாறி வருமாறும், அம்பிகை பூஜை புரியும் மணல் லிங்கத் திருவுருவை அடித்துச் செல்லுமாறும் பணித்தார். அதன்படியே கங்காதேவியும் கம்பா நதியாக மாறி, உமையவள் தவம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தோடி வந்தாள், நதியின் சீற்றத்தைக் கண்ட அம்பிகை அஞ்சினாள். தன்பதியும் உலகநாயகனுமான ஈசனின் லிங்கத்திருமேனியை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டு, வெள்ளப்பெருக்கு அடித்துச் சென்று விடாதபடி காத்தாள். இந்நிகழ்வின் போது அன்னை பயந்து நடுங்கியதைக் காரணமாக வைத்து இத்தலம் ஏகம்பம் எனப் பெயர் பெற்றது.
இத்தலத்தில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் எனும் திருப்பெயரோடு அருள்கிறார். ஏகம் எனில் ஒன்று எனப் பொருள்படும். ஆம்ரம் எனும் வடமொழி சொல் மாமரத்தைக் குறிக்கும். ஏகம்ஆம்ரம் என்பது ஏகாம்பரம் என்று ஆயிற்று. மாமரத்தினைத் தன் தலவிருட்சமாகக் கொண்டு இருப்பதாலும், இத்தலத்து ஈசன் அந்த ஒன்றை மாமரத்தடியில் எழுந்தருளி இருப்பதாலும் ஏகாம்பரர் எனும் பெயரைப் பெற்றார். கல்யாண வரம் அருளுவதில் நிகரற்றவராக விளங்குகிறார் ஏகாம்பரநாதர். ஆலயம் ஐந்து பிராகாரங்களைக் கொண்டு விளங்குகிறது. ஆலயத்தில் உள்ள மாமரம் மிகப் பெரியது. இது நான்கு வேதங்களையும் குறிக்கும் விதமாக நான்கு கிளைகளையும் கொண்டுள்ளது.
இந்த நான்கு கிளைகளும் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்று நான்கு வகை சுவைகளைக் கொண்ட கனிகளைத் தருவது அற்புதம். இந்த மரத்தடியில்தான் ஈசன் உமையவளுக்கு தரிசனம் தந்ததாக ஐதீகம். இத்தலத்தில் 108 லிங்கங்கள் ஒரே உருவமாக கொண்ட அஷ்டோத்தர லிங்கமும் 1008 லிங்கங்கள் ஒன்றிணைந்த ஸஹஸ்ர லிங்கமும் தரிசிக்கப்பட வேண்டியவை. மாமரத்தினருகே ஏகாம்பரேஸ்வரின் உற்சவமூர்த்தி அருள்கிறார். அதன் மறுபக்கம் ஏகாம்பரநாதரின் நாயகி ஏலவார் குழலி அம்மையின் உற்சவத்திருமேனி உள்ளது. பங்குனி உத்திரத்தன்று ஐயனுக்கும் அம்பிகைக்கும் நடக்கும் திருக்கல்யாணம் புகழ் பெற்றது. இந்த தெய்வீக திருமணம் நடக்கும் தருணத்தில் இத்தலத்தில் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது.
திருவொற்றியூரில் பார்வை இழந்த சுந்தரர், இத்தல ஈசனை வழிபட்டு பதிகம் பாடி பார்வை பெற்றது வரலாறு. அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்றது இத்தலம். இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வந்து ஈசனை வழிபடுகின்றனர். ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் விசேஷ வழிபாடுகள் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment