திருவாரூர் தியாகராஜரும் கமலாம்பாளும் இமைப்பொழுதும் விலகாது சகல ஜீவர்களின் ஹிருதயத்திலும் ஒளிர்ந்திருக்கின்றனர். அப்பேற்பட்ட ஈசனையும் அம்மையையும் சிலாரூபத்தில் திருக்கண்கள் வழியே அள்ளிப் பருகுவதே உடலெடுத்ததன் பயனாகும். ஆரூரானின் ஆலயம் மிகப் பழமையானது, பிரமாண்டமானது. அருள்வதில் தரணியில் இதற்கிணை ஏதுமற்றது. நாயன்மார்களால் பாடல் பெற்றது. திருப்பாற்கடலில் திருமால், தியாகராஜரைத் தமது மார்பில் வைத்துப் பூஜித்தார். திருமாலின் மூச்சாகவே இருந்து ஈசன் நடனமாடினார். இதையே அஜபா நடனமென்பர். திருமாலிடமிருந்து இந்த மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூஜித்தார். அதன்பின் முசுகுந்தச் சக்ரவர்த்தியிடம் வழங்கினார்.
இதோடு, மேலும் ஆறு தியாகராஜ மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடன் சேர்த்து இவை சப்த (ஏழு) விடங்கத் தலங்களாயின. இக்கோயிலில் சாயரட்சை (மாலை ஆறு மணி) வழிபாட்டின்போது தேவேந்திரனே பெருமானைப் பூஜிப்பதாக ஐதீகம். எல்லா சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் பொலிவதாக ஐதீகம். அன்னை கமலாம்பாள் சந்நதி மிகவும் பிரசித்தி பெற்றது, சக்தி பீடங்களுள் இது கமலை பீடமாக விளங்குகின்றது. இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் தவக் கோலத்தில் அன்னை அமர்ந்திருக்கிறாள்.
ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்ற மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக் கரத்தில் பற்றி வளர்பிறையும், கங்கையும் பிறைகளாய் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து மையெழுதிய விழிகளை இமைகளால் மூடி சிவானந்தத் தென்றலை சுவாசித்து மோனம் ததும்பும் ஞானத்தின் உச்சியில் சிவராஜயோகத்தில் சாக்தர்கள் போற்றிப் புகழ்பாடும் வடிவில் அருட்காட்சி நல்குகிறாள். இவளின் இந்த உருவத் தியானமே ஜீவன் முக்தியை நோக்கி ஒருவரை நகர்த்தும். அவளின் இந்த திவ்ய உருவும் தத்துவமுமே மோட்ச சாதனத்தை கைமேல் கனியாக்கும்.
அதாவது, தியாகராஜ வைபோகத்திற்கு சற்றும் சளைக்காத காமகலா எழிற்கோலம். தபஸ் என்பது வடமொழிச் சொல். தப: என்பது வேர்ச்சொல். இதன் பொருள் உருகு அல்லது உருக்கு. விரதம் எனில் புறக்கணித்தல் என்று பொருள். நடைமுறையில் உள்ள சுகங்களைப் புறக்கணித்து உள்ளமும் உடலும் நன்னெறியில் நிற்றல் என்பதாம். உலோகங்களை உருக்குவதால் அவை தூய்மை அடைகின்றன. மேலும் பொலிவும் புத்துருவும் பெறுகின்றன. தவத்தால் ஆன்மா தூயதாய் பொலிவும் வலிவும் பெறுகின்றது. தாம் விரும்பியதைப் பெறச் செய்கின்ற தவம் காம்யதவம். வேடன் ஒருவன் வால்மீகி மகரிஷியாக மாறியது கடுந்தவத்தால்தான்.
பராசக்தி மகாத்மியம் எனும் நூல் கமலாம்பிகையின் தவத்திற்கான காரணங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி இவர்கள் சர்வ மங்கல செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவும் பீடும் பெருமையும் நிறைந்த கமலாலய திருத்தல நாயகி கமலாம்பிகை தவம் இயற்றுகிறாள். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார். இத்திருத்தலத்தில் அக்ஷர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் தலைமை பூஜகர்களாகிய நயனார்களிடம் இப்பீடத்தை வழிபடும் வழக்கம் உள்ளது. திருவாரூரில் தியாகேசர் ஆடும் அஜபா நடன வித்தைக்கு அரணாக அமைந்தவள் இந்த கமலாம்பிகை. சுயம்பான தேவி. சிற்பி செதுக்காத சிலை. காமகலா தோற்றமானவள். இவளின் உற்சவமூர்த்தி மனோன்மணி என போற்றப்படுகிறாள். வாக்கும் மனமும் கடந்த மனோன்மணி என்பார் திருமூலர். யோகம் ஆகாயத்தோடு தொடர்புடையது. இந்த மனோன்மணியாகிய கமலாம்பிகையே சிற்பரவெளியின் தற்பர தேவதை. இவளுக்கு பைந்தவ வாசினி என்கிற திருப்பெயரும் உண்டு.
பைந்தவம் என்பது புருவமத்தி. குண்டலினியாகிய அம்பிகை இங்கு ஒளிர்கின்ற போதுதான் உயிர் அஞ்ஞானமகன்று மெய்ஞானத் தலைவனை உணர்கிறது. அந்த அருட்சக்தியான காமகலையே கமலாம்பிகை எனும் தேவி. காமம் அனைத்தும் முடிகின்ற கோடி (கடைசி) நிலமாக, அதாவது, எல்லா விருப்பங்களும் இறந்துபட்ட அத்வைதமாக கமலாம்பிகை தோற்றமளிக்கிறாள். இவள் எழுந்தருளியுள்ள பீடமே 51 சக்தி பீடங்களுக்கும் ஆதார நிலையாகும். லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் இத்தேவியை துதித்துப் போற்றுகிறது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இவளே. தியாகராஜர் சந்நதி வல்லப கணபதியில் தொடங்கும். கமலாம்பிகா சந்நதி உச்சிஷ்ட கணபதியில் தொடங்குகிறது.
ஸ்ரீவித்யா உபாசனையும் வல்லபகணபதியில் தொடங்கி உச்சிஷ்ட கணபதியிலேயே அடங்கும். அதை இது உள்மறையாக உணர்த்துகிறது. காமகலையாகும் கமலாம்பிகையே மஹாக்ஷோடஸி, ஸ்ரீவித்யை, பஞ்சதசாக்ஷரி, பாலை, பகளா, மாதங்கி, ஸ்வயம்வர கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகை, மகாவாராஹி, ராஜமாதங்கி, திரஸ்கரணி, சுகஸ்யாமளை, லகுச்யாமளை, அஸ்வாரூடா, பிரத்யங்கிரா, தூமாவதி, சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி, பிரம்மானந்த சித்கலை போன்ற சக்திபேதங்கள் என்கின்றன உபநிஷத்துகள். காமா என்ற பெயருடனும், கலா வடிவமாகவும் இருப்பதால் பராசக்தி கமலா என்கிற பெயரைப் பெற்றாள்.
இத்தேவி காமரூபிணி என்றும் வணங்கப்படுகிறாள். கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், பிராகாரம், நந்தி, பலிபீடம், துவஜஸ்தம்பம், அனுக்கிரக மண்டபம் எனும் வாது மண்டபம் என அமைந்து பூலோக மணித்வீபமாய் விளங்கும் தனிக்கோயிலே கமலாம்பிகையின் திருக்கோயில். ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம், பராசக்திபுரம், பரையூர் என்றெல்லாம் திருவாரூர் பேசப்படக் காரணமாய் விளங்கும் இக்கோயிலே சக்தி பீடங்களுக்கு தாய் வீடாகும். அர்த்த மண்டபத்தில் வாம பாகத்தில் நின்ற கோலத்தில் மந்த்ரிணியாகிய ராஜமாதங்கியும், நிலைவாசல் வெளிப்புறம் சாமரம் வீசும் கலை மகள், அலைமகள் சிற்பங்களும் உள்ளன.
‘ஸ சாமர ரமா வாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதா’ எனும் லலிதா ஸஹஸ்ர நாமாவளியை இங்கு நினைவு கூறலாம். அவர்களின் கீழ் குபேர சக்திகளான சங்கநிதி, பத்மநிதி கல் திருமேனிகள். அளப்பரிய செல்வம் நல்கும் இவர்கள்தான் இங்கே துவார சக்திகளான வாயிற்காவலர்கள்! இவர்கள் ஏன் இங்கே? அம்பிகையின் திருவருள் பிரவாகத்தின் முன் இவர்களின் செல்வச் செழிப்பு சாதாரணம் என்பதை உணர்த்தவோ? கமலாம்பிகையின் கோபுரவாயிலைக் கடக்கும்போது மேலே பத்து துவாரங்கள். லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வரும் தசமுத்ரா ஸமாராத்யா எனும் நாமங்கள் நினைவிற்கு வருகின்றன.
கமலாம்பிகை திருக்கோயிலின் உட்பொருள் உணர்ந்து தரிசனம் செய்பவர்களுக்கு பாரெங்கும் விளங்கும் 51 சக்தி பீடங்களை தரிசித்த நிறைவு கிடைக்கும் என்பது உண்மையே. எனவேதான் பாரெங்கும் உள்ள தேவி உபாசகர்கள் குருவின் வழிகாட்டுதலின் பேரில் திருவாரூரை தரிசிக்க வருகின்றனர். கமலாம்பிகையே ஏனைய தலங்களிலும் உள்ளீடாய் விளங்குகிறாள் என்பதை கமலாம்பிகை பிள்ளைத்தமிழில் வரும் கைலை நாகேஸ்வரம் எனும் பாடல் உறுதி செய்கிறது. தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பேருந்து வசதிகள் உள்ளன...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment