Tuesday, 19 May 2020

தடைகளை தகர்த்தெறிவார் சடையுடையார் சாஸ்தா.!!

பாப்பாங்குளம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை

கருணையே வடிவான இறைவன் பல நிலைகளில் பல்வேறு திருநாமங்களை சூடி பல்வேறு திருக்கோலங்களை ஏற்று அருள்பாலித்து வருகிறார். அத்திருக்கோலங்களில் ஒன்றுதான் சாஸ்தா திருக்கோலம் ஆகும். சிவபெருமானின் சக்தியாக திருமாலை வைத்து வழிபடுவது நம் பண்டைய மரபு ஆகும். அரியல்லால் தேவி இல்லை. அய்யன், அய்யனார்க்கே என்கிற தேவாரப்பகுதி இதற்கு சான்றாகும். திருமால், சிவன் இவர்கள் இருவரின் அருள் அம்சங்களை பெற்று அவனியில் பக்தர்களை காக்க தோன்றிய சாஸ்தாவை  அரிஹரபுத்திரன் என்றும் அழைக்கிறார்கள்.

ஐ - என்பது தலைமை. அழகு வியப்பு என பல பொருள் தரும் ஒரு சொல் ஆகும். பக்தர்களுக்கு அழகு தரும் அருளை உடையவனும் வேண்டாதோரும் வியக்கும் வண்ணம் தன்னருள் புரியும் தவரூபசீலன்  தலைமை உடையவனும் ஆகிய அரிஹரசுதனை  ஐயப்பன்  என்றும் அழைப்பதுண்டு. சாஸ்து என்றால் கூட்டம் என்று பொருள். கூட்டம் கூட்டமாக வந்து கூடித் தொழும் அன்பர்க்கு அருள்புரியும் தலைவனாக இருப்பதால் சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். 

சாஸ்தாவினுடைய திருக்கோயில்கள் மிகுதியாக குளக்கரை மற்றும் ஆற்றங்கரை ஏரிகள் போன்ற நதி ஓரங்களில் காணப்படுகின்றன. தமிழகத்திலும் மலையாள நாட்டிலும் சாஸ்தாவுக்கு பல்வேறு திருக்கோயில்கள் தோன்றி மிகவும் பிரசித்தமாகி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் தாலுகாவில் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சடையுடையார் சாஸ்தா திருக்கோயில். 

இத்தலத்தில் பொற்சடைச்சி,  பத்ரகாளி, துர்கா பரமேஸ்வரி ஆகிய மூன்று தாயாருடன் பாலசாஸ்தாவாய்  நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார். நீண்ட காலத்திற்கு முன்பு களக்காடு என்னும் ஊரில் இருந்து ஒரு வயதான பிராமணர் நிறைமாத கர்ப்பிணி ஆன தனது மகளை பிரசவத்திற்கு தனது சொந்த ஊரான ஆம்பூர் நோக்கி மாட்டு வண்டியில் அழைத்து வருகிறார். அப்படி அழைத்து வரும்போது பாப்பாங்குளம் அருகில் வந்ததும் நன்கு இருட்டி விட்டது. நடுக்காட்டுப்பாதை இருண்ட நேரம் அந்த சமயத்தில் இடி மின்னலோடு கனத்த மழை வேறு பெய்யத் தொடங்கிவிட்டது. 

பாதை முழுவதும் குண்டு குழி எல்லாம் வெள்ளம் நிரம்பி இரவு நேரத்து அச்சத்தை இன்னும் அதிகம் ஆக்குவது போல் மிருகங்கள் பறவைகளின் கூச்சல்கள் வேறு அதிகரிக்க தொடங்கின. வயதான பருவத்தில் வேதனைப்படும் தந்தையும் பிரசவ வேதனையில் துயரப்படும் நிறைமாத கர்ப்பிணியும் செய்வதறியாது திகைத்தனர். அப்பெண்ணால் மேற்கொண்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் மயங்கி விழுந்தாள். தனது அருமை மகளுக்கு உதவி செய்ய ஆள் இல்லாமல் இருண்ட காட்டில் தனியாக நின்ற தந்தை செய்வதறியாது திகைத்து பின் அருகில் விளக்கு ஒளி தெரிந்த இடம் நோக்கி விரைந்து சென்று யாரையாவது அழைத்து வர முற்பட்டார்.

அச்சமயத்தில் அருகில் கோயில் கொண்ட சாஸ்தா இதனை கண்டார். அந்த பெண்ணிற்கு உதவி செய்வதற்கு நடுத்தர வயது தாங்கிய ஆதிதிராவிட இனத்து பெண் வடிவில் நீண்ட சடைமுடியுடன் கையில் விளக்கேந்தி அவ்விடம் வந்தார். மயங்கி கிடந்த பெண்ணிற்கு வேண்டிய உதவிகள் செய்து சுகப்பிரசவத்திற்கு உதவினார். இந்நிலையில் தூரத்தே தன்னுடைய மகளுக்கு உதவி தேடி கொண்டிருந்த அந்தணரை நோக்கி மற்றொரு பெண்ணுரு தாங்கிய சென்ற சாஸ்தா, அவரிடம் அவர் பெண்ணிற்கு சுகப்பிரசவம் ஆனதை விளக்கி அவரை மகளிடம் அழைத்து வந்தார்.

குழந்தையையும் தாயையும் கண்ட ’அந்தணருக்கு அளவிலா மகிழ்ச்சி. மகிழ்ச்சி பெருக்கால் நன்றிக்கடன் செலுத்த வந்து உதவிய அந்த நடுத்தர வயதுடைய பெண்ணை தேடினார். அந்த பெண் அவ்விடம் இல்லை. அப்போதுதான் அவருக்கு புரிந்தது. வந்தது சாதாரண பெண் அல்ல நடுக்காட்டில் வீற்றிருந்து திக்கற்றவர்களுக்கு துணை புரிய அந்த பரம்பொருளே மனித உருத்தாங்கி வந்தது என்று பரம்பொருளின் கருணையை வியந்து அந்த பரம்பொருளுக்கு நிவேதனம் செய்து படைத்து துதிக்க எண்ணினார்.

தன்னிடம் அது சமயம் எதுவும் இல்லாததை உணர்ந்தார். தனது மகள் புகுந்த வீட்டில் இருந்து கொண்டு வந்த பரஸ்தான (காப்பரிசி) அரிசியை அப்படியே சாஸ்தாவுக்கு படைத்து வணங்கினார். அச்சமயத்தில் ஆகாயத்தில் ஒரு அசரீரி  ஒலித்தது. அந்தணரே உமது மகளுக்கு பேறுகாலத்தில் உதவியது வேறு யாருமல்ல அருகில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீசடையுடையார்  என்ற பாலசாஸ்தா  ஆகிய நாமே தான். இதுகாறும் உள்ளன்புடன் வழிபட்டு வேண்டுவன வேண்டி வரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றி அருள்கிறோம். 

இன்று பிறந்த குழந்தைக்கு எட்டு பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் எட்டுப்பிள்ளை கூட்டத்தார்  என்ற பெயர் தாங்கி எம்மை குலதெய்வமாக ஏற்று வாழையடி வாழையாக வழிபட்டு வருவார்கள். அவர்களின் பெண் வழிக்குடும்பம்  வழிவழியாக எமக்கு அடிமைத்திறம்  பூண்டிருக்க வேண்டும்.
அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் யாவும் எம்மால் நீக்கப்பட்டு நலம் பெறுவார்கள். அதிலும் பெண்கள் வேதனைகளிலேயே பெரிய வேதனையான பிரசவ வேதனையால் துயரப்படும் போது எம்மை நினைத்து வணங்கினால் நலம் விளைவிப்போம்.

இன்று முதல் எல்லா மக்களும் எமக்கு வழிவழியாக அடிமைத்திறம் பூண்டு வாழ்வீர்களாக என்று சொன்னார். ஆகாயத்தில் இருந்து வந்த அசரீரி ஒலி கேட்ட அந்தணர் நிலமிசை நீடு வீழ்ந்து வணங்கினார். ஆலயத்தை செப்பனிட்டு வேதமுறைப்படி பூஜை நடத்தினார். அரிஜனங்களும் அந்தணர்களும் ஒரு சேர நின்று சடையுடையாரை வாழ்த்தி வணங்கினார்கள். முதல் முதலாக காப்பரிசி முழுத்தேங்காய் நிவேதனம் செய்யப்பட்ட காரணத்தால் இன்று வரை சுவாமிக்கும், பரிவார தேவதைகளுக்கும் காப்பரிசி மட்டுமே படைக்கப்பட்டு வருகிறது. அன்ன நிவேதனம் கிடையாது.

ஒவ்வொரு ஆண்டும் தை வெள்ளிக்கிழமையில் பொதுபூஜை என்னும் வைபவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. பெண்வழி குடும்பத்தார் அனைவரும் கொடுக்கும் காணிக்கைகளால் வைபவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு முதல் வெள்ளி மற்றும் செவ்வாய் (மார்கழி மாதம்) அந்தணர் பெருமக்களால் ஆம்பூருக்கு அழைக்கப்பட்டு ஊர் மரியாதையுடன் பொங்கல் பொருட்கள் கொடுத்து கௌரவிக்கப்படுகிறார்கள். இதன் பின்னரே பொது பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்வார்கள். இவ்வாறு அந்தணர்களால் நடத்தப்படும் பொதுபூஜையில் தூபம் எடுத்து கொடுக்கிற பொறுப்பு இன்னும் ஆதிதிராவிட வகுப்பை சார்ந்த பெண் குலத்திற்கே வழங்கப்பட்டு வருகிறது. 

பகவான் அரிஜன பெண் வடிவில் வந்தபடியால் இந்த வழக்கம் ஏற்பட்டது. தாயும் தனயனுமாக நின்று தண்ணளி சுரக்கும் பரம்பொருளின் திரு முன்பு
மக்கட் சமுதாயம் அனைத்துமே ஒன்றுதான் ஆவுரித்து தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரத்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே என்பது முதுநெறி. இடைக்காலத்தில் அந்நெறி குன்றியது அறம் குன்றி மறம் பெருகும் காலத்தில் பரம்பொருள் தோன்றி அறிவுறுத்தி வருகிறது. அந்நிலையில் அப்பரம்பொருளே ஸ்ரீசடையுடையாராய் எழுந்தருளி பாப்பாங்குளத்தில் வீற்றிருந்து வேற்றுமை களைந்து எல்லோரையும் அடிமைத்திறம் பூண்டு வர செய்கிறார்.

தாயினும் சாலப் பரிவாய் ஸ்ரீபொற்சடைச்சி என்னும் நாமம் பூண்ட பராசக்தி அன்பர்கள் வேண்டியவற்றை அருள்கிறாள். இன்றும் இவரை குலதெய்வமாக ஏற்ற பெண்கள் சீமந்தம் கழிந்து பிரசவிக்க தாய்வீடு செல்லும் பெண்கள் அவர்களின் புகுந்த வீட்டில் இருந்து ஒரு முழுத்தேங்காய் , பச்சரிசி , பழம் இவைகளை எடுத்து புடவை தலைப்பில் சடையுடையார் விபூதியை முடிந்து செல்வது வழக்கம்.

பரிவார தேவதா மூர்த்திகளாக 
ஸ்ரீ வீரபத்திரர் - பெரிய மாடன் ஆகவும் 
ஸ்ரீ பைரவர் - நல்லமாடன் ஆகவும்
ஸ்ரீ அகோர வீரபத்திரர்- சின்னமாடன் ஆகவும் திருநாமங்கள் தாங்கி ஆட்கொண்டு வருகிறார்கள். 

கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணிமுத்தாறு செல்லும் பாதையில் தெற்கு பாப்பாங்குளம் என்னும் ஊரில் இருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அழகுமிகு ஆலயமே ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா கோயில் ஆகும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment