கல்லிடைக்குறிச்சி நெல்லை
நாக கன்னியின் வயிற்றில் பிறந்த உமையாளின் அம்சமான அஷ்ட காளியர்கள், சிவபெருமானிடம் வரங்கள் பெற்று, கயிலாயத்திலிருந்து பூலோகத்தின் பொதிகை மலைக்கு வந்தனர். பிறகு ஒவ்வொருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திருவிளையாடல் நடத்தி அந்தந்த இடங்களிலேயே கோயில்கொண்டு, தம்மை வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றனர். அந்த அஷ்ட காளியரில் எட்டாவதாக அவதரித்தவள், காந்தாரியம்மன். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது கல்லிடைக்குறிச்சி. இயற்கை வளமும், இறையருளும் நிறைந்த ஊர். ஊரைச் சுற்றி சிவனுக்கும், ஊரின் நடுவே பெருமாளுக்கும் கோயில்கள் உள்ளன. ராமச்சந்திரபுரத்தில் சிதம்பரேஸ்வரர் என்ற மானந்தியப்பர் மற்றும் கோட்டைத்தெருவில் குலசேகரமுடையார் என சிவபெருமானும், தாயார் லட்சுமியுடன் ஆதிவராகப் பெருமாளும் கோயில்கள் கொண்டுள்ளனர்.
காவல் தெய்வங்களின் முதன்மை தெய்வமான சாஸ்தாவுக்கும், அஷ்ட காளியருக்கும் இங்கே கோயில் உண்டு. ஆதிவராக பெருமாள் கோயிலுக்கு தேரோட்ட திருவிழா நடத்த வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவு செய்தனர். அதற்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். என்பதால் பக்தர்கள் ஒன்றுகூடி பாண்டிய மன்னன் வம்சா வழியைச் சேர்ந்த ஜமீன்தாரிடம் முறையிட்டனர். உடனே அவர், எனக்கு இறைப்பணி செய்ய ஒரு வாய்ப்பினை பெருமாளே கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக மரத்தை வெட்டி கோயிலுக்குக் கொண்டு சேர்த்துவிடுகிறேன் என்று உறுதி கூறினார். கொடிமரம் வெட்ட நாள் குறிக்கப்பட்டது. தனது ஆட்களை அனுப்பி தனக்கு சொந்தமான கட்டள மலை எஸ்டேட்டிலிருந்து மரம் வெட்டி வண்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.
கல்லிடைக்குறிச்சி ஊர் எல்லையில் தற்போது காந்தாரி அம்மன் கோயில் இருக்கும் பகுதிக்கு வந்தபோது, அச்சாணி முறிந்து வண்டி அவ்விடத்திலிருந்து நகர இயலவில்லை. அதிகமான ஆட்கள் முயன்றும் வண்டி நகராததால், யானையை கொண்டு வந்து மரத்தை எடுத்துச் செல்ல முயன்றனர். அதுவும் தோல்வியில் முடிந்தது. பிறகு நம்பூதிரியை வரவழைத்து பிரசன்னம் பார்த்தனர். அப்போது கொடிமரத்துடன் அஷ்டகாளியரில் ஒருவரரான பெண் தெய்வம் ஒன்று வந்திருப்பதாகத் தெரியவரவே, உடனே, இவ்விடத்தில் சிலை அமைத்து பூஜை செய்தனர். பின்னர் அச்சாணி பூட்டி வண்டியை நகர்த்த, வண்டியும் வெகு எளிதாக நகர்ந்தது. கொடிமரம் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிறியதாக அன்று உருவாக்கப்பட்ட கோயிலுக்கு எட்டாவது பூஜை நடத்தும்போது அருள்வந்து ஆடிய ஒருவர் தனது பெயர் காந்தாரி அம்மன் என்றும் எனக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்றும் கூற, அதன்படி கோயில் எழுப்பப்பட்டது. பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. இந்தக் கோயில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாத்தியப்பட்டதாக உள்ளது. இருப்பினும் அனைத்து சமூகத்தினரும் இக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு கஷ்டங்களை நீக்கி கவலைகளை போக்கி காத்தருள்கிறாள் காந்தாரி அம்மன்.
இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து 38 கி.மீ. தொலைவிலுள்ள கல்லிடைக்குறிச்சியில், மணிமுத்தாறுசிங்கம்பட்டி சாலையில் அமைந்துள்ளது. கோயிலில் மூலவர் காந்தாரி அம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொடைவிழாவும், புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவும் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் நடைபெறும் சூறை விழாவில், அம்மனுக்கு ஆடும் நபர் கோயில் பூஜையின்போது மஞ்சள் நீராடி அம்மன் அருளோடு ஊருக்குள் மேள தாளத்துடன் நகர்வலம் வருவார். ஊரில் ஒவ்வொரு வீட்டு முன்பும் குடத்தில் நீர் நிரப்பி, அதன்மேல் வேப்பிலை வைத்திருப்பார்கள். குடத்தின் மேற்பரப்பில் மஞ்சள் அரைத்து வைத்திருப்பார்கள். அம்மன் ஆடுபவரோடு வரும் நபர்கள் அந்த மஞ்சளை குடத்து நீரில் கரைத்து அவர் மேல் விடுவர். இதனால் அம்மனே தன் இல்லம் வந்து நீராடுவதாக பக்தர்கள் எண்ணுகின்றனர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment