Tuesday, 5 June 2018

ஐகோர்ட் மகாராஜா இரட்டை சுடலைமாட சுவாமி மேல கோவில்

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ளது ஆறுமுகமங்கலம். இங்கு வீற்றிருக்கும் சுடலைமாடன், ஐகோர்ட் மகாராஜா என்றழைக்கப்படுகிறார்.

சுமார் ஆறு தலைமுறைக்கு முன்னால் இக்கோயில் உருவானதாகக் கூறப்படுகிறது. ஒருநாள் அப்பகுதியை சேர்ந்த மந்திரம் நாடார் பனைமரத்தின் மேல் இருந்து பதநீர் இறக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது பனை மரத்தின் கீழே நின்ற வயது முதிர்ந்த ஒருவர், “ஏம்பா, மந்திரம், தாகமா இருக்கு. குடிக்க பதநீர் இறக்கி கொண்டா” என்றார். அதற்கு மந்திரம், “ஐயா, பெரியவரே இன்னும் பதப்படலையே,” என்றார். “நீ, இறக்கி கீழே கொண்டு வந்து பாரு, பதப்பட்டிருக்கும், கலயமும் நிறைஞ்சிருக்கும்” என்றார் பெரியவர். அதன்படியே மந்திரம் நாடார் கலயத்தை இறக்கி கொண்டு வந்தார். பால் பொங்குவது போல பதநீர் பொங்கி வழிந்தது.  சந்தோஷமும், திகைப்பும் மேலிட மந்திரம்நாடார் அந்த முதியவரை பார்த்து,‘‘ஐயா, நீங்க யாருன்னு தெரியவில்லை, எப்படி இது நடந்ததென்றும் புரியவில்லை” என்றார். “சரிப்பா, பனை ஓலையில பட்டை பிடிச்சு, பதநீர் விட்டு கொடு” என்று கேட்டார் பெரியவர்.

மந்திரநாடரும் அப்படியே கொடுத்தார். கலயத்திலிருந்த பதநீர் முழுவதையும் அவர் அருந்திவிட்டார். மந்திரம் நாடார் முகத்தில் சோகம். ஆனால் முதியவரோ, மந்திரத்தின் தோளை தட்டிக்கொடுத்து  சென்றார். அன்று
இரவு தூக்கத்தில் மந்திரநாடார் கனவில் அதே ரூபத்தில் வந்த சுடலைமாடன், ‘‘உன் பனை விளை இருக்கும் இடத்தின் வடக்கு பக்கம் ஆலும், அரசும் நிற்கும். அதனருகே  எனக்கு பீடம் அமைத்து என்னை வழிபட்டு வா, உன் வாழ்வை வளமாக்குவேன். என் பெயரை சொல்லி நீயோ, உன் வாரிசுகளோ திருநீறு கொடுத்தால் அதை பெறுபவர் நலம் பெறுவார். கேட்டவர்க்கு கேட்டது கிடைக்கும்.என்னை நம்பி கை தொழும் அடியவர்களுக்கு எனதருள் எப்போதும் உண்டு என்ற சுடலைமாடன். நீ என்ன சாப்பிடுவாயோ, அதையே படையலாக வை. கூடவே பதநீரையும் சேர்த்து வை. மேலும் நானிருக்கும் இடத்திற்கு அருகே நான் சொல்கிறவர்களுக்கும் சேர்த்து 21 பீடம் அமைத்து வழிபடு,’’ என்று கூறினார். அதன்படியே மந்திரநாடார்  பீடங்கள் அமைத்து வழிபட்டு வந்தார். இரண்டு சுடலைமாடன் பீடம் இருந்ததால் இரட்டை சுடலைமாடசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது. திறந்தவெளி கோயிலாக இருந்தது.

நாளடைவில் கோயிலில் வழிபாடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. நேர்ச்சை செலுத்துவோர் அதிகமாயினர். கோயில் நல்ல வளர்ச்சியை பெற்றது. பக்தர்கள் சுவாமியிடம் முறையிட்டு, நேர்ந்துகொண்டு தொழில் செய்துவந்தனர். ‘விளைச்சலில் ஒரு பங்கு உனக்கு தருகிறேன்.

விளைச்சல் அமோகமாக இருக்கட்டும்’, என்று அவரை ஒரு பங்குதாரர்போலவே எண்ணி நேர்ச்சை செலுத்தி வந்தனர். மூலவர் இரட்டை சுடலைமாடன் இருக்கும் பகுதி மட்டும் பனை ஓலைகளால் வேயப்பட்டது. மற்ற பீடங்கள் வெட்ட வெளியில் இருந்தன. மந்திர நாடாருக்கு பிறகு அவரது மகன் மாசானமுத்துநாடார் பூஜை செய்து வந்தார். ஒருநாள் மாசானமுத்துநாடார் கோயிலில் இருந்தபோது, கோயில் வழியாக அந்த ஊரைச்சேர்ந்த ஒருவர் பசுமாட்டை ஓட்டிச் சென்றார். , அவரிடம் “ஏய் , மாட்ட எங்கப்பா கொண்டு போற?’ என்று கேட்க, அவர், ‘திருச்செந்தூர் ஆறுமுகனுக்கு பால் அபிஷேகம் செய்ய, நேர்ந்து விட்ட மாடு இது. கொண்டு போய் விட போறேன்,’ என்றார். ‘இங்க வாப்பா, திருநீறு வாங்கிட்டு போ, சுடலை துணைக்கு வருவாரு, ’ என்றார் அதற்கு அவர் ‘முருகன் கோயிலுக்குப் போறவனை பேய்க்கோயிலுக்கு கூப்பிடுறியப்பா, சரி வாரேன்,’ என்றபடி  மாடுடன் அவர்கோயிலுக்குள் வந்தார். அரச மரத்தின் முன்னே மாட்டைக் கட்டிப்போட்டார். பிறகு மாடனைப் பற்றி மாசானமுத்து நாடாரிடம் மட்டமாகப் பேசினார்.

அதை வருத்தத்துடன் கேட்டுக்கொண்டிருந்த மாசானமுத்து நாடார் எங்கப்பன் சுடலையும் சிவனுக்கு மகன்தான் என்றார். அந்த நேரம்  அரசமரம் முன் பகுதியில் கந்தபெருமான் ஆறுமுகத்துடன் காட்சி கொடுத்தார். மெய் சிலிர்த்தனர்  மாசானமுத்துநாடாரும், உடன் இருந்தவரும், உடனே அந்த காட்சி மாறி அசரீரி கேட்டது: ‘‘ பேய்க்கோயில், பெரிய கோயில் என்ற பேதமை கூடாது என்பதற்காகவே காட்சி கொடுத்தேன். உன் பயணத்திற்கு துணையாய் சுடலைமாடனும் வருவார். அவருக்குரிய பூஜையை செய்துவிட்டு புறப்படு. செந்தூர் வந்து கொடிமரம் முன்னே சிதறு தேங்காய் உடைத்து விட்டு வா.’’ என்றது. ஆறுமுகனார் காட்சியளித்ததால் அன்று முதல் இவ்வூர் ஆறுமுகமங்கலம் என்றும், இரட்டை சுடலைக்கோயில் இருக்கும் இடம் கணபதிசமுத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கோயில் மேலக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நாராயணர், பிரம்மசக்தி,சிவனைந்த பெருமாள், முண்டன், பேச்சி, கருப்பசாமி, ஈனமாடன், புலமாடன், பட்டவராயன் உள்ளிட்ட 21 பந்தி தெய்வங்கள் நிலையம் கொண்டுள்ளனர். கோயிலில் மந்திரம் நாடார் வம்சா வழியைச் சேர்ந்த
மாசானமுத்துநாடார் மகன்கள் மந்திரம், மாயாண்டி, ஐகோர்ட்துரை, மகேஷ்வரன் ஆகியோர் பூஜை செய்து வருகின்றனர்...

🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩

  🔔 *ஓம் நமசிவாய போற்றி* 🔔

📡🔹📡🔹📡🔹📡🔹📡🔹
  
      என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
             *வாட்சப் குழுமம்*

🎖 _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🎖
     🏡 *இறைத்தொண்டு!* 🏡

      👇🏼குழுவில் இனைய👇🏼
         📲+91 9486053609
🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻🍃

No comments:

Post a Comment