உழக்குடி நெல்லை
திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ளது கலியாவூர். இங்கு விவசாயம் செய்து வந்தார் இருளப்பன். நான்கு ஆண் குழந்தைகளுக்குப் பிறகு ஐந்தாவதாக அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர் சந்தோஷத்துடன், ‘‘செத்துப்போன என் ஆத்தா, எனக்கு மவளா பொறந்திருக்கா’’ என்று பெருமிதம் கொண்டார். மகளுக்கு தனது குல தெய்வமான பொயிலம் குளத்து கரையிலிருந்த அம்மன் பெயரை இட்டார். பொயிலம் குளத்தாள், செல்லமாக பொயிலாள் என்றாகி சீரும் சிறப்புமாக வாழ்ந்துவந்தாள். அவள் பத்து வயது சிறுமியாக இருக்கும்போது அடுத்தடுத்து பெற்றோர் இறந்தனர். அன்னை தந்தை இல்லாத குறையை போக்க, அண்ணன்மார்கள் நாலு பேரும் தங்கை மேல் அளவற்ற பாசம் கொண்டிருந்தனர்.
தங்கையின் நலனுக்காக மூத்த அண்ணன் மணமுடித்துக் கொண்டான். மனைவியிடம் எனது தங்கை தாயாக இருந்து கவனிப்பதே உனது கடமை என்றுரைத்தான். நாட்கள் நகர்ந்தது. பொயிலாள் பருவம் வந்தாள். உருவம் மாறினாள். படைத்த பிரம்மனே பெருமை கொள்ளும் பேரழகுடன் திகழ்ந்தாள். இரண்டாவது அண்ணனும் திருமணம் செய்து கொண்டான். அண்ணியர் இருவரும் நாத்தனார் பொயிலாளை அன்போடும், அரவணைப்போடும் நடத்தினார்கள். ஒருநாள் மாலைநேரம் தனது தோழிகளோடு அந்த ஊருக்குப் பொதுவான மடத்துக் கிணத்தில் தண்ணீர் எடுப்பதற்காக ஊரின் சாலையில் சென்று கொண்டிருந்தாள். அந்த நேரம் வல்ல நாட்டிலிருந்து முத்துப்பாண்டி, சீவலப்பேரி சந்தைக்கு பத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகளை ஓட்டிச் சென்றான்.
மாடுகளின் காலடிச் சத்தம் கேட்டு வேகமாக திரும்பிய பொயிலாள், ‘‘ஏய், ஒதுங்குங்கடி மாடு வருது’’ என்று தோழிகளை எச்சரித்தாள். கூடவே, மாடுகளின் பின்னால் வந்த முத்துப்பாண்டியை பார்த்து, ‘‘யேவ், என்ன மனுஷன்யா நீ, மாட்டை பத்திட்டு வந்தா சொல்ல மாட்ட?’’ என்று கோபமாகக் கேட்டாள். ‘‘இந்த பாரும்மா, நீங்கதான் ஒதுங்கி போகணும். இது என்ன உங்க பாட்டன் போட்ட பாதையா’’ என்று அவன் திருப்பிக் கேட்டான். கூடவே, ‘‘நீ யாருக்கு மொவ’’ என்று பொயிலாளைக் கேட்டான். பொயிலாள் கம்பீரமாக சொன்னாள்: ‘‘பட்டகருப்பன் தங்கச்சி.’’ ‘‘உங்க மூணாவது அண்ணன் சடையப்பன் என் சேக்காளியோட கூட்டாளிதான்.’’ ‘‘அதெல்லாம் இருக்கட்டும் சும்மா இங்கே பாத்துட்டு போவாம, முன்ன பார்த்து நடங்க.’’ என்றபடி அவர்கள் கிணத்துபக்கம் திரும்ப, அவர்களை கடக்கும்வரை, பொயிலாளை திரும்பி, திரும்பி பார்த்துச்சென்றான் முத்துப்பாண்டி.
சில தினங்களுக்கு பின்னர் முத்துப்பாண்டி, பொயிலாளின் மூன்றாவது அண்ணன் சடையப்பனை சந்தித்து அந்தப் பகுதியில் மாடுகள் விற்றால் தனக்கு வாங்கித் தருமாறும் அதற்குரிய பங்குத்தொகையைத் தருவதாகவும் சொன்னான். மங்கை பொயிலாளை பார்ப்பதற்காக, அவளது அண்ணன்மார்களுடன் மாடு வியாபாரத்தை முன்வைத்து நட்பை உருவாக்கிக்கொண்டான் முத்துப்பாண்டி. அந்த நட்பில் அடிக்கடி பொயிலாள் வீட்டுக்கு வருவதும், அவளோடு சாடைக்காட்டி பேசுவதுமாக அவர்களிடையே உறவு வளர்ந்தது. ஒருநாள் அவன் வந்தபோது யாரும் இல்லாததால் பொயிலாளிடம் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த இரண்டாவது அண்ணி, ‘‘என்ன தம்பி, ஆம்பிள இல்லாத வீட்டில் சமஞ்ச புள்ளகிட்ட பேசிட்டு இருக்கேளே.’’ என்று கேட்டதும், பொயிலாள் குறுக்கிட்டு ‘‘மைனி, இவிய இப்பத்தான் வந்தாவ ’’என்றாள்.
‘‘சரி, உங்களுக்கு என்ன வேணும் தம்பி?’’
‘‘உங்க நாத்தனாரு வேணும்.’’
‘‘என்னது?’’
‘‘உங்ககிட்ட நடவுக்கு நாத்து இருந்தா வாங்கிட்டு போவ வந்தேன். நீங்க பேசுனிதல நாக்கு உளறுது.’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் முத்துப்பாண்டி. மாதங்கள் கடந்து வளர்ந்தது அவர்களது காதல். ஒருநாள் மாலைநேரம் தண்ணி எடுக்க வந்த பொயிலாள், ‘‘உங்க குடும்பத்திலயும், சாதி சனத்திலயும் என்ன ஏத்துக்கு வாங்களா?’’ என்று கேட்க, ‘‘அவங்க ஏத்துக்கிறத விடு, இந்த மண்ணை விட்டு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர, உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். என்னை நம்பி வந்தா உசுரையும் தருவேன்,’’ என்று உறுதியளித்தான் முத்துப்பாண்டி. பிறகு அவன், ‘‘அப்புறம் என்ன தயக்கம்? வா, ஊரைவிட்டு போயிருவோம்’’ என்று கூறினான்.
அடுத்த புதன்கிழமை மாலைநேரம் ஊரை விட்டு ஓடிப்போக முடிவு எடுத்தனர். குறிப்பிட்ட வேளையில், தனது மூத்த அண்ணனின் மகள் ஒயிலாவோடு விளையாடிக்கொண்டிருப்பதாக அண்ணியிடம் கூறிவிட்டு பொயிலாள் வீட்டை விட்டு வெளியே வந்தாள். அவர்களுடன் பொயிலாள் செல்லமாக வளர்த்து வந்த பூச்சி என்ற நாயும் உடன் சென்றது. ஒயிலாவின் கண்ணை துணியால் கட்டிவிட்டு தன்னை தேடும்படி கூறிவிட்டு அங்கே இருந்த செடிகளின் நடுவே ஒளிந்து கொண்டாள் பொயிலாள். அவளை ஒயிலா கண்டுபிடித்து விட, உடனே அருகே நின்ற நாயுருவி செடியை பிடுங்கி, ஒயிலா மேல் அடித்தாள். நாயுருவி விதைகள் ஒயிலா துணிமீது ஒட்டிக்கொண்டது.
‘‘என்ன, அத்தே. நாயுருவி காய், என் பாவாடை மேல முழுதும் ஒட்டிகிட்டு.’’ என்று சிணுங்கினாள் ஒயிலாள்.‘‘ஒயிலா இதை ஒவ்வொண்ணா எடுத்து முடிச்சிட்டு, என்னைய கண்டு பிடிக்கணும். அதுவரை அத்தை ஒளிஞ்சிருக்கேன்’’ என்றாள் பொயிலாள். அவளும் சம்மதிக்க, பொயிலாள் அங்கிருந்து கிளம்பி, மடத்துக்கிணத்துப் பக்கம் ஒதுங்கி நின்ற முத்துப்பாண்டியுடன் புறப்பட்டுச் சென்றாள். நாயுருவி விதைகளை எடுக்க முடியாமல் அவதிப்பட்ட ஒயிலா, வீட்டுக்கு பாவாடையை மாற்ற சென்றாள். அப்போது அவளது தாய் ‘‘அத்தை எங்க? நீ மட்டும் வார?’ என்று கேட்க, ‘‘அத்த அங்க ஒளிஞ்சிருக்கியாவ, நான் போய் கண்டு புடிக்கணும்,’’ என்றாள். ‘‘நீ ஒண்ணும் கண்டு பிடிக்க வேண்டாம். கருக்கலாயிற்று, நீ வீட்டுல உட்காரு, நான் போயி அவள கூட்டிட்டு வாரேன்.’’ என்று கூறியவாறு தன் ஓரகத்தியையும் அழைத்துக்கொண்டு பார்க்க, பொயிலாளையும், பூச்சி நாயையும் காணவில்லை.
வீட்டுக்குத் திரும்பி அண்ணன்மார்களிடம் சொன்னார்கள். பொயிலாளும், முத்துப்பாண்டியும் உழக்குடி கிராமத்திற்கு வந்தனர். அங்கு அடர்ந்த காட்டுக்குள் முள் முருங்கை செடிகளுக்கு இடையே பதுங்கி இருந்தனர். இரவு முழுவதும் தேடி ஓய்ந்து போன அண்ணன்மார்கள், மறுநாள் காலையில் தேட தொடங்கினர். உழக்குடி கண்மாய் கரையோரம் இருந்தவர்களிடம் விசாரிக்க, காட்டுக்குள் பதுங்கி இருக்காங்களான்னு பாருங்க என்று தகவல் கிடைத்தது. ‘‘ஏலே, காட்டுக்குள்ள தான் பதுங்கியிருக்கணும். அந்தப் பனமரத்து மேலே ஏறி பாருல’’ என்று மூத்தவன் கூற, அதன்படி இரண்டாவது அண்ணன் ஏறிப் பார்த்தான். சற்றுத் தொலைவில் அடுப்பு கூட்டி சமையல் நடப்பதும், அருகே நாய் ஒன்று படுத்திருப்பதும், முத்துப்பாண்டி மார்பில் தலை வைத்து பொயிலாள் படுத்திருப்பதும் தெரிந்தது. ‘‘அண்ணே நாம மோசம் போயிட்டோம், அந்த வல்லநாட்டுக்காரன், நம்ம தங்கச்சிய சீரழிச்சுப்புட்டான்.’’ என்று கத்தினான்.
அண்ணன்கள் நான்கு பேரும் அந்த இடம் நோக்கி விரைந்தனர். முத்துப்பாண்டியை கண்ட துண்டமாக வெட்டி எறிந்தனர். அப்போது அண்ணன்களை தடுத்து சபித்தாள் தங்கை. அவளையும் வெட்டிக் கொன்றனர். நாய் குரைத்தது. ‘நாம வளர்த்த நாயும் நமக்கு துரோகம் பண்ணிட்டு’ என்று கூறியபடி அதையும் வெட்டிக்கொன்றனர். இந்தத் தகவல் வல்லநாட்டுக்கு தெரிந்தது. முத்துப்பாண்டியின் அண்ணன்கள், மாமன் மச்சான் உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் வந்து பொயிலாள் அண்ணன்களை வெட்டிக்கொன்றனர். கடைசி அண்ணன் மட்டும் அவர்களிடமிருந்து தப்பிச் சென்றான். பொயிலாள் இறந்த எட்டாவது நாள் உழக்குடி கிராமத்தில் கிடையில் (பட்டியில்) இருந்த ஆடுகள் அனைத்தும் மடிந்தன. இப்படி பல பேருக்கு நடந்தது.
அவர்கள் குறி கேட்டனர், ‘‘ சாமியோவ், ஒடங்காட்டுக்குள்ள வெட்டுப்பட்டு மாண்டு போன ரெண்டு உசுரும், கயிலாயம் போகாம இங்கே சுத்திகிட்டு இருக்கு, அவங்க சாவுக்கு ஏதோ ஒரு வகையில் நீங்க காரணமாயிட்டிங்க, அதனாலதான் உங்க மாடு, கண்ணுங்க துள்ள, துடிக்க சாவுது. உடனே அவங்களுக்கு கல்லு நட்டு வச்சு, துணி மணிக எடுத்துவச்சு, பண்ட பலகாரம் செஞ்சு வச்சு பூச பண்ணுங்க. எல்லாம் சரியாயிரும்’’ என்று பதில் வந்தது. அதன்படி பொயிலாளுக்கும், முத்துப்பாண்டிக்கும், பூச்சி நாய்க்கும் சிலை அமைத்து கோயில் எழுப்பி படையல் வைத்து பூஜை செய்தனர்.
அதன் பின்னர் பொயிலாள் தெய்வமானாள். பொயிலாம் பூச்சி அம்மன் என்றும், பூச்சி அம்மன் என்றும் இந்த கோயில் அழைக்கப்பட்டு வருகிறது. முத்துப்பாண்டியை முத்துப்பட்டன் என்று அழைக்கின்றனர். (சொரிமுத்தையன் கோயில் முத்துப்பட்டன் வேறு). பொயிலாளின் கடைசி அண்ணன் தனது முதுமை காலத்தில் தங்கைக்கும், முத்துப்பட்டனுக்கும் தனது நிலத்திலே கோயில் கட்டியுள்ளார். இந்தக்கோயில் உழக்குடியில் அமைந்துள்ளது. இங்கு கொலுவிருக்கும் பொயிலாம் பூச்சி அம்மன் சுத்து வட்டார மக்கள் அனைவருக்கும் பொன்னான வாழ்வளித்து வருகிறாள். பூச்சியம்மன் கோயிலுக்கு நெல்லையிலிருந்து சீவலப்பேரி வழியாக 18 கி.மீ ஆட்டோவில் பயணித்து செல்லலாம். உழக்குடி வல்லநாட்டில் இருந்து 16 கி.மீ தூரம் உள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment