அவரவர் சூழல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப தெய்வங்களையும், விரத வழிபாடுகளையும் உருவகப்படுத்தி, அவற்றை பெரும் நம்பிக்கையுடனும் விதிகளுடனும் பின்பற்றியும் வருகிறோம்.
இந்து சமயத்தில் சைவம், வைணவம் என பல பிரிவுகளில், அவரவர் சூழல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப தெய்வங்களையும், விரத வழிபாடுகளையும் உருவகப்படுத்தி, அவற்றை பெரும் நம்பிக்கையுடனும் விதிகளுடனும் பின்பற்றியும் வருகிறோம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில நியதிகளை வகுத்து வைத்துள்ளது ஆன்மிகம். அதன்படி வைணவத்தில் வணங்கப்படும் தெய்வமான பெருமாள், ‘பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சாவதாரம்’ எனும் ஐந்து நிலைகளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
பரம்
மனிதர் காண முடியாத தேவலோகம் எனப்படும் பரம பதத்தில், முக்தி பெற்ற முக்தர்கள், கருடன், இந்திரன், நாரதர் போன்ற தேவாதி தேவர் களுக்கு மட்டுமே காட்சியளிக்கக் கூடிய அற்புத நிலைதான் ‘பரம்’ என்றழைக்கப்படும் முதல் நிலை. இந்த தெய்வீக தரிசனத்தை சாதாரண மனிதப்பிறவிகளாகிய நாம் காண முடியாது. இந்நிலையானது அண்டத்தின் வெளியே உற்பத்தியாகும் நீர் போன்று, நம் சிந்தனைக்கும் பார்வைக்கும் எட்டாமல் இருக்கக்கூடியது.
வியூகம்
கடவுளாகிய பெருமாள், உலகைக் காக்கும் தலைவனாக பாற்கடலில் ஆதிசேஷன் மீது, மனைவி லட்சுமியுடன் பள்ளி கொண்டிருக்கும் பரவச நிலையே இரண்டாம் நிலையான ‘வியூகம்’ எனப்படுவது. இந்த நிலையும் முன்னோர் களால் நமக்கு வழிவழியாக சொல்லப்பட்ட ஆதர்ச நிலை என்பதால், இதையும் நம்மால் காணவோ, வணங்கவோ முடியாது. இது எப்படி என்றால், அதிக நீர் தாகம் உள்ளவன், செல்ல முடியாத பெருங்கடல் போன்றதே என்பதால் நம்மால் எளிதில் அணுக முடியாது.
விபவம்
உலகில் அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட பகவான், பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளதாக நமக்கு புராணங்கள் சொல்கின்றன. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், கிருஷ்ணன், பலராமன், கல்கி போன்ற இந்த அவதாரங்களின் போது பூமியில் பிறவியெடுத்தவர்கள் மட்டுமே, அவர்களைப் பற்றிய பெருமையை அறிந்து அவர்களை சேவிக்கும் பாக்கியம் பெறுவார்கள். அந்த நிலையே ‘விபவம்’ எனப்படும். இதையும் நாம் அனுபவிக்க இயலாது. இந்நிலை கடுமையான மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம் போன்றது. தாகம் தணிக்க உதவாது.
அந்தர்யாமித்துவம்
‘பகவான் தூணிலும் இருப்பான்.. துரும்பிலும் இருப்பான்’ என்று சொன்ன பிரகலாதனைப் போல், காணும் எல்லா உயிர்களிலும் இறைவனை உணர்ந்து, தன்னிலும் உள்கலந்து நிற்கும் பெருமாளை மட்டுமே நினைத்து பற்றற்றவராக கடுந்தவம் செய்பவர்கள் ஞானியர்கள். அவர்கள் தங்கள் மனக்கண்ணால் கண்டு தரிசித்து ஆனந்திக்கும் நிலையே ‘அந்தர்யாமித்துவம்' எனப்படும் நான்காம் நிலை. அனைத்தும் அவனே என பசி, தாகம் துறந்து, பல ஆண்டுகள் தவத்தில் மூழ்கி, அவனுள் ஒன்றி அவனின் தரிசனத்தைக் கண்ட நம்மாழ்வார் போன்றவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உன்னத நிலை இது. நிலத்தடியில் உள்ள நீர் ஊற்றைக் கண்டுபிடித்து தாகம் தீர்க்கும் வழி போன்றது. இது சாதாரண மனிதர்களால் எட்ட முடியாத கடினமான நிலை.
அர்ச்சாவதாரம்
எளிதில் அணுகக்கூடிய யாவரும் கண்டு இன்புற்று தங்கள் இல்லங்களிலும், மனதிலும், ஆலயங்களிலும் நம் விருப்பத்திற்கு ஏற்ற உருவங்களில் அலங்காரங்களில் எழுந்தருளியிருப்பதுதான் அர்ச்சை அல்லது உருவ வழிபாடு எனப்படும் ‘அர்ச்சாவதாரம்’ நிலை. பக்தர்கள் ஆசைப்பட்டபடி காண்பதற்கு எளிமையாய், கண்ணுக்கு நிறைவாய் திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமாளின் அழகை ரசிக்கும் அருமையான நிலைதான் இது. நம் தாகத்தை தணிக்கும் தேங்கிய மடுநீர் போல, நம் ஆன்மிக தாகத்தைத் தணிக்கும் ஆபத்பாந்தவ நிலை. இது மற்ற நிலைகளைப் போல அல்லாமல் நாம் அறிய திருக்கோவில்களில் குடிகொண்டு நம் கண்ணுக்கும், மனதுக்கும் நெருக்கமாய் நாம் உணரும் தெய்வீக நிலை இதுவே என்கின்றனர் நமது முன்னோர்கள்
நிலை எப்படி இருப்பினும் நாம் நம்பிக்கையுடன் விரதம் இருந்து வணங்கும்போது பெருமாளும் நம் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நமக்கு நல்வாழ்வைத் தருவார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment