Monday, 30 July 2018

திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்

சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர்.

சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர். கால ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான சித்தர்களின் பெயர்களும், அற்புதங்களும் மறைந்து விட்டன.

சில சித்தர்களுக்கு அண்ணாமலையார் புரிந்த அருள் மட்டுமே நம்மிடம் வரலாறாக உள்ளது. அவர்களில் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.....

குகை நமசிவாயரின் சீடர் குரு நமசிவாயர். இவர் ஒரு சிறந்த தவயோகி. ஒருநாள் குகை நமசிவாயமும் குரு நமசிவாயமும் அருகருகே அமர்ந்து தவத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குரு நமசிவாயர் கலகலவென சிரித்தார்.

‘‘என்னடா? ஏன் சிரிக்கிறாய்?’’ என்று குகை நமசிவாயர் கேட்டார். ‘‘ஐயனே! திருவாரூர் தியாகேசன் தேரில் வருகிறார். தேவதாசி பரதமாடுகிறாள். கால் வழுக்கிவிடவே அதையும் அபிநயமாக அப்படியே மறைத்தாள்’’ அதுதான் சிரித்தேன் என்றார். 

மற்றொரு நாள், தன் அறையில் இருந்த உடையை குரு நமசிவாயர் திடீரென்று தேய்த்தார். ‘‘என்னடா? என்ன விஷயம்?’’ என்றார் குகை நமசிவாயர். 
‘‘தில்லையில் விளக்கு போடுபவன் அஜாக்கிரதையால் திரைச்சீலையில் தீ பற்றிக் கொண்டது. யாரும் கவனிக்கவில்லை. அதைத்தான் அணைத்தேன்” என்றார் குரு நமசிவாயர். 

குகை நமசிவாயர் உடனே இனி உனக்கு இங்கு வேலையில்லை. தில்லையிலே நீ செய்ய வேண்டிய பணி இருக்கிறது போ!’’ என்றார். குருநாதனை வணங்கி குரு நமசிவாயர் வலம் வந்தார். ‘‘குருநாதா! தங்கள் சித்தம்’’ என்றார். புறப்பட்டார். மரத்தடியில் வழியிலே களைப்புடன் தங்கினார். இரவு அர்த்தஜாம மணியோசை ‘ஓம் ஓம்’ என்று எங்கும் ரீங்காரம் செய்தது. பசியோடு அமர்ந்து,

அண்ணாமலையார் அகத்திற்கு இனியாளே
உண்ணாமுலையே உமையே தண்ணா
நினைதோறும் போற்றிசெயும் நின்னடியார் உண்ண
மனைதோறும் சோறுகொண்டுவா? 

- என்று அன்னையை நினைத்துப் பாடினார். 

குரு நமசிவாயர் தவிப்பதைக் காணச் சகியாத தாய் உண்ணாமுலைநாயகி தங்கத் தாம்பாளத்தில் தனக்கு நிவேதனமாக வைத்த அர்த்த ஜாம சர்க்கரைப் பொங்கலை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். பசியாற அந்த உணவை சாப்பிட்டு விட்டு தங்க தாம்பளத் தட்டை குரு நமசிவாயர் தூக்கி வீசி எறிந்தார். 

கோவிலில் ‘தங்கத் தாம்பாளம் களவுபோய் விட்டது. அர்ச்சகர் கத்தினார். ஆனால் அவரை நம்பாமல் முன் பின் யோசியாமல் திருட்டுப் பட்டம் கட்டி அவரைத் தண்டிக்க முடிவு செய்தனர். உடனே அன்னை ஆவேசமாகி ‘என் பக்தன் பசியோடு இருந்தான். அவனுக்கு அந்தத் தங்கத் தாம்பாளத்தில் உணவளித்தேன். மரத்தடிக்குப் போனால் உங்கள் தட்டு கிடைக்கும்’ என்று கூறினாள். 

‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று முழங்கியபடி சென்று அடியாரின் அடிகளைப் போற்றி தாம்பாளத்துடன் திரும்பினார்கள். இது வரலாற்றுச் சிறப்பு. இதே போன்று இன்னும் பல சித்தர்கள் உள்ளனர். ராஜாவின் இறந்த குதிரையை உயிர்த்தெழச் செய்து, திருவண்ணாமலை ஆதீனத்தின் முதல் குருவாகி, குன்றக்குடி ஆதீனத்தை உருவாக்கிய ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி தேசிகர்.

தீர்த்தக்குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (1290) அதில் தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாரை அபிஷேகம் செய்த சித்தமகா சிவயோகி, பாணிபத்திர சுவாமி. திருவண்ணாமலையில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல், தவமிருந்து மழையைப் பொழிய வைத்து, ஊரையே செழிக்கவைத்த மங்கையர்க்கரசியார்.

தொண்ணூறு வயது வரை தினமும், மலையைத் தவறாமல் வலம் வந்து அந்தப் புண்ணியத்தால் அண்ணாமலையானையே நேரில் கண்டு, பரவசப் பேறு பெற்ற சோணாசலத்தேவர். யாழ்ப்பாணத்திலே பிறந்து, திருவண்ணாமலையில் குளமும், மடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர்.

மக்களை திருத்துவதற்காக... பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர், படுபாவிகளின் கொடுவாளால் இருதுண்டுகளான பசுவை, உயிர்ப்பித்த பெருஞ்சித்தர் வீர வைராக்கியமூர்த்தி சுவாமிகள். ஐநூறு சீடர்ளைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணாமலையின் புகழைப் பரப்பியவர். ஆதார நூல்கள் பலவற்றை எழுதி, சைவசமயப் பெருமைகளை உலகறியச் செய்தவர், வேதாகம, சமயசாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர்.

காவிரியாற்றின் நீரையே எண்ணையாக்கித் தீபம் ஏற்றியவர். கல்லாலான நந்திக்குக் கடலையைக் கொடுத்து உண்ணச் செய்தவர். பூமியிலிருந்து தீ ஜூவாலையை வரவழைத்து தனது திருமேனியையே... அக்னி தேவனுக்கு ஆஹ¨தியாக்கிய ஆதி சிவப்பிரகாசர். ஊமையாய்ப் பிறந்து, அண்ணாமலையாரின் பேரருளால், பாடும் திறனைப் பெற்றவர். விராலிமலை முருகப் பெருமான் கையால் பகலுணவு கொண்டவர். சிதம்பரத்தில் வாழ்ந்து திருவாரூரில் தியாகேசர் சன்னிதி முன்னால் சிவனடிச் ஜோதி கண்டு அதிலே கலந்து ஒளியான, தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.

காணாமல்போன பூஜைப் பேழையை, அண்ணாமலையாரின் திருக்கரங்களால் பெறும் பேறு பெற்றவர். 16-ம் நூற்றாண்டில் குருதேவர் மடத்தில் தீட்சைபெற்று, ‘சிவப்பிரகாசர்’ எனும் ஞானியைக் கண்ட ஞானஞானி, குமாரசாமிப் பண்டாரம். கரிகால்சோழனின் காலத்திய பாதாள லிங்கமூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியிலே பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், ஆயிரம்கால் மண்டபம் கட்டியபோது, பாதாள லிங்கத்தை மாற்றி விடாமல் பாதுகாத்த ஞானயோகி, அழியா விரதம் கொண்ட தம்பிரான்.

தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவசமாதி” கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன்துரையின் தீராத வியாதியைத் தீர்த்து வைத்தவர்.இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். (ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு. ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர். கேரள மாநிலத்தில் பிறந்து, இந்தியா முழுவதும் பாதயாத்திரை சென்று தியானத்திற்கு தகுந்த மலை, திருவண்ணாமலைதான் எனத் தீர்வு கண்டவர். மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு, பக்தியை வளர்க்கப்பாடுபட்ட சற்குரு சுவாமிகள்.

பழனியிலிருந்து திருவண்ணாமலை வந்து ஆலயத்துள் உழவாரப் பணி (தேவையற்ற செடி, கொடி, முட்களை நீக்குதல்) புரிந்தவர். அன்னக்காவடி சுமந்து, அடியார்களுக்கு உணவளித்தவர். பாதாள லிங்கக் குகையிலே பாலரமணரைப் பலகாலம் பாதுகாத்த பழனிச்சுவாமிகள். நெல்லையிலே அவதரித்துத் திருவண்ணாமலையில் முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லா தமிழ் வண்ணப் பாக்களோடு, கம்பத்து இளையனாருக்கு (திருவண்ணாமலை முருகனுக்கு) வேல்கொடுத்து வாழ்த்திய இசைஞானி, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

கார்த்திகை தீபப் பரவச நிலையிலே காவல் தலைவரால் கன்னத்தில் அறையப்பட்டவர். ஊரார் கிளர்ந்தெழ, “அனைத்தும் என் முன்வினை” என்றவர். சித்தாந்த, வேதாந்தத் தத்துவங்களை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்குவதிலே சிம்மமாய்த் திகழ்ந்த காரியானூர் நடேச சுவாமிகள். திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலே, அங்கம்புரள உருண்டு அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாகக் கொண்டவர். நாயன்மார்களின் வாழ்வையே வேதமெனக் கண்டவர். 

திருவண்ணாமலையிலுள்ள அறுபத்துமூவர் மடாலயத்தின் ஆரம்பகால ஞானகுரு “அங்கப்பிரதட்சண” அண்ணாமலை சுவாமிகள். எல்லாம் “சிவா”, எப்போதும் “சிவா” எனச் சொல்லிச் சொல்லியே... அண்ணாமலையானின் திருவருள் பெற்று சிவஞான எல்லையிலே ஒளிகண்ட சிவா சுவாமிகள். திருவண்ணாமலைத் தேரடி வீதியிலே - புரண்டபடி கிடந்து, அருவுருவான அண்ணாமலையே, உமா மகேஸ்வரனாகக் கண்டு, தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார்புகழ் பெற்ற பத்ராசல சுவாமிகள்.

காஞ்சியில் பிறந்து, திருவண்ணாமலைத் தெருக்களிலே... புரண்டு, உருண்டு, சாக்கடைச்சகதி நீரிலே அளைந்து, நனைந்து... பார்வைக்கு எளியனாய், பல தெய்வ ஒளியனாய்..... அகில உலகையும் திருவண்ணாமலைத் தெருவில் நின்றபடியே மனக்கண்ணால் காணும் பேராற்றல் பெற்ற...ஞானச்சித்தர் சேஷாத்திரி சுவாமிகள்.
திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று, திருவண்ணாமலையின் நினைவால் மகரிஷியாகி உலகப் புகழ் பெற்ற பிறவித் துறவி, ரமண மகரிஷி.

“அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்” என்று கன்னிப்பருவம் வரை காத்திருந்தவர். அண்ணாமலையார் அவர் கனவிலே வந்தார். கண் விழித்ததும், தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலைக்குச் சென்று இறுதிவரை ஆலயத் திருப்பணி செய்த சடைச்சியம்மாள்.

திருவண்ணாமலையில் ஓரடிக்கு 1008, லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர ‘நமசிவாய’ 1008 ஜபத்துடன் “திருவண்ணாமலை”யை ஒவ்வொரு அடியாக நடந்து, கடந்து வலம்வந்து, பேரின்ப ஞான நலம் கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்ற இறை சுவாமிகள்.

1917-ல் பிறந்து, ஆயிரத்து எட்டு முறை அண்ணாமலையையை அங்கப் பிரதட்சணம் கண்டவர். திருவண்ணாமலையில் உள்ள 360 தீர்த்தங்களையும் கண்ட கருணைவள்ளல். தேவரும், சித்தர்களும் கிரிவலம் செல்வதை ஞானக் கண்களால் அறிந்து கூறிய இசக்கி சுவாமிகள்.

விரட்டுவதற்காக வீசிய கல், பறவையின் உயிரையே வாங்கி விட்டதால், கங்கைக் கரையிலே பிறந்த அவர், அமைதியைத் தேடி, காவிரிக்கரை வரை அலைந்தார். இறுதியில் திருவண்ணாமலையில் அமைதி பெற்ற விசிறி சாமியார் எனப்படும் சிவயோகி ராம் சுரத்குமார்.

சாக்கடையில் புரண்டு திரிந்தவர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், ஆனால் அவரது திருமேனியில் சந்தனம் மணக்குமாம். இப்படி திருவண்ணாமலை தலத்தில் இருந்த இருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை அளவிட முடியாததாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment