Tuesday, 19 May 2020

வேதமெனும் கருடன்.!!

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வாகனம் இருந்தாலும், திருமாலின் கருட வாகனத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது யாதெனில், கருடன் தனக்கு  வாகனமாக வேண்டும் என்பதைத் திருமாலே கருடனிடம் வரமாகக் கேட்டுக் கொண்டார். 

தன் தாயை அடிமைத் தளையில் இருந்து விடுவிப்பதற்காக, தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கருடன் அபகரித்துச் சென்றபோது, அவரைத் தடுத்த  திருமால், “கருடா! நான் உனக்கு ஒரு வரம் தர விழைகிறேன்! உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். கருடனோ, “நீங்கள் அடியேனுக்கு வரம்  தரவேண்டாம்! அடியேன் உங்களுக்கு வரம் தருகிறேன்! உங்களுக்கு என்ன வரம் வேண்டும்!” என்று கேட்டார். “நீ எனக்கு வாகனமாய் ஆகி விடு!” என்று  திருமால் கேட்க, கருடனும் அதை ஏற்றுத் திருமாலின் வாகனமானார். 

அதன் பின் திருமாலிடம் கருடன், “நீங்கள் அடியேனுக்கு ஒரு வரம் தருவதாகச் சொன்னீர்களே! அதை இப்போது அடியேன் கேட்கலாமா?” என்று கேட்டார்.  “தாராளமாகக் கேள்!” என்றார் திருமால். “அடியேன் தங்களுக்கு வாகனமானாலும், தங்களுக்கு மேலேயே தான் இருப்பேன்! சம்மதமா?” என்று கேட்டார்  கருடன். இப்படி ஒரு வரத்தைக் கருடன் கேட்ட அளவிலே, திருமால் கருடனோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். “கருடன் தந்த வரத்தின் படி,  திருமாலுக்குக் கீழே வாகனமாகவும் அவர் இருப்பார். 

திருமால் கருடனுக்குத் தந்த வரத்தின் படி, திருமாலுக்கு மேலே கருடக் கொடியாகவும் அவரே இருப்பார்,” என்பதே அந்த உடன்படிக்கை ஆகும். அதன்படி  இன்றும் திருமாலின் வாகனமாகவும் கொடியாகவும் கருடன் திகழ்வதை நாம் காண்கிறோம். அதனால் தான் ஆழ்வார்களும் ‘புள்ளரையன் கோ’ என்று  கருடவாகனத்தை உடையவராகவும், ‘புட்கொடி உடைய கோமான்’ என்று கருடக் கொடியை உடையவராகவும் திருமாலைத் துதிக்கிறார்கள். கருடனைத்  திருமாலின் வாகனமாகச் சொல்வதனுள்ளே ஒரு தத்துவம் உள்ளது. 

கருடன் வேத ஸ்வரூபி. வேத மந்திரங்களே கருடனின் உடல் அங்கங்களாக உள்ளன. காயத்திரி மந்திரம் அவரது கண்ணாகவும், திரிவ்ருத் மந்திரம் அவரது  தலையாகவும், வாமதேவ்ய சாம மந்திரம் அவரது உடலாகவும், ஸ்தோம சாம மந்திரம் அவரது உயிராகவும், யஜுர்வேதமே அவரது பெயராகவும், யஜ்ஞாயஜ்ஞீயம்  அவரது வாலாகவும், ப்ருஹத்சாம-ரதந்தரசாம மந்திரங்கள் அவரது இரு இறக்கைகளாகவும், வேத சந்தங்கள் அவரது கால்களாகவும், வேள்வி வேதி அவரது  நகங்களாகவும் இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

அந்த வேத ஸ்வரூபியான கருடன் திருமாலுக்கு வாகனமாக இருப்பதன் மூலம், வேதமே இறைவனை நம்மிடம் அழைத்து வரும் கருவியாக இருக்கிறது என்ற  தத்துவத்தை நாம் உணரமுடிகிறது. அடியவர்களின் அபாயக் குரல் கேட்கும் நேரங்களில், அவர்களுக்கு அபயம் அளிக்கத் திருமாலை அழைத்து வந்து சேர்ப்பவர்  கருடன். கஜேந்திரன் என்னும் யானை முதலையால் பீடிக்கப்பட்ட போது, கருடவாகனத்தில் திருமால் வந்து அந்த யானையைக் காத்த வரலாற்றை நாம்  அனைவரும் அறிவோம்.

“பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஊழி ஊழி தவம்செய்வார் வெள்கி நிற்ப விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா! உன்னை அன்றோ களைகணாக் கருதுமாறே!”

- என்ற பாடலில், பற்பல தேவர்கள் திருமாலைக் காண விரும்பித் தவம் மேற்கொண்டிருக்க, அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அந்தக் காதல் களிற்றுக்கு  முக்கியத்துவம் அளித்து, அதற்குக் காட்சி அளித்துக் காத்த வைபவத்தைத் தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகிறார். உலக வாழ்க்கை என்னும் பொய்கையினுள்ளே,  உலகியல் சுகங்களான முதலைகளால் பீடிக்கப்பட்டுத் துன்பப்படும் ஜீவாத்மாக்களான கஜேந்திரர்களையும், வேதமாகிய கருடவாகனத்தின் மீது வந்து திருமால்  நிச்சயம் காத்தருள்வார்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment